Quantcast
Channel: புத்தகம்
Viewing all 60 articles
Browse latest View live

118. ISTANBUL - MEMORIES AND THE CITY

$
0
0
தூங்காத நகரங்கள்
விடிகிற பொழுதின்
எந்தப் பரவசத்தையும் காண்பதில்லை
அதற்குத் தன் செயல்களை
எங்கே நிறுத்தி
எங்கே தொடங்க வேண்டுமென‌
புரிவதேயில்லை
- மனுஷ்யபுத்திரன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: Istanbul - Memories and the City
ஆசிரியர்: Orhan Pamuk (http://www.orhanpamuk.net/)
ஆங்கிலப்படுத்தியவர்: Maureen Freely
வெளியீடு: faber and faber
முதல் ஈடு: 2005
பக்கங்கள்: 336
விலை: ரூபாய் 450 
வாங்கிய இடம்: Landmark
----------------------------------------------------------------------------------------------------------------------------------
மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக 500 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பியர்கள் கடல் புகுந்து பல நாடுகளைக் கண்டுபிடித்ததை, 10ம் வகுப்பிற்கு முன் வரலாற்றுப் பாடத்தில் படித்தேன். இந்தியாவிற்குக் கடல்வழி தேடப் புறப்பட்டது தான் அடிப்படை காரணம் என்றும் படித்தேன். ஒட்டாமன் அரசர்கள் கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றியதால், இந்தியாவிற்குக் கடல்வழி கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஐரோப்பியர்களுக்கு ஏற்பட்டதாகவும் படித்தேன். இந்தியாவிற்கு வெளியே வரலாறு என்று சொல்லப்படுபவை எல்லாம், ஐரோப்பிய வல்லரசுகள் வரலாறு என்பதால் ஒட்டாமன் யாதென்றும், கான்ஸ்டான்டிநோபிள் எதென்றும், அப்போதைய இந்தியாவிற்கு என்ன தொடர்பு என்றும் வரலாற்றுப் பாடங்கள் சொல்லவில்லை. விஜயநகர, மொகலாயப் பேரரசுகள் உடைந்த காரணங்களை அடுக்கியடுக்கிச் சொன்ன பாடங்கள், ஒட்டாமன் பேரரசு உடைந்து போனதென்று முதல் உலகப் போரின் விளைவுகளாகக் கடைசி ஒருவரியில் முடிந்து போயின. மதிப்பெண் வாங்க மட்டுமே 10ம் வகுப்பு இருந்ததாலும், ஐரோப்பிய வல்லரசுகளுடன் இந்திய ஆளுங்கட்சிகளின் தாக்கமும் இருந்ததாலும், அமெரிக்கப் பங்குச் சந்தை வீழ்ச்சியும் டென்னசி பள்ளத்தாக்குத் திட்டமும் கசடறக் கற்கப்போய், ஒட்டாமன் கான்ஸ்டான்டிநோபிள் ஆசியமைனர் துருக்கி என்று படித்திருந்த பதங்கள் கற்றபின் அதற்குத்தக நிற்காமல் போயின. ஐரோப்பாவின் நோயாளி யாரென்றால், பெரும்பாலும் துருக்கி என்று சரியான பதில் கிடைக்கும். துருக்கியின் தலைநகர் யாதென்றால், பெரும்பாலும் இஸ்தான்புல் என்று தவறான பதில் கிடைக்கும். இங்ங‌னம் என்னைப் போலவே அல்லது என்னைவிட சோகமான வரலாறு, வரலாறு படித்த என் சக இந்தியத் தமிழர்களுக்கு உண்டென்பதால் வழக்கம்போல் கொஞ்சம் வரலாறு சொல்ல நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.

ஒட்டாமன் கான்ஸ்டான்டிநோபிள் போன்ற சொற்கள் ஏதோ முழுமை அடையாமல் தொக்கிப் போய் என் ஆழ்மனதில் பதிந்து கிடந்தன. வெகுகாலம் மண்ணில் புதைந்து கிடக்கும் கிழங்குகள் ஒரு தருணத்தில் முட்டி முளைப்பது போல என் ஒட்டாமனை வெளிக்கொணர்ந்தது, நோபல் பரிசு பெற்ற முதல் துருக்கிய எழுத்தாளர் ஓரன் பமூக் (Orhan Pamuk) அவர்களின் 'என் பெயர் சிவப்பு' (My name is Red) என்ற‌ புதினம். எந்த அறிமுகமும் இல்லாமல் நானாகவே தேர்ந்தெடுத்து படித்த பல நல்ல புத்தகங்களில் அதுவும் ஒன்று. அடுத்த மாதம் ஒரு திருமணத்தில் பரிசளிக்க வேண்டும். இஸ்ரேல்‍-அரபு பிரச்சனை படிக்க ஆரம்பித்து, ஜெருசலேம் நகரம் படித்தேன். கான்ஸ்டான்டிநோபிள் படிக்கச் சொல்லி ஜெருசலேம் தான் சொன்னது. ஜெருசலேமுடன் ஒப்பிட நம் சமகாலத்து அம்சங்கள் நிறைய உண்டு. உதாரணமாக, 8 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்து சமீபத்தில் இறந்து போன இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் சரோனுடன் ஒப்பிட இந்திய மண்ணில் தலைவர்கள் இன்றும் உண்டு; நாளையும் வருவார்கள். ஆனால் ஜெருசலேம் சம்மந்தப்பட்ட எந்தவொரு ஒப்பிடலும் மதங்களைக் குறிக்கும் என்பதால், நான் என்றுமே எனது கருத்துகளை வெளிப்படையாக‌ எழுதியதில்லை. ஈழத்தமிழர்களை யூதர்களுடன் பலர் ஒப்பிடுவது பற்றி கூட நான் ஒன்றும் சொல்ல‌வில்லை. ஆனால் கான்ஸ்டான்டிநோபிள் அப்படியில்லை. அதனுடன் ஒப்பிட நிறைய விடயங்கள் நம்மில் உண்டு. மதங்களின் தடையில்லை. புத்தகத்திற்குள் நுழையும் முன் கான்ஸ்டான்டிநோபிள் முதல் இஸ்தான்புல் வரை ஒரு சுருக்கமான வரலாறு இதோ!
(http://www.worldatlas.com)
ரோம் நகரைத் தலைமையாகக் கொண்ட ரோமானியப் பேரரசின் மன்னன் முதலாம் கான்ஸ்டன்டைன் (325CE), எதிர்பாரா வகையில் கிழக்கே ஒரு போரில் வென்று ஆசியக் கண்டத்தில் கால்பதித்த போது, அவ்வெற்றிக்குக் காரணம் இயேசு கிறித்து தான் என்று அவனுக்குத் தோன்றுகிறது. இயேசு கிறித்து முதல் அந்நாள் வரையிலான அனைத்துக் கிறித்தவர்களையும் கொன்று கொண்டிருந்த தன் முந்தைய பேரரசர்களில் இருந்து விலகி கிறித்தவ மதத்தைத் தழுவுகிறான். அதுவரை ரகசியமாகத் தூரத்துத் தேசங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த கிறித்தவ மதம், மன்னன் எவ்வழியோ குடிமக்கள் அவ்வழி என ரோமானிய தேசமெங்கும் பரவுகிறது. மன்னனே கடவுள் என்று மன்னர்களின் மற்றும் அவர்களின் ஒருபால் காதலர்களின் நிர்வாணச் சிலைகளை வழிபட்டு வந்த ரோமானிய மக்கள் கிறித்தவர்கள் ஆனார்கள். தான் அப்படி வென்ற பைசாந்திய (கிரேக்க‌) நாடுகளில், தன் பெயரிலிருந்து கான்ஸ்டான்டிநோபிள் என்ற புதிய தலைநகரையும் உருவாக்குகிறான். ரோமின் மொழி இலத்தின். இரண்டாம் ரோம் என அழைக்கப்பட்ட கான்ஸ்டான்டிநோபிளின் மொழி கிரேக்கம். ரோம் மேற்கு; கான்ஸ்டான்டிநோபிள் கிழக்கு. அதாவது ரோமானியப் பேரரசின் மேற்கு மற்றும் கிழக்குச் சாம்ராச்சியங்கள் மொழியாலும் கலாச்சாரத்தாலும் இருவேறு இனங்கள். ரோமானியப் பேரரசிற்குக் கிழக்கே இருந்த நம்மைப் போன்றவர்களுக்கு, மொத்த ரோமானியப் பேரரசும் மேற்கு. மேற்கத்திய கிழக்கத்திய நாடுகள் என்ற நமது அன்றாட சொல்லாடல்களில் இப்படித்தான் மறைமுகமாக இருக்கிறது கான்ஸ்டான்டிநோபிள். 

ரோமில் அப்போதிருந்த குழப்பங்களால் அடுத்தடுத்து வந்தவர்கள் எல்லாம் கான்ஸ்டான்டிநோபிளையே அதிகம் வளர்த்தனர். ஒரு காலத்தில் ஜெருசலேமில் இருந்த யூதர்களின் சாலமன் தேவாலயத்திற்குப் போட்டியாக ஹேகியா சோபியா (Hagia Sophia) என்ற கிறித்தவ தேவாலயத்தை ரோமானியர்கள் கட்டினர். இப்படி 1000 ஆண்டுகளாக மிக முக்கிய நகரமாக நீடித்து வந்த கான்ஸ்டான்டிநோபிளை, 1453ல் துருக்கிய சுல்தான்களான ஒட்டாமன்கள் கைப்பற்றுகிறார்கள். கான்ஸ்டான்டிநோபிள் இஸ்தான்புல் ஆனது. ஹேகியா சோபியா மசூதி ஆனது. இந்த ஒட்டாமன் பேரரசுதான் முதல் உலகப் போரில் உடைந்து, பாலஸ்தீன் தவிர மற்ற‌ அரபு நாடுகளை உண்டாக்கப் போகிறது. ஹேகியா சோபியா அருங்காட்சியம் ஆகப்போகிறது.

புவியியல் ரீதியில் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பாலமாக இருக்கும் துருக்கி. இரு கண்டங்களில் பரவியிருக்கும் இஸ்தான்புல் நகரம். இஸ்தான்புலை இரு துண்டுகளாக்கி கருங்கடலை மற்ற கடல்களுடன் இணைக்கும் போஸ்பொரஸ் நீரிணை. ஹேகியா சோபியா. இந்நிலப்பரப்பின் ஆழமான வரலாறு. இவைதான் இஸ்தான்புல் பற்றி என்னைப் படிக்கத் தூண்டியவை. ஓரன் பமூக் எழுதி இருப்பதால் வாங்கிவிட்டேன். புத்தகத்திற்குள் போகலாம்.
(http://www.faber.co.uk)
உலகம் என் வீட்டு வாசல்படியில் இருந்துதான் துவங்குகிறது.
- எஸ்.ராமகிருஷ்ணன்

Istanbul - Memories and the city. இஸ்தான்புல் நகரமும் அதன் நினைவுகளும். ஆசிரியரின் 16 வயது வரையிலான வாழ்க்கையில் இஸ்தான்புல் நகருடன் கொண்டிருந்த சிநேகிதமே இப்புத்தகம். எவ்வயதில் இஸ்தான்புல் என்னில் தங்கியதோ அதுவரை புத்தகம் பேசுவதால், மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன். பரம்பரைச் சொத்துகளைப் படிப்படியாக இழந்து வரும் தன் குடும்பம், மேற்கத்தியவர்கள் போல் பழகச் சொல்லும் பாட்டி, முதல் காதல், ஓவியத்திறமை என தன் சொந்தக் கதை கொஞ்சம் பேசுகிறார். எல்லாக் கதைகளும் அவர் வாழ்ந்த வீடுகளையும், வீதிகளையும், போஸ்பரஸ் நீரிணையையும் சுற்றிச் சுற்றி வருகின்றன. ஓவியம் என்ற திறமையை வைத்துக் கொண்டு பணம் செய்ய முடியாதென்றும், கல்யாணம் கட்டிக் கொண்டால், பணம் இல்லாக் காலத்தில் மனைவியை வைத்து நிர்வாண ஓவியங்கள் வரைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம் என்றும் முத்தமெல்லாம் கொடுத்த முதல் காதல் நிராகரித்துவிடுகிறது. காதலைத் துறந்து தன் மனம் சொல்லும் வழியைத் தொடர்ந்த ஆசிரியர் தனியனாய் உணர்ந்த பொழுதுகளிலும், திறமைகள் நிராகரிக்கப்பட்ட சமயங்களிலும், இருண்ட இஸ்தான்புல் தெருக்களில் இறங்கி சுற்றித் திரிந்ததையும், போஸ்பரஸ் வழியே கடந்து போகும் கப்பல்களையும் அதன் கரைகளை ஆக்கிரமித்திருக்கும் யாலி (yali) என்ற குடியிருப்புகளையும் வீட்டு மாடியில் இருந்து மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருந்ததையும் சொல்கிறார். Life can't be that much bad; Whatever happens, I can always take a walk along the Bosphorus என்கிறார். ஆசிரியரின் சொந்த வாழ்க்கைச் சம்பவங்கள் இப்படி ஆங்காங்கே சொல்லப்பட்டாலும், 'என் பெயர் சிவப்பு'புதினத்தின் கடைசிப் பக்கங்கள் போல மனதில் நிற்கும்படி அழகாக முடிக்கிறார். 

நான் ஆரம்பத்தில் சொன்ன வரலாறு எல்லாம், இப்புத்தகத்திற்கு முன்னரே நான் அறிந்தவை. நான் இப்புத்தகம் படித்த காலத்தில், புத்தகம் தவிர வேறெதும் இணையத்தில் தேடி அறிந்து கொள்ளவில்லை. அதாவது இப்புத்தகம் இஸ்தான்புல் நகரின் வரலாற்றைக் காலக்கோடு போட்டு விளக்கவில்லை. அரசியல் புத்தகமும் அல்ல. பிறகு என்னதான் சொல்கிறது இப்புராதன நகரம் பற்றி இப்புத்தகம்?

The beauty of a landscape resides in its melancholy.
- Ahmed Rasim

ஆசிரியர் இஸ்தான்புலில் பிறந்த வருடம் 1952; ஒட்டாமன் வெற்றி பெற்ற 500வது வருடம்; ஒட்டாமன் சிதறிப் போய் 30 ஆண்டுகள் கழித்து. தனது ஒட்டாமன் பாரம்பரியத்தைப் படிப்படியாக இழந்து, நவீன உலகத்தோடு ஒட்டிக் கொள்ள இஸ்தான்புல் தடுமாறிக் கொண்டிருந்த காலம். தோற்றுப்போன, சிதிலமடைந்த, துயரமிக்க இடமாக இஸ்தான்புல் இருந்த காலம். பாஷாக்களின் மேன்சன்கள், ஒட்டாமன் பிரத்யேகக் காவலர்கள் (Janissary), அடிமைச் சந்தைகள், சுஃபி சாதுக்கள் (Dervish), ஒட்டாமன் காலத்து ஆடைகள், அந்தப்புரம் போன்றவை மேற்கத்திய ஒழுக்கத்திற்கு எதிரானவை என முற்றிலும் ஒழிக்கப்பட்ட காலம். துருக்கிய மொழி தேசிய மொழியானபின் அரபு வனப்பெழுத்து (Calligraphy) முறையும், நகர்மயமாக்கல் என்ற பெயரில் தோட்டங்களும் கல்லறைகளும் மயானங்களும் அழிக்கப்பட்ட காலம். யாராவது கிரேக்கம் அல்லது ஆர்மேனியம் அல்லது அரபு அல்லது குர்திஷ் மொழியில் பேசினால், 'தயவு செய்து நமது தேசிய மொழியான துருக்கியில் பேசுங்கள் குடிமக்களே'என திடீரென ஒருவர் கூட்டத்தில் இருந்து கத்திய காலம். தெருநாய்கள் தவிர மற்ற எல்லா விசயங்களையும் அவசரமாக மேற்கத்தியமயமாக்கிக் கொண்டிருந்த ethnic cleansing காலம். அடிக்கடி தீ விபத்துகள், போஸ்பரஸ் கடக்கும் கப்பல்களில் சேதங்கள், நகரெங்கும் பரவிக் கிடக்கும் வறுமை. இஃதுதான் கரு என்று ஓரெல்லைக்குள் அடங்கி இல்லாமல், இஸ்தான்புல் நகருக்குள் இருக்கும் எண்ணற்ற கதைகளில் ஒன்றாக தன்னையும் உணரும் ஆசிரியரின் கதையிது. அக்காலத்தைய இஸ்தான்புல் நகரின் நிசப்தமான துயரமே இப்புத்தகம். Nothing good can come out a place like this என்று உணரப்படும் ஒரு நகரத்தில் இருந்து வந்த நல்ல புத்தகம் இது.
(http://www.faber.co.uk)
ஆசிரியர் இஸ்தான்புல் இருவருக்கும் தனிப்பட்ட சோகங்கள் இருந்தாலும், அந்நகரை நேசிப்பதன் மூலம் தன் சோகம் மறக்கிறார் ஆசிரியர்.  To be unhappy is to hate oneself and one's city. இஸ்தான்புல் பற்றி தபால்தலைகளையும், சொற்களஞ்சியங்களையும் (encyclopedia), ஓவியங்களையும் தேடித் தேடி சேகரிக்கிறார். தான் சேகரித்த பல அரிய புகைப்படங்களையும் ஓவியங்களையும் புத்தகம் முழுவதும் கொடுத்திருக்கிறார். ஆசிரியர் உணர்ந்த இஸ்தான்புல் நகரத்தின் துயரை ஏற்கனவே தங்கள் எழுத்துக்களில் பதிவு செய்த நான்கு துயரமிகு எழுத்தாளர்களைப் பற்றி விவரிக்கிறார். அந்நால்வரின் எழுத்துகளும் வாழ்ந்த காலத்தில் நிராகரிக்கப்பட்டதும், அவர்களில் ஒருவர் கடைசி வரை எப்புத்தகத்தையும் அச்சிட்டு வெளியிட முன்வராத துயரத்தையும் பதிவு செய்கிறார். இஸ்தான்புல் பற்றி 130 ஆண்டுகளில் செய்தித்தாள்களில் பத்திகளைப் படித்து, ஆவண‌ப்படுத்திய சில நல்ல பத்திரிக்கையாளர்கள் பற்றி குறிப்பிடுகிறார். அப்போது அவருக்குத் தென்பட்ட சில வேடிக்கையான பத்திகளில் ஒன்று இது:
It is our hope that both drivers and passengers will make full use of the new taxi meters installed by the military authorities and that our city will never again see the sort of haggling, arguments, and trips to the police station that plagued our city twenty years ago, when the last taxi meters were installed and our city's drivers took to saying, 'Brother, give us as much as you can' - 1983
Whenever a contagious disease breaks out in any part of the city, our council throws lime here and there but piles of filth are everywhere ... - 1910
இன்று நம்மூர் நிலைமை உங்களுக்கே தெரியும்!

நவீனமயமாகும் அவசரத்தில் ஒரு நகரம் எப்படி விளம்பரம் மற்றும் அறிவிப்புப் பலகைகளின் குப்பையாகிறது எனப் பேசுகிறது ஒரு கட்டுரை. நம்மூர் கூவம் போல் ஆகிப் போன தங்க முகடு (Golden Horn) பற்றி பேசுகிறது. இஸ்தான்புல் நகரைக் கருப்பு வெள்ளையாக மட்டுமே பார்க்கும் ஆசிரியரின் உருவகம், அவன் அவள் அது இது என்ற நான்கு பொருள்களுக்கும் ஒரே வார்த்தை கொண்ட துருக்கிய மொழியில் கடவுளைப் பெண்ணாக (She) விளிப்பது என அழகான பல விசயங்கள் புத்தகத்தில் நிறைய உள்ளன. மிடுக்காக வலம்வரும் மேல்தட்டு மக்கள் பற்றி ஒரு கட்டுரை பேசுகிறது. நம்மூரில் உள்ளது போலவே, அவர்களுக்கென பிரத்யேகமாக‌ கிசுகிசுக்கள் சொல்லும் செய்தித்தாள் பத்திகளில் ஒன்று: Her Bebek house has been robbed, but no one seems to know what's missing. Let's see if the police manage to solve this riddle. அவர்களைப் பற்றி ஆசிரியர், An interest in society gossip is a sign of personal weakness என்கிறார்.
(Hagia Sophia - http://www.wikipedia.org)
All civilisations are as transitory as the people now in cemeteries. And just as we must die, so too must we accept that there is no return to a civilisation whose time has come and gone.
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல், எல்லா நகரங்களும் வாழத் தகுதி இழக்கும் வரை, மனிதனின் நுகர்வுப் பசி தீர்வதேயில்லை. இந்த வேட்டையில் மனிதன் தன் வாழுமிடத்தைச் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறானா? இன்னொருவன் நகரை மதிக்கிறானா? என் சொந்த அனுபவங்கள் சொல்கிறேன். நான் சென்னை வந்த புதிதில், பிரபலமான ஒருவர் கோட்டூர்புரம் அருகில் ஆற்றில் குதித்து மாண்டார். பெரும்பாலான பத்திரிக்கைகள் கூவம் ஆறு என்று எழுதின. சென்னை நகரில் கூவம், அடையாறு என்ற இரு தனித்தனி ஆறுகளைக் கூவம் என்ற ஒரே ஆறாகச் சொல்லும் பலர் இருப்பதை அன்றுதான் அறிந்தேன். தமிழ்த்தாய்க் கோயில் என்று பலரிடம் வழிகேட்டு, யாருக்கும் தெரியாமல், கடைசியில் தமிழன்னைக் கோயில் என்று ஒரேயொரு முறை கேட்டு வழிபெற்ற அனுபவம் காரைக்குடியில் கிடைத்தது. வீரபாண்டிய கட்டபொம்மன், குமரி விவேகானந்தர் பாறை பற்றி அவ்வூர் அடித்தட்டு மக்களிடம் விசாரித்து இருக்கிறீர்களா? எங்கள் ஊர் இரயில் நிலையத்தில் சித்தன்னவாசல் பற்றி அறிவிப்புப் பலகை இருக்கும். எங்கள் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் சில ஊர்கள் சிலப்பதிகாரத்தில் உள்ளன. இவை பற்றி ஏதொன்றும் எம்மக்கள் அறியிலர். வழக்கம் போல எங்கள் புத்தகங்கள் எங்களைப் பற்றி எங்களுக்குச் சொல்லித் தரவில்லை!

ஊரறிய உலகறிய படித்தறிவோம்!

அனுபந்தம்:
-------------------
1. சமீபத்தில் 'புதிய தலைமுறை'தொலைக்காட்சியில் ஆர்மீனியா நாடு பற்றி ஒரு செய்தித் தொகுப்பு பார்த்தேன். முதல் உலகப் போரில் ஒட்டாமன்கள் கை ஓங்கி இருந்த காலத்தில் அவர்களால் இனவழிப்பு செய்யப்பட்ட ஆர்மேனியர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. மனுஷ்யபுத்திரன் சொல்வ‌து போல், வரலாறு ஈழத்திற்கு முன்பும் இப்படித்தான் இருந்திருக்கிறது.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

119. விலங்குப் பண்ணை

$
0
0
உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனை குணம் 

காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும் 
கெடுப்பதுவே குரங்கு குணம் 
ஆற்றில் இறங்குவோரை கொன்று
இரையாக்கல் முதலை குணம்
ஆனால் இத்தனையும் மனிதனிடம்
மொத்தமாய் வாழுதடா!

- பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: விலங்குப் பண்ணை (புதினம்)
ஆங்கிலத்தில்: Animal Farm
ஆசிரியர்: ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)
தமிழில்: பி.வி.ராமஸ்வாமி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
முதல் ஈடு: சனவரி 2012
பக்கங்கள்: 141
விலை: ரூபாய் 85
வாங்கிய இடம்: இந்த வருட சென்னைப் புத்தகக் காட்சி
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஓநாயும் ஆட்டுக்குட்டியும். முடியும் முன். தங்கமீங்கள். ஹரிதாஸ். திரையரங்குகளில் மட்டுமே புதிய திரைப்படங்கள் பார்க்கும் வழக்கம் உடைய நான், இத்திரைப்படங்களைத் தான் சென்றாண்டில் நான் பார்த்த சிறந்த தமிழ்ப்படங்களாக ஞாபகம் வைத்திருக்கிறேன். ஆளவந்தான் அழகி என நீண்ட இடைவெளிக்குப் பின் அதிகமுறை திரையில் நான் பார்த்தது, ஓநாயும் ஆட்டுக்குட்டியும். மிருகக் குணங்கள் மனிதக் கதாப்பாத்திரங்களாக திரைக்காட்டில் உலவும் கதையது. கிட்டத்தட்ட அதன் நேரெதிரான கதைக்களம் உடைய புத்தகத்துடன் இம்முறை வந்திருக்கிறேன். அதாவது, மனிதக் குணங்கள் மிருகக் கதாப்பாத்திரங்களாக உலவும் புதினமிது. விலங்குப் பண்ணை. 1947ல் இங்கிலாந்தில் ஜார்ஜ் ஆர்வெல் வெளியிட்ட இப்புதினம், டைம் இதழ் தேந்தெடுத்த சென்ற நூற்றான்டின் சிறந்த 100 புதினங்களில் ஒன்று.

இங்கிலாந்தில் உள்ள பல பண்ணைகளில் ஒன்று, மேனார் பண்ணை. அப்பண்ணையில் உள்ள, பாலூட்டிகளிலேயே அதிக எடையுள்ள மூளையுடைய வெண்பன்றி ஒன்றிக்குப் புரட்சிகரமான சிந்தனை ஒன்று தோன்றுகிறது. விலங்குகளிலேயே இன்னொரு விலங்கின் பாலைக் குடிப்பது மனிதன் மட்டும்தானே! (தவிர கள்ளிப்பால் விஞ்ஞானம் தெரிந்தவனும் மனிதம் மட்டும் தானே) மனிதர்கள் விலங்குகளின் உழைப்பை உறிஞ்சி கொத்தடிமைகளாக நடத்துவதை உணர்ந்த அவ்வெண்பன்றி, அப்பண்ணையில் உள்ள மற்ற விலங்குகளை ஒன்று கூட்டி, மனிதர்களுக்கு எதிராக வலிமை, புத்தி பேதங்கள் நீங்கி விலங்குகள் எல்லாம் ஒன்று திரள வேண்டுமென பேருரையாற்றுகிறது. அவ்வுரையின் ஒரு பகுதி இதோ: 

மனிதன் தான் நமக்கெல்லாம் உண்மையான எதிரி. இப்போதுள்ள காட்சியிலிருந்து மனிதனை மட்டும் விலக்கி விட்டுப் பாருங்கள். நம்முடைய மிகக் கடுமையான அதீத உழைப்புக்கும் கொடிய பசிக்கும் மூலகாரணம் முழுவதுமாக ஒழிந்துவிடும். இந்த உலகத்தில் உள்ள ஜீவராசிகளில் மனிதகுலம் மட்டுமே எதையுமே உண்டாக்காமல் எல்லாவற்றையுமே உட்கொள்கிறது. மனிதன் பால் சுரப்பதோ கொடுப்பதோ கிடையாது. அவன் முட்டையிடுவது கிடையாது. நிலத்தை ஆழ உழுவதற்கு அவன் உடம்பில் தெம்பு கிடையாது. அட, வேகமாக ஓடி ஒரு முயலைக் கூட அவனால் பிடிக்க முடியாது. ஆனால், அவன் நமக்கெல்லாம் எசமான். அவன் நம்மை வேலை செய்ய வைப்பான். வரும் விளைச்சலிலிருந்து குறைந்த தீனியைக் கொடுத்துவிட்டு, அதுவும் நம்மிடையே பட்டினிச் சாவு நடப்பதைத் தடுக்கத் தேவையான அளவில் மட்டுமே கொடுத்து விட்டு, மிச்சம் முழுவதையும் தானே வைத்துக் கொள்கிறான்..... இந்த மனிதனை மட்டும் நீக்கிவிடுங்கள். நம் உழைப்பின் பலன்கள் முழுவதும் நமக்கே சொந்தமாகிவிடும். ஓரிரு நாட்களில்
 நாம் சுதந்திரம் பெற்றுப் பணக்காரர்கள் ஆகிவிடுவோம். எனவே, இரவும் பகலும் உடலாலும் உள்ளத்தாலும் இந்த மானுட இனத்தை விரட்டியடிக்க உழைப்போம். கிளர்ச்சி செய்வோம்.
(http://www.badriseshadri.in/)
ஆரம்பத்தில் சில விலங்குகள் மற்ற‌ விலங்குகளுக்கு இரையாகிவிடும் பயத்தில் வெளிவராமல் இருந்தாலும், சில விலங்குகளுக்கு அவ்வுரையைப் புரிந்துகொள்ளும் அளவிற்குப் புத்தி இல்லாமல் இருந்தாலும் வெண்பன்றி சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்து எல்லா விலங்குகளும் சமமாகின்றன. முயல் எலி பூனை நாய் வாத்து என எதிரிகளின் பயமில்லாமல் எல்லா விலங்குகளும் சமமாக அமர்ந்து வெண்பன்றியின் உரையைக் கேட்கின்றன. அக்கூட்டத்திலேயே அவைகளுக்கான புரட்சிப் பாடல் ஒன்று தயாராகிறது. குளம்பு கொம்புடன் கொடி (புத்தகத்தின் முன்னட்டையில் சிவப்பு நிறத்தில்) தயாராகிறது. இப்புதிய சித்தாந்தத்திற்கு விலங்கியம் எனப் பெயரிடப்படுகிறது. மூன்று இரவுகளுக்குப் பின் அவ்வெண்பன்றி இறந்து போக, புத்திசாலிகள் என்று பரவலாக அறியப்பட்ட இரண்டு காட்டுப்பன்றிகள் புரட்சிக்குத் தலைமை ஏற்கின்றன. திட்டமிட்டபடி பண்ணையின் உரிமையாளரான மனிதனைத் தாக்கி விரட்டிவிட்டு, பண்ணையைக் கைப்பற்றுகின்றன. விலங்குப் பண்ணை என பெயர் மாறுகிறது மேனார் பண்ணை. அவைகளுக்கென ஏழு கட்டளைகள் உருவாக்கப்படுகின்றன.
1. எதெல்லாம் இரண்டு கால்களால் போகிறதோ, அதெல்லாம் எதிரி.
2. எதெல்லாம் நான்கு கால்களாலோ அல்லது இறக்கைகளாலோ போகிறதோ, அது நண்பன்.
3. எந்த விலங்கும் உடை உடுத்திக்கொள்ளக் கூடாது.
4. எந்த விலங்கும் படுக்கையில் உறங்காது.
5. எந்த விலங்கும் சாராய வகைகள் குடிக்காது.
6. எந்த விலங்கும் வேறொரு விலங்கைக் கொல்லாது.
7. எல்லா விலங்குகளும் சமமே.
மனிதர்களை எதிர்த்து உருவான இவ்விலங்குப் பண்ணையால் நிலைக்க முடிந்ததா? தங்கள் கொள்கைகளை நிறைவேற்ற முடிந்ததா? அதுதான் மீதிக்கதை.

எல்லா மனிதர்களும் சமம் என கடவுளுக்குப் போட்டியாக மனிதர்கள் பாபிலோனில் கோபுரம் கட்டியது போல, எல்லா விலங்குகளும் சமம் என மனிதர்களுக்குப் போட்டியாக‌ விலங்குகள் காற்றாலை கட்டுகின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் ஓய்வு வயது, ஓய்வூதியமும் நிர்ணயிக்கப் படுகின்றன. புதினத்தின் ஆரம்பப் பக்கங்களை மனித வரலாற்றுடன் இணைத்துப் பார்க்க எனக்குத் தோன்றவே இல்லை. ஆனால் சில விடயங்கள், ஆசிரியர் மறைமுகமாக ஏதோ உருவகம் செய்கிறார் என யோசிக்க வைத்தன. எல்லா விலங்குகளின் சொத்துரிமைப் பத்திரங்களும் வெண்பன்றிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. விலங்குப் பண்ணையைச் சுற்றி வேலிகளே இல்லாமல் இருந்தாலும், உள்ளே நடப்பது வெளி உலகிற்குத் தெரியாது. சமீபத்தில் டெல்லி அரசு தனது முதல் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தைப் பாதியிலேயே விட்டுவிட்டு, பிறகு நிரந்தரமாக நிறுத்தியது போல, விலங்குகள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்திவந்த காலைநேரக் கூட்டங்கள் திடீரென நிறுத்தப்படுகின்றன. புரட்சிப் பாடல் இனி தேவையில்லை என நிறுத்தப்படுகிறது. விலங்குகள் தங்களைச் சரிசமமாகத் தோழரே என அழைத்துக் கொள்வது மடத்தனம் எனக் காலப்போக்கில் சொல்லப்படுகிறது. ஆம், ஆசிரியர் உருவகப்படுத்தியது இரும்புக் கோட்டையான‌ கம்யூனிச இரஷ்யாவைத் தான். குறிப்பாக 1910 முதல் 1940 வரையான கால கட்டத்தில் ரஷ்ய புரட்சியாளர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் சிந்தனை மாற்றங்களைச் சித்தரிக்கிறார். ஒரு மிகப் பெரிய புரட்சி, கடைசியில் தனிமனிதத் துதியாக முடிந்து போன துயரத்தை ஒரு கோழியின் வார்த்தைகளில் அழகாக உணர்த்துகிறார் ஆசிரியர்: 'நமது நேசமிகு தலைவரின் வழிகாட்டுதலால் நான் கடந்த ஆறு நாளில் ஐந்து முட்டை இட்டேன்'.

எனக்குள்ள அரைகுறை வரலாற்று அறிவின்படி எனக்கு ஸ்டாலின் மீது நல்ல அபிப்ராயம் இல்லை. அதனால் மேற்கொண்டு எழுதாமல், உங்களின் வாசிப்பிற்கே விட்டுவிடுகிறேன்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

120. ஜப்பான்

$
0
0
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: ஜப்பான்
ஆசிரியர்: எஸ்.எல்.வி.மூர்த்தி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
முதல் ஈடு: டிசம்பர் 2012
பக்கங்கள்: 188
விலை: ரூபாய் 130
வாங்கிய இடம்: இந்த வருட சென்னைப் புத்தகக் காட்சி
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜப்பான். அறிமுகமே தேவையில்லாத நாடு. ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் போடப்பட்ட அணுகுண்டுகள் முதல், ஃபுகுஷிமா நகரில் இன்றும் பழுது பார்க்கப்படும் அணுவுலை வரை உலகின் அன்றாட செய்திகளில் இடம் பெற்றிருக்கும் நாடு. புல்லட்ரயில் ரோபோ கார் என தொழில்நுட்பத்தில் மூங்கில் வேகத்தில் வளரும் அதே நேரத்தில், பூகம்பங்கள் ஆழிப்பேரலைகள் எரிமலைகள் என எப்போதும் பலத்த அடிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாடு. Panasonic Toyota Sony Honda Suzuki Mitsubishi Nissan என நம் அன்றாட வாழ்க்கையிலும் இடம் பெற்றிருக்கும் நாடு. கட்டுப்பாடு, தியாகம், கடும் உழைப்பு, நாட்டுப்பற்று, நிர்வாகத் திறமை, குறைந்த விலை, நிறைந்த தரம், அறிவுத்தேடல் என்ற பல சித்தாந்தங்களுக்கு அடிக்கடி உதாரணமாகச் சொல்லப்படும் நாடு. ஜப்பானின் தலைநகரமான டோக்கியோ (Tokyo) உலகின் மிகப்பெரிய நகரமாக அறியப்படுகிறது. அதன் ஆங்கில எழுத்துக்களை மாற்றிப் போட்டால் உண்டாகும் கியோட்டோ நகரம் (Kyoto) பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்குத் தெரியும். இப்படி பேரழிவுகளையும், பெரும் வளர்ச்சியையும் ஒருசேரக் கொண்ட நாடாகத் தான் பெரும்பாலானோருக்கு ஜப்பானைத் தெரியும். நம்மூர் கதாநாயககர்களுக்குப் பரம‌ ரசிகர்களைக் கொண்ட நாடாகவும் ஜப்பானை அடிக்கடி செய்தியாக்கும் பெருமை, தமிழ்கூறும் நல்லுலகில் சில பத்திரிக்கைகளுக்கு உண்டு. பெரும்பாலான புனிதர்களுக்குப் பாவியாய் வலம்வந்த ஒரு கடந்த காலம் இருப்பது போல ஜப்பானுக்கும் உண்டு. எல்லாவற்றையும் சேர்த்து ஒரே இடத்தில் படிக்கலாம் என்று இப்புத்தகத்தை வாங்கிவிட்டேன்.
(http://kizhakku.nhm.in)
கிமுவில் இருந்து மார்ச் 11, 2011 ஆழிப்பேரலை வரை ஜப்பானின் வரலாறு சொல்கிறது இப்புத்தகம். மன்னர்கள் சாமுராய்கள் மக்களாட்சி என, தேவதைகளின் நாடாக வர்ணிக்கப்படும் ஜப்பான் கண்ட ஆட்சி மாற்றங்களைப் பேசுகிறது. எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் பொருளாதாரத்தில் அது கண்டுகொண்டிருக்கும் வெற்றிக்கான காரணங்களைப் பேசுகிறது. சூரியக் கடவுளின் பரம்பரையாக மன்னர் குடும்பத்தை மதிக்கும் ஒரு புராதன நாடாகவும், சமகாலத் தலைமுறைகளால் அதற்கிருக்கும் வித்தியாசமான பிரச்சனைகளையும் விளக்குகிறது. புத்தகத்தின் ஆரம்பப் பக்கங்கள் சொல்லும் ஜப்பான் பற்றிய பொதுவான தகவல்கள் இவை: 
1.மொத்தம் 6852 தீவுகளின் கூட்டமே ஜப்பான். அதில் 426 மட்டுமே மக்கள் வாழத் தகுதியானவை.
2. ஜப்பானின் நிலப்பரப்பு இந்தியாவின் ஒன்பதில் ஒருபங்கு. அதாவது தமிழ்நாட்டையும் ஆந்திராவையும் சேர்த்தால் ஜப்பானைவிட கொஞ்சம் பெரிதாகிவிடும்.
3. உலகின் 10% எரிம‌லைகள் ஜப்பானில் தான் உள்ளன. மொத்தம் 107.
4. உதயசூரிய நாடு (Land of the Rising Sun) எனப் பொருள்படும் 'நிப்பான்'என்பதே ஜப்பானின் ஜப்பானிய பெயர். (எங்கள் நிப்பானே, என்று சாலைகளில் சுவரொட்டிகள் பார்த்தால் நீங்கள் குழப்பமடையக் கூடாது)

மற்ற ஆசிய நாடுகளுடன் ஓப்பிடும் போது ஜப்பான் மிகவும் வித்தியாசமாகச் செயல்பட்டு இருப்பதைக் கவனிக்கலாம். அவ்வளவு பெரிய சீனப் பேரரசை வரலாற்றில் அடிக்கடி வம்புக்கிழுத்து வென்றிருக்கிறது. இரஷ்யாவை வென்றிருக்கிறது. ஐரோப்பிய முதலாளிகள் அடித்துக் கொண்ட உலகப் போர்களில், ஆசியாவின் கடைகோடியில் இருந்து கொண்டு சண்டையிட்டு இருக்கிறது. இந்தியாவிற்குப் பக்கத்தில் பர்மாவரை ஜப்பானியப் படை வந்திருக்கிறது. பர்மா மணிலா ஹாங்காங் கோலாலம்பூர் சிங்கப்பூர் என்ற இரண்டே மாதங்களில் தெற்காசியாவையே கைப்பற்றி விட்டு, ஆஸ்ரேலியாவையும் தாக்கும் அளவிற்கு ஜப்பானின் படைவலிமை இருந்திருக்கிறது. (அப்போது சிங்கப்பூரில் ஜப்பான் வீரர்கள் சம்மந்தப்பட்ட ஒரு புதினத்தைப் பற்றி ஏற்கனவெ இத்தளத்தில் நான் எழுதியிருக்கிறேன்) கொரியா இரண்டாக உடைய ஜப்பானும் காரணமாக இருந்திருக்கிறது. முதல் உலகப்போருக்குப் பின் உண்டான வல்லரசுகளில், ஆசியாவில் இருந்து ஜப்பான் மட்டுமே. ஆனால், 'ஜப்பான் எந்த நாட்டின் மீது தானாகவே படையெடுக்காது'என்று இன்று அதன் அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஒரு பிரிவு இருக்கிறது!

இந்தியாவின் வரலாற்றில் அடிக்கடி ஜப்பான் வந்துபோன குறிப்புகளும் உண்டு. 1945ல் ஜப்பான் சரணடைந்த நாளின் நினைவு தினத்தில், 1947ல் இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுக்க ஆங்கிலேய அரசு தீர்மானித்ததாக ஒரு கதை உண்டு. ஜவஹர்லால் நேரு பிரத‌மராய் இருந்த காலத்தில் ஜப்பானிய இளவரசராக இந்தியாவிற்கு வந்தவர், சென்ற வருடம் ஜப்பானிய மன்னராக வந்து போன செய்தியை நீங்கள் சில நல்ல பத்திரிக்கைகளில் படித்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதே ஜப்பானின் மக்களாட்சி 30 ஆண்டுகளில் 15 பிரதமர்களைக் கண்டிருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய முதல் ஆசிய நாடு என்ற பெருமை ஜப்பானுக்கு உண்டு. ஹிரோஷிமா மீது குண்டு போடப்பட்ட நாளில் பிறந்த ஒருவரை அந்த ஒலிம்பிக் தீபத்தை ஏற்ற வைக்கும் அளவிற்கு வரலாறு மறக்காத நாட்டுப்பற்று உள்ள நாடு அது! நம்மூரில்... வேண்டாம் விட்டு விடுங்கள். நாம் ஜப்பானைப் பற்றி மட்டுமே பேசுவோம். மாஃபியா (கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராயம் முதலிய 16 அம்சங்கள்), வேலையில்லாத் திண்டாட்டம், குறையும் மக்கட்தொகை, அதிகரிக்கும் முதியவர்கள், இலஞ்சம் என்று நவீன பிரச்சனைகளிலும் சிக்கித் தவிக்கிறது ஜப்பான். பொருளை விற்று இலாபம் சம்பாதிப்பதைவிட பணத்தை விற்று இலாபம் சம்பாதிப்பதே சுலபம் என 1990க்குப் பின் மக்களின் மனநிலை மாறிப்போய், பங்குச்சந்தை வீட்டுமனை என வங்கிக்கடன்களில் வாங்கித் தள்ளிய கதைகளைக் காரணங்களாகச் சொல்கிறார் ஆசிரியர். 30 வருடங்களில் 150 மடங்கு விலையேற்றம் கண்ட வீட்டுமனைகள், ஒரே வருடத்தில் 3 மடங்கு வீழ்ந்து போன சரித்திரத்தை ஜப்பான் கண்டிருக்கிறது. பொன்னும் மண்ணும் என்றைக்கும் இறங்கவே இறங்காதென... நாம் ஜப்பானைப் பற்றி மட்டுமே பேசுவோம்.

பெரும்பாலான புனிதர்களுக்குப் பாவியாய் வலம்வந்த ஒரு கடந்த காலம் இருப்பது போல ஜப்பானுக்கும் உண்டு, என்று ஆரம்பத்தில் சொன்னேன் அல்லவா? பியர்ள் துறைமுகம் பற்றி என பெரும்பாலானவர்கள் நினைத்திருப்பீர்கள். நான் அதனால் மட்டும் அப்படி சொல்லவில்லை. ஜப்பான் செய்த அந்த மனிதவுரிமை மீறல்கள் நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன், சீன ஆளுகைக்கு உட்பட பகுதியொன்றில் நான் இருந்த போதுதான் என் நண்பன் ஒருவன் அச்சம்பவம் பற்றி என்னிடம் சொன்னான். அச்சம்பவம் பற்றி ஒரு புத்தகம் சொன்னான். பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்ட புத்தகம் என்றான். நான் இருந்த சீன ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றும் சொன்னான். ஆமாம், அப்புத்தகம் கிடைத்தது. ஈழப்படுகொலைகளுக்கு முன் என் தூக்கங்களைக் கலைத்த புகைப்படங்கள் அவை! சீனாவின் நான்கிங் நகரில் ஜப்பானியப் படைகளின் செயல்களே அச்சம்பவம். அப்புத்தகத்தின் பெயர் The Rape of Nanking.

சராசரி மனித ஆயுட்காலம் ஜப்பானியர்களுக்குத் தான் அதிகம். ஜப்பானிய மொழியில் நண்பன் என்றால் காட்டுமிராண்டி என்றொரு தகவல் இப்புத்தகத்தில் உண்டு. ஜப்பானிய பாராளுமன்றத்தின் பெயரும் சற்று வித்தியாசமானது - Diet. Diet பற்றி புத்தகம் ஏதும் சொன்னதாக நினைவில்லை. இப்புத்தகத்திற்குச் சம்மந்தமில்லாததால் சொல்லாமல் விடப்பட்ட ஒரு நல்ல தகவல் சொல்கிறேன்; குறித்துக் கொள்ளுங்கள். ஜப்பானின் தேசிய கீதம் தான் உலகிலேயே சிறியது! நான்கே நான்கு வரிகள்!

வழக்கம்போல் நாம் பல செய்திகளையும் தகவல்களையும் துண்டு துண்டுகளாகத் தான் தெரிந்து வைத்திருக்கிறோம். நமக்கு அவை அப்படித்தான் சொல்லப்படுகின்றன. ஜப்பான் பற்றிய பல விடயங்கள் அப்படித்தான். தனித்தனியாகத் தெரியும்; கோர்வையாகப் பலவற்றை இப்புத்தகத்தில் தான் தெரிந்து கொண்டேன். உதாரணமாக சில: முதல் உலகப்போரில் இங்கிலாந்து அணியில் ஜெர்மனிக்கு எதிராகவும், இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி அணியில் இங்கிலாந்துக்கு எதிராகவும் ஜப்பான் போரிட்டது. அட ஆமாம், இப்போதுதான் கவனிக்கிறேன்! இந்தக் கட்சித்தாவலுக்கான காரணம் என்ன? ஹாலிவுட் படங்கள் பார்த்து பலருக்குப் பியர்ள் துறைமுகம் (Pearl Harbour) தெரிய வாய்ப்பிருக்கிறது. அவ்வளவு தூரம் போய் தனக்குச் சம்மந்தமே இல்லாத அத்துறைமுகத்தை ஏன் ஜப்பான் தாக்கியது? 

Seek knowledge even from China. 'சீனர்களிடம் இருந்து கூட அறிவைத் தேடிப் பெறுங்கள்'என்று சொன்னார் முகமது நபி. சீனாவையும் தாண்டி ஜப்பானுக்கும் போக வேண்டியது நமது காலத்தின் கட்டாயம்!

அனுபந்தம்:
-------------------
1. இரண்டாம் உலகப் போருக்குப் பின் பேரரழிவில் இருந்து மீண்டெழுந்த ஜப்பானை ஃபீனிக்ஸ் பறவையுடன் ஒப்பிடுகிறார் ஆசிரியர். எரிந்து போன சாம்பலில் இருந்து எழுந்து பறக்கும் பறவையாக அடிக்கடி கேள்விப்பட்டு இருப்போம். கதாநாயகனுக்கான ஆரம்பப் பாடலில் வைரமுத்துவே எழுதியிருக்கிறார். கிரேக்கப் புராண ஃபீனிக்ஸ் பறவை, ஒரு சமயத்தில் உலகில் ஒன்றே ஒன்றுதான் வாழுமாம். அதன் இறுதிக்காலம் அதற்கே தெரியுமாம். அப்போது அது தீக்குளிக்க, அடுத்த பறவை அதே தீயில் இருந்து வருமாம். அட பார்டா, இப்புத்தகத்தில் தான் படித்தேன்.
2. தசாவதாரம் திரைப்படத்தில் ஜப்பானியராக ஓர் அவதாரம். இறுதிக் காட்சியில் ஆழிப்பேரரலையைப் பார்த்து எல்லோரும் செய்வதறியாது நிற்க, 'சுனாமி'என்று கத்துவதற்குத்தான் ஜப்பானியர் என்று ஒரு விமர்சனத்தில் படித்திருக்கிறேன். சுனாமி என்பது ஜப்பானியர்கள் செய்த வார்த்தை. பசிபிக் கடலில், ஜப்பானில் ஆழிப்பேரலை என்பது அடிக்கடி நிகழ்வது.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

121. பாரதியாரின் வேடிக்கைக் கதைகள்

$
0
0
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: பாரதியாரின் வேடிக்கைக் கதைகள்
ஆசிரியர்: பாரதியார்
வெளியீடு: தாமரை பப்ளிகேஷன்ஸ்,அம்பத்தூர், சென்னை
முதல் ஈடு: ஜூலை 2010
பக்கங்கள்: 173
விலை: பின்னட்டையில் 75 ரூபாய்; புத்தகத்தினுள் 115 ரூபாய்
வாங்கிய இடம்: இந்த வருட சென்னைப் புத்தகக் காட்சி
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆடுகளம் திரைப்படத்தின் ஆரம்பத்தில் பெயர்கள் போடும் போது, உலக வரலாற்றில் சேவற்சண்டை பற்றிய குறிப்புகள் பின்னணியில் காட்டப்படும். பாரதியாரின் சின்ன சங்கரன் கதை என்றவொரு குறிப்பும் அவற்றினூடே சில நொடிகளில் வந்து போகும். கவனித்து இருக்கிறீர்களா? நான் முதன்முதலில் அதைப் பார்த்தபின், என்னிடம் இருக்கும் பாரதியாரின் ஒரே புத்தகமான கவிதைத்தொகுப்பின் பொருளடக்கத்தில் தேடிப் பார்த்தேன்; உள்ளேயும் சற்று புரட்டிப் பார்த்தேன். சின்ன சங்கரன் கதை என்று எதுவுமே இல்லை. அவரின் கவிதைகளை நான் கொஞ்சங் கொஞ்சமாக அப்போது படித்துக் கொண்டிருந்ததால், எப்போதுதாவது சின்ன சங்கரன் கதை வரும் என விட்டுவிட்டேன். இச்சித்திரையில் புத்தகக் கண்காட்சி ஒன்றில் பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்கள், சின்ன சங்கரன் கதையை மேற்கோளிட்டுப் பேசினார்; தமிழில் தலைசிறந்த நகைச்சுவைக் கதைகளில் ஒன்றென்றார். அதாவது, சின்ன சங்கரன் கதை என்பது கவிதை அல்ல, கதை என்று ஞானசம்பந்தன் அவர்கள் சொல்லித் தான் இந்த ஞானசேகருக்கு அந்த ஞானபாநு கவிஞனின் பன்முகத் தன்மை தெரியும்.

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத் 
தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்த தன்றே!
என்று பாடிய மகாகவி, கவிதைகளில் வசனகவிதை போன்று பல பரிமாணங்களைக் கையாண்டிருப்பது பலருக்குத் தெரியும். கவிதை என்ற பேரொளிக்கு முன், அம்மகாகவியின் மற்ற படைப்புகள் ஒளிகுன்றிப் பலருக்குத் தெரியாமல் போனதே எதார்த்தம். குறள் என்ற பிரம்மாண்டத்தின் முன், வள்ளுவனின் மற்ற சிறந்த படைப்புகள் பிரபலமாகாமல் போனது போல. சின்ன சங்கரன் கதை என்பது கதை என்று தெரிய வந்தபின், மகாகவியின் எட்டையபுரம் வீட்டிற்கு ஒருமுறை சென்றிருக்கிறேன். திருவல்லிக்கேணியில் அவர் நினைவு இல்லத்திற்கு ஒருமுறை சென்றிருக்கிறேன். திருவல்லிக்கேணியில் பாரதி மெஸ்ஸில் சிலமுறைகள் சாப்பிட்டு இருக்கிறேன். இம்மூவிடங்களிலும் காட்சிக்கு வைத்திருக்கும் புத்தகங்களில் சின்ன சங்கரன் கதை தென்படவேயில்லை. இவ்வருட சென்னைப் புத்தகக் காட்சியில், இப்புத்தகத்தை எடுத்து பொருளட‌க்கம் மட்டும் தான் பார்த்தேன்;  சின்ன சங்கரன் கதை இருந்தது; வாங்கிவிட்டேன்.

பாரதியாரின் வேடிக்கைக் கதைகள். புத்தகத்தின் பெயரே எல்லாவற்றையும் சொல்லி விடுவதால், எனது வேலை எளிது. அந்தரடிச்சான் சாஹிப், செத்தான் சாஹிப், மிளகாய்ப்பழ சாமியார், வாழைப்பழச் சாமியார், திடசித்தன், நெட்டைமாடன் என்பன‌ பாரதியின் கதைமாந்தர்களில் சில பெயர்கள். காக்காய்ப் பார்லிமென்ட், கடற்கரையாண்டி, சும்மா என்பன சில கதைகளின் பெயர்கள். ஒரு பெண்ணை வர்ணிக்கும் போது 'ஷோக்கான குட்டி'என்று படித்தவுடன், என்னை அறியாமல் சிரித்து விட்டேன். மொத்த புத்தகத்தையும் சென்னை மின்சார இரயில்களில் தான் படித்து முடித்தேன். நான் நினைத்து நினைத்து நீண்ட நேரம் சிரித்துக் கொண்டு இருந்த ஒரு பகுதியை உங்கள் வாசிப்பிற்கும் தருகிறேன். பேய்கள் கடத்திக் கொண்டு வந்த பாரதியாரைப் பார்த்து, பேய்களின் தலைவன் இப்படி சொல்கிறது:
"வாப்பா, காளிதாஸா, பயப்படாதே, தரையின் மேல் உட்கார்ந்து கொள். மனதைக் கட்டு. மூச்சை நேராக்கு. ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை. நீ செய்த நூல்கள் சில நாம் பார்த்திருக்கிறோம்.'கடலெதிர்த்து வந்தால் கலங்க மாட்டோம். தலைமேல் இடி விழுந்தால் தளர மாட்டோம்; எங்கும் அஞ்சோம்; யார்க்குமஞ்சோம்; எதற்குமஞ்சோம்; எப்போதும் அஞ்சோம்'என்று நீ பாடினதை நான் நேற்று ஒரு புஸ்தகத்தில் படித்தேன். நீ உண்மையான அனுபவத்தைச் சொன்னாயா, அல்லது வெறுங் கற்பனைதானா என்பதை அறியும் பொருட்டாக நான் உன்னை இங்கே கொண‌ர்வித்தேன். நீ பயப்படுகிற அளவு ஆற்காட் நவாப் கூட பயந்தது கிடையாது. ஆற்காட் நவாப் சங்கதி தெரியுமா? கிளைவ் ஒரு வாயில் வழியே கோட்டைக்குள் புகுந்து பார்த்தபோது நவாப் மற்றொரு வாயில் வழியே வெளியேறிவிட்டாராம். உள்ளே போனால் கிளைவ் யாருடன் சண்டை போடுவார்? அவர் பாட்டிலே போய் ஷோக்காகக் கோட்டைக்குள் பீரங்கி சகிதமாக இருந்துகொண்டு கோட்டை கொத்தளங்களைச் சீராக்கித் தான் அதை வைத்துக் கொண்டாரென்று கேள்வியுற்றதுண்டு. நீ அந்த ஆற்காடு நவாபிடனமிருந்த பிராமணச் சோதிடரின் வம்சத்தில் பிறந்தாயோ? ஆற்காட்டு பயம் பயப்படுகிறாயே? மூடா, ஆறுதலடை."

33 பக்கங்களுக்கு நீளும் 'சின்ன சங்கரன் கதை'. உண்மையான இராமயணக் கதையென இராவனணின் வாரிசு ஒருவன் சொல்லும் 'குதிரைக்கொம்பு' . சுடுகாட்டுப் பேய்களின் 'பேய்க் கூட்டம்'. மொத்தமுள்ள 33ல் இம்மூன்றும் என் விருப்பக் கதைகள். குணா திரைப்படத்தின் பாதிப்பில், அபிராமி அந்தாதியைச் சில மாதங்கள் திருச்சி முழுவதும் தேடி அலைந்திருக்கிறேன். அதன்பிறகு சின்ன சங்கரன் கதைதான். ஒரேயொரு பக்கம் வந்துபோகும் சேவற்சண்டைக் குறிப்புகளைச் சில நொடிகள் திரையில் காட்டி பலருக்கும் கொண்டு சேர்த்தமை பாராட்டுக்குரியது. 

பாரதியார் தன் சொந்த வாழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுத ஆரம்பித்த புனிதம் தான், சின்ன சங்கரன் கதையாம். 33 பக்கங்களில் அடங்கிப் போன சில பகுதிகள் மட்டும்தான் இதுவரை கிடைத்தனவாம். சின்ன சங்கரன் கதை படித்துப் பாருங்கள். ஒரு நகைச்சுவை படைப்பு, அதன் முடிவின்மை நிலையில் ஒரு வாசகனைச் சோகப்படுத்தும் என்றால், அதைப் படைத்தவனின் தாக்கம் இச்சமூகத்தின் மேல் எவ்வளவு மேன்மையானதாக இருக்கக் கூடும்!

- ஞானசேகர்

122. வெண்ணிற இரவுகள்

$
0
0
ஒவ்வொரு சந்திப்பின் முடிவில்
மிகவும் ஆயாசமடைந்து
கணவர்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பது
நல்லது என்று யோசிக்கத் தொடங்குகிறாள்
- மனுஷ்யபுத்திரன் ('சிநேகிதிகளின் கணவர்கள்'கவிதையிலிருந்து)

முட்களின் நடுவில் லீலிமலர்ப் போலவே இளங்கன்னியர் நடுவில் விளங்குகிறாள் என் அன்புடையாள்.
- திருவிவிலியம் (சாலமோனின் உன்னத சங்கீதம் 2:2)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்:  வெண்ணிற இரவுகள் (குறும்புதினம்)
ஆங்கிலத்தில்: White Nights
ஆசிரியர்: ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி (Fyodor Dostoyevsky)
தமிழில்: ரா.கிருஷ்ணையா
வெளியீடு: எதிர் வெளியீடு, பொள்ளாச்சி (www.ethirveliyedu.in)
முதல் ஈடு: சனவரி 2013
பக்கங்கள்: 100
விலை: ரூபாய் 70
வாங்கிய இடம்: இந்த வருட சென்னைப் புத்தகக் காட்சி
----------------------------------------------------------------------------------------------------------------------------------
வெண்ணிற இரவுகள். உணர்ச்சிவயப்பட்ட காதற்கதை. ஒரு கனவுலகவாசியின் நினைவுகளிலிருந்து.புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருந்த இவ்வரிகள் கவனம் ஈர்த்தன. 10% புத்தகத்தில் இருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் முன்னுரையில் சில வரிகள் படித்துப் பார்த்து, வாங்கிவிட்டேன். 'குற்றமும் தண்டனையும்'தான் நான் படித்த ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கியின் முதல் புத்தகம். அடுத்து 'வெண்ணிற இரவுகள்'. தமிழில் இயற்கை, இந்தியில் Jab we met (மீண்டும் தமிழில் கண்டேன் காதலை) போன்ற திரைப்படங்கள் இப்புதினத்தின் கருவுடையவை. 

ஓர் இளைஞன். ஓர் இளைஞி. நான்கு இரவுகள். ஒரு பகல். ஒரே இடம். அவ்வளவுதான்  மொத்தக் கதையும். இவ்விரண்டு புத்தகங்களிலும் முக்கிய பாத்திரமாக சித்தரிக்கப்படும் இளைஞர்கள் சிக்கலான மனப்பிரச்சனைகள் கொண்டவர்கள்; தனக்குத் தானே பேசிக் கொள்பவர்கள்; தன்னை அங்கீகரிக்க மறுக்கும் இவ்வுலகிடம் இருந்து விலகியே இருந்து மவுனம் காப்பவர்கள்; ஆனால் உலகின் அழகியலை ரசிப்பவர்கள். அவர்கள் தான் வாழும் நகரின் வீதிகளை இரவின் துணையுடன் ரசிப்பவர்கள்.
(http://discoverybookpalace.com/)
முதல் புத்தகத்தின் இளைஞனைப் போலவே இவனும் இளைஞி ஒருத்தியை ஓர் இரவில் சந்திக்கிறான். அதுவரை எந்தப் பெண்ணிடமும் பேசியிராத அவனை அவளின் துயர நிலை பேசவைக்கிறது. எதையெதையோ பேசுகிறான். பெயர் சொல்லாமல் விடை பெறுகிறாள். அடுத்த மூன்று இரவுகளும் அவர்கள் அதே இடத்தில் சந்தித்துக் கொள்வதும், அவர்களுக்குள் நடக்கும் தத்தம் வாழ்க்கை பற்றிய உரையாடல்களுமே இப்புதினம். ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கியின் நாயகர்களின் மனநிலைகளினூடே புதினங்கள் பெரும்பாலும் பயணிப்பதால், அவர்களைப் படிக்கும்போதும் கிடைக்கும் அனுபவத்தை எழுத்தில் சொல்ல அந்நாயகர்களைப் போலவே நானும் தடுமாறுகிறேன்.  ஆதலால், எஸ்.ராமகிருஷ்ணனின் முன்னுரை இடம்பெற்றுள்ள இச்சுட்டியைத்தங்களின் வாசிப்பிற்குத் தந்துவிட்டு நான் விடைபெறுகிறேன். கூடிய விரையில் The Idiot  பற்றி விரிவாக எழுதுகிறேன்.

- ஞானசேகர்

123. DEBT - The first 5000 years

$
0
0
(இப்பதிவிற்குப் பொருத்தமான மேற்கோளும் ஆரம்பப் பத்தியும் தந்தமைக்கும், ஆங்காங்கே சில தகவல்கள் சேர்த்து இப்பதிவிற்கு இவ்வடிவம் தந்தமைக்கும் நண்பர் ஞானசேகருக்கு நன்றிகள்)

தனது தந்தையின் கடனைத் தீர்க்காத ஆண்மகன், மறுபிறவியில் நாயாகவோ அடிமையாகவோ அல்லது பெண்ணாகவோ பிறக்கிறான். 
- மனு தர்ம சாத்திரம்
If a man does not pay his father's debt, in his next life he is born as a dog, a slave or a woman.
- Manusmrti
(நன்றி: Struggle for Gender Justice புத்தகம்)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : DEBT - The first 5000 years 
ஆசிரியர் : டேவிட் கிரேபர் (David Graeber)
வெளியீடு : மெல்வீல்லெ ஹவுஸ் (Melville House)
பக்கங்கள் : 534
விலை : ரூபாய் 500
----------------------------------------------------------------------------------------------------------------------------------
மனிதகுலம் தனது பரிணாமப் படிகளில் ஏறும்போது, சில‌ காலங்க‌ளில் நாலுகால் பாய்ச்சலில் ஓடுகிறது. சில காலங்களில் குழம்பிப் போய் அப்படியே நிற்கிறது. இரண்டையும் ஒரு சேர சந்தித்துக் கொண்டிருக்கும் விசித்திரமான காலம் இந்த 21ம் நூற்றாண்டு. எழுத்தாளர் பெருமாள் முருகன் சொல்வது போல, நம் முன்னோர்கள் யாரும் குறியை மூடிப் புணர்ந்ததில்லை. கவிஞர் மகுடேசுவரன் சொல்வது போல, ஒரு கட்டடத்தில் இருந்து வெளியேறி இன்னொரு கட்டடத்தில் நுழைவதையே ஆயுள் செயலாகக் கொண்டு யாரும் இருந்ததில்லை. ஆனால் ஒரு கிழவன் கேட்டதற்காக, உபரி நிலங்களை எல்லாம் நிலமற்ற விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்த ஆச்சரியத்தை இதே தேசம் கண்டு 65 ஆண்டுகள் கூட ஆகவில்லை. இந்தப் பரிணாமம் என்ற மாயநிலையைத் தாண்டிப்போய், நின்று திரும்பிப் பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும் என்பதால், மனிதகுலம் முழுவதும் ஆங்காங்கே விதைக்கப்பட்டு இன்று பரவிக் கிடக்கும் மாய‌ சித்தாந்தங்கள் பல. இந்த 21ம் நூற்றாண்டு தனது சித்தாந்தங்களை மனிதகுலத்தின் பொதுப் புத்திக்குள் திணித்து வைக்கப் பயன்படுத்தும் ஊடக‌ங்களில், இப்பதிவிற்குச் சம்மந்தப்பட்ட சில சித்தாந்தங்கள் எப்படி திரிக்கப்பட்டு நியதிகளாகப் பதிவு செய்யப்படுகின்றன என்று இரு உதாரணங்கள் பார்க்கலாம்.

1. ஒரு பிரபல தமிழ்த் தொலைக்காட்சியில், மக்கள் நேரடியாகப் பங்கேற்று விவாதிக்கும் ஒரு நிகழ்ச்சியில் ஒருவர் பேசினார். ரொம்ப காலமாக நம் சமுகத்தில் இருந்த ஒரு methodologyக்குப் பேரு பண்டமாற்று. நாம ஒரு பொருள் கொடுப்போம். அதுக்கு இணையா ஒரு பொருளக் கொடுப்பாங்க. அப்படித்தான் ரொம்ப காலம் வரைக்கும் இருந்திச்சு. அதுக்கடுத்து என்னாச்சின்னு கேட்டா, எல்லா நேரத்திலேயும் பொருள கொடுத்தே பொருள் வாங்கிக்கிட்டு இருக்க முடியாதுன்னு எல்லாத்தையும் தூக்கிட்டு இங்கிருந்து அங்க அங்கிருந்து இங்க போக முடியாதுன்னு சொல்லிட்டு, ஒரு பொருள் கண்டுபிடிச்சாங்க அதுக்கு பேரு காசு.
2. நூறுநாள் வேலைத்திட்டம், ரேஷன் அல்லது மானியம் போன்றவற்றால் மக்கள் சோம்பேறிகள் ஆவதாகவும் ஊழல் பெருகுவதாகவும், தடையற்ற சந்தை (free market) பாதிக்கப்படுவதாகவும் முகநூலில் நண்பர் ஒருவர் கூறினார். அதனால் பொருளாதாரம் 10ம் வகுப்பிலேயே பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டுமென‌ அறிவுறுத்தினார். 

முதல் உதாரணம் காசு பற்றியது; அடுத்த உதாரணம் தடையற்ற சந்தை பற்றியது. பள்ளிக்கூடங்களில் பக்கத்து எண்ணில் இருந்து கடன் வாங்கிக் கழிக்க ஆரம்பித்த‌தில் இருந்து தொன்று தொட்டு கற்றுத் தொடர்ந்து வரும் கருத்து என்பதால், முதல் உதாரணத்தைப் பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்வதுண்டு. விலையில்லா அல்லது இலவசம் என்ற வார்த்தைகளால் கீழ்த்தரமாகப் பார்க்கப்படும், பொது விநியோகத் திட்டம் (PDS = Public Distribution System) பற்றிய சமூக அடிப்படைத் தேவை அறியாத சிறுபிள்ளை யாரோ சொன்னதென்று இரண்டாம் உதாரணத்தைத் தூர‌ விலக்கும் என்னைப் போன்றவர்கள் சிலரும் உண்டு. அம்பானிகளுக்கும் டாட்டாக்களுக்கு கொடுக்கும் மானியங்கள் பற்றியோ, 'சன்டேன்னா ரெண்டு'என்று ஏழை இந்தியனை வெறும் கவர்ச்சியின் வாடிக்கையாளானாகவே வைத்திருக்கும் அவர்களின் தொழில் தர்மம் பற்றியோ கேள்விகள் கேட்காமல், தனது வன்மத்தையெல்லாம் ஏழைகளின் மீதே அச்சிற்றறிவாளர்கள் காட்டுகிறார்கள் என நான் மேலும் கூறுவேன்.

மக்களோடு இன்று நன்கு கலந்துவிட்ட தீபாவளி வெள்ளைக்காரனுக்குச் சற்று முன்னால் வந்த ஒரு சித்தாந்தம் என்றோ, கம்பர் முதல் கபீர்தாசர் வரை கண்டிராத‌ ஓர் இடத்திற்கு யாரோ சிலர் ரசீது வைத்திருப்பதாக விதைக்கப்பட்ட சித்தாந்தம் சமீபத்தியது என்றோ ஆராய்ச்சியாளர்கள் சொன்னால் பலரும் நம்பத் தயாரில்லை. தமிழ்ப் புத்தாண்டையே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் மாற்றிக் கொண்டாடுகிறோம். அப்படியானால் கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தும், பணத்தின் மீது கட்டப்பட்ட இவ்வுலகத்தின் கதை?  Cash என்ற வார்த்தை சீன மான்டரின் மொழியில் இருந்து வந்தது. Cash காசு பணம் துட்டு Money எல்லாவற்றிற்கும் மூலமாகப் பண்டமாற்று முறையைச் சொல்கிறோம். சந்தை வந்தது என்கிறோம். பின்னாளில் கடன் வட்டி வரி கிஸ்தி Tax வந்தது என்கிறோம். பணம் பரவலாக்கப்படும்போது தடையற்ற சந்தை தடையுறுகிறது என்கிறோம். நான் ஏற்கனவே சொன்னது போல், பரிணாமப் படிகளில் கொஞ்சம் திரும்பிப் பார்த்து, இச்சித்தாந்தங்கள் மனிதகுலத்தில் பல்வேறு காலங்களில் எப்படி பரிணாமம் பெற்றன என ஆராய்ந்தால்? பண்டமாற்று, தடையற்ற சந்தை போன்ற சித்தாந்தங்கள் மனிதகுலத்தின் பொதுப் புத்தியில் மிக மிகச் சமீபத்தில் திணிக்கப்பட்ட சித்தாந்தங்களாக இருந்தால்? புத்தகத்திற்குள் போகலாம்.

Anthropology. தமிழில் மானிடவியல் என்பது மனித இனம் பற்றிய கல்வித்துறை. மனித குலத்தைச் சமூக-பண்பாட்டு நிலையிலும் உயிரியல் நிலையிலும் கடந்த கால மக்களையும் சமகால மக்களையும், அதாவது எல்லாக் காலத்து மக்களையும் எல்லா இடங்களின் மக்களையும் ஆராயும் பரந்த விரிந்த இலக்குடையதாக ஒன்றாக விக்கிபீடியா விளக்குகிறது. மானிடவியல் ஆய்வாளரான ஆசிரியர் டேவிட் கிரேபர்  இடதுசாரி சிந்தனையுள்ள கலகக்காராகவும் களப்பணியாளராகவும், நம் காலத்தில் வாழும் மிகச்சிறந்த அறிவுஜீவிகளில் ஒருவராகவும் அறியப்படுகிறார். Occupy Wallstreet போராட்டங்களைப் பற்றி வலைத்தளங்களில் வாசித்துக் கொண்டிருந்த வேளையில் போராட்டத்தில் பங்குபெற்றவ‌ர்களில் முக்கியமானவராகவும், போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளை மக்கள் மன்றத்தின் மூலம் ஒருங்கிணைத்ததில் பெறும் பங்காற்றியவராகவும் ஆசிரியரைப் பற்றி அறிய நேர்ந்தது. இவருடைய இப்புத்தகம் இந்நூற்றாண்டின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.
(http://www.wikipedia.org)
ஆம். பண்டமாற்று, தடையற்ற சந்தை என்ற இரு சித்தாந்தங்களும் தவறு என்று மானிடவியல் ஆய்வின் மூலம் விளக்குவதே இப்புத்தகம் என்று எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுவதற்குக் காரணம், இப்புத்தகம் இவ்விரண்டையும் தாண்டி மனித வரலாற்றின் பல்வேறு காலங்களின் பல விசயங்களை உள்ளடக்கியது. மீண்டும் இவ்விரு விசயங்களையே எடுத்துக் கொள்வோம். இவை ஒன்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மக்கள் விவாதங்களின் விளம்பர இடைவேளைகளில் கண்டிபிடிக்கப்பட்டு, முகநூலில் Like செய்து பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையை வைத்து உண்மையாகிப் போன சித்தாந்தங்கள் அல்ல. நம் பாடப் புத்தகங்களிலும், பொருளாதாரத்திலும் அடிக்கடி சொல்லப்படும் உதாரணங்கள் தான் இவை. இவை பொய் என்றால் பல கேள்விகள் எழுகின்றன.
Free Market என்று ஒன்று கிடையாதென்றால் Market? 
Market என்று ஒன்று கிடையாதென்றால் பணம்? 
பணம் என்று ஒன்று கிடையாதென்றால் பண்டமாற்று? 
பண்டமாற்று என்று ஒன்று இல்லாமல் எப்படி தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன? 
இப்படி பல்வேறு கேள்விகளை எழுப்புவதோடு மட்டுமில்லாது அதற்கான விடைகளையும் பணம் உருவாவதற்குக் காரணமாக இருந்த கடனின் வரலாற்றையும் மானிடவியல் ஆய்வின் மூலம் விளக்குவதே இப்புத்தகம். DEBT - The first 5000 years. முதல் 5000 ஆண்டுகளில் கடன்.

மொத்தத்தில் முதலாளித்துவ‌ சிந்தனைகளின் அடித்தளத்தைக் கருத்தியல் ரீதியாக மானிடவியல் ஆய்வின் மூலம் தகர்க்கிறது இப்புத்தகம். முதலாளித்துவத்தின் மீதான ஒரு வன்மாக இல்லாமல் ஒரு அறிவார்ந்த விவாத‌த்தை (intellectual discourse) முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலும், பணம் கடன் இவற்றின் வரலாற்றைப் புரிந்து கொள்ளும் நோக்கிலும் எழுதப்பட்டிருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு. இப்புத்தகத்தைப் பற்றி எழுதும் போது 5000 வருட வரலாற்றில் ஒரு வாசகருக்கு எப்பகுதிகளை எடுத்துக் கூறுவது, அதை எப்படி கோர்வையாகச் சொல்வது என்ற சிக்கல். அதைத் தவிர்ப்பதற்காக கோர்வையாக இல்லாமல் போனாலும் ஒரு சில பகுதிகளை மட்டும் கூறிவிட்டு மிச்சத்தை வாசகரின் வாசிப்பிற்கே விட்டு விடுகிறேன். பண்டமாற்றிலிருந்து பணம், பணத்திலிருந்து கடன் உருவாகியதாக பொருளாதாரப் புத்தகங்கள் குறிப்பிடுகின்றன‌. மானிடவியல் ஆய்வின்படி பண்டமாற்று நிகழவில்லை; மாறாக கடன் சொல்லி வாங்கிக் கொள்வதே நடந்திருக்கிறது. உதாரணமாக, பிரேம் என்பவ‌ருக்குப் பானை தேவைப்பட்டால், பானைகள் தயாரிக்கும் சேகரிடம் பேச்சுவாக்கில் தன் தேவையைக் கூறுவார். அன்றோ மறுநாளோ சேகர் பானையைப் பரிசாக வழங்குவார். பிறகு என்றைக்காவது சேகருக்குத் தேவையேற்படும் போது பிரேம் பரிசாக வழங்குவார். அது ஒரு மாதம் கடந்தோ, ஒரு வருடம் கடந்தோ கூட இருக்கலாம். அதேபோல் வாங்கிய பொருளுக்கு அதிகமாகவோ குறைவாகவோ கொடுக்க வேண்டும். அதே அளவு திருப்பிப் கொடுக்கப்பட்டால் உறவு முறிந்ததாகப் பொருள்படும். ஆக ஒரு சமுகத்தில் ஒருவருக்கொருவர் எப்போதும் கடன்பட்டவராகவே இருக்க வேண்டும். 

அதே காலகட்டத்தில் பணமாக செம்பு கம்பிகள், வாசனை திரவியங்களுக்குப் பயன்படும் மரக்கட்டைகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அவற்றை வைத்து நீங்கள் சந்தையில் பொருள் வாங்க முடியாது. மாறாக அவை தீர்க்க முடியாத கடனைக் குறிக்கவே பயன்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ஓரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அவளுடைய பெற்றோருக்கு 40 செம்பு கம்பிகளையோ அல்லது ஆடு மாடுகளையோ கொடுக்க வேண்டும். இது வரதட்சணை போல் அல்லாமல் அவர்களுடைய‌ பெண்ணுக்கு இணையாக தன்னால் எதையும் கொடுக்க இயலாது; நான் தீர்க்க முடியாத கடன்பட்டிருக்கிறேன்; அதன் அடையாளமாக இதைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்பதே ஆகும். அதேபோல் குழந்தை பெற்றாலும் பெண்ணுக்குத் தீர்க்க முடியாத கடனை உணர்த்துவதற்காக ஏதாவது கொடுக்க வேண்டும்.
(http://www.wikipedia.org)

விஞ்ஞான அறிவியல் பெண்ணின் குரோமசோமில் இருந்து தான் ஆண் உருவானாதாகச் சொல்கிறது. குழுக்களாக ஓரிடத்தில் தங்கி வாழ மனிதயினம் ஆரம்பித்த போது, ஆண் வேட்டையாடப் போயிருக்கிறான்; பெண் குழுத் தலைவியாக இருந்திருக்கிறாள் என்று வரலாற்று அறிவியல் சொல்கிறது. தாய்வழிச் சமூகங்களாகத் தான் மனிதயினம் நாகரீகப் பாதையில் அடியெடுத்து வைத்திருப்பதாக மானிடவியலும் சொல்கிறது. இன்றும் தாய்வழி சமூகத்தைப் பின்பற்றும் பழங்குடியினரிடையே வரதட்சணையும், பணமீட்டும் வெறியும், பெண்விரோதக் குற்றங்களும் இல்லாததைக் காணலாம். சந்தையும் பணமும் உருவான பின்பு, தாய்வழி சமுகமாக இருந்தது தந்தைவழி சமுகமானது. எது ஒரு பெண்ணுக்கு இணையாக எதையுமே த‌ன்னால் கொடுக்கமுடியாது என்று உணர்த்தியதோ, அது ஒரு பெண்ணின் விலையாகிப் போனது. இந்த இடத்தில் விவிலியத்தில் வரும் நெகேமியா கதையில், கடன் வாங்கிய தகப்பனை விட்டுவிட்டு மகளைத் தூக்கிச் செல்வதின் காரணத்தைச் சிந்திப்பது அவசியம் என்கிறார் ஆசிரியர். பல்வேறு புராணங்களில் இது போன்ற கதைகள் இருந்தாலும்,  இதைச் சாதாரணமாக ஆதிகாலம் முதல் இப்படித்தான் நடந்திருக்கிறது என்று சொல்லிவிட்டுப் போகமுடியாது. ஏனென்றால் இந்தப் பழக்கம் இடையில் வந்துசேர்ந்ததுதான். கடனிற்காகப் பெண்ணை அல்லது பிள்ளைகளை விற்பதென்பது சந்தையும் பணமும் வந்த பிறகு தான் நடந்தேரியது. அதாவது, 'கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்'என்று கம்பராமாயணம் சொன்னாலும், கடன் என்ற சொல்லுக்கு இலங்கை வேந்தன் காலத்தில் இருந்த அதே அர்த்தம், கம்பர் காலத்தில் கண்டிப்பாக இல்லை. நம் காலத்து மீட்டர் வட்டியும், EMIம் கம்பர் காலத்தில் இல்லை.

சந்தை எப்படி உருவாகியது என்பதற்கு நாம் ஏன் வரி செலுத்த ஆரம்பித்தோம் என்பதை உணர்ந்து கொள்வது அவசியமானது. பெரும் படைகளைப் பராமரிப்பதின் சிக்கலை உணர்ந்த மன்னர்கள், படை வீரர்களுக்குத் தங்கத்தையோ வெள்ளியையோ காசாகக் கொடுத்துவிட்டு மக்களிடம் அதை வரியாக செலுத்த வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தனர். விளைவு, சந்தை உருவாக்கம். வரி செலுத்துவதற்கான காசைப் படைவீரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தால் தான் பெறமுடியுமென்ற நிலை உருவானது. எங்கெல்லாம் மாநிலங்கள் / மாகாணங்கள் உருவானதோ அங்கெல்லாம் சந்தையும் பணமும் உருவானது. மாநிலங்கள் / மாகாணங்களுக்குக் கீழ் வராத தேசங்கள் அனைத்தும் தாய்வழி சமுகமாகவும், சந்தையும் பணமும் இல்லாத சமுகமாகவும் இருந்திருக்கின்றன‌. இந்த இடத்தில் ஆடம் ஸ்மித்தின் தடையற்ற சந்தைக்கு அடிப்படையாக இருக்கும் நியுட்டனின் சிந்தனை பற்றியும் தெரிந்து கொள்ளும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறேன். இறுதியாக சில அரசியல் நிகழ்வுகளைச் சுருக்கமாக பார்த்துவிடலாம்.

மூன்றாம் உலக நாடுகள் எப்படி கடனில் தள்ளப்பட்டன என்பதற்கு, மடகாஸ்கரையும் கெய்ட்டியையும் உதாரணங்களாகச் சொல்லலாம். மடகாஸ்கரின் மீது படையெடுத்து வெற்றிபெற்ற பிரான்ஸ், தன் படையெடுப்பிற்கான செலவுகளுக்கு மடகாஸ்கர் கடன்பட்டிருப்பதாக அறிவித்தது. இந்த இடத்தில் வெற்றிபெற்ற நாடுகள் எப்போதும் செய்கிற செயல்தான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. கெய்ட்டி பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்ததற்காக கடனில் தள்ளப்பட்டது. மடகாஸ்கர் கடனைக் கட்டமுடியாமல் தவித்தபோது சமூக நலத்திட்டங்களைக் கைவிடக்கோரி உலக நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியதால், கொசு ஒழிப்புத் திட்டத்தைக் கைவிட்டு பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்களைப் பலிகொடுக்க நேர்ந்தது. அதே நேரத்தில், ரிச்சர்ட் நிக்ஸன் காலத்தில் அமெரிக்கா, தங்க நியமத்திலிருந்து விலகி வெளிநாடுகளில் இருக்கும் டாலருக்கு இணையாகத் தங்கத்தைப் பெறமுடியாது என்று அறிவித்தது. தன் படைபலத்தின் மூலம் அமெரிக்கா மூன்றாம் உலக நாடுகளை மதிப்பில்லா டாலரைப் பயன்படுத்துபடி அறிவுறுத்தியது. ஆனால் அவர்கள் கடனைத் திருப்பி செலுத்தும்போது டாலரை ஏற்றுக் கொள்ள மறுத்து, தங்கத்தில் செலுத்த வற்புறுத்தியது. இதனால் டாலரிலிருந்து யூரோவில் வர்த்தகம் செய்ய முயற்சிகள் மேற்கொண்ட சதாம் ஹுசைனுக்கு என்ன நேர்ந்தது என்று உங்களுக்கே தெரியும்.

பணம் கடன் பற்றிய புத்தகம் என்பதால் நிறைய‌ அரசியல் நிகழ்வுகள் இதில் பின்னிப் பிணைந்திருக்கின்றன‌. உதாரணமாக, அர்த்தசாஸ்திரத்தில் குடியாட்சியை எப்படி நயவஞ்சகமாக ஓழிப்பது என்பது பற்றியும், குடிமக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யாமல் வைத்திருந்தால் தான் தன் தேவைகளுக்கு உடனடியாக அவைகளைத் திரட்ட முடியும் என்று இருப்பதாகவும், ஹர்சா கோவில்களைக் கொள்ளையடிப்பதற்குத் தனி அமைச்சகத்தை வைத்திருந்தார் என்றும், முஸ்லிம் மன்னர்களின் நோக்கம் கோவில்களில் இருக்கும் தங்கமே தவிர மதத்துவேசம் இல்லை என்றும், கூலிப்படையாக கிரேக்கப் போர்வீரர்கள் படையெடுப்புகளில் பங்கு பெற்றதாகவும், அவர்களுக்குப் பெரும்பாலும் கொள்ளையடிக்கப்பட்டதில் பங்கு வழங்கப்பட்டதாகவும், முதலில் புத்த மதமே கோவில்களை அமைத்ததாகவும் பிற்பாடு அவை இந்து கோவில்கள் ஆனதாகவும் இந்தியா பற்றிய சில உதாரணங்களைச் சொல்கிறது இப்புத்தகம். (1930ல் இந்திய ஆட்சிப் பணியில் ஒபியத்திற்கென்று (Opium) ஒரு தனித் துறையே இருந்தது)

மத்திய கிழக்காசிய நாடுகள், மேற்கத்திய நாடுகள், சீனா, ஆப்பிரிக்கா என அனைத்துப் பகுதிகளும் இப்புத்தகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுபடுகின்றன‌. உதாரணமாக கிறித்துவம் சொல்லும் 10 கட்டளைகளில் 7 மற்றும் 10 ஒன்றுபோல் தெரிந்தாலும் தனித்தனியாகச் சொல்வதன் காரணம், கிறித்துவத்தில் பலவற்றிற்கு விளக்கம்கூற முற்பட்ட போது ஏற்பட்ட சித்தாந்த குழப்பங்கள், இந்து கிறித்த‌வம் இஸ்லாம் யூதம் போன்ற மதங்களில் கடன் குறித்த பார்வைகள், அவை காலப்போக்கில் எப்படி மாற்றமடைந்தன‌, தாய்வழி சமுகம் எப்படி தந்தைவழி சமூகமாக மாறியிருக்கக்கூடும், பெண்கள் முகத்திரை அணிந்து கொள்ளும் பழக்கம் எப்படி உருவானது, பணத்தட்டுப்பாடு ஏற்பட்டபோது எத்தகைய அரசியல் மாற்றம் நிகழ்ந்தது, இப்படி பல அரசியல் நிகழ்வுகள் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்படுகின்றன‌.

கணித‌ம் போலவே, நோபல் பரிசுகளுக்கான துறைகளில் பொருளாதாரம் கிடையவே கிடையாது. ஆனால் பொருளாதாரமும் ஓர் அறிவியல் என்ற சிந்தனையைப் பரவலாக்கி, நோபல் பரிசுகளில் அதுவும் ஒன்று என்ற பிம்பத்தைச் சாமானியன் வரை கொண்டு சேர்த்திருப்பதும் சமீபத்திய சித்தாந்த இடைச்செருகல் தான். அதுவும் கூட இதுவரை பெண்களுக்குத் தரப்பட்டதில்லை. கடவுள் போல பொருளாதாரம். வசதியான பொய்கள் காலந்தோறும் திணிக்கப்படுகின்றன. ஏதோவொரு மாயை நோக்கி நடத்திச் செல்லும் அப்பொய்கள், பெரும்பாலும் பெண்விரோத செயல்களையே செய்கின்றன.

- பிரேம்குமார்
(http://premkumarkrishnakumar.wordpress.com)

124. வெயில் மற்றும் மழை

$
0
0
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: வெயில் மற்றும் மழை (சிறுகதைகள்)
ஆசிரியர்: மீரான் மைதீன்
வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பெரம்பூர், சென்னை
முதல் ஈடு: திசம்பர் 2007
பக்கங்கள்: 196
விலை: 90 ரூபாய் 
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இஸ்லாமிய மக்க‌ள் பற்றி படித்தறிய சென்ற வருடம் சில புதினங்களும் சிறுகதைத் தொகுப்புகளும் வாங்கினேன். அவற்றில் சிலவற்றைப் பற்றி இதே தளத்தில் எழுதியும் இருக்கிறேன். மீரான் மைதீன் அவர்களின் 'ஓதி எறியப்படாத முட்டைகள்'புதினம் பற்றி மட்டும் எழுதவில்லை. அப்புதினம் பற்றி நான் எழுதிய பதிவு எனக்கு திருப்தியாக இல்லை என்பதாலும், வேலைப்பளுவினாலும் எழுதவில்லை. இதே காரணங்களால் நான் எழுதாமல் விட்டுவிட்ட இன்னொரு புத்தகம், எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி. இஸ்லாமிய மக்களின் அன்றாட உரையாடல்களில் இடம்பெறும் பல வார்த்தைகளை எனக்கு அறிமுகப்படுத்திய புதினம் 'ஓதி எறியப்படாத முட்டைகள்'. ஒரே ஊருக்குள் இருக்கும் இரு இஸ்லாமிய குடும்பங்கள் மூலம், அரபு நாடுகளில் வேலை பார்க்கும் கனவுடன் வலம் வரும் ஏழைகளின் மனவோட்டத்தை அற்புதமாக விளக்கும் புத்தகம். நடிகைகள் ராதாவும் அம்பிகாவும் வந்து போகும் பகுதிகளைச் சில நண்பர்களிடம் சொல்லிச் சிரித்திருக்கிறேன். மீரான் மைதீன் அவர்களின் மற்ற புத்தகங்கள் ஏதாவது படிக்க வேண்டும் என்ற ஆவலில் தேர்ந்தெடுத்த புத்தகம் தான் இது.

வெயில் மற்றும் மழை. 18 சிறுகதைகளின் தொகுப்பு. 4 அல்லது 5 கதைகள் தவிர மற்றவை அனைத்தும் இஸ்லாமிய மக்களைப் பற்றிய கதைகள். 13 கதைகள் எனக்குப் பிடித்திருந்தன. 'ஓதி எறியப்படாத முட்டைகள்'மூலம் எனக்கு ஏற்கனவே நாகர்கோவில் வட்டார இஸ்லாமிய வழக்குச் சொற்கள் பரிட்சயம் என்பதால், இந்தமுறை பதிவாக எழுதும் அளவிற்கு எளிதாகிவிட்டது. ஒவ்வொரு சமூகத்திலும் இருக்கும் மூட நம்பிக்கைகள் போல, இஸ்லாமிய சமூகத்தினரிடையே இருக்கும் சில மூட நம்பிக்கைகள் பற்றி 'தங்கக்கால்''வல்லினம்'போன்ற கதைகள் பேசுகின்றன. ஒவ்வொரு மதத்தினரும் தத்தம் மதம் சொல்லும் கட்டளைகளை ஏதாவதொரு சந்தப்பத்தில் தெரிந்தே மீறுவதைக் 'குனிவு'என்ற கதை சொல்கிறது. எல்லாச் சமூகமும் பெண்ணை ஓர் அடிமையாகவே வைத்திருக்க விரும்புவதையும், அதை எதிர்க்கும் சில பெண்கள் இருப்பதையும் 'வல்லினம்'என்ற கதை சொல்கிறது. 'படிப்பு வராத பயலுவளெல்லாம் யானை விட்டயச் சமுட்டுனா படிப்பு வரும்'என்று யானை விட்டைக்கு அடித்துக் கொள்ளும் 'நன்றி மீண்டும் வருக'என்ற கதை.

கவர்னர் என்ற பதவியைக் கடுமையாக விமர்சிக்கும் சொற்ப இந்தியர்களில் நானும் ஒருவன். கவர்னர்கள் பற்றி இந்தியர்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால், நான் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்த‌ காலத்தில் தமிழ்நாட்டில் கவர்னராக இருந்த ஒருவரைப் பற்றி தெரியாதவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம் தருகிறேன். எம். பாத்திமா பீவி. இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி. ஆசியாவிலேயே மிக உயர்ந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்ற முதல் பெண்மணி என்ற பெருமை உடையவர். 1997 முதல் 2001 வரை தமிழ்நாடு ஆளுநராக இருந்தார். அவர் கவர்னராக இருந்த போது, தங்கள் ஊரின் தர்ஹாவிற்கு வரப்போகும் நாளை எதிர்நோக்கி இருக்கும் ஓர் ஊரின் பரபரப்பைச் சொல்லும் 'கவர்னர் பெத்தா'கதை அருமை.

ஒரு பள்ளித் தலைமையாசிரியைக்கும், வாசலில் கடை வைத்திருக்கும் பாட்டிக்கும் இடையே நடக்கும் பனிப்போர் பற்றி ஒரு கதை. தலையணை இல்லாமல் சென்னை வாழ்க்கையின் நெருக்கடியைச் சித்தரிக்கும் ஓர் உதவி இயக்குனரின் கதை. கல்லூரி சார்பாக நடைபெறும் நாட்டு நலப்பணித் திட்டம் ஒன்றில் ஓர் இஸ்லாமிய மாணவனுக்கும், ஒரு பெந்தெகொஸ்து கிறித்தவ மாணவிக்கும் இடையே வந்து போகும் காதல் போன்ற ஏதோவொன்றைச் சொல்லும் ஒரு கதை. சவங்களைக் கிடத்தி வைக்கும் ஒரு பெஞ்சி, ஒரு சைக்கிள், ஓர் ஆட்டுக்குட்டி போன்றவைகள் மேல் சாதாரண மனிதர்கள் காட்டும் அன்பைப் பற்றி சில கதைகள். 'மஜ்னூன்'என்ற கதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

நான் மிகவும் ரசித்த கதைகள்: பெஞ்சி, கொழும்புக் குதிரை, கவர்னர் பெத்தா, குனிவு, முகாம்

- ஞானசேகர்

125. இந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும்

$
0
0
Religion is opium of masses.
- Karl Marx
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: இந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும்
ஆங்கிலத்தில்: Crime and Religious Beliefs in India
ஆசிரியர்: அகஸ்டஸ் சோமர்வில்
தமிழில்: மா.வெற்றிவேல்
வெளியீடு: சந்தியா பதிப்பகம் (http://www.sandhyapublications.com/)
முதல் ஈடு: 2012
பக்கங்கள்: 224
விலை: 170 ரூபாய் 
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
1931ல் Crime and Religious Beliefs in India என்ற ஆங்கில நூல் அகஸ்டஸ் சோமர்வில் என்ற ஆங்கிலேயரால் வெளியிடப்பட்டது. ஒரு சராசரி இந்தியனின் மனம் சமய நம்பிக்கைகளாலும் மூடப் பழக்க வழக்கங்களாலும் கட்டப்பட்டிருப்பதையும், இந்தியச் சமூகத்தில் நடக்கும் குற்றங்களின் பின்னணியில் உள்ள சமய நம்பிக்கைகளின் உளவியலையும் பதிவு செய்த புத்தகம் அது. அதன் தமிழ் மொழியாக்கமே 'இந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும்'. இன்று இந்தியா என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வோர் அர்த்தம் சொல்வது போல், ஆசிரியர் காலத்திலும் வேறு அர்த்தம் என்பதால், இப்பதிவு முழுவதும் இந்தியா என்று வரும் இடங்களில் இந்தியத் துணைக்கண்டம் என்று புரிந்து கொள்க. 80 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் மாற்றம் ஒன்றும் பெரிதாக நிகழ்ந்துவிடவில்லை என்பதால், கிரிக்கெட்டில் யாருக்குக் கைத்தட்டக் கூடாது என்றும், வாடகை வீடு முதல் நாடாளுமன்றம் வரை யார் குடியேற வேண்டும் என்றும் பெரும்பாலும் மதம் வைத்து தீர்மானிக்கும் இத்தேசத்தின் கடந்தகால நிகழ்கால எதிர்கால குற்றங்களுக்கும் மத நம்பிக்கைகளுக்கும்  உள்ள தொடர்பு  எல்லோருக்கும் வெளிப்படையாகவே தெரியும் என்பதால், நான் சிற்சில உதாரணங்கள் சொல்லி நிரூபிக்க வேண்டிய முயலாமல் நேரடியாக புத்தகத்திற்குள் போகிறேன். மொத்தம் 17 கட்டுரைகள். மத நம்பிக்கைகளின் பின்னணியில் சமூகத்தில் நடக்கும் குற்றங்களாக ஆசிரியர் உதாரணப்படுத்தும் பல குற்றங்களை, இப்பதிவின் எளிய புரிதலுக்காக ஐந்து வகைகளில் அடக்குகிறேன்.

முதலாவது பாலியல் தொழில் என்ற பெயரில் பெண்கள் மேல் திணிக்கப்படும் வன்கொடுமை. கன்னித் துறவிகள், அந்தப்புர கணிகைகள் என்ற பெயரில் காலங்காலமாக இம்மண்ணில் விபச்சாரம் புனிதப்படுத்தப்பட்டு பாரம்பரியமாகத் தொடர்ந்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறார். கிமு காலத்தில் ரிக் வேதம், அர்த்தசாத்திரம், மனுஸ்மிருதி போன்ற நன்னெறி நூல்களும், கிபி காலத்தில் காமசூத்திரமும் சமூக அங்கீகாரத்துடன் ஊக்குவித்ததைக் கூறுகிறார். இதன் தொடர்ச்சியாக உருவான தேவதாசி முறை; 'தேவதாசி வீட்டுத் தூசு கூட தெய்வீகமானது'என்பது போன்ற அன்றாடச் சொல்லாடல்கள்; பிராமணீயத்தின் மோசமான தலைமையகமான மெட்ராஸ் நகரத்தில் மிகமிக மோசமாக இருந்த தேவதாசிகளின் நிலை; திருக்கழுக்குன்றம் போன்ற பகுதிகளில் குடும்பத்தில் மூத்த பெண்ணைக் கோயிலுக்கு நேர்ந்து விடும் கொடுமையான வழக்கங்கள் இருந்ததையும் கண்ணுற்ற ஆசிரியர் சொல்கிறார். 

Unhappy India என்ற புத்தகத்தில் இதுபோன்ற கொடூரங்களை லாலா லஜபதி ராய் எழுதியிருப்பதையும், டாக்டர் முத்துலெட்சுமி (பல 'முதல்'களுக்குச் சொந்தக்கார‌ரான இவரும் எங்கள் மாவட்டம்) அவர்கள் மெட்ராஸ் சட்டமன்றத்தில் நேர்ந்து விடுதல் தடைச்சட்டம்  மசோதாவை 1930ல் அறிமுகப்படுத்தியதையும் உதாரணமாகச் சொல்லி இந்தியர்களின் எதிர்ப்பையும் பதிவு செய்கிறார் ஆசிரியர். மாதவிலக்கான பெண்கள் மூன்று நாட்கள் ஒதுங்கியே இருக்க அந்தப்புரத்தில் தனியறை இருக்கும். அப்பாரம்பரியத்தைக் காக்கும் புரட்சியாக, முந்தைய கர்நாடக அரசு கிராமங்களுக்கு வெளியே கட்டடங்களைக் கட்டிக் கொடுத்தது. வழக்கம் போல, அத்திட்டத்திற்கும் மஹிலா என்ற வார்த்தையுடன் இந்தி மொழியில் ஒரு பெயர். 

இரண்டாவது போதை மருந்துப் பழக்கம். மது, அபின், கோக்கைன், ஹஷீஷ், இந்தியன் ஹெம்ப் (கஞ்சா) போன்ற போதை மருந்துப் பழக்கங்கள் பற்றியும், அவை சட்ட விரோதமாகக் கடத்தப்படுவது பற்றியும் சில கட்டுரைகள் பேசுகின்றன. இவற்றிற்கும் மத நம்பிக்கைகளுக்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் கேட்கலாம்? கங்கை நதிக்கரையில் ஒரு தெய்வீக மகரிஷியின் மூலம் அபின் பிறந்த கதை, 6 பக்கங்களுக்கு இருக்கிறது. சாராயத்தை விருப்பப் பானமாகக் கொண்ட சில மத நம்பிக்கைகளின் புராணக் கதைகளையும் பட்டியலிடுகிறார். உச்சி முதல் பாதம் வரை கள்ளாபிஷேகம் செய்யப்படும் சில கடவுளர்களைச் சொல்கிறார்.

மூன்றாவது கடவுளைப் பற்றிய‌, கடவுளின் எதிரியான பேய் / பிசாசு / சாத்தான் பற்றிய மூட நம்பிக்கைகள். சாமிகள் மேல் மரியாதை இல்லாமல் மண்ணுருண்டைகள் எரிந்து வழிபடுதல் போன்ற வினோத வழக்கங்கள்; சில ஆபத்தான காலங்க‌ளில் பூர்வீகச் சாமியைச் தற்காலிகமாக கைவிட்டுவிட்டு, வேறு சாமியையோ பேய்களையோ வழிபடுவதையும் சுட்டிக் காட்டுகிறார். இன்றும் அம்மை நோய்க்கு மருத்துவமனை போகாமல் நம் மக்கள் என்ன செய்கிறார்கள் என்று உங்களுக்கே தெரியும். 'துஷ்ட தேவதைகளை அமைதிப்படுத்த நடத்தப்படும் அனைத்துப் பரிகாரங்களும் தோற்றுப் போனால் மட்டுமே, இந்த வானுயர்ந்த மலைகளை உருவாக்கிய கடவுளை வணங்குவோம்'என்பது நேபாள மக்களின் வாதம். 'பேய் அனைத்து வண்ணங்களையும் ஆடையாக உடுத்திக் கொன்டு ஏதோவொரு மலைச் சுனையிலிருந்து நீர்ப்பருகும் காட்சிதான் சாதாரணமாக மழைக்காலத்தில் காணப்படும் வானவில்' - இப்படி நம்புவது வேறு யாருமில்லை, புத்த மதத்தின் ஒரு பிரிவான நாடோடி லாமாக்கள். புத்த மதத்தின் ஒரு பிரிவினருக்காக மனிதக் கபாலங்கள் இந்தியாவில் இருந்து கடத்தப்படுவதை ஏற்கனவே The Red Marketபுத்தகத்தில் இத்தளத்தில் எழுதி இருக்கிறேன்.

நான்காவது கடவுளைக் கையில் எடுத்தவர்கள் / கடவுள் விற்பவர்கள் செய்யும் வினோத மற்றும் மூட வழக்கங்கள். பேயோட்டிகள் மற்றும் பாம்பு வைத்தியர்களின் இன்றும் தொடரும் வினோதப் பழக்கங்களையும் சடங்குகளையும் அன்றே பட்டியலிட்டிருக்கிறார் ஆசிரியர். ஏதோவொரு மகாமுனிவரின் கண்ணிமைகளை அலங்கரித்த பிங்களன் என்ற நாகப்பாம்பின் மூலம் உண்டாக்கப்பட்ட அரிய நடனமென்ற பெயரில், இன்றும் கல்கத்தாவின் சோனாகச்சி சிவப்பு விளக்குப் பகுதியில் வாடிக்கையாளர்களைக் கவர ஆடப்படும் பிங்கள நடனம் பற்றிக் குறிப்பிடுகிறார்.  உயிருடன் புதைக்கச் சொல்லி அடம்பிடிக்கும் சாமியார்களை அடிக்கடி செய்திகளில் இன்றும் காணலாம்.  ஒரு சாமியார் சொன்னதற்காக அரசாங்கமே சமீபத்தில் புதையல் தேடியதல்லவா?

ஐந்தாவது மதத்தின் பெயரால் நடக்கும் உயிர்ப்பலிகள். மகாபாரதப் போரில் வெல்ல அரவானைப் பலி கொடுத்தது போல, இன்றும் தொடரும் கங்காசாகர் திருவிழா பற்றி சொல்கிறார். ஏதோவொரு தெய்வத்தின் கோப‌த்தைத் தணிப்பதற்கோ, மந்திர சக்திகளைப் பெறுவதற்கோ, புதையல் கிடைக்கவோ, பாலமோ கட்டடமோ வெற்றிகரமாகக் கட்டப்படவோ குழந்தைகள் இன்றும் நரபலி கொடுக்கப்படும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. 3000 ஆண்டுகளாக இந்தியாவில் வழக்கில் இருந்த‌, கைம்பெண்களைக் கணவனுடன் உயிருடன் எரித்த சதி என்னும் உடன்கட்டை ஏறும் கொடூரத்தையும் சொல்கிறது இப்புத்தகம். இப்படி உடன்கட்டை ஏறப்போன ஓர் இளம்விதவையைக் காப்பாற்றி திருமணம் செய்து கொண்ட, ஓரு ஆங்கிலேயர் கல்கத்தாவில் பிரபலம். ஜாப் சார்னாக் (Job Charnock) என்ற அவர்தான் கல்கத்தா என்ற நகரை நிறுவியவர்.

இந்தியா என்பது இந்தி பேசும் இந்துக்களின் நாடு என்ற பொதுவான கருத்து வெளிநாட்டவர்களுக்கு உண்டு. ஆனால் எந்த நம்பிக்கைகள் எந்த மதத்திற்குச் சொந்தமானவை என ஆசிரியர் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். இந்து இஸ்லாம் புத்தம் போன்ற மதங்கள் இவற்றில் அடக்கம். கிறித்தவ மதம் காலனியாதிக்கத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்தியாவிற்குள் வந்துவிட்டாலும், ஆசிரியர் ஆங்கிலேயர் என்பதால் கிறித்தவ மத நம்பிக்கைகள் மூலம் நிலவும் குற்றங்கள் பற்றி ஏதும் சொல்லவில்லை. மேலை நாட்டவர் என்ற முறையில் கீழை நாட்டு நம்பிக்கைகள் அனைத்தையும் கீழ்த்தரமாகப் பார்க்கும் சில வரிகள் ஆங்காங்கே தென்படுகின்றன. நாம் பெருமையாகச் சொல்லும் ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியைக் கூட கிண்டல் செய்திருக்கிறார். இவை நீங்கலாக, நல்ல புத்தகம் இது.

என்ன தம்பி, சதிக்குற்றம் வரை சொன்ன நீங்கள் சாதிக்குற்றம் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே? இவ்வாறு மத நம்பிக்கைகளால் இழைக்கப்பட்ட குற்றங்கள் அனைத்திலும் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட கீழ்சாதிக்காரர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் ஆங்காங்கே ஆசிரியர் குறிப்பிடுகிறார். அடுத்த புத்தகத்தில் நிறைய பேசலாம்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

126. ஜாதியற்றவளின் குரல்

$
0
0
The communalism of a majority community is apt to be taken for nationalism.
- Jawaharlal Nehru

உன் குழந்தைகளை
மார்பிலே சரித்துக்கொண்டு
புராணக் கதைகளைச் சொல்லிவை அப்படியே
நீயொரு கொலை நிகழ்த்தினாய் என்பதையும்
- சுகிர்தராணி ('காமத்திப்பூ'புத்தகத்தில் 'நீ ஒரு கொலை செய்தாய்'கவிதையிலிருந்து)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்:  ஜாதியற்றவளின் குரல் (கட்டுரைகள்)
ஆசிரியர்: ஜெயராணி
வெளியீடு: கருப்புப் பிரதிகள்
முதல் ஈடு: டிசம்பர் 2013
பக்கங்கள்: 357
விலை: ரூபாய் 250 
வாங்கிய இடம்: இந்த வருட சென்னைப் புத்தகக் காட்சி
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் பிறப்பதற்கு ஓராண்டிற்கு முன் இலங்கையின் முதல் தோட்டா தமிழக மீனவர்களைத் துளைத்து வெள்ளோட்டம் பார்த்தது. நான் பிறந்து தவழும் முன் சீக்கியப் படுகொலைக்கும், போபால் விசவாயுக் கசிவிற்கும் என்தேசம் பல அப்பாவிகளைப் பலிகொடுத்தது. நான் ஆரம்பப் பள்ளியில் இருந்த போது, ஒரு மசூதி இடிக்கப்பட்டது. நான் நடுநிலைப் பள்ளியில் இருந்த போது, மசூதி இடித்தவர்களுக்கு என்தேசம் மத்திய அரசு கொடுத்து அழகு பார்த்தது. பிறகு காந்தி என்ற கொல்லப்பட்டவரின் படத்திற்கு அருகே, அக்கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் படமும் பாராளுமன்றத்தில் சேர்க்கப்பட்டது. தென் மாவட்டங்களில் இருந்து சாதிக் கலவரங்களில் தப்பித்து வந்த சில குடும்பங்கள் உதவி கோரியபோது, நான் ஆறாம் வகுப்பு கோடை விடுமுறையில் மதப் பாடங்கள் கற்றுக் கொண்டிருந்தேன். தர்மபுரியில் மூன்று பெண்கள் பேருந்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட‌ போது, வெளியூர் போயிருந்த உறவுகள் திரும்பி வரும்வரை துடித்துக் கொண்டிருந்த பலரில் நானும் ஒருவன். நான் கல்லூரியில் இருந்த போது, குஜராத் படுகொலைகள். 2002ல் திண்ணியத்தில் மலம் தின்னவைத்தது, மூன்று வருடங்கள் கழித்து நண்பன் சொல்லித்தான் பக்கத்தில் திருச்சியில் இருந்த எனக்குத் தெரியும். 

காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையே உண்ணாவிரதம் இருந்த நேரத்தில் முடிந்து போன ஈழப் படுகொலைகள். 19 ஆண்டுகளுக்குப் பின் 269 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பின்தான் 1992ன் வாச்சாத்தி வன்கொடுமைகள் தெரியும். 2011ல் பரமக்குடி கலவரம். 2012ல் திருவக்கரையில் மலம் தின்ன வைத்ததை ஆங்கில ஊடகங்களில் படித்தேன். பாப்பாப்பட்டி - கீரிப்பட்டி உள்ளாட்சித் தேர்தல்கள் பற்றி ந‌ண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இருமுறை திரையரங்கில் பார்த்த சண்டியர் திரைப்படத்தில் ரோகிணி அழுத்தி உச்சரித்தும் தெரியாமல், குருதிப்புனல் புதினம் மூலம் தெரிந்து கொண்ட 1968ன் கீழ்வெண்மணி படுகொலைகள். ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் 'சொல்ல வருவது ...'சிறுகதை மூலம் தெரிந்து கொண்ட 1999ன் தாமிரபரணி படுகொலைகள். 1957ல் பரமக்குடி கலவரங்கள் பற்றியும், 2003ல் ஊரப்பனூரிலும் 2010ல் மெய்க்கோவில்பட்டியிலும் மலம் தின்னவைத்ததும் சில புத்தகங்கள் சொல்லின. கொடியங்குளம் மேலவளவு உஞ்சனை நாலுமூலைக்கிணறு போன்ற ஊர்களைப் பற்றி வெறும் பெயர்களாக மட்டும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்; என்ன நடந்தது என்ற விவரங்களை என்னால் கண்டறிய முடியவில்லை.

தர்மபுரி இளவரசன் தண்டவாளத்தில் இறந்து கிடந்தான். அது கொலையா, இல்லை தற்கொலையா என்ற ஒற்றைக் கேள்வியுடன், ஒரு மர்மநாவலின் கடைசிப் பக்கம் போல சமூகம் மூடிவைத்தது. அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட மறுநாள், ஹைதராபாத் நகரின் சார்மினார் அருகில் நின்றுகொண்டு, வெறிச்சோடிக் கிடந்த அவ்வீதிக‌ளில் படபடத்துக் கொண்டிருந்த புறாக்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மதச்சார்பின்மையும் சமூகநீதியும் மறுக்கப்பட்ட இதுபோன்ற பட்டியல் உங்களிடமும் இருக்கலாம். சகமனிதன் மேல் தொடுக்கப்படும் வன்முறைச் சம்பவங்களின் உண்மை நிலையைப் பெரும்பான்மை மக்கள் அறிய முடியாமல் தடுக்கப்படுவதை வரலாற்றில் காலந்தோறும் காணலாம். வரலாற்றைத் திருத்தி தவறாக வாசிக்க வைப்பதன் மூலம் வரலாற்றில் இடம்பெற்றுவிட முயற்சிப்பவர்கள் மூலமாகத் தான் வரலாறு பெரும்பாலும் எழுதப்படுகிறது. அவர்கள் மத்தியில், மக்கள் எளிதில் மறந்துவிடுவதைப் பதிவு செய்து வைக்கும் சிலரும் உண்டு. அப்படிப்பட்ட புத்தகங்களில் ஒன்றுதான் இது.

ஜாதியற்றவளின் குரல். ஆசிரியர் ஜெயராணி. பத்திரிக்கையாளராக வணிக இதழ்களில் பணிபுரிவதால் மீனாமயில் செவ்வந்தி ஜெனிபர் காவ்யா போன்ற பல புனைப்பெயர்களில் அறியப்படுபவர். 'புதிய தலைமுறை'தொலைக்காட்சியில் 'ரௌத்ரம் பழகு'நிகழ்ச்சியில் வரும் ஜெனி என்பவர் இவர்தான் என நினைக்கிறேன்; தெரிந்தவர்கள் சொல்லவும். 37 கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் குறித்த தகவல்களை நேரடியாகச் சேகரித்த புலனாய்வுக் கட்டுரைகள் இவை. மந்திரம் ஓதுகிறவர்கள் கண்டுபிடித்து, மந்திரிமார்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, படிமமாக உறைந்து, பண்பாடாகப் போற்றப்பட்டு, கடவுளுக்குக் கட்டுப்பட்ட இந்தியர்களால் புனிதமாக‌, காலங்காலமாக பரிணாம வளர்ச்சி பெற்றுவரும் சாதிக்கு எதிரான குரலே பெரும்பாலான கட்டுரைகள். சாதி அன்ன இன்னபிறவற்றிற்கும் எதிராகவும் சில கட்டுரைகள். புத்தகத்தின் பெயரில் உள்ள 'ஜாதி'என்பது சாதியை மட்டும் குறிக்கவில்லை; அடிமைத்தனம் ஆதிக்கம் என்ற இரண்டையும் சேர்த்தே குறிக்கிறது.

ஆஸ்திரேலியாவில் வெள்ளைத்தோல் இல்லாதவர்கள் மீது வன்முறை ஏவுகிறார்கள். ஈழத்தில் நடக்கும் இனவெறிக்கு எதிராகத் தமிழர்கள் எனத் தனியாக‌க் குரல் கொடுக்கிறோம். அத்தமிழர்கள் இங்கிருந்தால் அவர்களை மத மற்றும் சாதியாகப் பிரித்திருப்போம். இன மத சாதி அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் பெரும்பாலான ஆண்கள்கூட தம்வீட்டுப் பெண்களைத் தெருவில் தன்னுடன் கொடி பிடிப்பதற்கும், வீட்டில் சமையல் கரண்டி பிடிப்பதற்கும் மட்டுமே பணிக்கிறார்கள். பெண்ணுரிமைக்காகப் போராடும் மகளிர் அமைப்புகள்கூட பெரும்பாலும் பால்பிறழ்வுகளின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதில்லை. இப்படி நிற‌ம் மொழி இனம் மதம் சாதி பாலினம் அடிப்படையில், அடிமைத்தனத்தை எதிர்ப்பது ஆதிக்கத்தை ஆதரிப்பது அல்லது அடிமைத்தனத்தை ஆதரிப்பது ஆதிக்கத்தை எதிர்ப்பது அல்லது இரண்டையும் ஆதரிப்பது என்ற சமூக நிலையே இங்கு நிலவுகிறது. இரண்டையும் எதிர்ப்பவர்கள் எத்தனைபேர் இங்கே இருக்கிறார்கள்? சமூகநீதி ஒன்றையே இலக்காகக் கொண்ட ஒருத்தியின் குரலே இக்கட்டுரைகள்.
(http://www.vikatan.com)
1. 19.01.2001ல் மதுரையில் எஸ்.கீழப்பட்டி என்ற கிராமமே மதமாறிய சம்பவம்.
2. வள்ளியூர் அருகில் சங்கனாங்குளம் வன்கொடுமைகள்.
3. மாஞ்சோலை எஸ்டேட்டில் அடிமை வாழ்வுக்கெதிரான போராட்டங்கள்.
4. தங்கள் உடல்களை வேட்டையாடி மேய்ந்த ஒரு கொடூரனை நீதிமன்ற அறைக்குள்ளேயே வெட்டிக் கொன்று, தங்களை ஆயுதங்களால் அடையாளம் காட்டிய நாக்பூர் கஸ்தூர்பா நகர் பெண்கள். 
5. உத்தப்புரத்து 15 அடிச் சாதிச்சுவர்.
6. மதுரை - தேவக்கோட்டை வழியில் இருக்கும் கண்டதேவி கிராமத்தில் தேர் வடம் பிடிக்கும் உரிமை மறுக்கப்பட்டதால் உண்டான கலவரம்.
7. இயேசுவின் தேவாலயத்தில் சாதிவெறியைக் காட்டும் காஞ்சிபுரம் மாவட்டம் தச்சூர். (இதைப் போன்ற‌ நெல்லை மாவட்டம் டவுசர் சர்ச் பற்றி ஏற்கனவே ஒரு புத்தகத்தில் சொல்லி இருக்கிறேன்)
8. சின்னப்பயல்கள் சண்டையில் குண்டாயிருப்பு, தேனி மாவட்டம் வாய்க்காப்பட்டி, ஒரு கோழி செத்துப் போனதால் திருவில்லிப்புத்தூர் அருகில் கூமாப்பட்டி என்று சின்ன விசயங்களை ஆதிக்கச் சாதியினர் கலவரமாக்கிப் பார்க்கும் தந்திரங்கள்.

இப்படியாக அடிமைத்தனத்திற்கும் ஆதிக்கத்திற்கும் எதிராகப் போராடிய‌ மக்களின் / பெண்களின் குரலாகவே பெரும்பாலான கட்டுரைகள். ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகப் பாடுபடுவதாகக் காட்டிக் கொண்டு, சமூகநீதியைக் காப்பதாகச் சொல்லும் கட்சிகள் மற்றும் தலித் தலைவர்களின் சந்தர்ப்பவாதத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. சாதியைச் சாகவிடாமல் அவர்கள் போடும் இரட்டை வேடங்களையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். நிகழ்கால உதாரணங்கள் இரண்டு நான் சொல்கிறேன். ஓர் அமைச்சர் இந்தியாவின் மிகப்பெரிய ஊழலை நிகழ்த்தி இருக்கிறார்; விதிகளை மீறி அலைக்கற்றைகளை ஒதுக்கி 1.76 இலட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார். ஓர் வெளியுறவுத் துறை பெண் அதிகாரி அயல் நாட்டில் விசா மோசடி செய்கிறார். அவர்க‌ள் தலித் என்பதால் தான் வீண் குற்றம் சாட்டப்படுவதாக, பெரியாரையும் அம்பேத்கரையும் கையில் எடுத்துக் கொண்ட இதே தலைவர்கள்தான் முழங்குகின்றனர். (காந்தி அம்பேத்கர் பெரியார் காமராசர் போன்றவர்களை நீங்களே படித்தறிவதே உத்தமம்)

2004ல் இந்திய இராணுவத்திற்கு எதிராக மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் தவிர, மற்ற கட்டுரைகள் சொல்லும் சம்ப‌வங்கள் பற்றி இப்புத்தகத்தில் தான் முதன்முறை படித்தேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு இயக்கம், 2007ல் பல்வேறு கிராமங்களில் நடத்திய ஆய்வில் 47 விதமான தீண்டாமையின் வடிவங்களைக் கண்டறிந்தது என்று ஒரு கட்டுரையில் சொல்லப்பட்டு இருக்கிறது! தீண்டாமைக் கொடுமைகள் பற்றி இப்புத்தகம் சொல்லும் விசயங்களில் முக்கியமான ஒன்று - தீண்டாமைக்குள் தீண்டாமை. அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டை. அதாவது தாழ்த்தப்பட்டவர்கள் என ஒதுக்கப்பட்டவர்கள், தங்களுக்குள் கடைபிடிக்கும் தீண்டாமை. அருந்ததியர் / தோட்டி / சக்கிலியர் மற்றும் வண்ணார் மேல் மற்ற தாழ்த்தப்பட்ட சாதியினர் உட்பட அனைவரும் காட்டும் ஆதிக்கத்தைப் பேசும் கட்டுரைகள். 

'சக்கிலியனைத் தொட்டாலே தீட்டு; புதிரை வண்ணானைப் பார்த்தாலே தீட்டு'என்கிறது ஒரு சொல்வழக்கு. தங்களை எதிர்த்தது மட்டுமின்றி, தங்கள் மீது வழக்குப் பதிவு செய்த அருந்ததியர்களைப் பொது வீதியில் நடக்கக் கூடாது எனவும், பொதுக் குழாயில் குளிக்கக் கூடாது எனவும் விடுதலைச் சிறுத்தைகள் தடை விதித்த நிகழ்ச்சிகளையும் சொல்கிறார். 'இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது பாகிஸ்தான் அனைத்து இந்துக்களையும் இந்தியாவிற்கு அனுப்பியது, ஆனால் அதுகாறும் அங்கு மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த தலித்துகளை அனுப்ப மறுத்தது. அத்தியாவசிய சேவைகள் என அவர்களைத் தலைப்பிட்டுப் பாதுகாத்துக் கொண்டது. 1947 டிசம்பரில் அம்பேத்கார் இது குறித்துப் பல முறை கேள்விகளை எழுப்பினார், நேருவுக்குக் கடிதம் எழுதினார். இந்திய அரசோ காங்கிரஸ் கட்சியோ இதனைக் கண்டுகொள்ளவேயில்லை'என்று அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன்.

'வண்ணான் வராத வீடு வெளங்காது'என்ற சொல்லாடலும், 'வண்ணான் கழுதை பொதி சுமக்கும்'என்று பாடப்புத்தகங்களே சாதியைப் போதிக்கும் அளவிற்குச் சமூகக்கடமையாக‌ பொதுப்புத்தியில் பதிந்து போனதைச் சுட்டிக் காட்டுகின்றன. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடையே செல்லாது என்பதால் மற்ற தாழ்த்தப்பட்டவர்கள் இவர்கள் மேல் தொடுக்கும் வன்முறைகள் இச்சட்டத்தின் கீழ் வராது. நாடார் தேவர் தலித் என்ற மற்ற சாதியினரின் சாட்சியம் தேவைப்படுவதால், சாதிச் சான்றிதழ் வாங்குவதற்குக் கூட வண்ணார் அலைக்கழிக்கப்படும் கொடூரத்தைப் பேசுகின்றன. ஆதி காலத்தில் துணிகளுக்கு வண்ணம் தீட்டும் வேலையைச் செய்து வந்தவர்களைச் சாதி வந்தபின், அழுக்குத்துணியையும் முட்டுத்துணியையும் துவைக்க வைத்த கொடுமையையும் சொல்கின்றன. தலித் மக்களுக்கு வேலை செய்யும் புதிரை வண்ணார்களே சாதிய அடுக்கில் அடியில் இருப்பவர்கள். புதிரை வண்ணார்கள் என்று அழைக்கப்படும் அவர்களின் நிலையைச் சிவகாசி அருகில் திருத்தங்கல் கிராமத்தில் இருந்து பதிவு செய்கிறார். 

சென்னை நகரைப் பற்றி சில கட்டுரைகள். ஜெயலலிதா ஆட்சியில் எழில்மிகு சென்னை, கருணாநிதி ஆட்சியில் சிங்காரச் சென்னை என்ற திட்டங்களின் பெயர்களை மாற்றி மாற்றிச் சொல்லி மக்களின் வாழ்வைச் சீரழித்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறார். வியாசர்பாடி, சிந்தாதிரிப்பேட்டை, பெசன்ட் நகர், அன்னை சத்யா நகர், கே கே நகர், அம்பேத்கர் காலனி, எண்ணூர், மூலக்கொத்தளம், செம்பியம் சாந்தி நகர், ஜாபர்கான் பேட்டை என்று 2001ல் மட்டும் தீவிபத்து ஏற்பட்ட குடிசைப் பகுதிகளைப் பட்டியலிடுகிறார். 2001ல் மேமாதம் மட்டும் அமைந்தகரை, ஓட்டேரி, சோழவரம் என்று குடிசைப் பகுதிகள் பற்றி எரிந்திருக்கின்றன‌. 10-05-2001ல் ஓட்டளிப்பு நாளில் ஓட்டேரியில். இவற்றைப் பற்றி இன்னொரு புத்தகத்தில் விரிவாகப் பேசலாம். 

சங்கனாங்குளத்தில் எல்லாக் குற்றங்களுக்கும் கிராம அதிகாரிகளே துணைபோனதால், சட்டப்பேரவையில் அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, எம்ஜியார் ஆட்சியில் தமிழகம் முழுவதும் கிராம அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆந்திராவில்  இருக்கும் அமெரிக்கத் தூதரகம், தங்கள் நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குச் சாய்பாபா பற்றி நேரடியாகவே எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இப்படி சில வரலாற்றுத் தகவல்களை இப்புத்தகத்தில் தான் முதலில் படிக்கிறேன்.

புத்தகத்தில் இருந்து சில வரிகள்:
1. புறத்திலும் அகத்திலும் இந்து மதத்தால் கொல்லப்பட்ட அப்சல் குருவுக்கும், தருமபுரி இளவரசனுக்கும்... (பின்னட்டையில் இருந்து)
2. தலித் மக்கள் சாதிரீதியாக ஒடுக்கப்படுகின்றனர். இஸ்லாமியர்கள் மதரீதியாக ஒடுக்கப்படுகின்றனர். இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து விடக்கூடாது என்பதில் இந்து மத வெறியர்கள் தெளிவாக இருக்கின்றனர். கோயம்புத்தூரில் அருந்ததியர்கள், சென்னையில் பறையர்கள், நெல்லையில் பள்ளர்கள் என கீழ்சாதி இளைஞர்களை இந்து கட்டமைப்புக்குள் கொண்டு வந்து, பொது எதிரியாக இஸ்லாமியர்களைச் சித்தரிக்கும் காரியத்தையே செய்து வருகின்றனர்.
3. எப்பொழுதும் கட்டிக் காக்கப்படும் தீண்டாமை, பாலியல் வல்லுறவின்போது மட்டும் எங்கே போகிறது என்று தெரியவில்லை.
4. ஜெர்மனியில் ஒரேயொரு ஹிட்லர் தான். நியாயப்படி பார்த்தால், இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய 3% பேர் ஹிட்லர்கள்! இவர்கள்தான் மூலைக்கு மூலை நின்று இந்தியாவில் சாதியம் வழக்கொழிந்து விடாதபடியும் வெளியே தெரிந்து விடாதபடியும் காத்து நிற்கின்றனர்.
5. இந்துத்துவவாதிகள் தலித் மக்களைக் கலவரத்துக்கு மட்டும்தான் தயார் செய்கிறார்கள். தொடக்கத்தில் காலைப் பிடிக்கும் இந்துத்துவம், நாள் போக்கில் எப்படி கழுத்தைப் பிடிக்கும் என்பதற்குக் கோவை உக்கடம் பகுதி மக்களே வாழும் உதாரணம்.
6. பல்வேறு பண்பாடு, மொழி, வாழ்க்கை முறையைக் கொண்ட  மக்களைத் துப்பாக்கி முனையில் இணைத்து, இந்து சாம்ராஜ்யத்துக்குள் அடைத்ததே இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய சாதனை! அப்படி இணைய மறுக்கிறவர்களே தீவிரவாதிகளாகவும் நக்சலைட்டுகளாகவும் சித்தரிக்கப்பட்டு ஆயுதங்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
7. சாதிச் சூழ்ச்சியையும் பயங்கரத்தையும் எடுத்துச் சொல்லி, தலித் மக்களை ஒன்று திரட்ட வேண்டிய தலித் தலைவர்கள், மக்களை உட்சாதிப் பிரிவுகள் மூலம் தனித்தனித் தீவுகளாக்கியதோடு பாகுபாட்டை அப்படியே கட்டிக் காக்கிறார்கள்.
8. இனவெறி, பெண்ணடிமைத்தனம், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் என உலகின் எந்த அடிமைத்தனத்தை விடவும் வலுவானது, கொடுமையானது சாதியப் பாகுபாடு. காரணம், அதில் மேற்குறிப்பிட்ட எல்லா பாகுபாடுகளுமே உள்ளடங்கி விடுகின்றன என்பதே உண்மை.
9. சட்டப்பேரவைகளையும் நாடாளுமன்றத்தையும் வெறுமனே தலித் மக்களைக் கொண்டு நிரப்புவதால் மட்டும் அடிமைத்தனம் அழிந்துவிடாது. மதங்களின் வேர்களும், சாதியின் கிளைகளும் இந்த சமூகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. வெறும் வசனங்கள் பேசி அவற்றை அழித்துவிட முடியாது.
10. இந்தியாவில் காவல்துறை மாதிரிதான் பத்திரிக்கைத் துறையும். சீருடை ஒன்றை வைத்தே காரியங்கள் சாதிப்பதைப் போல, 'பிரஸ்'என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு தொடர்ந்து உரிமை மீறல்களில் ஈடுபடுவதும் பத்திரிக்கை நெறிகளை அவமதிப்பதும் நடக்கிறது.
11. சாதியை உள்ளடக்கிய தொழில்களில் துப்புரவுத் தொழிலும் ஒன்று என்பதால்தான் வெட்கங்கெட்ட இந்நாட்டிலிருந்து அதை விரட்ட முடியவில்லை. 'தாங்கள் இந்தத் தொழில் செய்யவே படைக்கப்பட்டவர்கள்'என அருந்ததிய‌ரை நம்பவைத்து, இன்றுவரை காரியம் சாதித்து வருகிறது சாதியச் சமூகம்.

புதுக்கோட்டை கத்தகுறிச்சியில் செங்கல் சூளையில் கல்லறுக்கும் குடும்பத்தில் பிறந்து, தடகளப் போட்டிகளில் பல சாதனைகள் படைத்த சாந்தி, பாலினச் சோதனையில் தோல்வியடைந்த போது மவுனம் காத்த மகளிர் அமைப்புகள் பற்றி ஒரு கட்டுரை. சமீபத்தில் இரண்டு நடிகைகளின் முத்தப் பிரச்சனைகளை மாநில மற்றும் தேசியப் பிரச்சனைகளாகத் தொடர்ந்து சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இப்படி சமூகப் பொறுப்பில்லாமல் செயல்படும் சில ஊடகங்களின் பயங்கரவாதம் பற்றி சில கட்டுரைகள். பறிபோகும் பழங்குடியினர் நிலங்கள் பற்றி ஒரு கட்டுரை. டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இரு சாதி மாணவர்களுக்கு இடையே 12.11.2008 அன்று நடைபெற்ற மோதல் பற்றியும், சட்டத்தைக் காக்க வேண்டியவர்கள் சாதியைக் காத்து வருவது பற்றியும், 'கற்றது ஜாதி'என்று ஒரு கட்டுரை. 

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் சொல்வது போல், எல்லாருமே தங்களது முகமூடிகளையும் ஆடைகளையும் கழட்டி வைத்துவிட்டு, மதம் சாதி என‌ தன் புராதன ஆயுதங்களுடன் நிர்வாணமாகத் தெருவுக்கு வர ஆரம்பித்து இருப்பதைச் சமீப காலத்துப் பல சம்பவங்கள் காட்டுகின்றன. குறிப்பாக தேர்தல் கூட்டணிகளும் பிரச்சாரங்களும். நாளை மறுநாள், ஓட்டுரிமை என்ற நமது ஆயுதம் மூலம் சமூகநீதி எதுவென நமக்கு நாமேதான் தீர்மானித்துக் கொள்வோம்!

அனுபந்தம்:
-------------------
1. பன்வாரி தேவி என்ற தலித் பெண் 1992ல் உயர்சாதி ஆண்களால் கூட்டமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஒரு தாழ்த்தப்பட்ட ஆளுக்கு, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் சமூகநீதிக்கு அவள் ஒருத்தியே சாட்சி. அவ்வழக்கு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட போது, சொல்லப்பட்ட காரணங்கள்: 1) உயர்சாதி ஆண்கள் ஒரு தலித் பெண்ணைத் தொட்டுப் புணர்ந்திருக்க வாய்ப்பில்லை 2) குற்றம் சாட்டப்பட்ட ஆண்களில் இருவர் உறவுக்காரர்கள். மகன் போன்ற தன் சகோதரன் மகனுடன் சேர்ந்து ஒரு பெண்ணைக் கூட்டு வன்கொடுமை செய்ய எந்த ஆணிற்கும் தோன்ற வாய்ப்பில்லை.
2. அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் 'மலத்தில் தோய்ந்த மானுடம்'என்ற கட்டுரையைப் படியுங்கள். இரயில் நிலையத்தில் நிற்கும் இரயிலில் கழிவறையை உபயோகப்படுத்தும் ஒவ்வொருவரும், சாதியை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

127. சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்

$
0
0
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்
ஆசிரியர்: அ.மார்க்ஸ்
வெளியீடு: முரண் பதிப்பகம் (http://muranpublication.blogspot.in/)
முதல் ஈடு: செப்டம்பர் 2010
பக்கங்கள்: 71
விலை: ரூபாய் 45
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கார்ப்பரேட் உலகில் வளர்ச்சி என்ற பெயரில், அடித்தட்டு மக்களிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு நிலப்பறிப்பு நடப்பதையும், சிலசமயம் விலையும் இல்லாமல் விரட்டப்படுவதையும் நாம் கண்டுகொண்டும், கண்டும் காணாதது போல் இருந்து கொண்டும் தான் இருக்கிறோம். ஷாப்பிங் மால்கள், மல்ட்டி ப்ளெக்ஸ்கள், உல்லாச மருத்துவமனைகள், அதிவேக சாலைகள், மெட்ரோ இரயில்கள் என நகரங்கள் வளர்ச்சி என்ற பெயரில் பளபளப்பு பெறுவது ஒருபுறம். அவற்றிற்கு இடையூறாகவும் களங்கமாகவும் இருப்பதாகவும், நகரத்தின் தூய்மையைக் கெடுப்பதாகவும், தொற்றுநோய் பரப்புபவர்களாகவும் குடிசைவாழ் மக்களும், வீடற்ற அனாதைகளும் விரட்டப்படுவது இன்னொருபுறம். காம‌ன்வெல்த் போட்டிகளுக்காக டெல்லியை இப்படி நவீனப்படுத்தப் போய், பாலம் நொறுங்கி விழும் அளவிற்கு நடந்த ஊழலில் சர்வதேச அளவில் நம்தேசத்துப் பெருமை பேசப்பட்டதையும் அறிவீர்.  ஊழலில் பிரபலமானபின் சென்னையில் ஆ.ராசா அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு போல, புனே நகரில் சுரேஷ் கல்மாடிக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பில் உண்டான போக்குவரத்து நெருக்கடியில் பிதுங்கிப் போன சாமானியர்களில் நானும் ஒருவன். சிங்கப்பூர், துபாய், ஒலிம்பிற்குப் பிந்தைய பீஜிங் போன்ற உலகத்தரமான நகரங்களாக உருவெடுக்க நவி மும்பை, டெல்லி என்ற இந்திய நகரங்களின் பட்டியலில் நமது சென்னையும் உண்டு. கருணாநிதி ஆட்சியில் சிங்காரச் சென்னை, ஜெயலலிதா ஆட்சியில் எழில்மிகு சென்னை.

சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும். சென்னையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள், குடிசைகள் ஒழிப்பு, பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு, இடப்பெயர்வு ஆகியவற்றின் பின்னணியில் இந்திய அரசின் நிலப்பறிப்பு, மறுவாழ்வு, மறுகுடியிருப்புச் சட்டங்கள் பற்றிய விமர்சனமாக மொத்த புத்தகமும் அமைகிறது. பக்கிங்ஹாம் கால்வாய், கூவம், அடையாறு என நீர்நிலைகளை ஒட்டியோ அல்லது அவற்றின் மீதோ பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் அமைவதால், வறுமையே ஒரு குற்றமாய் அக்கரைகளில் வாழ்ந்துவரும் மக்கள் வெளியேற்றப்படுவதைப் பேசுகிறது. புதிய குடியிருப்புப் பகுதிகளில் மனநோய், குற்றச் செயல்கள், தற்கொலைகள், பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தல் போன்ற பிரச்சனைகளையும் பேசுகிறது. சென்னைக் குடியிருப்புப் பகுதிகளில் தீ விபத்துகள் மற்றும் இடம்பெயர்த்துக் குடியமர்த்தப் பட்டவர்களின் வாழ்நிலை பற்றிய, ஆசிரியரும் பங்குபெற்ற உண்மையறியும் குழு ஒன்றின் அறிக்கைகளையும் பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளார். சென்னையைப் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக்கும் முயற்சியின் உண்மையறியும் குழு அறிக்கை ஒன்றும் பின்னிணைப்பாக உள்ளது.

சென்னைத் துறைமுகம் அருகிலுள்ள‌ போர் நினைவுச் சின்னம் முதல் மதுரவாயல் வரை கூவம் நதி வழியே அதிவேகச் சாலை அமைக்க திட்ட மதிப்பீடு 1500 கோடி. (அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டு, திமுகவால் வழக்குத் தொடரப்பட்டு.... தற்போதைய நிலவரம் தெரியவில்லை. கோயம்பேடு - பெருங்களத்தூர் புறவழிச்சாலையில் வரிசையாக நிற்கும் காங்கிரீட் தூண்களில் பல நாட்களாக எம்மாற்றமும் இல்லை) அதற்காக 30,000 குடும்பங்களை மறுகுடியமர்த்த 345 கோடி. இதற்காக 2009 நவம்பர் இறுதியில் சேத்துப்பட்டு, ஸ்பர்டாங் சாலை, அப்பாசாமி தெரு, இரட்டைமலை சீனிவாசன் நகர் போன்ற இடங்களில் புல்டோசர் வைத்து இடிக்கப்பட்ட குடிசைகள் 1144. இவ்வாறு இடம் பெயர்க்கப்பட்ட மக்கள் எல்லோரும் சுமார் 30கிமீ தொலைவிலுள்ள துரைப்பாக்கம் கண்ணகி நகர், செம்மஞ்சேரி, ஒக்கியம் போன்ற இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். எந்த அடிப்படை வசதிகளும் போக்குவரத்தும் இல்லாத மழைநீர் தேங்கும் காட்டுப் பகுதிகள் இவை எனச் சுட்டிக் காட்டுகிறார். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நிலவங்கிகளை அரசே உருவாக்கி வருவதையும் சொல்கிறார். 'நிலவங்கி'என்ற வார்த்தை, பாலஸ்தீனர்களைக் கடனாளியாக்கி வங்கிகள் மூலம் இஸ்ரேல் என்ற நாடு மிக விரைவாக வடிவமைக்கப்பட்டதை எனக்கு ஞாபகப்படுத்தியது.
(http://muranpublication.blogspot.in/)
புத்தகத்தில் இருந்து சில வரிகள்:
1. 1947 - 2000 காலக்கட்டத்தில் இந்தியா முழுவதும் நிலப்பறிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் 6 கோடி பேர். இவர்களில் 40% பழங்குடியினர், 20% தலித்கள், 20% பலமிழந்த பிற்படுத்தப்பட்ட சாதியினர். ஆக வளர்ச்சித் திட்டங்களாலும், நிலப்பறிப்பினாலும் பாதிக்கப்படுபவர்கள் பெரிய அளவில் அடித்தள மக்கள்தான்.
2. 'ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்'என்கிற முழக்கத்துடன் 1970 டிசம்பரில் நொச்சிக்குப்பத்தில் உருவாக்கப்பட்ட 1000 குடியிருப்புகளுடன் குடிசை மாற்று வாரியத்தைத் திமுக அரசு தொடங்கி வைத்தது. 7 ஆண்டுகளில் சென்னை நகரிலுள்ள குடிசைகளை எல்லாம் ஒழித்துக் கட்டப் போவதாகவும் அன்று கருணாநிதி முழங்கினார். 1971 மக்கள் தொகைக் கணக்குப்படி சென்னைக் குடிசைவாழ் மக்களின் எண்ணிக்கை 7.37 இலட்சம். 2001ல் 10.79 இலட்சம்!  சென்னை மக்கள் தொகையில் இவர்கள் 26%. இதுகூடச் சற்றுக் குறைவான கணக்குத்தான். நடைபாதைகளில் குடியிருக்கும் பலர் இதில் விடுபட்டிருக்கலாம். 2005ல் இருந்த குடிசைப் பகுதிகள் 1431.
3. 1980களின் பிற்பகுதியில் சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்போலோ மருத்துவமனை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மருத்துவமனை என்கிற காரணத்தைக் காட்டி நகர்ப்புற உச்சவரம்புச் சட்டத்தைத் தளர்த்தி இந்த அனுமதியை அப்போலோ ரெட்டிக்கு வழங்கினார் எம்ஜிஆர்.  கார் பார்க்கிங்கிற்காக கிரீம்ஸ் லேனில் இருந்த வாலஸ் கார்டன் குடிசைகள் அழிக்கப்பட்டன. அருகிலுள்ள வேறொரு இடத்தில் மருத்துவமனையைக் கட்டிய அப்போலோ நிறுவனம் மருத்துவமனைக்கென்று விதிமீறி அனுமதிக்கப்பட்ட இடத்தில் சிந்தூர் ஓட்டலைக் கட்டியது. ஓப்பந்தப்படி மருத்துவமனைப் படுக்கைகளில் மொத்த எண்ணிக்கையில் 15%க்கு இலவச மருத்துவம் அளிப்பது என்கிற ஒப்பந்தத்தையும் அது ஒழுங்காக நிறைவேற்றுவதில்லை.

பெரும் இயற்கைப் பேரழிவுகளோ போர்களோ இல்லாமல், மெசபடோமியா ரோமன் மாயன் என்ற உலகின் மிகப் பிரம்மாண்ட நாகரீகங்கள் எப்படி முற்றிலும் சிதைந்து போயின என்பதற்கான சாத்தியங்களை விவாதிக்கும் கட்டுரை ஒன்றைச் சமீபத்தில் படித்தேன். இருபெரும் காரணங்களை முன்வைத்தது:
1. இயற்கை வளங்கள் அனைத்தும் முற்றிலும் உபயோகிக்கப்பட்டு வாழத் தகுதியிழத்தல்
2. பொருளாதார ரீதியில் சமூகத்தில் மிகப்பெரிய இடைவெளிகளை உண்டாக்குதல்
இவை இரண்டையும் தானே 'வளர்ச்சி'செய்துகொண்டு இருக்கிறது!

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

128. கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும்

$
0
0
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும் (கட்டுரைகள்)
ஆசிரியர்: இரா.முருகவேள்
வெளியீடு: பிப்ரவரி 2012ல் பாரதி புத்தகாலயம் 
                   டிசம்பர் 2013ல் பொன்னுலகம் பதிப்பகம்
பக்கங்கள்: 67
விலை: ரூபாய் 50
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
'புலி வருது புலி வருது'என்று பயங்காட்டுவதற்காக சொல்வதை நாம் கேட்டிருப்போம். இப்படி புலிக்கே பயங்காட்டிய கதை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு, புலியைக் காப்பாற்ற வேண்டும் என்று சில ஆங்கில ஊடகங்கள் அடிக்கடி விளம்பரப்படுத்தின. வழக்கம் போல சில இந்தி நடிகர்களும் அவ்விளம்பரங்களில் வதனம்காட்டி கவனம் ஈர்த்தனர். எனக்குப் புரியவில்லை. புனே நகரில் காத்ரேஜில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு இருமுறை சென்றும் அங்குள்ள புலி/கள் எனக்கு முழு தரிசனம் காட்டும் கரிசனமற்று இருந்தன. சமீபத்தில் நரேந்திர மோடிக்கு முன் சென்னை வண்டலூரை மக்கள் வெள்ளத்தில் நிரப்பியவர் ஜெயலலிதா. வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏழு வெள்ளைப் புலிகளுக்கு அவரே பெயரிட்டதைத் தமிழ் ஊடகங்கள் எட்டுத் திக்கும் பரப்பின. அவைதான் நான் முதன்முதலில் நேரில் பார்த்த புலிகள். மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய்கள் போல வெண்புலிகளும். அவை புல்லைத் தின்றாலும் ஆச்சரியம் இல்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் இவ்வெண்புலிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுண்டு. இன்று இந்து நாளிதழில் (The Hindu) வெளிவந்திருக்கும் ஒரு கட்டுரை கூட, புலிகளுக்கு இடையே நாடு கடந்த, கண்டங்கள் கடந்த கலப்பின இனப்பெருக்கத்தையே ஊக்குவிக்கிறது. மதம் கடந்த, சாதி கலந்த கலப்பினம் மனிதர்களுக்கே எட்டாத கனவாக இருக்க, நான் மீண்டும் முதலில் ஆரம்பித்த விடயத்திற்கே வருகிறேன். சாம்பாருக்குப் பின் புளிக்குழம்பைத் தவிர்த்து விட்டு நேரடியாக இரசம் சாப்பிடும் என்னைப் போன்ற சாமானியனால் எப்படி புலிகளைக் காப்பாற்ற முடியும் என்று புரியவில்லை. புலியும் நானும் நேருக்கு நேராகச் சந்தித்துக் கொண்டால், நான் புலியைக் காப்பாற்றுவேனா? இல்லை நாலுகால் பாய்ச்சலில் ஓடி மரத்தில் ஏறிக் கொள்வேனா? கரப்பான் பூச்சியைக் காப்பாற்றுங்கள், கொசுவைக் காப்பாற்றுங்கள், கோழியைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை. ஏன் புலி? தேசிய விலங்கு என்பதாலா? எனக்குப் புரியவில்லை.

அரசியல் அமைப்புச் சாசனத்தின் மாதிரியை அமைக்க காங்கிரஸ் கட்சியின் காரிய குழு கூடியது. இந்தியைத் தேசிய மொழி ஆக்கலாமா என்று ஓட்டெடுப்பு. 78 ஆதரவு. 78 எதிர்ப்பு. மேட்ச் ட்ரா! நீண்ட விவாதம், நீண்ட மவுனங்களுக்குப் பிறகு மீண்டும் ஓட்டெடுப்பு. 78 பேர் ஆதரவு. 77 பேர் எதிர்ப்பு. ஒருவர் செல்லாத ஓட்டு போட்டாரா, இல்லை NOTA போட்டாரா, இல்லை தேர்தலைப் புறக்கணித்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. இன்று இந்தியாவிற்குச் சட்டரீதியாக இந்தி தேசிய மொழி ஆகவில்லை என்றாலும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர்களும் நர்சரிப் பள்ளிகளில் இன்று இந்தி படிக்க அந்த ஓர் ஓட்டுதான் காரணம்! அதே போல தேசியப் ப‌றவை மயிலா, இல்லை இன்னொரு பறவையா என்று கடும் விவாதம். கிட்டத்தட்ட இன்னொரு பறவை தேர்வு செய்யப்பட்ட போது, அப்பறவையின் ஆங்கிலப் பெயரில் ஓர் எழுத்தை மாற்றி எழுதினால் ஒரு கெட்ட வார்த்தை வருகிறதென ஓர் உறுப்பினர் எதிர்க்க மயில் பாஸானது. இப்படி புலிக்கும் கூட ஒரு கதை இருக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மூதாட்டி ஏதோ தனியாகப் பேசுவது போல, யாருக்கும் புரியாத ஓர் ஒளிக்காட்சியைச் சமூக வலைத்தளங்கள் ஆவலுடன் பார்த்து Like / Forward / Comment செய்துவிட்டு மறந்து போயின. அந்தமான் காடுகளில் பேசப்பட்ட ஏதோ ஒரு மொழியின் கடைசி ஆள் அவள். சமீபத்தில் அவளுடன் அம்மொழியும் புதைந்து போனது. சுதந்திர இந்தியாவில் சில நூற்றுக்கணக்கான மொழிகள் இதே முடிவைச் சந்தித்திருகின்றன. தேசியம் என்ற அடையாளத்துடன் ஒற்றை மொழிக்கு நிறுவனங்கள் அமைத்து, பிராந்திய மொழிகளைக் கைவிட்டது தான் முக்கிய காரணம். அந்த இன்னொரு பறவையையும் சில ஆண்டுகளாக மனிதர்கள் யாரும் பார்த்ததாகக் கேள்விப்பட்டதில்லை என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன். ஏற்கனவே Tiger Cheetah Leopard என்ற வார்த்தைகளை இரும்புத்தோல் போர்த்திய வாகன‌ங்களாக மட்டுமே புரிந்து கொள்ளும் அடுத்த‌ தலைமுறையை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறோம். அப்படி என்றால் புலியை முன்னிலைப்படுத்தி மற்ற உயிரினங்களைக் கொன்றுகொண்டு இருக்கிறோமா? எனக்குப் புரியவில்லை.

புலிகளைக் காப்பாற்றச் சொன்ன அவ்வூடகங்கள் ஒரு வரைபடத்தையும் (graph) வெளியிட்டன. X அச்சில் புலிகளின் எண்ணிக்கை. Y அச்சில் ஆண்டு. முதல்வர் முன்னால் அதிகாரிகள் போல வளைந்து நெளிந்த கோடு, எம்.எல்.ஏ.க்கள் போல திடீரென கீழே விழுந்துவிட்டது. அதாவது புலிகளின் எண்ணிக்கை பாதாளத்துக்குக் குறைந்துவிட்டதாம். ஏன் புலிகளைக் காப்பாற்ற வேண்டும் என அவ்விளம்பரங்களே ஒரு விளக்கம் கொடுத்தன. தாவரங்களைத் தாவர உண்ணிகள் தின்கின்றன. அவற்றை ஊன் உண்ணிகள் தின்கின்றன. எனவே ஓரிடத்தில் புலி ஆரோக்கியமாக இருக்கிறது என்றால் அவ்விடத்தில் தாவர உண்ணிகளுக்குப் பஞ்சம் இல்லை என்று அர்த்தம். மேலும் ஓரிடத்தில் தாவர உண்ணிகள் ஆரோக்கியமாக இருக்கின்றன என்றால் அவ்விடத்தில் தாவரங்களுக்குப் பஞ்சம் இல்லை என்று அர்த்தம். அதாவது உணவுச் சங்கிலியில் உச்சியில் இருக்கும் புலி நலமாய் இருந்தால், கீழ் மட்டத்தில் இருக்கும் மற்ற எல்லா உயிரினங்களும் நலமாய் இருக்கின்றன என்று அர்த்தம். அதாவது ஒட்டுமொத்த வனமும் / காடும் நலமாய் இருக்கிறது என்று அர்த்தம். இதே விளக்கம் மற்ற ஊன் உண்ணிகளுக்கும் பொருந்தும் போது, அவற்றை ஏன் காப்பாற்ற முனையவில்லை? மன்னன் நலமானால் குடிமக்களும் நலம்தான் என்பது போல் அல்லவா இவ்விளக்கம் உள்ளது? ஏற்கனவே இப்பதிவு பெரிதாகப் போய்க் கொண்டு இருப்பதாலும், இன்னும் சில முக்கிய கேள்விகள் இருப்பதாலும் இவ்விரு கேள்விகளையும் தாண்டிச் செல்கின்றேன்.

அவ்வூடகங்களின் விளம்பரங்களில் இந்திப்பட நடிகர்கள் தோன்ற ஆரம்பித்தனர். அதில் ஒருவர் ஏற்கனவே ஒரு விடைதெரியாத பிரம்மாண்ட‌ ஊழலில் மாட்டியவர். இன்னொருவரின் மனைவி இந்தியாவில் இருந்து கொண்டே வெளிநாட்டில் இருந்ததாக வருமான வரி காட்டாமல் மாட்டியவர். அந்த இன்னொருவர் தனது பாக்கெட்டில் இருந்து சில இலட்சங்கள் கொடுத்ததாக அவ்விளம்பரத்தில் சொன்னார். Donate Now என்று விளம்பரம் முடிந்தது. புலியை நான் எப்படி காப்பது என்றே எனக்குப் புரியாத போது, எனது பணம் எப்படிக் காக்கும்? அவ்விளம்பரம் செய்பவர்கள் பற்றி பிறகுதான் கவனித்தேன். மிகப்பெரிய உலகு தழுவிய தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று. இந்தியாவில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும், பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விநியோகஸ்த உரிமை. இதுமாதிரி பொன்முட்டையிடும் வாத்துகளுக்கு இந்தி நடிகர்களோடு, இந்தக் கிரிக்கெட் வீரங்களும் வருவார்கள். அப்புலி விளம்பரங்களில் அவர்களைக் காண முடியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் வெளிநாடுகளில் ஆட்டம் போட்டாலும் அவர்களை வைத்துத்தானே தேசபக்தி அளக்கப்படுகிறது! மானைக் கொன்ற வழக்கில் இன்றும் கூட மாட்டிக் கொள்ளாமால் துள்ளி ஒடிக் கொண்டே இருக்கும் சில பிரபல இந்தி நடிகர்கள் இன்னும் உள்ளனர். அவர்கள் அப்புலி விளம்பரத்தில் வந்தார்களா என்று தெரியவில்லை.

தேசத்தின் மலைகளில் பெரும் பகுதிகளைப் பெரும் நிறுவனங்களும், டீ காபி ரப்பர் தேக்கு யூக்கலிப்டஸ் தோட்டங்களும், அணைகளும், சுரங்கங்களும் ஆக்கிரமித்துள்ளன. இவற்றில் எந்த மிருகங்களும் வாழ முடியாது. பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் தான் புலி உட்பட வனவிலங்குகள் வாழ்கின்றன. உண்மை இப்படி இருக்கும் போது, சமீபத்தில் புலிகள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் அப்புறப்படுத்தப்பட உத்தரவிடப்பட்டதை அறிவீர்கள். புலிகள் மீது இந்த இயற்கை ஆர்வலர்களுக்கு ஏன் இந்த திடீர்க்காதல்? சுற்றுச்சூழல்வாதிகளும் அரசும் முன் வைக்கும் திட்டங்கள் ஏன் பழங்குடி ஏழை மக்களையே குறிவைக்கின்றன? மனிதனும் விலங்குகளும் பரந்து விரிந்த காட்டில் இணைந்து வாழவே முடியாது என்று அவர்கள் சொல்வதில் உண்மை உண்டா? என்ன நடக்கிறது இந்தியக் காடுகளில்? உங்களுக்கு அநேகமாகப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்குப் புரிந்துவிட்டது. அதைச் செய்த புத்தகத்தைப் பற்றி இப்போது பேசலாம்.
(http://udumalai.com/)
கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும். ஆசிரியர் இரா.முருகவேள். பரதேசி திரைப்படத்தின் மூலக்கதையை 'எரியும் பனிக்காடு'என்று தமிழில் மொழிப் பெயர்த்தவர். 'சோளகர் தொட்டி'யின் ஆசிரியர் ச.பாலமுருகன் சிறந்த முன்னுரை கொடுத்திருக்கிறார். புத்தகத்தைப் பற்றி இனிமேலும் சொல்ல என்னிடம் ஏதுமில்லை. சின்னச் சின்னக் கட்டுரைகளின் தொகுப்பு தான். சின்னப் புத்தகம். காடுகளைப் பற்றி பல விசயங்களைப் பேசுகின்றன. கியோட்டொ ஒப்பந்தம் (Kyoto Protocol) பற்றி எனக்கு முன்பே தெரியும். அதைப் புரியவைத்தது இப்புத்தகம்தான். காட்டில் ஒரு மரத்தை வெட்டிவிட்டு, நம் வீட்டுத் தோட்டத்திலும் சாலை ஓரங்களிலும் 10 மரங்கள் நட்டு ஈடு செய்ய முடியாது என்று காட்டுமரங்களின் மதிப்பைப் புரியும்படி எழுதி இருக்கிறார். பழங்குடிகள் சுள்ளி பொறுக்குவதும் நெல்லிக்காய் பறிப்பதும் வனத்தின் உணவுச் சங்கிலியைப் பாதிப்பதாக கதைகள் சொல்லி, பழங்குடி மக்களை வெளியேற்றி தனியார்மயமாக காடுகள் மாற்றப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார். கார்பன் வணிகம் பற்றியும், அதன்மூலம் வளர்ந்த நாடுகள் மற்றவர்களை விஞ்ஞான ரீதியாகச் சுரண்டுவதையும் இக்கட்டுரைகள் பேசுகின்றன. அமெரிக்காவுக்குக் காட்டெருமை, ஆப்பிரிக்காவுக்குக் கொரில்லா, இந்தியாவுக்குப் புலி என்ற வரிகளை மறக்கவே முடியாது. இந்தியாவில் எத்தனை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன தெரியுமா? அடேயப்பா! நீங்களே தேடித் தெரிந்து கொள்ளுங்கள். 

புத்தகத்தில் இருந்து சில வரிகள்:
1. 1960ல் WWF (Worldwide Fund for Nature) க்கு நிதியளித்து வளர்த்துவிட்டவர்கள் பட்டியலில் ராபர்ட் மெக்னமாரா, டேனியல் லூட்விக் என்ற இருவர் முக்கியமானவர்கள். வியட்நாம் போரில் ராபர்ட் மெக்னமாராவின் பங்கு உலகறிந்தது. அப்போரில் அமெரிக்கா காடுகளில் நாப்பாம் போன்ற குண்டுகளை மழையெனப் பொழிந்தது. அடர்ந்த மழைக்காடுகளில் மரங்களின் இலைகளை உதிர்க்கச் செய்யும் அளவுக்கு ரசாயனங்களைப் பொழிந்தது. இதே போன்று டேனியல் லூட்விக்கின் நிறுவனங்கள்தான் அமேசான் காடுகளில் பேரழிவுகளை ஏற்படுத்தின. வனங்களைப் பாதுகாக்க சரியான நபர்கள் இவர்கள்தானா!
2. புலிகள் காப்பகத்தின் சுற்றுப்பகுதியில் மக்கள் சீமாற்றுப்புல் அறுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சீமாற்றுப்புல் என்பது எந்த விலங்கும் உண்ணாத புல் ஆகும். இதனை மக்கள் கூரை அமைக்கவும், விளக்குமாறுகள் செய்யவும் பயன்படுத்துவார்கள். இது எளிதில் தீப்பற்றக் கூடியதாகும். எனவே வேனில் காலங்களில் இதை அறுக்க முடியாவிட்டால் மக்கள் தீ வைத்து அழித்துவிடுவார்கள். இப்போது இப்புல் அறுக்கப்படுவது தடை செய்யப்பட்டு உள்ளதால், புல்லில் அடிக்கடி காட்டுத்தீ பிடித்துக் கொள்கிறது. ஒவ்வொரு தீ பரவும் சம்பவத்திலும் 50, 60 ஏக்கர் காடுகள் அழிகின்றன.
3. இராஜஸ்தானில் உள்ள பரத்பூர் பறைவைகள் சரணாலத்தில் நீர்நிலைகளில் புற்கள் மண்டியிருக்கும். அவற்றில் பழங்குடி மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்ப்பது வழக்கம். யாரோ ஒரு அதிமேதாவிக்கு இது உறுத்தியது. கால்நடை மேய்ப்பது தடை செய்யப்பட்டது. பறவைகள் வருவது உடனடியாக நின்று போய்விட்டது. கால்நடைகள் மேய்க்கப்படாததால் புற்கள் மண்டி பறவைகளுக்குக் கீழே நீர்நிலைகள் இருப்பது தெரியவில்லை. எனவே அவை வரவில்லை என்று பின்பு கண்டுபிடிக்கப்பட்டது. பல்லாயிரம் ஏழை எளிய மக்களின் வாழ்வைப் பாதிக்கக் கூடிய முடிவுகள் எப்படி அலட்சியமாக எந்த ஆய்வும் இன்றி எடுக்கப்படுகின்றன என்பதற்குப் பரத்பூர்தான் சரியான உதாரணம்.
4. சுதந்திரத்திற்கு முன்பு சமஸ்தான மன்னர்களும் ஆங்கிலேயர்களும் வேட்டையாட தனிப் பிரதேசங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டன. அங்கு மற்றவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின் வேட்டையாடுவது தடை செய்யப்பட்டது. இப்பகுதிகள் வனவிலங்கு சரணாலங்களாக மாற்றப்பட்டன. இப்போது அவர்களே எகோ டூரிஸ்டுகளாக திரும்பி வருகிறார்கள். இப்போதும் கூட வனவிலங்கு சரணாலங்களில் விலங்குகளைப் பார்க்கிறோமோ இல்லையோ வெள்ளைக்காரர்களைக் கட்டாயம் பார்க்கலாம்.

வன உயிர்களைச் சுற்றுலா என்ற பெயரில் அதன் வாழிடம் வரை அணுகுவதைத் தவிர்ப்போம். அதற்காக என்னால் எப்படி புலியைக் காப்பாற்ற முடியும் என்று ஒட்டுமொத்தமாக விலகிப் போவதும் தவிர்ப்போம். இப்பிரபஞ்சத்தில் உணவுச் சங்கிலியில் ஓவ்வோர் உயிரும் இன்னொன்றுடன் கண்ணுக்குத் தெரியாத முடிச்சுகளால் கட்டித்தான் வைத்திருக்கிறது இயற்கை. 'புலி வருது புலி வருது'என்று உங்களைப் பய‌ங்காட்ட ஒரு சமீபத்திய கதையை உதாரணமாகச் சொல்லி முடிக்கிறேன்.

ஆஸ்திரேலியாவில் இருந்து பூமியின் மையம் வழியே துளையிட்டுக் கொண்டே போனால் இங்கிலாந்து வரும். அதாவது இவ்விரு தேசங்களும் புவியியல்படி இருவேறு துருவங்கள். இங்கு நள்ளிரவு என்றால், அங்கு நண்பகல். அங்கு கோடை ஆரம்பித்தால், இங்கு கோடை முடியும். ஆஸ்திரேலியா கண்டத்தைக் கால்நடைகளின் கண்டம் என்பார்கள். அந்த அளவிற்கு அங்கு மனிதர்களை விட கால்நடைகள் அதிகம். பெரும்பாலான கண்டம் வறண்ட பாலைநிலத்தால் ஆனது. ஆண்டாண்டு காலமாக அங்கு மனிதர்களுடன் கால்நடைகளும் உணவுப்பஞ்சம் இல்லாமல் வாழ்ந்துதான் வந்தனர். அங்கு காலனி பதித்த இங்கிலாந்து ஆங்கிலேயர்களுக்குத் திடீரென ஒரு யோசனை வருகிறது. இங்கிலாந்து கால்நடைகள் விரும்பி உண்ணும் ஒரு தாவரத்தை ஆஸ்திரேலியாவுக்குக் கொணர்ந்து பயிரிட்டனர். கால்நடைகளும் அத்தாவரத்தை உண்ண ஆரம்பித்தன. பற்பல ஆண்டுகள் கழித்து, திடீரென பெண் கால்நடைகள் கர்ப்பம் தரிப்பது அரிதாகிக் கொண்டே வந்தது. அடுத்த தலைமுறையே இல்லாமல் போய்விடும் அளவிற்குக் குட்டிகள் குறைந்து போனதும், விலங்கியல் வல்லுநர்கள் ஆய்வு செய்கின்றனர். பெண் கால்நடைகளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. விஞ்ஞான உலகமே ஆச்சரியப்படும் அளவிற்கு ஓட்டுமொத்த ஆண் கால்நடைகளுக்கும் மலட்டுத்தன்மை பரவலாக இருந்தது. அவை உண்ணும் தாவரங்களும் பல ஆண்டுகளாக உண்ணப்படுபவை தான். விஞ்ஞானம் தலையைப் பிய்த்துக் கொண்டது. ஒருவர் பதில் சொன்னார். சுற்றுச்சூழல் பற்றிய எனது அடுத்த பதிவில் அப்பதிலைச் சொல்கிறேன்.

அரசன் அன்றே கொல்வான், இயற்கை நின்று கொல்லும்! பணத்தால் அல்லால், புலி மட்டுமல்லால் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம்!

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

129. WHY WEREN'T WE TOLD?

$
0
0
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : Why Weren't We Told
ஆசிரியர் : Henry Reynolds
வெளியீடு : Penguin Books
பக்கங்கள் : 257 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
Townsvilleல் உள்ள ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தில் வரலாற்று விரிவுரையாளராக பணியாற்றிய Henry Reynolds ஒரு வரலாற்று அறிஞர். இவர் ஆஸ்திரேலியாவின் பழங்குடியினரின் வரலாற்றை மீட்டெடுப்பதில் பெரும் பங்காற்றியவர். சிறந்த வரலாற்றுப் புத்தகங்களுக்கு அளிக்கப்படும் Ernes Scott Prize இவருடைய The other side of the Frontier என்ற புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. இவரும் இவருடைய மனைவி Margaret Reynoldsம் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் உரிமைக்காக களப்பணியாற்றியவர்கள். 

ஆசிரியரின் பள்ளிக் காலங்களில் ஆஸ்திரேலிய பாடத்திட்டத்தில் பழங்குடியினர் பற்றிய வரலாறுகளோ தகவல்களோ பெரும்பாலும் இடம்பெறுவதில்லை. அப்படியே இடம்பெற்றாலும் அவை அவர்களைப் பரிணாம வளர்ச்சியில் பின்தங்கியவர்களாகவும் வெகு விரைவில் அழிந்துவிடுவார்கள் என்பதைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் Truganini என்ற பெண்ணோடு அந்த இனமே அழிந்துவிட்டதாகவும் அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய பாடத்திட்டத்தில் கல்வி பயின்ற ஆசிரியர், அதுவும் வரலாறு பயின்ற ஆசிரியர் தன் நாட்டின் மறைக்கப்பட்ட வரலாறுகளைத் தேடித் தெரிந்துகொண்ட நிகழ்வுகளை இந்தப் புத்தகத்தின் மூலம் பகிர்ந்துகொள்கிறார்.
(http://www.westprint.com.au)
மேலைநாடுகளில் வாழ்வது தன் பிறவிப்பயனாக கருதாதவராக இருந்தால் இந்த நாடுகள் எல்லோருக்கும் சொர்க்கபுரியாக இருப்பதில்லை என்பது புரியும். தங்குவதற்கு இடமில்லாமல் பாலத்திற்கு அடியில் தூங்கும் மனிதர்கள், குடும்ப வன்முறையில் சிக்கி வெளியேற முடியாமல் அடிவாங்கிக்கொண்டு வீட்டிலே இருக்கும் பெண்கள் என பலர் இருக்கிறார்கள் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். இதையெல்லாம் மீறி ஆஸ்திரேலியாவில் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஒன்றிருக்கிறது. அது ஆஸ்திரேலியா ஒரு இனத்தின் மொழி கலாசாரம் மற்றும் வரலாற்றை வெற்றிகரமாக அழித்த நாடுகளில் ஒன்று.

Henry Reynolds அத்தகைய மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்பதற்குத் தன் ஆராய்ச்சியின் மூலம் பெறும் பங்காற்றியிருக்கிறார். 1965ல் விரிவுரையாளர் பணிக்காக Townsville வரும் ஆசிரியர் முதன்முதலாக ஆஸ்திரேலிய பழங்குடியினரின் வறுமை நிலையையும் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைப் பற்றியும் அறிய நேர்கிறார். 1890களில் பழங்குடியினர் மத நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ஊருக்கு வெளியே இருக்கும் குடியிருப்புகளில் குடியமர்த்தப்பட்டனர். இந்நிறுவனங்கள் பிள்ளைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரிப்பதன் மூலம் மொழி மற்றும் பழக்கவழக்கங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லாமல் தடுப்பதிலும் அப்பிள்ளைகளுக்கு தம் இனம் மொழி குறித்து ஒரு தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்துவதிலும் பெரும்பங்கு வகித்தன. 1960களில் இவர்கள் தனி குடியிருப்புகளிலிருந்து வெளியேறி ஊர்களில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். Townsville போன்ற ஊர்களுக்குப் பழங்குடியினர் குழுவாக வந்து சேர்ந்ததும் அதேநேரத்தில் அரசாங்கம் பழங்குடியினர் வேலைக்கு அமர்த்தப்பட்டால் சம்பளம் கொடுக்கவேண்டுமென்று அறிவுறுத்தியதால் பலர் பண்ணைகளில் வேலையிலிருந்து துரத்தப்பட்டனர். இவை அனைத்தும் ஒரு இறுக்கமான காலகட்டத்தை உருவாக்கின.

Margaret Reynolds ஆசிரியரின் மனைவியே முதன் முதலில் பழங்குடியினரின் நலனுக்காக களப்பணியாற்றுகிறார். பழங்குடியினப் பெண்களை நேர்காணலுக்கு அழைத்துச் செல்வது போன்ற சிறு உதவிகளைச் செய்துவரும் ஆசிரியர் பிற்பாடு தனது வரலாற்று ஆராய்ச்சிகளின் மூலம் பல உண்மைகளை வெளிக்கொணர்கிறார். ஆஸ்திரேலிய வரலாற்று ஆசிரியர்கள் திட்டமிட்ட முறையில் பழங்குடியினரின்  எதிர்ப்புகளை மறைத்து ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பை ஒரு அமைதியான குடியேற்றமாக வரலாற்றைத் திரித்து எழுதுகிறார்கள். 1968ம் ஆண்டு வரலாற்று அறிஞர் W.E.H Stanner "The Great Australian Silence"என்ற உரையில் முதன் முதலாக மறுக்கப்படும் பழங்குடியினர் வரலாறுகள் குறித்து தன் கவலைகளைத் தெரிவிக்கிறார். Henry Reynolds பிற்பாடு காலனி அரசின் வரலாற்று ஆவணங்களை ஆராய்ந்து இது ஒரு ஆக்கிரமிப்பு போர் என்பதைத் தன் வரலாற்று ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கிறார். வரலாற்று ஆசிரியர்கள் settlers என்ற பதத்தைப் பயன்படுத்தி ஒரு அமைதியான குடியேற்றம் என்ற பிம்பத்தை உருவாக்குவது குறித்தும் இன்னும் சிலர் ஒரு சில குற்றப் பின்ன‌ணி உள்ளவர்கள் செய்த செயல் என்று ஒரு இனப்படுகொலையை மறைக்க முயல்வது குறித்தும் தன் எதிர்ப்புக்களைத் தெரிவிக்கிறார்.

1994ம் ஆண்டு New South Wales கல்வி அமைச்சராக இருந்த Virginia Anne Chadwick ஆக்கிரமிப்பு போர் (invasion) என்ற பதத்தைப் பயன்படுத்த தனது ஆதரவைத் தெரிவித்ததன் மூலம் தன் கட்சித்தலைவர்களின் கண்டனத்திற்கு உள்ளாகிறார். ஆசிரியர்களின் கூட்டமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பு போர் என்ற பதத்தைப் பயன்படுத்தாத எந்த ஒரு பாடத்திட்டத்தையும் கற்பிக்க முடியாதென்றும் உண்மையான வரலாற்றை மாணவர்களுக்கு அளிப்பதே தமது கடமை என்று போர்க்கொடி உயர்த்தியது. இப்படி பழங்குடியினருக்கான உரிமைப் போராட்டத்தில் தான் கடந்து வந்த பாதைகளையும் பழங்குடியினரின் நிலவுரிமைப் போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைப் போராடி பெற்ற Eddie Maboவுடனான தனது நட்பைப் பற்றியும் பல நேரங்களில் பழங்குடியினர் வாழ்க்கைமுறை பற்றிய தன் அறியாமை குறித்தும் இப்புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

February 13,2008 அன்று ஆஸ்திரேலியாவின் முன்னால் பிரதமர் Kevin Rudd வரலாற்று முக்கியம்வாய்ந்த உரை ஒன்றை நிகழ்த்தினார். அது உங்களின் பார்வைக்கு: 
http://australia.gov.au/sites/default/files/global_site/library/videos/national_apology.wmv

- பிரேம்குமார்
(http://premkumarkrishnakumar.wordpress.com)

130. காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா

$
0
0
The greatest regret of my life is that there are two persons whom I could never convince. One is my friend from Kathiawad, Mohammad Ali Jinnah.
- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (Gandhi My Father திரைப்படத்திலிருந்து)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா - உண்மைச் சித்திரம்
ஆசிரியர்: டி. ஞானையா
வெளியீடு: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், சென்னை - 41
முதல் ஈடு: 2012
பக்கங்கள்: 232
விலை: ரூபாய் 175
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
முகமது அலி ஜின்னா. பிரிட்டிஷ் இந்தியாவை மூன்று பகுதிகளாகப் பிரித்ததன் மூலம், அண்மைக்கால இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான தலைவர். பாகிஸ்தானின் தேசத்தந்தை. பெரும்பாலான‌ இந்தியர்களுக்குத் தமது தேசத்தந்தை பற்றியே அதிகம் தெரியாதபோது, அண்டைநாட்டு, அதுவும் பிரித்துக் கொண்டுபோன தேசத்தின் தந்தை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை என்பதே உண்மை. ஜின்னாவைப் பற்றிய வரலாறு இந்தியாவில் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதால், குறைந்தபட்சம் இஸ்லாமியர் அல்லாத இந்தியர்களுக்கு எல்லாம் அவர் வில்லன். அவர் உண்டாக்கிய பாகிஸ்தானும். சில உதாரணங்கள் கால வரிசைப்படி:
1. பாகிஸ்தான் சென்று ஜின்னாவை மதச்சார்பற்றவர் என்று சொன்னதற்காக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் லால் கிருஷ்ண அத்வானி. 
2. Jinnah: India, Partition, Independence என்ற தனது நூலில் நடுநிலைமையுடன் ஜின்னாவைப் புகழ்ந்ததால், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் ஜஸ்வந்த் சிங்.
3. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு போட்டியில் வென்றதற்காக கைத்தட்டிய மாணவர்களை, இந்தியாவில் ஒரு கல்லூரி நிர்வாகம் நீக்கியது.
4. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் குண்டு வைத்தவர்கள் யார் என்று இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 'சென்னை சென்ட்ரலில் குண்டு வைத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க கேப்டன் விஜயகாந்தால் மட்டுமே முடியும்'என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் பரவியது. அதைச் சில ஊடங்களும் வெளியிட்டு வாசகர்களைச் சிரிப்பூட்டின. 

நான் இந்திய வரலாறு படிக்க ஆரம்பித்த காலத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரும் கதராடை தரித்திருக்க, ஜின்னா மட்டும் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு, பெரும்பாலும் சிகரெட் பிடித்துக் கொண்டு புகைப்படங்களில் இருப்பதைக் கவனித்திருக்கிறேன்.  சுதந்திரப் போராட்டம் பற்றிய தமிழ் - இந்தி - ஆங்கிலத் திரைப்படங்கள் எல்லாம் ஒரேமாதிரி, முறைத்துக் கொண்டு அடிக்கடி பிரச்சனை செய்யும் மனிதராகவே ஜின்னாவைச் சித்தரித்தன. இப்படி இந்திய இஸ்லாமியர்களின் வரலாறு பற்றிய அறியாமையில் வளரும் ஒரு சாதாரண இந்தியனுக்கு, ஜின்னா தரப்பு நியாயங்களைத் தேடியறியும் ஆவல் ஏற்படுவது அபூர்வமே. சமீபகாலமாக இந்தியா எதை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது என்ற குழப்பத்தில், இந்தியா எதிலிருந்து வந்தது என்று படிக்கலானேன். சமூகத்தின் பொதுப் புத்தியில் பதிய வைக்கப்பட்டு இருக்கும் வரலாறுகளுக்கும் உண்மைக்கும் மிகப்பெரிய முரண்பாடுகள். எனது தேடலில் முகமது அலி ஜின்னாவும் இடம்பெற்றார். புத்தக வாசிப்பில் எனக்கு சில புதிய பரிமாணங்களை அறிமுகப்படுத்திய‌, டி.ஞானையா அவர்கள் ஜின்னாவைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருப்பது அறிந்து, புரட்டிக்கூட பார்க்காமல் வாங்கிவந்துவிட்டேன். ஆசிரியருக்கு வயது 93!
(http://discoverybookpalace.com/)
காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா. 'காயிதே ஆஸம்'என்றால் மகத்தான தலைவர் என்று பொருள் கொள்ளலாம். ஜின்னாவின் அரசியல் மற்றும் சொந்த வாழ்க்கையின் பல சம்பவங்களின் தொகுப்பான 12 கட்டுரைகளே இப்புத்தகம். தேசியவாதியாக இருந்த ஜின்னா மதவாதியாக மாறி, தனிநாடு கோரியமைக்குக் காரணமான வரலாற்று நிகழ்வுகளைப் படிப்படியாக காலவாரியாக விளக்குகின்றன இக்கட்டுரைகள். கீழ்க்காணும் நூல்களில் இருந்தே பெரும்பாலான தகவல்களைச் சேகரித்திருக்கிறார் ஆசிரியர்:
1. ஜஸ்வந்த் சிங்கின் Jinnah: India, Partition, Independence
2. காந்தி மற்றும் இராஜாஜியின் பேரனான‌ இராஜ்மோகன் காந்தியின் Understanding muslim mind
3. இலக்கியவாதியான‌ தின்கர் ஜோஷியின் From facts to truth

ஜின்னாவைப் பற்றி நாம் நினைத்துக் கொண்டிருக்கும் மதவாதி பிமபத்தை உடைத்தெறிகின்றன ஆரம்பப் பக்கங்கள். ஜின்னா ஒரு தேசியவாதியாக, முஸ்லீம் லீக்கில் கூட இணையாமல், காந்திக்கு முன்பிருந்தே காங்கிரஸின் சுதந்திரப் போராட்டங்களில் இந்து - இஸ்லாம் மதவொற்றுமையைக் காத்தமையைப் பதிவு செய்கின்றார். பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரான முதல் இந்தியரான தாதாபாய் நௌரோஜியின் தனிச் செயலராகத் தான் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கி இருக்கிறார் ஜின்னா. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த 'சுதந்திரம் எனது பிறப்புரிமை'என்று முழங்கியதற்காக திலகர் கைது செய்யப்பட்டபோது, அப்பிராமணனுக்காக வாதாட முன்வந்தார் ஜின்னா, என்ற இராஜ்மோகன் காந்தியின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். இருநாடு கோரிக்கை இஸ்லாமியர்களால் உருவாக்கப்பட்டதல்ல என்பதையும், பல்வேறு நிகழ்வுகளில் மதவொற்றுமைக்காக‌ ஜின்னா பாடுபட்டதையும் விளக்குகின்றார். இந்து - இஸ்லாம் நல்லிணக்கத்தை உண்டாக்கும் இலக்னோ உடன்பாட்டை 1916ல் உருவாக்கினார் ஜின்னா. 1930ல் முதன்முதலில் கவிஞர் இக்பால், பாகிஸ்தான் என்ற சித்தாந்தத்தை முன்வைத்தபோது ஜின்னா எதிர்த்திருக்கிறார். இஸ்லாமிய ஷரியத் சட்டங்களைக் காந்தி ஆதரித்தும், ஜின்னா எதிர்த்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, பாகிஸ்தான் பிறந்த நாளில், அது மதச்சார்பற்ற நாடாக இருக்கும் என அறிவித்தார்! ஹதீஸ், ஷரியத் பற்றி ஏதுமறியாத ஜோகேந்திர நாத் மண்டல் என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்துவைச் சட்ட அமைச்சராக நியமித்தார்!

1906ல் இருந்தே காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார் ஜின்னா. அநேகமாக 1916-17களில் ஜின்னாவிற்குக் கிடைத்திருந்த இடத்தைக் காந்தி கைப்பற்றிக் கொண்டார் என‌வும், ஜின்னா இருக்க வேண்டிய இடத்தில் காந்தி இடம் பெற்றார் எனவும் காந்தியின் பேரனான் இராஜ்மோகன் காந்தியே எழுதி இருப்பதை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். ஜின்னாவைப் பற்றி புத்தகத்தில் இருந்து சில வரிகள்:
ஜின்னா ஆங்கிலமய வாழ்வியலை மேற்கொண்டவர். பிறரிடம் விலகியே இருந்தவர். எந்த இந்திய மொழியிலும் உரையாற்ற இயலாதவர். ஜின்னாவிற்கு உருது தெரியாது. ஜின்னா இஸ்லாமுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளவில்லை; அந்த மதத்தில் பிறந்தது ஒன்றைத் தவிர! ஷரியத் சட்டத்தைக் கற்றறிவதற்காகவே குரானையும் ஹதீதையும் படித்தார். இது முஸ்லீம்களின் வழக்குகளை நடத்துவதற்குத் தேவைப்பட்டது. மசூதிகளிடம் நெருங்காதவர். ஒருநாளில் ஒருமுறைகூட நமாஸ் செய்ததில்லை. மதுவும் பன்றி இறைச்சியும் இல்லாமல் அவரால் இருக்க இயலாது. 1937 வரை தனது நடை உடை பாவனையில் இஸ்லாமிய தாக்கம் இல்லாதவர்.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, உடன்படிக்கைபடி பாகிஸ்தானிற்குச் சில கோடி ரூபாய்கள் இந்தியா தரவில்லை. அதைக் காந்தி எதிர்த்தார். காந்தி கொல்லப்பட்டதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகச் சொல்லப்பட்டது. பாகிஸ்தான் புதிய நாடானபோது சந்தித்த சில பிரச்சனைகள் பற்றி புத்தகத்தில் இருந்து சில வரிகள்:
பாகிஸ்தானை ஒரு நாடாக அமைக்கும் பணி மிகக் கடுமையானது. இந்தியாவில் அனைத்துமே இதுவரை இயங்கி வந்த அரசு இலாக்காக்கள். இராணுவம், காவல்துறை, அமைச்சரவைப் பணி அனைத்துமே ஒரு தொடர்ச்சிதான். புதிதாக எதுவுமே உருவாக்கப்படத் தேவையில்லை. ஆனால் பாகிஸ்தான் ஒரு புதிய நாடு. எல்லாமே புதிதாகத் துவங்க வேண்டும். ஒரு அமைப்பு ரீதியான தலைமை, பிரிவுகள், பிரிவுகளுக்குத் தலைமை, புதிய தலைமையகம் எல்லாமே குழப்பம்.

தான் விரைவில் இறக்கப் போவதை வெளியுலகிற்கு மறைத்து, உறுதியான மனத்துடன் பாகிஸ்தானைப் பெற்றுத் தந்தமையைப் பதிவுசெய்கின்றார் ஆசிரியர். காஷ்மீர் ஜீனகாத் ஹைதராபாத் ஆகியவற்றின் இணைப்பு பற்றிய சிக்கல்கள் பூதாகரமாக இருந்த நிலையில், மருத்துவர்கள் ஆலோசனைப்படி காஷ்மீரில் ஓய்வெடுக்க மன்னரிடம் அனுமதி கேட்கிறார் ஜின்னா. காஷ்மீரின் இந்து மன்னர் அனுமதி மறுத்துவிடுகிறார். இந்நிலையில் இராணுவத்தை அனுப்பி ஜினகாத்தைக் கைப்பற்றிக் கொண்டது இந்தியா. அதேபோல் பாகிஸ்தானும் தனது இராணுவத்தை அனுப்பி காஷ்மீரைக் அப்போதே கைப்பற்றி இருந்தால், ஜீனகாத் ஹைதராபாத் போன்று காஷ்மீர் பிரச்சனையும் அன்றே தீர்ந்து போயிருக்கும் என்கிறார் ஆசிரியர். எவ்வளவு ஆழமான உண்மை! நாம் ஏதொன்றும் அறிந்திராத ஜின்னாவின் சொந்த வாழ்க்கை துன்பியல் நிறைந்த ஒன்று. அதை உங்கள் வாசிப்பிற்கே விட்டுவிடுகிறேன்.

இந்து - முஸ்லீம் பிரச்சனை ஒரு பிரச்சனையே இல்லை என்று காங்கிரஸ் மெத்தனம் காட்டியமை, இந்தியாவை ஒரு பெண் தெய்வமாகச் சித்தரித்து இஸ்லாமியர்களின் தோல்வியைக் கொண்டாடும் 'வந்தே மாதரம்'பாடலை ஊக்குவித்தமை, காங்கிரஸ் தலைவர்களின் இந்துமதச் சார்பு கொள்கைகள், கிரிப்ஸ் திட்டம் என்று பாகிஸ்தான் என்ற தனிநாடு கோரிக்கைக்குப் பின்னுள்ள வரலாற்று நியாயங்களைச் சொல்கின்றன இக்கட்டுரைகள். நம்காலத்தைச் சொல்லும் சில வரிகள் புத்தகத்தில் இருந்து:
மகாத்மா காந்தி. காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா. இருவரும் குஜராத்திகள். இருவருக்கும் கத்தியவார் பூர்வீகம். இருவரும் இலண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்கள். இருவரும் இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்தவர்கள். இவ்விரு குஜராத்திகளும் அவரவர் வழிகளில் உறுதியான மதச்சார்பற்றவர்கள். ஆனால் இந்த குஜராத் இன்று ....

இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் ஒவ்வொரு மாகாணமும் பிரிந்துபோகும் உரிமை உண்டு என்று ஒரு திட்டத்தைப் பிரிட்டிஷ் அமைச்சர் கிரிப்ஸ் 1942ல் முன்வைத்தார். இப்படி வங்காளம் பஞ்சாப் என்று தனித்தனி மாகாணங்களாகப் பிரிந்து போக எதிர்த்தவர்கள் அனைவரும், இந்து வங்காளம் - முஸ்லீம் வங்காளம் - இந்து பஞ்சாப் - முஸ்லீம் பஞ்சாப் எனப் பிரிக்கக்கோரி உறுதியுடன் நின்று பிரித்துவிடவும் செய்ததன் காரணங்கள் எவை? பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து, இஸ்லாமியர்களுக்குப் பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாகியது. இந்தியா மதச்சார்பற்ற நாடென்று நேரு அறிவிக்கிறார். இஸ்லாமியர்களின் நலனுக்காக உருவாகிய பாகிஸ்தானும் மதச்சார்பற்ற நாடென்றார் ஜின்னா. இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனியாக மதச்சார்பற்ற நாடுகளாக இருக்க முடியுமெனில், பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியாவில் மதச்சார்பற்று இருந்திருக்க முடியாதா என்ன? வரலாற்றின் சில நியாயங்களைப் புரிந்துகொள்ள, வரலாற்றின் அந்தந்தக் காலங்களுக்கே சென்று படிக்க வேண்டும். அப்படிப்பட்ட‌ புரிதல் இருக்கும் பட்சத்தில், இன்னொருவரின் கைத்தட்டல்களும் புகழ்ப்பேச்சுகளும் நமக்கு ஓவ்வாமையை உண்டாக்கப் போவதில்லை.

அனுபந்தம்:
-------------------
1. மும்பையில் உள்ள ஜின்னா ஹால் பற்றி இப்புத்தகத்தில் தான் தெரிந்து கொண்டேன். அடுத்த முறை மும்பை செல்லும்போது கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
2. IPL கிரிக்கெட்டில் பஞ்சாப் அணி, ஜின்னாவின் கொள்ளுப் பேரனுடையது. பாம்பே டையிங் நிறுவனத்தைத் தோற்றுவித்ததும் இவர்கள் குடும்பம்தான்.

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

இரண்டாம் பதிப்பு

107. வரலாற்றில் மொழிகள் - செம்மொழிகளின் வரலாறு

$
0
0
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்
- மகாகவி
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : வரலாற்றில் மொழிகள் - செம்மொழிகளின் வரலாறு
ஆசிரிய‌ர் : இரா.நடராசன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2011
விலை :  70 ரூபாய்
பக்கங்கள் : 112
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஆங்கிலத்தோடு தாய்மொழியையும் கற்பிக்கலாம் என்ற பரிந்துரையுடன் வைசிராய் கர்ஸன் காலத்தில், மெக்காலே கல்விமுறை நடைமுறைக்கு வருகிறது. தாய்மொழிகளை விட சமஸ்கிருத மொழியைப் பாடமாக்க வேண்டுமென வட இந்தியாவில் பரிந்துரைக்கிறார்கள். தேசிய மொழி இந்தி என்று கட்டாயமாக நம்ப வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது போல, பள்ளிக் கல்லூரிகளில் செம்மொழியாகப் போதிக்கும் அளவிற்குச் சமஸ்கிருதம் மட்டுமே இருக்க முடியும் எனப் பலரும் நம்பிய அக்காலத்தில், மதராஸ் மாகாணம் எதிர்க்கிறது. மதராஸ் கிறித்தவக் கல்லூரி பேராசிரியராக இருந்த பரிதிமாற்கலைஞர், செம்மொழியாகப் போதிக்கத் தகுந்த முழுத் தகுதியும் தமிழுக்கு இருப்பதாக வைசிராய்க்குக் கடிதம் எழுதுகிறார். இன்னும் ஒருபடி மேலே போய், சமஸ்கிருதத்தை விடவும் தமிழுக்கே தகுதி அதிகம் என மேடைகளில் பேசுகிறார். எதிர்ப்பு அதிகரிக்கவே, கர்ஸன் சம‌ஸ்கிருதத்தைக் கைவிட்டு தாய்மொழிப் பாடத்தை வழிமொழிகிறார். சுதந்திரம் பெற்ற பின் எந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாகவும் இல்லாத சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு நேரு ஆட்சி நிதி ஒதுக்குகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் செம்மொழிகளில் இன்று சமஸ்கிருதம் இருக்கிறது. ஒரு மாநிலத்தின் ஆட்சி மொழியாகவும் இருக்கிறது. செம்மொழி (Classical Language) அங்கீகாரம் இல்லாமலேயே, பல நாடுகளில் ஆட்சி மொழியாகவும், பல்கலைக்கழகப் பாடங்களிலும் இருக்கிறது தமிழ். செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மற்ற மொழிகளுடன் நம் தாய்மொழியை ஒப்பிடுவதே இப்புத்தகம்.

வரலாற்றில் மொழிகள் - செம்மொழிகளின் வரலாறு. அரபி சீனம் பிரெஞ்சு சம‌ஸ்கிருதம் இலத்தீன் ஸ்பானீஷ் ஜெர்மன் பாரசீகம் ஹீப்ரு கிரேக்கம் என ஒவ்வொரு செம்மொழிக்கும் ஒரு கட்டுரை வீதம் மொத்தம் 10 கட்டுரைகள். மொழியின் தோற்றம், வரலாறு, எழுத்து, இலக்கணம், இலக்கியம், பல்வேறு காலங்களில் தோன்றிய சிறந்த‌ படைப்புகள், ப‌டைப்பாளிகள், இன்றைய நிலை என ஒவ்வொரு செம்மொழியைப் பற்றி பட்டியலிடுகிறது ஒவ்வொரு கட்டுரையும். கட்டுரையின் கடைசிப் பத்தி அம்மொழியைத் தமிழுடன் ஓரிரண்டு வாக்கியங்களில் ஒப்பிடுகிறது. ஒவ்வொரு கட்டுரையின் பின்னிணைப்பாக, அம்மொழியும் தமிழும் பல்வேறு காலங்களில் அடைந்த மாற்றங்களை அட்டவணைப்படுத்தி ஒப்பிடுகிறார் ஆசிரியர். ஏறத்தாழ கிமு 200ல் பெரும்பரிபாடல் முதல் இன்றைய பின்நவீனத்துவம், தலித் இலக்கியம் வரை தமிழ்ப் படைப்புகள் - படைப்பாளிகள் பட்டியல் கால வரிசையில் கடைசி 19 பக்கங்களை அலங்கரிக்கிறது!

பல மொழிகளின் வரலாறும் அமைப்பும் ஆச்சரியப்பட வைக்கின்றன. தமிழைப் போல ழகரம் உடைய, திராவிடக் குடும்பம் சாராத மொழியும் உண்டு. பகுதி விகுதி இலக்கணங்கள் அவ்வளவாக இல்லாத, காலம் குறிக்க குறிப்பான சொற்களற்ற மொழியும் உண்டு. வடமிருந்து இடமாக எழுதப்படும் ஒரே இந்திய மொழி உருது எனத் தெரியும்; அதன் மூலமான அரபியும் அப்படியே எனத் தெரியும்; கோடுகளால் இணைத்து இணைத்தே வரைபடம் போல உண்டாக்கி புதிர் போல எழுதப்படும் மொழியும் இருக்கிறது. அறிவியல் பெயர்கள் இலத்தீன் மொழியில் வைக்கப்படுவது தெரியும்; சர்வதேச‌ சட்டங்கள் பிரெஞ்சில் மட்டுமே மொழிப்பெயர்க்கப்படுவது ஏன் என்றால்.....

தமிழ் பற்றி ஆசிரியர் என்ன சொல்கிறார்? எந்தவொரு மதத்தோடும் பின்னிக் கொண்ட மொழியல்ல. அதிகார முறையில் திணிக்கப்பட்ட மொழியல்ல. யாரும் திட்டமிட்டு செயற்கையாகக் கட்டமைத்த மொழியல்ல. தொல்காப்பியம் முதல், கவிதை என்று நான் ஏதோ கிறுக்குவது வரை புரியும் அளவிற்குக் காலத்தோடு தொடர்ந்து வளர்ந்து வரும் மொழி. மக்கள் காலச்சாரத்தோடு இன்னும் மொத்தமாகப் பிரிந்து போய்விடவில்லை. மேலும்.....

அனுபந்தம்:
----------
புத்தகத்திற்கு அப்பால்,
1. மொழி என்பது கலாச்சாரத்தின் அடையாளம். இலத்தின் கிரேக்கம் என்ற இருபெரும் மொழிகள் - கலாச்சாரங்கள் ஒரு காலத்தில் மோதிக் கொண்டதின் வீரியம் இக்காலம் வரை வெவ்வேறு வடிவங்களில் உலகம் முழுவதும் உணரப்படுவதை இதே தளத்தில் அடுத்த ஆங்கிலப் புத்தகமாக நீங்கள் படிக்கலாம்.
2.தன் தாய்மொழியை எழுதும் போது முழங்காலிடும் ஒரு சமூகம் உண்டு. தேடிப் பாருங்கள்.

மொழி என்பதே தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் தானே. தாய்மொழி மட்டும் அதில் என்ன விதிவிலக்கு? இப்படி தாய்மொழி எழுதப் படிக்கத் தெரியாத ஒரு சமூகத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கும் ஒரு சாராரும் ஒவ்வொரு தாய்மொழியிலும் உண்டு. நீங்கள் அச்சாராரைச் சாராதவர் என்றால், கண்டிப்பாக இப்புத்தகம் படிக்கலாம்.

- ஞானசேகர்

108. சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்

$
0
0
உண்மையானவற்றை உண்மையானவை எனவும், உண்மையல்லாதனவற்றை உண்மையல்லாதன எனவும் அறிந்து கொள்.
- புத்தர் (என நினைக்கிறேன்)

It was pretty much any another morning in America. The farmer did his chores. The milkman made his deliveries. The President bombed another country whose name we couldn't pronounce.
- Michael Moore

When there was a country, I searched for freedom. Now I am free, but I have to search for a country.
- Papiya Ghosh
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்
ஆங்கிலத்தில்: Terrorism Sources and Solutions
ஆசிரிய‌ர் : டி.ஞானையா
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம், சென்னை
முதற்பதிப்பு : 2011
விலை : 260 ரூபாய்
பக்கங்கள் : 413
வாங்கிய இடம் : இந்த வருட சென்னைப் புத்தகக் கண்காட்சி
--------------------------------------------------------------------------------------------------------------------------
பயங்கரவாதம். இந்நூற்றாண்டின் அன்றாடச் செய்திகளில் வழக்கமாகிவிட்ட இச்சொல்லின் விளக்கம்,கடவுள் கற்பு போல காலந்தோறும் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. 'அரசியல் அல்லது மதம் அல்லது சித்தாந்தம் சார்ந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஓர் அரசாங்கத்தையோ அல்லது ஓர் சமூகத்தையோ பயமுண்டாக்கும் அல்லது பணியச் செய்யும் நோக்கத்தில் சூழ்ச்சி செய்து, சட்ட விரோதமான வன்முறையை நிகழ்த்துவது அல்லது சட்ட விரோதமான வன்முறை நிகழ்த்தப் போவதாகப் பயங்காட்டுவது'என்று பயங்கரவாதம் என்ற பதத்திற்கு, உலக அகராதி நிர்ணயிக்கும் அமெரிக்கா விளக்கம் தருகிறது. ஏதோ கொஞ்சம் புரிவது போல் இருந்தாலும், எதுவெல்லாம் 'சட்ட விரோதமான'?

தூக்குமேடையில் சாகப் போவதற்கு முதல்நாள் இரவு ஏதோ ஒரு புத்தகத்தைப் பாதி படித்துவிட்டு, ஒரு தாளின் நுனியை மடக்கிவிட்டு, 'நான் விட்ட இடத்தில் இருந்து நாளை இன்னொருவன் தொடருவான்'என்று சாதாரணமாகத் தூங்கப் போன பகத் சிங், இன்றும் இந்திய இளைஞர்களின் புரட்சிச் சின்னம். ஆங்கிலேயர்களுக்குச் சட்ட விரோதமான பயங்கரவாதி. பயங்கரவாதி, அமைதிக்கான நோபல் பரிசு என்ற இரு முரண்பட்ட பெயர்களையும் வாழ்ந்தபோதே வாங்கிய யாசர் அராபத் இன்னொரு சிறந்த உதாரணம். சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது, எதிர்த்த முஜாஹிதீன் அமைப்பினரை அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், அமெரிக்காவின் நிறுவனத் தந்தையர்களுக்கு இணையாக ஒப்பிட்டது இன்னொரு உதாரணம். சுருக்கமாக, அப்பாவி குடிமக்களைக் கொல்லும் எந்தவொரு வன்முறை செயலையும் பயங்கரவாதம் எனக் கொள்வோம். நமக்கான செய்திகளில் பயங்கரவாதம் என்று சித்தரிக்கப்படும் சித்தாந்தங்களின், ஏறத்தாழ அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய புத்தகம் இதோ!
(www.nhm.in)
சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும். 91 வயதைக் கடந்த ஆசிரியர் டி.ஞானையா, அகில இந்திய தொழிற்சங்க தலைவர்; கம்யூனிஸ்ட் பிரமுகர். இன்றைய சிக்கல் நிறைந்த சர்ச்சைக்குரிய பயங்கரவாதம் என்ற பொருள் மீதான ஆசிரியரின் மாறுபட்ட கருத்துகளே இப்புத்தகம். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணன் நான்கு பக்கங்களுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார். சர்வதேச பயங்கரவாதம் பற்றி 11 கட்டுரைகளும், இந்தியப் பயங்கரவாதம் பற்றி 5 கட்டுரைகளும், கடைசியாக 2 பின்னுரைகளும் என அமைகிறது இப்புத்தகம்.

சர்வதேச பயங்கரவாதம். 2001 செப்டம்பர் 11 அன்று இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின் சர்வதேச பய‌ங்கரவாதத்திற்கு எதிராக நிரந்தரப் போர்ப் பிரகடனம் செய்தது அமெரிக்கா. ஆனால் அதன் பிறகு இன்றுவரை அமெரிக்கா செய்து வரும் நடவடிக்கைகள் எல்லாம், ஏற்கனவே செய்து கொண்டிருந்த காரியங்களின் வீரிய வடிவமே என்பது தெளிவாகத் தெரியும். சர்வதேச பயங்கரவாதத்தின் தோற்றுவாய் என்று அது சுட்டிக் காட்டும் இடங்கள் எல்லாம், இஸ்ரேலைச் சுற்றிய மத்திய கிழக்கு அரபு நாடுகள். பொது மக்களும் தங்களின் அன்றாட உரையாடல்களில் சர்வதேச பயங்கரவாதம் என்பதை இஸ்லாமிய பயங்கரவாதம் என அடையாளப்படுத்த நிர்பந்திக்கப்பட்டு உள்ளனர். இப்படி ஆயுதம் இருப்பதாகச் சொல்லி ஆயில் எடுக்கும் அமெரிக்க கதைகள்தான் இந்த 11 கட்டுரைகளும்.

சுமார் 2 கோடி பூர்வகுடி செவ்விந்தியர்களையும் அவர்களின் வாழ்விடங்களையும் திட்டமிட்டு அழித்து அமெரிக்கா பிறந்த கதை ஒரு கட்டுரை. இந்திய ஆண் 40 பவுண்டு, பெண் 12, சிறுவர் 20 எனக் கொன்று தலை கொண்டுவந்தால் பரிசு. கறுப்பின மக்களின் அடிமை முறையை ஒழித்த‌ ஆபிரகாம் லிங்கன் செவ்விந்தியர்களைக் கொல்லும் படைத் தளபதியாக இருந்திருக்கிறார். முதல் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன், மனைவியை விவாகரத்து செய்த போது 150 அடிமைகளை வாழ்க்கைப்படியாகக் கொடுத்திருக்கிறார். கறுப்பின மக்களின் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய நாட் டர்னர் (Nat Turner), தோலை உரித்து பணப்பை செய்து ஒரு பெருமைமிகு நினைவுப் பரிசாக வைத்திருந்திருக்கிறார் அரசு தலைமை மருத்துவ அதிகாரி ஒருவர். மால்கம் எக்ஸ் (Malcolm X), மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther King, Jr.) முடிவுகள் உங்களுக்கே தெரியும். இப்படி கொடுஞ்செயல் சித்திரவதை வன்கொடுமை என்ற பாவங்களுடனேயே பிறந்து, போர்வெறி உளவியலுடன் தொடர்ந்து வலம் வருவதை விளக்குகின்றன ஆரம்பக் கட்டுரைகள். எந்தவொரு அமெரிக்க அதிபர் இரண்டாம் முறை தேர்தலில் நிற்கும் போதும், ஒரு முடிக்கப்படாத போர் இருக்கும், அதை முடித்து வைக்க இரண்டாம் முறை அவரே தேர்ந்தெடுக்கப்படுவதைக் கவனித்து இருக்கிறீர்களா?

அர்ஜென்டினா, நிகரகுவா, ஜப்பான், ரியூக்யூ மற்றும் பானின் தீவுகள், உருகுவே, சீனா, அங்கோலா, ஹவாய் என மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்த கதைகளையும், பியூடோ ரிகோ, ஹவாய், வேக் தீவுகள், குவாம் பகுதிகள், பிலிப்பைன்ஸ் என நாடு பிடிக்க போர் தொடுத்த‌ கதைகளையும் பேசுகிறது ஒரு கட்டுரை. Confession of an Economic Hit Man புத்தகத்தில் சொன்னது போல, கியூபா, காங்கோ, சிலி, தெற்கு வியட்நாம், டொமினிக் குடியரசு, பனாமா, நேற்றைய லிபியா என வெளிநாட்டு அரசுகளைக் கவிழ்ப்பது, அரசுக்கு நெருக்கடி கொடுப்பது, பொதுத் தேர்தல்களில் தலையிடுவது என அமெரிக்க உளவு நிறுவனம் CIA செய்து வரும் அடாவடிகளைப் பட்டியலிடுகிறது ஒரு கட்டுரை. Plan A, B, C, D, ... என்று அமெரிக்க உதவியுடன் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் காட்டும் வன்முறைகள் பற்றி ஒரு கட்டுரை.

ஐக்கிய நாடுகள் சபையின் 192 உறுப்பு நாடுகளில் 152ல் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ளன. அடுத்த 10 நாடுகளின் ஒட்டுமொத்த இராணுவச் செலவை விட அமெரிக்காவினது அதிகம். சதாம் உசேனுக்கு எதிரான போரில் ஈராக்கிய மக்கள் தொகையில் 5% பேர் இழப்பு. ஹிட்லரின் நாசிகளுக்கு இணையாக, வியட்நாம் மீது ஏஜென்ட் ஆரஞ்ச் இரசாயன குண்டுகளை வானில் இருந்து கொட்டிவிட்ட கொடுர இனவழிப்புக் கதைகள்.,,,,,

இந்தியப் பயங்கரவாதம். இந்தியாவிற்கு இருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்களைப் பேசுகின்றன 6 கட்டுரைகளும். விவசாயிகளின் பேரெழுச்சியாக ஆரம்பித்த நக்சல்பாரியின் கதையை, இன்றைய சல்வா ஜுடும் (Salwa Judum) வரை பேசுகிறது ஒரு கட்டுரை. வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடி மற்றும் தேசிய இனப் பிரச்சனைகளைப் பேசுகிறது ஒரு கட்டுரை. இஸ்லாமிய மற்றும் இந்துத்துவ பயங்கரவாதம் பற்றி இரண்டு தனித்தனி கட்டுரைகள். அசோகர் காலம் முதல் 2008 நவம்பர் 26 மும்பை தாக்குதல் வரை பல விசயங்களைப் பேசுகின்றன இவ்விரண்டு கட்டுரைகளும். இப்புத்தகம் சொல்லும் தகவல்களில் வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்களில் ஒன்றிரண்டாவது உதாரணமாகச் சொல்ல நான் விரும்பவில்லை. வாசிப்பவர்கள் ஒருசமயம் ஒருசார்புடைய கருத்துடையவராக இருப்பின், அத்தகவல்களை எந்தவொரு வரலாற்றுப் பின்னணியும் இல்லாமல் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும் என்பதால், இப்படியே விட்டுவிடுகிறேன். அவை உங்களின் வாசிப்பிற்கும், தேடலுக்கும், சிந்தனைக்கும், .....

இப்புத்தகம் படித்து பல நாட்கள் ஆகிவிட்டன. இப்புத்தகம் மேற்கொள் காட்டிய இன்னோர் அற்புதமான புத்தகத்தை இப்போதுதான் படித்து முடித்தேன். இரண்டு புத்தகங்களும் அடுத்தடுத்து அமைந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அந்தப் புத்தகத்தில் இந்தப் புத்தகம் பற்றி நிறைய பேசுவோம். இப்புத்தகம் படியுங்கள். பயங்கரவாதச் செயல்களுக்குப் பின்னுள்ள உளவியல் அறியுங்கள். அவை தோன்றுவதற்கான காரணங்கள் உணருங்கள். பின்னர் நீங்களும் சொல்வீர்கள்; பயங்கரவாதம் மதமற்றது - பயங்கரவாதம் மொழியற்றது. இதுவரை மொழியின் அடிப்படையில் நசுக்கப்பட்ட ஈழத்தில், அங்கு இன்று தமிழர்களிடையே மதம் என்ற பிரிவினையை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இங்கு ஒருபடி மேலே போய் சாதிகளால் பிரித்துக் கொ(ல்)ள்கிறோம். காலனிய காலத்தில் ஆங்கிலேயர்கள் கையாண்ட அதே பிரித்தாளும் சூழ்ச்சியின் நவீன வடிவங்கள்! அன்றைக்கே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கேட்டார்:
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?

அனுபந்தம்:
----------------
1. Mausam, Delhi Belly. இந்த இரண்டு படங்களில் எதைப் பார்ப்பது என்று திரையரங்கின் முன் பயங்கர வாக்குவாதம். கடைசியாக ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். காசு சுண்டிவிடவில்லை. விமர்சனங்களை வைத்து முடிவு செய்யவில்லை. சுவரொட்டி பார்த்து ஈர்க்கப்படவில்லை. கதாநாயகனின் மதம்தான் தீர்மானித்தது!

2. ஓர் இந்தித் திரைப்படத்தில், அமெரிக்கா முழுவதும் சுற்றித் திரிந்துவிட்டு இறுதிக் காட்சியில் அமெரிக்க அதிபரைச் சந்தித்து, 'My name is Khan; but I am not terrorist'என்பார் ஷாருக் கான். இதே மாதிரி ஓரிஸா அல்லது கர்நாடகா அல்லது குஜராத் என்று ஏதாவது ஒரு மாநிலத்தைச் சுற்றி வந்து, ஓர் உள்ளூர் கவுன்சிலரிடமாவது சொல்ல முடியுமா? என் மதத்தைச் சொல்ல மறுத்ததற்காக பாதியிலேயே ஆட்டோவில் இருந்து இறக்கிவிட்ட ஆட்டோக்காரனை நான் இத்தேசத்தில் சந்தித்திருக்கிறேன். இத்தனைக்கும் நான் போய்க் கொண்டிருந்த இடம் DRDO!

- ஞானசேகர்

109. A WORLD WITHOUT ISLAM

$
0
0
(மகாகவிக்குச் சமர்ப்பணம்)

இன்று செப்டம்பர் 11. பயங்கரவாதத்திற்கு எதிரான நிரந்தரப் போர் என்று பிரகடனப்படுத்தி, தனது அடாவடிகளை நியாயப்படுத்தவும் ஆழப்படுத்தவும் அகலப்படுத்தவும் அமெரிக்கா சுட்டிக் காட்டும் நாள். ஆப்கான் ஈராக், இன்று சிரியா என்று யுத்தக்குடையின் நிழல் நீண்டு கொண்டே போகிறது. ஆப்கான் யுத்தம் தொடங்கப்பட்ட சில வாரங்களுக்குப் பின் அப்போதைய‌ அமெரிக்க ஜனாதிபதி கையாண்ட வார்த்தைகளும், இஸ்ரேல் உருவாக்கப்பட்ட 60வது ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரையும் தெளிவாகச் சொல்லின; இப்போர்கள் எண்ணெய் வளத்திற்காக மட்டுமல்ல; நாடுபிடிக்க மட்டுமல்ல; இவை பூர்வகுடி இஸ்லாமியர்களுக்கு எதிரான போர்க‌ள்.

ஈழப் போருக்குப் பின், இனப்போர்களின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கும் நோக்கில் புத்தகங்கள் தேடினேன். உலகின் மிக நீண்ட இனப்பிரச்சனை நடக்கும் இடமான இஸ்ரேலைச் சுற்றிய மத்திய கிழக்கு நாடுகளில் தான் என் கவனம் இருந்தது. இத்தளத்தில் 100வது புத்தகமாக நான் எழுதிய ஜெருசலேம் புத்தகம் தான், என் பல கேள்விகளுக்குப் பதில் சொன்னது. ஒரு தனிப்பட்ட யூதன் மேல் இருந்த வெறுப்பால் ஒட்டு மொத்த யூத இனத்தையும் அழிக்கத் துணிந்த ஹிட்லரைவிட அதிக வெறுப்பை இன்றைய மத மற்றும் சாதித் தலைவர்கள் விதைத்துக் கொண்டு இருக்கிறார்கள். வெறும் இறைச்சித் துண்டுகளை வழிபாட்டுத் தளங்களில் வீசிவிட்டு வகுப்புக் கலவரங்கள் மிக எளிதாக‌ உண்டாக்கி விடுகிறார்கள். போன வாரம் நம்மூரில் ஒருவன், பிரபலமாக வேண்டும் என்பதற்காக தன் சொந்த வீட்டிலேயே வெடிகுண்டை வீசிவிட்டு இன்னொரு மதத்தவர்கள் மேல் சந்தேக வதந்தி பரப்பிய கதையும் கண்டோம். நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? எங்குமே போகவில்லை. ஜெருசலேம் சுற்றும் அதே வட்டத்திற்குள் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.

அறியாமை வட்டத்தை விட்டு வெளியேறச் சொல்லித் தரும் பகுத்தறிவுப் புத்தகங்களில் இதோ இன்னுமொன்று. தொடர்ந்து படிப்பதற்கு முன்
1. நிலமெல்லாம் ரத்தம்
2. Jerusalem
புத்தகங்கள் பற்றிய எனது பதிவுகளை ஒருமுறை படித்துவிடுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : A WORLD WITHOUT ISLAM
ஆசிரிய‌ர் : Graham E. Fuller
வெளியீடு : Hachette Book Group, New York
முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2010
விலை : 350 ரூபாய்
பக்கங்கள் : 350
வாங்கிய இடம் : Landmark
--------------------------------------------------------------------------------------------------------------------------
கிரகாம் இ. ஃபுல்லர். அமெரிக்க சி.ஐ.ஏ.வின் மேற்பார்வை பொறுப்பில் அமெரிக்க உளவுத்துறை கவுன்சிலின் முன்னாள் துணைத் தலைவர் (former Vice Chairman of the National Intelligence Council at the CIA). பணி நிமித்தம் இஸ்லாமிய நாடுகளில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். அமெரிக்க அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், திடீரென ஞானம் பெற்று அமெரிக்காவிற்கு எதிராக‌ எழுதும், தற்காலிகப் புரட்சிகரமான புத்தகங்களை நான் படிப்பதில்லை. இத்தளத்தில் எனது முந்தைய புத்தகமான‌, சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்தான், இப்புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது. அப்புத்தகம் இப்புத்தகத்தில் இருந்து சில பக்கங்களுக்கு மேற்கோள் காட்டிய சில விசயங்கள் தான் என்னைப் படிக்கத் தூண்டின. இது தற்காலிகப் புரட்சிகரப் புத்தகம் இல்லை. மதப் புத்தகமும் அல்ல. இஸ்லாமிய மண்ணில் வாழ்ந்த அனுபவசாலி ஒருவரின், இன்றைய பிரச்சனைகளுக்கான‌ மாற்றுச் சிந்தனைகள் தான் இப்புத்தகம். இப்புத்தகத்தின் ஆசிரியரும், இப்பதிவை எழுதும் நானும் இஸ்லாம் மதத்திற்குத் தொடர்பு இல்லாதவர்கள் என்பதால், எங்களின் நடுநிலைமையைச் சந்தேகிக்காமல் தொடர்ந்து படிக்கலாம்.

இஸ்லாம். இன்றைய உலகின் மிகப் பெரிய மதங்களில் சமீபத்தில் தோன்றிய இளமையான மதம். வரலாறு என்ற புதிய துறை நன்கு வளர்ந்திருந்த காலத்தில் தோன்றியதால், இதற்கு முந்தைய மதங்களைப் போல் அல்லாமல், இதன் மதநூலில் சொல்லப்படும் சம்பவங்கள், இஸ்லாமிற்குச் சம்மந்தமே இல்லாத பல சமகால அறிஞர்களால் சரிபார்க்கப்பட்டமையால், நம்பகத்தன்மையும் அதிகம். வரலாற்றில் மிக மகத்தான மிக சக்திவாய்ந்த தொடர்ச்சியான நாகரிகங்களில் ஒன்றான இஸ்லாம் உலகின் மீது ஏற்படுத்திய தாக்கம் அதிகம். வேறு எந்த நாகரிகமும் இஸ்லாமைப் போல உலகின் பரந்த நிலப்பரப்பில் இவ்வளவு நீண்ட காலம் இருந்ததில்லை. இஸ்லாமிய கலாச்சாரம் கலை விஞ்ஞானம் தத்துவம் மற்றும் நாகரிகம் என இன்றைய உலகிற்குக் கிடைத்த செல்வங்கள் ஏராளம். இப்படி சொல்வதற்கு எத்தனையோ நல்ல விசயங்கள் இருக்க, இஸ்லாம் மற்றும் வரலாற்று அரசியல் அறியாமைகள் காரணமாக பெரும்பான்மை மக்களின் பொதுப் புத்தியில் இஸ்லாம் பற்றிய எதிர்மறைச் சிந்தனைகள் பரவியிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு வட்டத்திற்குள் இருக்கும் வரை, அது வட்டம் என்பதே பல நேரங்களில் தெரிவதில்லை; அது எவ்வளவு பெரிய வட்டம் என்பதும் புரிவதில்லை. வட்டத்தை விட்டு எவ்வளவு வெளியே போய் பார்க்கிறோமோ, அவ்வளவு தெளிவாய்ப் புரியும் வட்டம். பூமியுடன் இருந்தாலும், பூமிக்கு வெளியே போய் ஒரு புகைப்படம் எடுத்து வ‌ந்த பின் தானே எல்லோரும் பூமிக்கோளம் என நம்பினோம்? நமக்குப் பூதாகரமாய்க் காட்டப்படும் சித்தாந்தங்களைக் கொஞ்சம் சிறிதாக்கி விட்டு, அதன் பக்கத்தில் இருக்கும் மற்ற விசயங்களைக் கொஞ்சம் பெரிதுபடுத்தி பகுத்தறியும் போது புரியாத பல விசயங்கள் புரியும். வரலாற்றின் பழைய பக்கங்களில், முதன்மைக் காரணமாக இஸ்லாம் சொல்லப்படும் சம்பவங்களை எல்லாம் மீள்பார்வை செய்து, இஸ்லாம் தவிர வேறேதும் காரணிகள் அதே சம்பவங்களை நிகழ்த்தி இருக்கக் கூடிய சாத்தியங்களை ஆராய்வதே இப்புத்தகம். குழப்புகிறேனா?

நிகழ்கால உதாரணம் ஒன்று. இலங்கை ஆட்சியாளர்கள் கடைசியாக புத்த‌மதத் துறவிகளையும் ஈழத்திற்கு எதிராகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்களின் இந்த நிலைப்பாட்டிற்கும் புத்தமதத்திற்கும் / புத்தருக்கும் சுத்தமாகச் சம்மந்தம் இல்லை என்று நமக்குத் தெரியும். ஈழத்தில் இருந்து சிங்களவர்களை இனம் மொழி தவிர இன்னும் நன்கு பிரிக்க அந்த ஆட்சியாளர்கள் எடுத்த ஆயுதம் தான் மதம். புத்தத்தின் இடத்தில் வேறு எந்த மதம் இருந்தாலும் அதுவும் ஆயுதமாகி இருக்கும். அங்கு இப்போது புத்தம் என்பது வெறும் பதாகை என்பது நமக்குத் தெரியும். இந்நிலை தொடருமாயின் ஈழப் பிரச்சனையை ஒரு மதப் பிரச்சனையாக மட்டுமே எதிர்காலம் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். குழப்பம் தீர்ந்ததா? பின்னோக்கிச் சிந்திக்கத் தயாராகுங்கள். புத்தகத்திற்குள் போகலாம்.
(http://img6a.flixcart.com/)
அரேபியப் பாலைவனத்தில் இருந்து முகமது நபி தோன்றாமல் போயிருந்தால் - இஸ்லாம் என்ற ஒரு மதமே மத்திய கிழக்கில் தோன்றாமல் இருந்திருந்தால் - மத்திய கிழக்கில் மிக விரைவாகப் பரவிய இஸ்லாமிய சகாப்தம் இல்லாமல் போயிருந்தால் - இஸ்லாமியர்களின் படையெடுப்பு இந்தியத் துணைக்கண்டத்தில் நடக்காமல் இருந்திருந்தால் - ஜிகாத் முஜாஹிதீன் அல்-கெய்தா போன்ற வார்த்தைகள் கேள்விப்படாமலேயே இருந்திருந்தால் - இன்றைய உலகம் எப்படி இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்? கண்டிப்பாக இவ்வளவு குழப்பங்கள் இருந்திருக்காது - மத்திய கிழக்கு நாடுகள் கொஞ்சம் அமைதியாக இருக்கும் - இந்தியத் துணைக்கண்டம் 3 துண்டுகளாகி இருக்காது - காஷ்மீர் பிரச்சனை இருக்காது - 3 யுத்தங்களை இந்தியா சந்தித்திருக்காது - விஸ்வரூபம் திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகி படுதோல்வி அடைந்திருக்கும் - என பெரும்பான்மை பதில்கள் கிடைக்கும்.

இஸ்லாம் இல்லாமல் இருந்திருந்தாலும், இன்று நாம் காணும் உலகம் கிட்டத்தட்ட அதே பிரச்சனைகளுடன் தான் இருந்திருக்கும் என வாதிடுகிறது இப்புத்தகம். அதாவது, ஒசாமா பின் லேடன், ஜிகாத் போன்ற வார்த்தைகளுக்குப் பதில் வேறு வார்த்தைகள் இடம்பெற்று விஸ்வரூபம் திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாக முடியாமல் தாமதமாகி பின் வெற்றிப்படம் ஆகியிருக்கும் சாத்தியங்கள் உண்டு. ஆசிரியர் இன்னும் ஒருபடி மேலே போய், இஸ்லாம் இல்லாமல் போயிருந்தால் மத்திய கிழக்கின் நிலைமை இன்றைவிட இன்னும் கொடுமையாக இருந்திருக்கும் என்கிறார். இதே கருத்தைத் தான், ஜெருசலேம் புத்தக அறிமுகத்தில் நானும் சொன்னேன். மேலும், இஸ்லாமிய நாகரிகம் இல்லாதிருந்தால் இவ்வுலகம் இன்று நாகரிக ஏழ்மை நிறைந்ததாக இருந்திருக்கும் என்கிறார். The world would be a much more impoverished place in the absence of Islamic civilization. வரலாறு தெரியாதவர்களுக்கு, நம்புவதற்குக் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், ஆதாரங்கள் சொல்ல வரலாற்றின் பழைய பக்கங்களை 3 பாகங்களாக‌ப் புரட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

Religion may in most of its forms be defined as the belief that the gods are on the side of the Government.
- Bertrand Russell

இஸ்லாம் மத்திய கிழக்கில் தோன்றி, மத்திய கிழக்கை விட்டு வெளியே பரவுவதற்கு முன்பு வரை மத்திய கிழக்கின் மதம் மற்றும் அரசியல் நிலைகளை விளக்குவதே முதல் பாகம். யூதம் கிறித்தவம் இஸ்லாம் என்ற முப்பெரும் மதங்களும் தோன்றிய மண் மத்திய கிழக்கு. 4000 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரே கடவுள் கொள்கை பேசிய மண்! மேசேயில் (Moses) இருந்து கணக்குப் பார்த்தால் யூதமத வயது 4500க்கு மேல். புனித பவுலில் (St.Paul) இருந்து கணக்குப் பார்த்தால் கிறித்தவமத வயது 1900. முதல் முஸ்லீமும் கடைசி இறைத்தூதருமான முகமது நபியில் இருந்து கணக்குப் பார்த்தால் இஸ்லாமியமத வயது 1400. ஆபிரகாமின் மதங்கள் (Abrahamic religions) என்று இம்மும்மதங்களும் அழைக்கப்படுகின்றன. 610CEல் அரேபியாவில் இஸ்லாம் தோன்றிய காலத்தில் கிறித்தவமும், நகரங்களில் மட்டும் யூதமும், பார்சிகளின் மதமான சரத்துஸ்திரமும் (Zoroastrianism) என மத்திய கிழக்கில் இருந்திருக்கின்றன. அதே காலத்தில் பௌத்தமும் இந்துவும் இந்தியாவிலும், கிறித்தவமும், பல கடவுள்களும் ஐரோப்பாவிலும் இருந்திருக்கின்றன; அரேபியாவில் மெக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 360 உருவ வழிபாடுகள் இருந்திருக்கின்ற‌ன.

ஆபிரகாமின் மதங்கள் மூன்றையும் தனித்தனியாக ஒன்றோடொன்று நம்பிக்கைகளில் ஒப்பிடுகிறார் ஆசிரியர். இம்மதக் குடும்பத்தில், மூத்த மதங்கள் இளையவர்களை முற்றிலுமாக நிராகரிக்கின்றன. இயேசுவையும் முகமது நபியையும் யூதம் ஏற்பதில்லை. முகமது நபியைக் கிறித்தவம் ஏற்பதில்லை. யூதர்களின் இறைத்தூதர்களைக் கிறித்தவமும் இஸ்லாமும் ஏற்கின்றன. இயேசுவிற்கும் மரியாளிற்கும் இஸ்லாமில் தனியிடம் உண்டு. மூன்று மதங்களும் ஒரே கடவுளைப் பற்றி பேசுவது போல் தெரிந்தாலும், மனிதப் பரிணாம வளர்ச்சியில் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்ளப்பட்ட மதங்களாக தெரிந்தாலும், ஆபிரகாமின் மதங்கள் என்று ஒரே சித்தாந்தத்தின் கீழ் கொண்டுவர முயன்றாலும், உண்மையிலேயே மூன்று மதங்களும் ஒரே கடவுளைப் பற்றித்தான் பேசுகின்றனவா என்று சந்தேகப்படும் அளவிற்கு வேறுபாடுகள் அதிகம். கிறித்தவம் இஸ்லாமுடன் கொண்ட வேறுபாடுகளை விட யூதத்துடன் கொண்ட வேறுபாடுகள் அதிகம்; மிகவும் அதிகம். இயேசுவைக் கொன்றவர்கள் என்ற பழிச்சொல்லுடன் யூதர்கள் வெறுக்கப்பட்டது போன்ற, கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட சில‌ வேறுபாடுகளும் உண்டு. மத்திய கிழக்கு பற்றி எந்தப் புத்தகம் படித்தாலும், இதுவரை சொன்ன விசயங்கள் ஆரம்பக் கட்டுரைகளாக வந்துவிடும். அதாவது, இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே மற்ற இரு மதங்களுக்குள் அடிப்படையான பிரச்சனைகள் இருந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஐரோப்பாவிலும், சார் மன்னர்களின் ஆட்சியில் இரஷ்யாவிலும், ஹிட்லரால் ஜெர்மனியிலும் யூதர்கள் வதைக்கப்பட்டதை வரலாற்றின் கொடூரப் பக்கங்கள் சொல்லும்.

570CEல் முகம்மது நபி தோன்றாது போய் இருந்தால் அரபு மக்களுக்கு என்று ஒரு தனி வரலாறு இருந்திருக்குமா என்று தெரியவில்லை,என்பது வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்ளும் உண்மை. நாகரிகம் தெரியாதவர்களாக அருகில் இருப்பவர்களால் கருதப்பட்ட அரபுகளுக்கு, இஸ்லாம் புதிய அடையாளத்தையும் சிந்தனையும் உத்வேகத்தையும் தர, அசுர பலத்துடன் தங்கள் எல்லையை விரிவுபடுத்துகிறார்கள். முகமது நபி இறந்து 30 வருடங்களுக்குள் மேற்கே துனிசியா, வடக்கே கௌகாஸஸ், கிழக்கே பாகிஸ்தான் எல்லை வரை பரவுகிறார்கள். 800CEல் மத்திய கிழக்கும் கிழக்கு ஐரோப்பாவும் ஏறத்தாழ சமமான மக்களைக் கொண்டிருந்தன; ஒவ்வொன்றும் 3 கோடி பேர். ஆனால் மத்திய கிழக்கில் ஏறத்தாழ 50000 பேர் கொண்ட 13 நகரங்கள் இருந்தன; கிழக்கு ஐரோப்பாவில் ரோம் மட்டுமே நகரமாக இருந்தது. இஸ்லாமின் உடனடித் தாக்கத்தைப் புரிந்து கொள்ள இப்புள்ளி விவரங்கள் போதுமென நினைக்கிறேன்.

பெரும்பான்மை மக்கள் நினைப்பது போல, ஆரம்ப கால இஸ்லாம் வாள் முனையில் பரவவில்லை. எல்லையை விரிவுபடுத்துவது மட்டுமே அரபுகளின் நோக்கமாக இருந்திருக்கிறது. ஆரம்பகால ஆட்சியாளர்கள் மதநல்லிணக்கம் பேணுபவர்களாக இருந்ததாலும், ரோமானியப் பேரரசின் கிழக்குச் சாம்ராச்சியத்தை அவர்கள் கைப்பற்றும் போது அதன் குடிமக்கள் வரவேற்றார்கள்; இஸ்லாம் என்ற இறை நம்பிக்கைக்காக அல்ல; அவர்கள் தரப்போகும் அரசியல் உரிமைகளுக்கும், அவர்கள் தரப்போகும் ஆட்சிக்கும். காலப்போக்கில் ஒரு பரந்து விரிந்த ஒரு சிறந்த நாகரிகத்தின் அங்கமாக மதம் மாறுகிறார்கள். அரபுகளை மற்ற இனங்களுடன் இஸ்லாம் இணைக்கிறது. அரபுகள் இஸ்லாம் மேல் இருந்த தங்களின் ஏகபோக உரிமையை இழக்கிறார்கள். அங்கே உடைகிறது இஸ்லாமின் முதல் கலீபாக்கள் ஆட்சி. முதன் முறையாக இஸ்லாமிய ஆட்சி உமையாது (Umayyad) அரபுகளிடம் இருந்து, அப்பாசிய  (Abbasid) பாரசீக‌ர்களுக்குப் போகிறது. இப்படி இஸ்லாமியர்களின் ஆட்சி இன்னொரு இஸ்லாமியரிடம் இழக்க‌, பிராந்திய அரசியல் காரணங்கள் இருந்திருக்கின்றன; இஸ்லாம் இல்லை. மத்திய கிழக்கில் இஸ்லாம் சந்தித்த இஸ்லாம் அல்லாத இன்னொரு அச்சுறுத்தல் மேற்கில் இருந்துதான் வந்தது; இன்றும் வந்து கொண்டிருக்கிறது.

The curse of the human race is not that we are so different from one another, but that we are so alike.
- Salman Rushdie

மத்திய கிழக்கு, மேற்கத்திய, கிழக்கத்திய நாடுகள் என்று அடிக்கடி பேசுகிறோமே, எந்தப் புள்ளியில் இருந்து இத்திசைகளைக் குறிக்கிறோம்? இவையெல்லாம் ரோமானிய மக்கள் பயன்படுத்திய வார்த்தைகள்; இன்றும் தொடர்கின்றன. ரோமைத் தலைநகரமாகக் கொண்ட ரோமானியப் பேரரசின் மன்னன் முதலாம் கான்ஸ்டன்டைன் (325CE), கிறித்தவ மதத்தைத் தழுவுகிறான். அதுவரை ரகசியமாகத் தூரத்துத் தேசங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த கிறித்தவ மதம், மன்னன் எவ்வழியோ குடிமக்கள் அவ்வழி என ரோமானிய தேசமெங்கும் பரவுகிறது. பைசாந்திய நாடுகளைக் கைப்பற்றி கிழக்கே கான்ஸ்டான்டிநோபிள் (இன்றைய இஸ்தான்புல்) என்ற புதிய நகரையும் உருவாக்குகிறான். ரோமின் மொழி இலத்தின். இரண்டாம் ரோம் என அழைக்கப்பட்ட கான்ஸ்டான்டிநோபிளின் மொழி கிரேக்கம்.

ரோம் மேற்கு; கான்ஸ்டான்டிநோபிள் கிழக்கு. அதாவது ரோமானியப் பேரரசின் மேற்கு மற்றும் கிழக்குச் சாம்ராச்சியங்கள் மொழியாலும் கலாச்சாரத்தாலும் இருவேறு இனங்கள். ரோமானியப் பேரரசிற்குக் கிழக்கே இருந்த நம்மைப் போன்றவர்களுக்கு, மொத்த ரோமானியப் பேரரசும் மேற்கு. அடுத்து வந்த பேரரசர்கள் எல்லாம் கிழக்கே கவனம் செலுத்த, ஆரம்பகால விவிலியங்கள் கிரேக்கத்தில் எழுதப்பட, ரோம் கான்ஸ்டான்டிநோபிள் என இரு கிறித்தவ மதத் தலைமைப் பீடங்கள் உருவாக, 476CEல் ரோம் வீழ்ச்சியுற, அதிகாரம் முழுவதும் கிழக்கே குவிய, அதிகாரச் சண்டை அரசியலிலும் மதத்திலும் தலைதூக்க, ஐரோப்பாவின் நோயாளி என துருக்கி ஒதுக்கப்பட‌, இன்றும் தொடர்கிறது கிழக்கு மேற்கு பிரிவினை! ரோமைத் தலைமையகமாகக் கொண்டு கத்தோலிக்க கிறித்தவம் (Roman Catholic) இன்றும் தொடர்கிறது. எங்கே போனது கான்ஸ்டான்டிநோபிள் கிறித்தவத் தலைமைப் பீடம்?

நிலமெல்லாம் ரத்தம் புத்தகம் நீங்கள் படித்திருந்தால், உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றை ஞாபகப் படுத்துகிறேன். மொத்த புத்தகத்திலும், கொஞ்சம் கிச்சுக்கிச்சு மூட்டுவது போல் வரும் அந்த ஒரே சம்பவத்தை நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு சிலுவைப் போரில், ரோம் போப்பால் அனுப்பப்பட்ட வீரர்கள் விரக்தியில் ஜெருசலேமைத் தாக்காமல் கான்ஸ்டான்டிநோபிளைத் தாக்கும் சம்பவம் நினைவிருக்கிறதா? மேற்கு கிழக்கின் புராதன பகையின் வெளிப்பாடே அது! இதுதான் இப்புத்தகத்தின் கரு. அதாவது இஸ்லாம் மத்திய கிழக்கில் காட்சிக்கு வருவதற்கு முன்பே மிச்சமிருக்கும் ரோமானியப் பேரரசின் அதிகார வேட்கை, திருச்சபையில் இருந்த நீயா நானா குளறுபடிகள் என எரிந்து கொண்டிருந்த பிரச்சனைகள் நிறைய இருந்தன.

மேற்குலகிடம் தோற்பதை விட இஸ்லாமிடம் தோற்பதே மேல் என பின்னாளில் கான்ஸ்டான்டிநோபிள், இஸ்தான்புல் ஆன பின்னும் அங்கேயே தங்கள் தலைமைப் பீடத்தைத் தொடர்கிறார்கள். இதனால் தான் ஆசிரியர், இஸ்லாம் இல்லாமல் போயிருந்தால் மத்திய கிழக்கின் நிலைமை இன்றைவிட இன்னும் கொடுமையாக இருந்திருக்கும் என்கிறார். ஏற்கனவே சண்டை போட்டுக் கொண்டிருந்த கிழக்கும் மேற்கும் கொஞ்சம் நின்று, புதிதாகப் பரவும் இஸ்லாமைப் புரியாத புதிராக நோக்க ஆரம்பித்தார்கள். போப் இரண்டாம் அருள் சின்னப்பர் (Pope John Paul II) 800 ஆண்டுகள் கழித்து, கிழக்குத் தலைமைப் பீடத்திடம் மன்னிப்பு கேட்கிறார்; 3 வருடங்கள் கழித்து ஏற்றுக் கொள்கிறார்கள்; அந்த அளவிற்குப் புரையோடிய பகை. இஸ்லாம் போன்ற திசை திருப்பிய சக்தி (distracting factor) ஒன்று, அக்காலத்தில் தோன்றாமல் போயிருந்தால் சண்டை படு உத்வேகத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கும். இஸ்லாம் இல்லாமல் இருந்திருந்தால், சரத்துஸ்திர ஈரானைத் தவிர‌ கிழக்குத் திருச்சபை அவ்விடங்களை நிரப்பி இருக்கும் என்று சிந்திக்கச் சொல்கிறார் ஆசிரியர். அப்புரியாத சக்தியின் மேல் பரப்பப்பட்ட‌ பயமும், வன்முறை மாயமும் இன்றைய நவீன காலத்திலும் தொடர்வது துரதிஷ்டமே!

தொழுகை திசையை ஜெருசலேமில் இருந்து மெக்காவை நோக்கி முகமது நபி மாற்றியதே மிகப் பெரிய நல்லெண்ண முயற்சியே! அவர் மட்டும் திசையை மாற்றி இருக்காவிட்டால், ஜெருசலேம் இன்று என்னவாகி இருக்கும் என்று நினைத்து கூடப் பார்க்க முடியாது. சொட்டு இரத்தம் சிந்தாமல் ஜெருசலேமைக் கைப்பற்றி தனது மதச் சின்னங்களைப் புதிதாகக் கட்டாமல் மத ஒற்றுமை காக்கிறார் முதலாம் உமர். சுல்தான் சலாவுதீன் தோற்றுப்போன எதிரிகளுக்கும் கப்பம் கட்டுகிறார்; மருத்துவ உதவி செய்கிறார். இஸ்லாமியர்களின் காலம் ஜெருசலேமின் பொற்காலம், என எல்லா வரலாற்று ஆசிரியர்களும் ஒத்துக் கொள்வதை எனது முந்தைய பதிவுகளில் பதிவு செய்திருக்கிறேன். சுருக்கமாகச் சொன்னால், இஸ்லாமியர்கள் காலத்தில் பெரும்பாலும் ஜெருசலேம் மதமற்று இருந்திருக்கிறது; மத்திய கிழக்கும்.

I want to see an India where everyone is literate. Only then can we erase the difference between India and Bharat.
- U.R.Ananthamurthy (ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர்)

ஒரே கடவுள் கொள்கை கொண்ட மத்திய கிழக்கின் ஒரு பாரம்பரியத் தொடர்ச்சிதான் இஸ்லாம். மத்திய கிழக்கில் இருந்த ஒரே நாகரிகத்தின் பல்வேறு தளங்களை இஸ்லாமால் மிக எளிதாக இணைக்க முடிந்திருக்கிறது. இஸ்லாமின் அரசியல் எல்லைகள் காலப்போக்கில் பல சமயங்களில் மாற்றி எழுதப்பட்டு இருந்தாலும், இஸ்லாம் உண்டாக்கிய அவ்விணைப்பு இன்று வரை நீடிப்பது மறுக்க முடியாத உண்மை. மதம் என்ற அடையாளத்தைத் தவிர ஏற்கனவே அங்கிருந்த பிரச்சனைகளுக்கு அதிகாரம் தேசியம் அரசியல் இனம் என்ற பல காரணங்கள் இருந்ததையும், மதம் ஓர் பதாகை போல் தான் செயல்பட்டிருக்கிறது எனப் பேசுகிறது முதல் பாகம். மத்திய கிழக்கை விட்டு வெளியே பரவ ஆரம்பித்த இஸ்லாம் எதிர்கொண்ட பல்வேறு நாகரிகங்கள் பற்றிப் பேசுகிறது இரண்டாம் பாகம். மூன்றாம் ரோம் என‌ உருவெடுத்த இரஷ்யாவின் மாஸ்கோ, சீனா, மேற்கத்திய நாடுகள் போன்றவற்றை விடுத்து, இஸ்லாம் எதிர்கொண்ட கிறித்தவம் அல்லாத முதல் நாகரிகம் பற்றி விரிவாகப் பேசுவோம். ஆம், இந்தியாவைத் தான் சொல்கிறேன்.

மதம் பற்றி எந்தப் புரிதலும் இல்லாத எனது 20வது வயதில் படித்த குஷ்வந்த் சிங் கட்டுரை ஒன்று இன்னும் நினைவில் இருக்கிறது. இந்து இஸ்லாம் மதங்களுக்கு இடையே இருக்கும் வேற்றுமைகளைப் பட்டியலிடுவார். மெய்சிலிர்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்! முரண்தொடை என்ற இலக்கண அழகியல் இயற்கையாக அமைந்த இயற்கையின் இரு படைப்புகள்! அப்துல் ரகுமானின் ஆலாபனை பித்தன் என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளை அடுத்தடுத்து படிப்பது போன்ற அருமையான அனுபவம். 12ம் நூற்றாண்டில் இஸ்லாம் வட இந்தியாவில் நுழைந்தவுடன் இம்முரண்தொடையை ரசிக்கத் தெரிந்தவர்களிடம் இருந்து புதுப்புது பக்தி மார்க்கங்கள் பிறப்பெடுத்தன. சுஃபியிஸம் தோன்றியது. கபிர் துக்காராம் துளசிதாஸ் குருநானக் என அடித்தள மக்களிடம் இருந்து மதத் சிந்தனைவாதிகள் தோன்றினர். கார்ல் மார்க்ஸ் சொன்னது போல தனிப்பட்ட வரலாறு இருந்திராத இந்தியத் துணைக்கண்டம் பற்றிய புத்தகங்கள், 'மதங்கள்'என்ற அலமாரியில் பிரிட்டிஷ் நூலகங்களில் உறங்கிக் கொண்டிருந்த காலத்தில், மொகலாயர்கள் என்ற வேற்று எதிரியால் அதிர்ந்த மக்கள், அதே பெயரால் ஒன்றுபட்டனர். இன்று இந்தியத் துணைக்கண்டம் என்று சொல்லப்படும் அடிப்படை எல்லைகள் மொகலாயர்கள் நிர்ணயித்தவை, என்பதை யாராலும் மறுக்க முடியாது.

மத நல்லிணக்கத்தின் உச்சக்கட்டமாக, எல்லா மத நம்பிக்கைகளின் நல்ல கருத்துகளைக் கொண்டு கடவுளற்ற இறைத்தூதரற்ற தீன்‍இ‍லாஹி என்ற புது மதத்தையே உருவாக்கினார் அக்பர். ஜவஹர்லால் நேரு அக்பரை இந்தியாவின் தந்தை என வர்ணிப்பதில் ஆச்சரியமில்லை. இம்முரண்தொடையை வரலாறு எதிர்மறையாக எழுதியதும், புரிந்து கொள்ளப்பட்டதும் நமக்கான சாபமே அன்றி வேறேன்ன சொல்ல? அரபு மற்றும் மொகலாயப் படையெடுப்பை இஸ்லாமியப் படையெடுப்பு எனப் பதிவு செய்தனர் வரலாற்று ஆசிரியர்கள். ஐரோப்பியர்கள் காலனி பிடித்த போது, கிறித்தவ ஆக்கிரமிப்பு என்று அவர்கள் எழுதவில்லை. காந்தி கொல்லப்பட்ட நாளில் கொலைகாரனின் மதத்தைத் தான் கேட்டது ஒட்டுமொத்த நாடும்! முரண்தொடையை ரசிக்க வைக்க அப்படியொரு தலைவன் மீண்டும் கிடைக்காது போனதும் சாபமே!

இந்தியாவின் இன்றைய நிலைக்கும், எதையுமே சாதித்திராத இந்தியப் பிரிவினைக்கும் பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியே அன்றி இஸ்லாம் காரணமே அல்ல என்கிறார் ஆசிரியர். இஸ்லாம் இல்லாமல் இருந்திருந்தால், பாபர் வராமல் போயிருந்தால், பெர்ஷியாவில் இருந்து யாரோவொரு குட்டி அரசன் ஏதோவொரு மத அடையாளத்துடன் கொஞ்சங் கொஞ்சமாக நாடுகள் பிடித்து, கடைசியில் இந்தியாவைப் பேரரசாக மாற்றினாலும், பிரிட்டிஷ்காரன் இஸ்லாம் இல்லாமலே பிரித்திருக்க மாட்டானா என்ன? வாய்ப்புகள் நிறைய உண்டு.

உன் ஆயுதத்தை உன் எதிரியே தீர்மானிக்கிறான்.
- மா சே துங்

Terrorism is the weapon of the weak.
- ஷேக் அகமது யாசின் (ஹமாஸ் தலைவர்)

நவீன காலத்தில் இஸ்லாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் பேசுகிறது கடைசி பாகம். எல்ஜா முகமது, மால்கம் எக்ஸ் போன்ற தலைவர்கள் ஏற்கனவே இன ரீதியில் திரண்டிருக்கும் தங்கள் போராட்டங்களை இஸ்லாமுக்கு மதம் மாறி, இன்னும் தீவிரப்படுத்தியதை பேசுகிறது ஒரு கட்டுரை. நாசர், பாலஸ்தீனம், தற்கொலைப் படைத் தாக்குதல், தீவிரவாதம் என பேசுகின்றன அடுத்தடுத்த கட்டுரைகள். எகிப்தில் நாசரை அடக்க இஸ்லாமிய மதவாதிகளுக்கு மறைமுகமாக உதவியது அமெரிக்கா. யாசர் அராபத்திற்கு எதிராகச் செயல்பட ஹமாஸ் தலைவர் ஷேக் அகமது யாசினை விடுதலை செய்து உதவியது இஸ்ரேல். இவற்றில் எங்கு மதம் வந்தது? குஜராத் இனக்கலவரம் முன்பு இந்திய முஜாஹிதீன் கிடையாது என்கிறது அரசு. பாபர் மசூதி இடிப்புக்கு முன்பு இஸ்லாமிய தீவிரவாதம் இந்தியாவில் கிடையாது. காலிஸ்தான் பிரச்சனையில் பக்கத்து பஞ்சாப் பற்றி எரிந்த போதும் காஷ்மீர் அமைதியாகப் போராடி இருக்கிறது. ஆப்கானிஸ்தானைச் சோவியத் ஆக்கிரமிக்கும் வரை உலகில் இஸ்லாமிய மதவாதம் கிடையாது. 1967ல் பாலஸ்தீனம் முழுவதும் அரபுகளிடம் இருந்து பிடுங்கப்பட்ட போதும் தீவிரவாதம் இல்லை. பின் எந்தச் சூழ்நிலையில் மதம் ஆயுதமாக எடுக்கப்படுகிறது? உங்களின் வாசிப்பிற்கே விட்டுவிடுகிறேன்.

மதம் என்றாலே பிரச்சனை என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட முடியாது. மதச்சார்பற்ற பிரெஞ்சு நாடு மத அடையாளங்களைத் தடை செய்கிறது. நாத்திக சோவியத் யூதர்களை விரட்டிய கதையும் உண்டு; அதே சோவியத் மதத்தைக் கையில் எடுத்த கதையும் உண்டு. Pogrom என்ற வார்த்தையை அகராதியில் சேர்த்ததே சோவியத்தான். மதச்சார்பற்ற வன்முறை என்று தனிப்பெயர் தரலாம். மதம் இருக்கட்டும். மதம் நல்லது. மதம் இல்லாத உலகம் இன்னும் அதிகமாக மதம் பிடித்திருக்கும். மதம் இல்லாதவனுக்கு இல்லாள் கிடைப்பதில்லை, என்பது என் பட்டறிவு.

ஆசிரியர் சொல்லும் தீர்வுகளில் உங்களுக்குப் புரியும் சில கருத்துகள் இதோ:
1. அரபு மண்ணில் இருந்து அந்நியப் படைகள் வெளியேறினால் போதும்; பல தீவிரவாத இயக்கங்கள் முடிவுக்கு வரும்.
2. பாலஸ்தீன அகதிகளுக்கு நீதி.
3. இஸ்லாமிய மதவாதம் மற்றும் பயங்கரவாதங்களுக்குத் தீர்வு காண உள்ளூர் இஸ்லாமியர்களால் மட்டுமே முடியும். அவர்களிடம் விட்டுவிடுங்கள்.

சுருக்கமாகச் சொன்னால், புத்தகத்தின் தலைப்பைப் போல், எந்தவொரு பிரச்சனைக்கும் இஸ்லாமியச் சாயம் பூசாமல், வெறும் உலகலாவிய மனிதயினத்தின் சமூக மற்றும் அரசியல் பிரச்சனையாக மட்டும் பாருங்கள். நடக்கும்? ஆயுதத் தயாரிப்பாளர்களும் வல்லரசுகளும் நடக்கவிடுவார்களா?

உங்கள் சிந்தனைக்கு:
1. திலக் என்ற இந்துத் தளபதியின் கீழ் ஓர் இந்துப் படையை வைத்திருந்தார் கஜினி முகமது. வெற்றி மட்டுமே நோக்கமாகக் கொண்ட கஜினியுடன் இஸ்லாம் எப்படிக் காரணமாகும்?
2. வாள் முனையில் இஸ்லாம் பர‌வியது என்ற கூற்று, தென்னிந்தியாவிற்கும் சீனாவிற்கும் முற்றிலும் தவறு. இவ்விரண்டு இடங்களுக்கும் இஸ்லாம் வணிகம் மூலம் வந்தது. உலகின் இரண்டாம் பள்ளிவாசலான சேரமான் ஜீம்மா பள்ளிவாசல், சேரப் பேரரசின் தலைநகரான கொடுங்களூரில், இன்றைய கேரளாவில் உள்ளது! முகமது நபியின் வாழ்நாளிலேயே கட்டப்பட்டது அது!  'அறியப்படாத தமிழகம்'புத்தகத்தில் தொ.பரமசிவன் அவர்கள், பிரியாணியும் தென்னாட்டிற்கு வெகு நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டதாகக் கூறுகிறார்.
3. அடிமைமுறையை இஸ்லாம் ஊக்குவிப்பதாகக் கூறினார் அம்பேத்கார். அடிமைகள் அரசாண்டிருக்கிறார்கள். குதுப்மினார் கட்டி இருக்கிறார்கள்.
4. தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருடன் இந்து என்ற வார்த்தையையும் பல வெளிநாட்டு ஊடகங்கள் சேர்த்துக் கொள்ளும். அவர்கள் தற்கொலைப் படைத் தாக்குதல் பயிற்சி பெற்றது லெபனானில், பல இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து என்று பலருக்குத் தெரியும். விடுதலைப் போராட்டக் குழுக்களில் மதம் உண்டா என்ன?
5. பிரிவினைக்குப் பின் இலாகூரைத் தவிர மொகலாயர்கள் நிர்மாணித்த அனைத்து பெரிய நகரங்களும் இந்தியாவில் தான் இருக்கின்றன, தாஜ்மகால் உட்பட.
6. ஷியா ஈரானைத் தவிர, இஸ்லாமிய மதத் தலைவர்கள் ஆட்சித் தலைவர்களை நியமித்ததாக‌ அல்லது கட்டுப்படுத்தியதாக எங்குமே வரலாறு கிடையாது! அதே போல் எந்தவொரு சுல்தானோ ஷாவோ பாதுஷாவோ முஃப்திக்கு முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டதாக இஸ்லாமிய வரலாறு கிடையாது! அதாவது இஸ்லாமிய வரலாற்றில் மத மற்றும் அரசியல் தலைமைகள் ஒன்றோடொன்று குறுக்கிட்டதில்லை. இது நல்லதா கெட்டதா என்று உங்களுக்குச் சட்டெனப் புரியாது. மதம் ஆதிக்கம் செய்தால் / அரசியல் ஆதிக்கம் செய்தால் / இரண்டுமே சேர்ந்து ஆதிக்கம் செய்தால் / இரண்டுமே தனித்தனியாக இருந்தால் / என ஒவ்வொரு நிலையிலும் வரலாற்றில் மற்ற மதங்களில் எப்படி நடந்திருக்கிறது எனப் புரட்டிப் பாருங்கள். இரண்டின் வல்லமையும் புரியும்.

காந்தி கொலைவழக்கில் அவர் மேல் சுமத்தப்பட்ட பல குற்றங்களில் ஒன்று: 'ஓர் இந்துவைத் திருக்குரானைப் படிக்கச் சொன்னார்'. பெரியார் கட்சிக்காரர் ஒருவரிடம் கேட்டார்கள்: 'நீங்கள் ஏன் எப்போதும் இந்து மதத்திலேயே குறை கண்டு பிடிக்கிறீர்கள்?'. அவர் சொன்னார்: 'அது என்னுடைய மதம் என்று சொல்லப் படுவதால்'. இதே பதில்தான் காந்தியும் சொல்லியிருப்பார். காந்தி அம்பேத்கர் பெரியார் என்று எல்லா சீர்திருத்தவாதிகளும் தங்கள் மதங்களைச் சீர்திருத்தியவர்களே. கடவுள் என்னைக் கைவிட்டு, நான் கடவுள்களைக் கைவிட்டு பல்லாண்டுகள் ஆகிவிட்டதால், நான் உங்களுக்குக் கொடுக்க முடிந்தது இது போன்ற மத நல்லிணக்கம் சொல்லும் புத்தகங்களே! 'ஏன் இஸ்லாம்?'எனக் கேட்டால், சுற்றி அமர்ந்திருக்கும் குழந்தைகளில் பசித்திருக்கும் சிறு குழந்தைக்கு முதல் தோசையைக் கொடுக்கும் ஒரு சாதாரண தாயின் மனநிலையே என்னுடையதும்!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

110. மாதொருபாகன்

$
0
0
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : மாதொருபாகன் (புதினம்)
ஆசிரிய‌ர் : பெருமாள்முருகன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2010
விலை : 140 ரூபாய்
பக்கங்கள் : 190
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
இச்சமூகம் ஒரு காட்டமான கணக்கு வாத்தியார். நம்மை மறைமுகமாகக் கணித்துக் கொண்டே இருக்கும். நம் இருப்பை உறுதிசெய்ய எதையாவது நாம் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். உதாரணமாக, நிர்ணயித்த வயதில் திருமணம் செய்யாத‌ ஆண்களைப் பாதாளத்தில் இருந்து மீட்க வந்த மகான் எனவும், அடுத்த‌ மகாத்மா எனவும், வருங்காலப் பிரதமர் எனவும் புகழ்ந்து தள்ளும்; பெண் என்றால் அம்மா தாயே என்று காலில் விழுந்து கும்பிடாது; மிருகம் போடும் ஓலங்களை நல்ல சகுனம் என்று சொல்லி, துணை இல்லாத அல்லது துணை இழந்த பெண்ணை வெகுதூரம் நிற்க வைக்கும். அப்படியொரு நிலைக்கு வாய்ப்புத் தராமல் காளியைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் பொன்னா. சமூகம் அவர்களைப் போல் கொஞ்சம் மேலேறி அடுத்த விசயத்தை நிரூபிக்கச் சொல்கிறது. கல்யாணம் ஆன முதல்மாதம் விலக்கானதும் மாமியார் 'ம்க்கும்'என்று முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள். அன்றிலிருந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்தும் ஒவ்வொரு மாதமும் அந்த 'ம்க்கும்'தொடர்கிறது.

கல்யாணம் ஆன புதிதில் மாமனார் வீட்டில் காளி நட்டு வைத்து போன பூவரச மரத்தின்  பூக்கள் கூட, வாய் விரிந்த மஞ்சள் பூக்களாலும், சிவந்து குவிந்த வாடல் பூக்களாலும் சிரித்துச் சிரித்து, வாட வாட அழகேறிக் கொண்டே இருக்கின்றன. பொன்னா நட்ட செடி பூத்து குலுங்குகிறது; நட்ட மரம் காய்த்துக் கிடக்கிறது; கொண்டு வந்த கன்றுக்குட்டி பெருகிக் கிடக்கிறது; அடை வைத்த மொட்டு பொறித்துச் சிரிக்கிறது. அவர்களுக்கென்று ஒரு புழு பூச்சி கூட தரிக்கவில்லை. 50 வயதிலும் மாமியார்களையும் கர்ப்பமாக்கிக் காட்டுவதாகச் சவால்விடும் மருத்துவ வசதிகள் உள்ள காலம் இது. இந்த வசதிகள் எல்லாம் இல்லாத காலத்தில், மாடு நாற்பது ரூபாய்க்கு விற்ற காலத்தில், சுதந்திரம் கிடைப்பத‌ற்கு முன் திருச்செங்கோட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் பொன்னாவும் காளியும். தக்க நேரத்தில் நிரூபிக்காத அவர்களைச் சமூகம் சாடை பேசுகிறது. காளியை மறுமணம் செய்யச் சொல்கிறது; பொன்னாவை அவனோடு ஒட்டி வாழவோ, ஒட்டுமொத்தமாக வெட்டிக் கொண்டு பிறந்தவீடு புகவோ பயமுறுத்துகிறது.

ஒருவன் வேலையைக் காளி குறை சொன்னால், 'வேலன்னா வேல உடறது'என்று சொல்லி இடக்கையின் இரண்டு விரல்களை நிமிர்த்தி வலக்கையின் ஆட்காட்டி விரலை அதற்குள் நுழைத்துக் காட்டுகிறான் ஒருவன். 'குடிக்கிற தண்ணி அருமையா இருந்து என்னடா? உடற தண்ணியும் அருமையா இருக்கோணும்டா'என்கிறான் இன்னொருவன். 'வறடி பருப்பள்ளிக்கிட்டு ஓடிஓடிக் குடுக்கறா. அவ கையால தொட்ட பருப்பு எங்கிருந்து மொளைக்கும்?'என்று பொன்னாவை விரட்டுகிறாள் ஒருத்தி. 'பிள்ளயில்லாதவ பீச்சீலய மோந்து பாத்தாளாம்'என்று சாடுகிறாள் இன்னொருத்தி. 'முட்டுச் சந்துல நிக்கிற கல்லுன்னு நெனச்சு எந்த நாய் வேண்ணாலும் வந்து மண்டுட்டுப் போலாம்னு நெனைக்குதுவ'என்று காளியிடம் அழுகிறாள் பொன்னா.

குழந்தையின்மைக்குக் காளியின் பரம்பரையில் முன்னோர்கள் செய்த சில குற்றங்களே காரணம் என குடும்பத்திற்குள் சில கதைகள் சொல்கிறார்கள். சில சமீபத்திய தலைமுறைகளில் நடந்த சம்பவங்களைச் சான்றாகக் காட்டி, சாபம் தொடர்வதை நிரூபிக்கிறார்கள். எத்தனை வைத்தியங்கள்! எத்தனை பத்தியங்கள்! எத்தனை பாவப் பரிகாரங்கள்! எத்தனை சாமிகளுக்கு வேண்டுதல்கள்! வேண்டாம் வேண்டாம் என்பவனுக்கு இந்தா இந்தா என்று கொடுக்கும் சாமி, வேண்டும் வேண்டும் என்பவனுக்குப் போடா மயிரே என்கிறது.

திருச்செங்கோட்டில் மலை உச்சியில், வறடிக்கல் என்று சொல்லப்படும் ஆளுயர ஒற்றைக்கல்லைச் சுற்றி இருக்கும் ஒற்றையடி அரைவட்டத் தடம். வறடிக்கல்லைப் பெண்கள் சுற்றினால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில், அவ்வளவு உயரத்தில் உயிரைப் பணயம் வைத்தும் சுற்றிவிடுகிறாள் பொன்னா. ம்க்கும். இவர்களின் கடைசி நம்பிக்கையான‌ இன்னுமொரு சாமிதான் மாதொருபாகன்! மாது ஒரு பாகன். புதினத்தின் கருவான‌ மாதொருபாகனைப் பற்றி எழுதி, நீங்கள் புதினம் வாசிக்கும் போது வளரப்போகும் சுவாரசியக் கரு கலைக்க நான் விரும்பவில்லை.
(http://www.panuval.com)
பெருமாள்முருகன். சமீபத்தில் நான் அதிகம் படித்தவை இவருடைய புத்தகங்கள்தான். இத்தளத்தில் நான் அதிகம் எழுதிய தமிழ்ப் புத்தகங்களும் இவருடையவையே. நிகழ்காலத்தின் ஒப்பனைகள் இல்லாமல், ஏதோவொரு காலத்தில் எனக்குத் தொடர்பே இல்லாத மனிதர்களைப் பற்றி பேசுபவை இவரது கதைகள். 'இறக்கையைப் பாதி விரித்த பறவையைப் போல் ஓலைக்கொட்டகை'என்றும், 'கோட்டானைப் போலத் தன் இருப்பிடமே கதி'என்றும் மிக எளிய விசயங்களை அற்புதமான உவமைகளாகக் கையாளும் இவரது எழுத்துக்கள், எனக்கு மிகவும் பிடிக்கும். எத்தனை நாடகங்களில் வந்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாகச் சிரிக்க வைக்கும் எஸ்.வி.சேகரின் ஆள்மாறாட்டக் கதைகள் போல, சந்துபொந்து எல்லாம் நுழைய வைத்து ஆழத்தின் கடைசிவரை அதே குளிர்ச்சியோடு வாசகனையும் கூட்டிப் போகும் 'கிணறு'பற்றிய விவரணைகள் இவர் கதைகளில் சலிப்பதே இல்லை. இப்புதினத்தில் வரும் 'கரிக்குருவிகள்'போல இயற்கையோடு இணைந்தும் புரிந்தும் வாழ்ந்த எளிய மனிதர்கள்தான் பெரும்பாலும் இவரின் கதைமாந்தர்கள்.

சரி, அதென்ன மாதொருபாகன்? திருச்செங்கோட்டு மலைமேல் இருக்கும் கோவில் அய்யரிடம் இருபது ரூபாய் கொடுத்து காளி கேட்டபோது, கிடைத்த பதில் இது: 'நூத்துக்கணக்கான வருசமா அர்த்தநாரீஸ்வரன்னு நாங்க பரம்பரையாப் பூச பண்ணிண்டு வர்றோம்.அம்மையப்பன், மாதொருபாகன்னு பலபேரு சொல்லி இந்த ஈஸ்வரனப் பாடி வெச்சிருக்கறா. ஆணும் பெண்ணும் சேந்தாத்தான் லோகம். அத நமக்கெல்லாம் காட்ட ஈஸ்வரன் அம்பாளோட சேந்து அர்த்தநாரீஸ்வரனா நிக்கறார். எல்லாக் கோயில்லயும் பாத்தேள்னா ஈஸ்வரனுக்குத் தனிச் சந்நதியும் அம்பாளுக்குத் தனிச் சந்ததியும் இருக்கும். இங்க அம்மையும் அப்பனும் சேந்து ஒண்ணா இருக்கறா. அதான் அம்மையப்பன்னு பேர் வெச்சிருக்கறா. தன்னோட ஒடம்புல எடது பக்கத்த அம்பாளுக்குக் கொடுத்த கோலம் இது. பெண்ணுக்கு நாம நம்ம ஒடம்புலயும் மனசுலயும் பாதியக் கொடுத்தாத்தான் நல்ல கிருஹஸ்தனா இருக்கலாம். நாம் ஆணாப் பொறந்திருந்தாலும் நமக்குள்ள பெண் தன்மையும் நெறஞ்சிருக்கு. இதை எல்லாம் சேத்து மாதொருபாகன்னு பெரியவா சொல்லியிருக்கறா. ஆணில்லாம பெண்ணில்ல. பெண்ணில்லாம ஆணில்ல. ரெண்டு பேரும் சேந்துதான் லோகம் நடக்குது. அதான் மாதொருபாகன். உள்ள பாத்தேளா? வலப்பக்கம் ஈஸ்வரன். எடப்பக்கம் அம்பாள். ஈஸ்வரன் இப்படிக் காட்சி கொடுக்கறது இங்க மட்டுந்தான். ஒரு சிலபேரு இது கண்ணகிங்கிறா,அறியாமைல சொல்றவாளுக்கு என்ன பதில் சொல்றது? எல்லாமே ஈஸ்வரந்தான்னு சிவனேன்னு இருக்க வேண்டியதுதான்'.

குழந்தையற்ற தம்பதிகளுக்குள் நடக்கும் பல்வேறு விதமான அக மற்றும் புற விசயங்களும், ஆதிசிவன் பாதிசிவன் ஆன‌ மாதொருபாகன் கோவில் சார்ந்து நிலவும் நம்பிக்கைகளும் தான் இப்புதினம். ஓவ்வொரு சாமிக்கும் இருக்கும் கோவிலைச் சுற்றி ஒரு புதினம் எழுதும் அளவிற்குக் கதைகள் இருக்கின்றன. கிழக்கே போகும் ரயில் கொடுத்த பாரதிராஜாவிற்கு இக்கதை தெரிந்திருந்தால் கண்டிப்பாக திரையில் எடுத்திருப்பார்!

நான் ரசித்தவை:
பிடித்துப் போன கதைமாந்தர்: நல்லுப்பையன் சித்தப்பா.
பிடித்துப் போன நிகழ்ச்சிகள்: 1. வெள்ளைக்காரத் துரை நடத்தும் குளத்தில் கல்லெறியும் போட்டி 2. பதினான்காம் நாள் திருவிழாவில் திருச்செங்கோட்டின் ஒவ்வொரு வீதியையும் பொன்னா சுற்றி வரும்போது சுற்றி நடக்கும் சம்பவங்கள்.

அனுபந்தம்:
----------------
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍உலகில் பல்வேறு சமூகங்கள் எப்படி பெண் தெய்வங்களைக் கையாண்டிருக்கின்றன என ஆராயும் Merlin Stone அவர்களின் When God Was a Woman புத்தகம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். படித்தால் சொல்லுங்கள்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

111. வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள்

$
0
0
(கர்மவீரருக்கும் மகாத்மாவிற்கும் சமர்ப்பணம்)

பெரும்பாலான கல்லூரிகள் தனியார் அமைப்பால் நடத்தப்படுவதும், அமைப்பு ரீதியாகவும், அலுவலர் ரீதியாகவும் இவ்வமைப்புகள் வகுப்புவாதத் தன்மை கொண்டுள்ளன. இது மாணவர் சேர்க்கையிலும் பிரதிபலிக்கிறது. இதனால் உயர் வகுப்பினர் சேர்க்கையில் முன்னுரிமை பெறுகின்றனர். தீண்டத்தகாத வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சேர்க்கை முடிந்து விட்டதாகக் கூறி இடம் மறுக்கப்படுகிறது.
- டாக்டர் அம்பேத்கர் (காலத்தில் இருந்து இன்றும்...)
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள்
ஆசிரிய‌ர் : அய்.இளங்கோவன் (ஆங்கிலத் துறைத் தலைவர், எலிசபத் ராட்மன் ஊரிஸ் கல்லூரி, வேலூர்)
வெளியீடு : கருப்புப் பிரதிகள், லாய்ட்ஸ் சாலை, சென்னை
முதற்பதிப்பு : சூன் 2009
விலை :  40 ரூபாய்
பக்கங்கள் : 72
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் காலந்தோறும் சில குறிப்பிட்ட சமூகங்கள் தீண்டத்தகாதவர்களாக கல்வி மறுக்கப்பட்ட கொடுமைகளைக் காணலாம். போனால் போகட்டும் என்று தர்ம சிந்தனையிலும் புண்ணிய நோக்கிலும் ஆரம்ப காலத்தில் கொஞ்சம் கல்வி கொடுத்திருக்கிறார்கள். 'தீண்டத்தகாதவர்களுக்குக் கல்வி அளிக்கலாம். ஆனால் அதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுமானால் அதற்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை'என்றார்கள் ஆங்கிலேயர்கள். 1930ல் கல்லூரியில் படித்த மெட்ராஸ் மாகாண தாழ்த்தப்பட்டவர்கள் 47 பேர் மட்டுமே. அவையும் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் படிப்புகளாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

கேரளாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் இடதுசாரி அரசு, 'கேரளக் கல்விச் சட்டம் 1957'என்ற பெயரில் ஒரு சட்ட முன்வரைவைக் கொண‌ர்ந்தது. அது சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்தது. கேரள சிறுபான்மை மக்கள் எதிர்த்தனர். இதனால் சட்டப் பேரவையில் நிறைவேறிய சட்ட முன்வரைவு ஆளுநரின் ஓப்புதலின்றி குடியரசுத் தலைவரின் கருத்துக்கு அனுப்பப்பட்டது. 'இச்சட்டம் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிரானதல்ல. சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு இப்பிரிவின் கீழ் செல்லத்தக்கதே'என்றது உச்ச நீதி மன்றம். இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டோம். மைய மாநில அரசுகள் ஏதாவது செய்தனவா? அத்தீர்ப்பின் நடைமுறை எதார்த்தம் என்ன? இப்புத்தகம் பதில் சொல்கிறது.
(http://udumalai.com)
அரசுக் கல்லூரிகளில் உள்ள மொத்த பணியிடங்களை விட அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் இரண்டு மடங்கு அதிகம். பொதுநலம் எனக் காரணம் காட்டி, மக்கள் வரிப்பணத்தில் இருந்துதான் மானியம் என்ற பெயரில் அரசிடம் இருந்து இக்கல்லூரிகள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோருக்கான ஊதியத்தை 100% பெறுகின்றன. பெரும்பான்மையான வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளைத் தம்வசம் வைத்திருக்கும் இக்கல்லூரிகள் சமூக நீதிப்படி நடந்துகொள்கின்றனவா? அரசமைப்புச் சட்டம் இட ஒதுக்கீட்டில் இருந்து சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கிறது. சிறுபான்மை மதங்கள் தத்தம் மதங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட நெடு நாளைய கோரிக்கைகளை அலட்சியப்படுத்தி வரும் அரசை அடிக்கடி கண்டிக்கின்றன. ஆனால் அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீட்டை அளிக்கின்றனவா? சிறுபான்மையினரின் கல்லூரிகளில் சிறுபான்மையினருக்கு மட்டுமே வேலை என்பது மதச் சார்பின்மைக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதில்லையா? 2000 முதல் 2008 வரையிலான புள்ளி விவரங்களை இப்புத்தகம் ஆதரமாகச் சொன்னாலும், அதன்பிறகு பெரிய மறும‌லர்ச்சி ஏதும் நம் நாட்டில் நடக்காத‌தாலும், அவ்வாதாரங்கள் இன்றும் கிட்டத்தட்ட பொருந்தும் எனக் கொள்ளலாம். பின்வரும் முப்பெரும் ஓரவஞ்சனைகளைச் சுட்டிக் காட்டுகிறது இப்புத்தகம்.
1. சிறுபான்மைக் கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் மறுக்கப்படும் தாழ்த்தப்பட்டோருக்கான வேலை வாய்ப்பு.
2. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்படும் இட ஒதுக்கீடு.
3. இக்கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கு மறுக்கப்படும் கல்வி.

தமிழகத்தில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் 160. இதில் மத மற்றும் மொழி சிறுபான்மையினரால் 62 கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. சிறுபான்மைக் கல்லூரிகள் இட ஒதுக்கீட்டின் படி 751 தாழ்த்தப்பட்ட, 49 பழங்குடியின விரிவுரையாளர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் 160ல் 14ல் மட்டுமே 61 தாழ்த்தப்பட்ட விரிவுரையாளர்கள் பணியில் உள்ளனர். மொத்தமுள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 15192 பணியிடங்களில் 82 பேர் இயலாதோர், 67 பேர் ஆதரவற்ற கைம்பெண்கள், பழங்குடியினர் ஒரே ஒருவர் மட்டுமே. அதுவும் கூட, வள்ளி என்ற பழங்குடியினப் பெண்ணைக் கட்டிய முருகனின் பழனியில், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கல்லூரியில் பெருக்கும் பணியில் இருப்பவர்.

அரசு உதவி பெறும் சிறுபான்மைக் கல்லூரிகள் இப்படி என்றால், அரசு உதவி பெறும் சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 1124 தாழ்த்தப்பட்ட, 62 பழங்குடியின விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட விரிவுரையாளர்கள் 49.5% இருக்கின்றனர்; மீதமுள்ள இடங்கள் மற்றவர்களால் நிரப்பப்பட்டுள்ளன. பழங்குடியினர் யாரும் இக்கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக இல்லை. இட ஒதுக்கீட்டை முழுமையாகப் பயன்படுத்தும் பாராட்டத் தகுந்த மூன்று கல்லூரிகளை ஆசிரியர் அடையாளம் காட்டுகிறார்.
1. திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி
2. பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி
3. சென்னை எஸ்.அய்.வி.இ.டி. கல்லூரி

160 கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 5326. இட ஒதுக்கீட்டின் படி தாழ்த்தப்பட்டவர்கள் பழங்குடியினர் முறையே சிறுபான்மைக் கல்லூரிகளில் 187 - 14 எனவும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 236 - 32 எனவும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிற சாதியினரைக் கொண்டே இப்பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. அதாவது எழுத்தர் மேலாளர் காசாளர் என்ற நிதி மற்றும் நிர்வாகம் சம்மந்தப்பட்ட பணியிடங்களில் தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடியினரும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு, துப்புரவுப் பணியாளர்களாகவும் அலுவலக உதவியாளர்களாகவும் அமர்த்தப்படும் வர்ணாசிரம தர்மத்தின் நவீனவடிவம். அரசு உதவி பெறும் 160 தனியார் கல்லூரிகளில் இன்றைக்கும் கூட ஒரு கல்லூரியிலும் ஒரு தாழ்த்தப்பட்டவர் முதல்வராக இல்லை.
(http://www.keetru.com)
சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் சிறுபான்மையினரின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை என்றால், அங்கும் சிறுபான்மையல்லாத சாதி இந்து மாணவர்களே அதிகம். பின், அரசு மற்றும் தனியார்க் கல்லூரிகள் செய்யும் அதே வேலையைச் செய்ய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் என்ற தனி அமைப்பு எதற்கு? பணம் சம்பாதிக்கவும், அதிகாரம் செய்யவும் தானோ? அரசு உதவி பெறும் கல்லூரிகளின் பெயர்கள், பெறும் மானியம், அங்கு நிரப்பப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பணியிடங்களின் எண்ணிக்கை, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை என ஆங்காங்கே அட்டவணைகளுடன் ஆதாரங்கள் தரும் இப்புத்தகம், காசு கொடுத்தால் கதவு திறக்கும் வணிகமாகிப் போன நம் கல்வி நிறுவனங்களின் முகத்திரை காட்டும் கண்ணாடி! இது போல் பள்ளிக் கூடங்களுக்கு ஒரு புத்தகம் வந்தால் இன்னும் நலமாய் இருக்கும்!

நன்கு படித்த ஓர் அம்பேத்காரால் 6 கோடி தாழ்த்தப்பட்டவர்கள் பயன்பெற்றனர். இன்னும் 25 கோடி பேர் அதன் பயனை அறுவடை செய்து கொண்டிருக்கின்றனர். இன்று படித்த தாழ்த்தப்பட்டவர்கள் பலகோடி பேர் இருந்தும் அதனால் எந்தப் பலனும் வந்துவிடவில்லை, பாமரனுக்கு! திருவிவிலியத்தில் இயேசு கிறித்து ஒரு கதை சொல்கிறார். ஓர் ஏழை பணக்காரனின் வீட்டு வாசலில் காத்திருந்து செத்துப் போகிறான். பணக்காரனும் சாகிறான். ஏழை சொர்க்கத்திற்கும் பணக்காரன் நரகத்திற்கும் போகிறார்கள். சொர்க்கத்தில் இருக்கும் ஏழையிடம் உதவி கேட்டு கதறுகிறான் பணக்காரன். உலகத்தில் இருக்கும்வரை எங்களிடம் கெஞ்சிக் கொண்டே இருங்கள்; எல்லாவற்றையும் மேலே போய் கணக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள் பணக்காரர்கள். அவர்களுக்குத் தெரியும் அக்கதை வெறுங்கதைதான் என்று. தாழ்த்தப்பட்டவர்களாகவும் பழங்குடியினராகவும் ஒதுக்கப்படும் ஏழைகளுக்குத் தான் அது இன்னும் புரியவில்லை. அக்கதைப்படி அவர்கள் இறுதித்தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். இறுதித்தீர்ப்பு என்று ஒன்று உண்டெனில், காலங்கடந்து வரும் அதுவும் ஒரு மறுக்கப்பட்ட நீதியே!

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

112. சாமிகளின் பிறப்பும் இறப்பும்

$
0
0
God is dead. God remains dead. And we have killed him.
- Friedrich Nietzsche
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : சாமிகளின் பிறப்பும் இறப்பும்
ஆசிரிய‌ர் : ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை
முதற்பதிப்பு : திசம்பர் 2011
விலை :  30 ரூபாய்
பக்கங்கள் : 64
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
பெயரிலேயே ஞானம் உடைய நான் ஞானம் அடைய‌ எனக்கும் மதம் சொல்லிக் கொடுத்தார்கள். ஆதாம் ஏவாள் தான் உலகின் முதல் ஆண் பெண். காயீன் ஆபேல் என்று இரண்டு மகன்கள். Both are boys. நில அபகரிப்புப் பிரச்சனையில் ஆபேலைக் காயீன் கொன்றுவிட‌, அதன் பிறகு... எனக்கொரு சந்தேகம். அதன் பிறகு அடுத்த தலைமுறை எப்படி உண்டாயிற்று? போர்த்துக்கீசிய மாலுமிகளுக்குக் காட்சி தந்த மேலைநாட்டு மாதாவிற்கு வேளாங்கண்ணி சேலை எப்படி கிடைத்தது? பூமியைக் கவர்ந்து போய் ஓர் அரக்கன் கடலுக்கு அடியில் ஒளித்து வைக்க, மீன் அவதாரம் எடுத்து சாமி பூமியைக் காக்கிறார். பூமிமேல் இருக்கும் கடலுக்குள்ளே பூமியை எப்படி ஒளித்து வைப்பது? 'கடவுளர் கதைகள்'என்றொரு சின்னப் புத்தகம். சாமி என்ற பெயரில் பெரியார் எழுதிய புத்தகம் என நினைக்கிறேன். கடவுளர்களின் புராணக் கதைகள் குறித்து எழும்பும் கேள்விகள்தான் அப்புத்தகம். குப்புறப் படுத்துத்தான் படிக்க வேண்டும். அவ்வளவும் கிளுகிளுப்பான கதைகள். மதமுடைய சாமிகள் எல்லாம் பணமுடைய சாமிகள் என்பதால், மதமற்ற ஏழைச்சாமிகள் பற்றி கொஞ்சம் படித்தறியலாம்.
(http://discoverybookpalace.com)
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். பேசாத பேச்செல்லாம், தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் போன்ற ஆசிரியரின் பிற புத்தகங்களை ஏற்கனவே படித்திருக்கிறேன்.  'சாமிகளின் பிறப்பும் இறப்பும்'. நாட்டுப்புற ஏழைத் தெய்வங்கள் மூலம் கடவுள் என்ற சித்தாந்தத்தைக் கேள்வி கேட்கும் 16 கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம். தமிழ்நாட்டில் முன்னர் கொற்றவை என்றொரு பெண்சாமி இருந்திருக்கிறது. ஊரெல்லாம் கோயில்கள் இருந்திருக்கின்றன. இப்போது அவளை யாரும் கும்பிடுவதில்லை. கோயில்களில் சரஸ்வதி இல்லை. சிவகாசியில் அச்சாகி வரும் படங்களில் மட்டுமே சரஸ்வதி வாழ்கிறாள். மூதேவி என்ற சாமியை வண்ணார் சமூகத்தைத் தவிர வேறு யாரும் வணங்குவதில்லை. இப்படி சாமிகளுக்கும் கூட‌ பிறப்பும் இறப்பும் இருப்பதையும், சாமிகளில் கூட சாதி இருப்பதையும் அறிமுகமாகச் சொல்லிவிட்டு, ஐகோர்ட் ராஜா - கவர்னர் பாடிகாட் போன்ற சில வித்தியாசமான சாமி பெயர்களைச் சொல்லிவிட்டு, ஏழைச்சாமிகளைப் பற்றி பேசுகின்றன அடுத்தடுத்த கட்டுரைகள். ஏழைச்சாமிகள் எல்லாம் கற்பனைக‌ள் அல்ல; மனித அவதாரம் எடுத்த கடவுளர்கள் அல்ல; கொஞ்சம் காலத்திற்கு முன் நம்மோடு வாழ்ந்த சக மனிதர்கள்.

அருந்ததிய சாதியில் பிறந்து அரசன் மகள் பொம்மியைக் காதலித்ததால், அன்று இரயில் தண்டவாளம் போன்ற‌ வசதிகள் இல்லாததால், கொலையா தற்கொலையா என்ற சந்தேகத்திற்கு இடமில்லாமல் வெளிப்படையாகவே கொல்லப்பட்ட‌ மதுரை வீரன் சாமியைப் பற்றிப் பேசுகிறது ஒரு கட்டுரை. ஒரு தாழ்த்தப்பட்டவனைச் சாமியாக்கி ஆதிக்க வர்க்கத்திற்கு எதிர்ப்பு காட்டிய எளிய மக்களின் கதை அது. அதே போல் தாழ்த்தப்பட்ட காதலனை ஆதிக்க வெறியர்களுக்குப் பலி கொடுத்து, முத்தாலம்மன் என்ற பெயரில் கம்பம் பகுதியில் வணங்கப்படும் சாமியைப் பற்றி சொல்கிறது ஒரு கட்டுரை. தனக்காக உயிர்விட்ட கணவனின் சிதையில் வீழ்ந்து மாய்த்துக் கொண்ட மாலையம்மன் மற்றும் மலட்டம்மன், ஒரு பழிச்சொல்லால் செங்கல் சூளைக்குள் மாய்த்துக் கொண்ட சீலைக்காரி என பரிதவித்துச் செத்த சக மனிதர்களைச் சாமியாக்கி, பரிகாரம் என்று மந்திரம் ஓதி யாகங்கள் செய்ய வசதி இல்லாத எளிய மக்களின் கதைகள்.

திருமணம் ஆகாத இளம்பெண் ஒரு குடும்பத்தில் இறந்து போனால் சாமியாக்கி வழிபடும் வழக்கம் பொதுவாக உண்டு. எங்கள் வீட்டில் கூட, நான் பார்த்திராத அத்தை ஒருத்தியின் நினைவு நாளில் வருடாவருடம் சாமி கும்பிடும் வழக்கம் உண்டு. இப்படி குடும்பசாமி குலசாமிகள் பற்றி ஒரு கட்டுரை. ஒரு நாட்டுப்புறச் சாமியைக் கும்பிடும் மக்கள் வேறு ஊருக்கு நிரந்தரமாகக் குடி போகையில் கைப்பிடி மண்ணெடுத்துப் போய் புது ஊரில் அதே சாமியைப் புதிதாகக் கட்டும் பிடிமண் சாமிகள், மின்னல்வெட்டி செத்துப் போன இடத்தில் கல்நட்டு சாமியாக்கி விட்டு கும்பிடாமலேயே விடப்படும் 'கும்பிடாத சாமி'கள் பற்றியும் ஆசிரியர் குறிப்பிடத் தவறவில்லை. ஒருநாள் முதல்வர் போல் ஒருநாள் சாமி, மனிதரிடம் அடிவாங்கும் சாமி, ஐஸ் வாங்க ஊர்விட்டு ஊர் போன ஐஸ் காளியம்மன், திருவில்லிப்புத்தூர் பகுதியில் கையில் பிடித்த குடையுடனேயே இறந்து போனதால் கொடைகாத்தான் சாமி என சில வித்தியாசமான சாமிகளையும் சொல்கிறார் ஆசிரியர். பெரியார் சொன்னது போல், மதத்தையும் தூக்கிச் சாப்பிட்டு விடும் சாதியின் சாட்சியாக இருக்கும் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் 'டவுசர் சர்ச்'பற்றிய கட்டுரையை மிகவும் ரசித்தேன்.

தஞ்சை பெரிய ஆஸ்பத்திரிக்குள் இருக்கும் இஸ்மாயில் ஷா பள்ளிவாசல் போன்ற மத நல்லிணக்கம் சொல்லும் இடம் ஒன்று, எனக்கு மிக அருகில் இருந்தும் நான் கேள்விப்படாதது ஆச்சரியமே. அந்த தர்காவில் இஸ்லாமிய பக்கீர் ஒருவருக்கு அசைவமும், அவரால் காப்பாற்றப்பட்ட பிராமணப் பெண்ணுக்குச் சைவமும் படைத்து வழிபடுவார்களாம்! கண்டிப்பாக பார்க்க வேண்டும். இது என் மதம், அது உன் மதம், உன் சாமி பேரை நான் வைக்க மாட்டேன் என்று வம்பு பண்ணாமல் சில‌ ஏழைச் சாமிகள் பெயரை மத வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் வைத்துக் கொள்வதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். உமறுத்தேவர், உமறுக்கோனார், நாகூர்கனி நாடார், நாகூர்கனித் தேவர், பெரிய ரொண்டோ, சிறிய ரொண்டோ போன்ற பெயர்களைச் சில உதாரணங்களாகவும் மேற்கோள் காட்டுகிறார். எளிய மனிதர்களுக்கு மதவாதம் இல்லை!

சாமிகளை எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மனிதன் படைத்துக் கொண்டான் என்று கற்பனைக் கதை சொல்கின்றன இரு கட்டுரைகள். ஆரம்பகால மதங்களில் இரத்தப் பலி கொடுப்பதும், அதையும் மலையுச்சியில் கொடுப்பதற்குமான காரணங்களாக ஆசிரியர் சொல்பவை அருமை. பணக்கார மற்றும் ஏழைச் சாமிகளுக்கு இடையே உள்ள 7 வேறுபாடுகளைப் பட்டியலிடுகிறது ஒரு கட்டுரை. மதம் + மடம் + நூல் உண்டு - கிடையாது. பணக்காரச் சாமிகள் மக்களின் சாதாரணச் சாப்பாட்டைச் சாப்பிடுவதில்லை. சர்ச் / மசூதியில் ஆடு வெட்ட முடியாது - தர்காவில் வெட்டலாம். மதச்சாமிகளைக் கும்பிட இடையில் புரோகிதர் / பாதிரியார் / முல்லா தேவை. ஏழைச் சாமிகளுக்குப் பூசை நாளில் அந்த நேரத்திற்கு மட்டும் அய்யர் அல்லாத பூசாரி இருப்பார். ஏழைச்சாமிகள் அடிக்கடி மனித உடலில் இறங்கி வந்து சாமியாட்டம் ஆடுவதுண்டு. ஏழைச்சாமிகளுக்குக் கற்சிலைகள் கிடையாது. ஏழைச்சாமிகளை வணங்கும் ஏழை மக்கள், பணக்காரச் சாமிகளையும் வணங்குவதுண்டு. ஆனால் பணக்காரச் சாமியை வழிபடுபவர்கள் எவரும் சுடலைமாட அய்யங்கார், காளியப்ப அய்யர், முனியப்ப ஆச்சாரியார் என்று பெயர் வைப்பதில்லை. ஒரு காலத்தில் ஏழையாய் இருந்து திடீர் பணக்காரர் ஆகிவிடும் ஆதிபராசக்தி போன்ற சாமிகளும் சரித்திரத்தில் உண்டு.

இப்படி மனிதனே கடவுளையும் படைத்துவிட்டு அதற்குப் பயப்படுபவனாகவும் மாறிப் போய், கருணை வடிவமாகவும், இதயமில்லா இவ்வுலகில் இதயமாகவும் கற்பனை செய்து கொண்டு வாழும் மனித சமூகத்தைப் பற்றி பேசும் கட்டுரைகளை 'கடவுள் இல்லை; இல்லவே இல்லை; கடவுளை நம்புபவன் முட்டாள்; கடவுளை நம்பச்சொல்பவன் அயோக்கியன்'என  பெரியாரின் வார்த்தைகளுடன் முடிக்கிறார் ஆசிரியர். கண்டிப்பாக படித்து சிந்திக்க வேண்டிய புத்தகம்.

தொடர்புடைய எங்களின் பிற பதிவுகள்:
1. தம்பியின் குறுஞ்சாமிகளின் கதைகள்
2. அண்ணனின் ஆதிசேசன் படுக்கை
3. அண்ணனின் துருத்தி

'கடவுள் அல்லது கடவுள்கள் படைப்புகளில் சிறந்தது எது?
மனிதன்
யார் சொன்னது?
மனிதன்'
என்றார் ஓர் அறிஞர்.
'மனிதன் அல்லது மனிதர்கள் படைப்புகளில் சிறந்தது எது?
கடவுள்
யார் சொன்னது?
கடவுள்'
என முடிக்கிறேன் நான்.

அனுபந்தம்:
----------------
புத்தகத்திற்கு அப்பால்,

1. எனக்குப் பிடித்த ஏழைச்சாமி, வனத்துச் சின்னப்பர். விவசாய கத்தோலிக்கக் கிறித்தவர்களின் சாமி. பூச்சிப் பட்டைகளில் இருந்து காப்பவர் என்ற நம்பிக்கை. ஆடிமாத புதன் கிழமைகளில் விவசாய நிலங்களில் கோழி வெட்டிச் சமைத்துச் சாப்பிடுவார்கள். வருமானம் வராத சாமி என்பதால், எனக்குத் தெரிந்த வரையில் இன்னும் எந்தப் பாதிரியாரும் இவரை மதத்தில் சேர்க்கவில்லை. இப்போது அவருக்கு வெள்ளைத்தோல் உருவம் கொடுத்து கண்ணாடி போட்டு கடைகளில் விற்கிறார்கள். வீட்டிலேயே சமைக்கிறார்கள். இச்சாமியைத் திரும்பவும் விவசாய நிலங்களுக்குக் கொண்டு போய் காப்பாற்ற வேண்டும்.

2. ஒரிசாவில் பூரி ஜெகன்நாதர் என்ற பணக்கார சாமி இருக்கிறது. இருமுறை அங்கு சென்றிருக்கிறேன். கோயிலுக்குள் சென்றதில்லை. தேர் மிகப் பிரபலம். மூன்று உருவங்களாகக் காட்சியளிக்கும் அச்சாமிகளுக்கு, 'நான் கடவுள்'திரைப்படத்து மாங்காட்டுச் சாமி மாதிரி கைகால்கள் கிடையாது. ஏன் அப்படி என்று தேடிக் கதை படியுங்கள். தலையும் முண்டமும் சேர்த்து ஒரே உடலாய் இருக்கும் சாமிகளைக் கும்பிடும் மரபு பற்றியும் தேடிப் படியுங்கள்.

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

Viewing all 60 articles
Browse latest View live