Quantcast
Channel: புத்தகம்
Viewing all 60 articles
Browse latest View live

95. பீக்கதைகள்

$
0
0
திண்ணியத்தில்
தின்ன வைத்தார்கள்
மலத்தை.
குமட்டுகிறது.
ஒருவரிகூட
எழுதவில்லை நான்.
- யுகபாரதி (தெப்பக்கட்டை நூலிலிருந்து)

I may not be born again; but if it happens, I will like to be born into a family of scavengers; so that I may relieve them of the inhuman, unhealthy and hateful practice of carrying night soil.
- Mohandas Karamchand Gandhi
------------------------------------------------------------
புத்தகம் : பீக்கதைகள்
ஆசிரிய‌ர் : பெருமாள்முருகன் (http://www.perumalmurugan.com/)
வெளியீடு : அடையாளம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2004
விலை : 60 ரூபாய்
பக்கங்கள் : 136 (தோராயமாக 40 வரிகள் / பக்கம்)
------------------------------------------------------------
அம்மா தாய்வீடு வந்து தலைப்பிரசவ சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தவுடன் என்னைத் தூக்கிக் கொண்டு புகுந்த வீடு அழைத்துப் போகப்பட்ட அன்று தாய்வீடு தூக்கம் தொலைத்த கதையை என் அம்மாச்சி இப்படி சொல்வாள்: "இத்தன நாளு ஏன் பேரப்புள்ள இருந்த வீடு சட்டுன்னு வெறுச்சோடி போகவும் நெஞ்சே வெடிச்சுரும் போல இருந்துச்சு. ஒரு பீத்துணியக் கூட விட்டுட்டுப் போகாம இப்புடி புள்ளயத் தூக்கிட்டு போய்ட்டாளே". பீத்துணியிலும் பாசம் கண்ட ஒரு தலைமுறைக்கு முதல் பேரக் குழந்தையாக நான் வலம் வந்த அக்கதையை இன்றைக்கு எழுத முடிந்த என்னால், இதற்கு முன்னால் நாலு பேருக்கு முன்னால் சொல்ல முடிந்ததில்லை. காரணம் 'பீ' என்ற சொல். இந்தச் சங்கடம் எனக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் உண்டு. பெண்ணின் கருவில் இருந்து பிறக்கும் ஒவ்வொரு உயிரும் தன் தாயுடன் வைத்திருக்கும் ஆரம்பகாலக் கதைகள் எல்லாம் வயிற்றுப்போக்கு சிறுநீர் மலம் சளி போன்ற கருப் பொருள்களைக் கொண்டவையே. ச்ச்சீ. அசிங்கம். அசுத்தம். அநாகரீகம். அப்படிச் சொல்லக் கூடாது. அதை அப்படி மாற்றிச் சொல். அவையல்கிளவி இடக்கரடக்கல் குஃறொடரன்மொழி மங்கலவழக்கு என்று இலக்கணம் வகுத்துக் கொடுக்கிறது சமூகம். அவற்றை அப்படியே பேசுபவனுக்கு நாகரீகமற்றவன் என்று பெயரிடுகிறது. பீ என்ற சொல் இல்லாமல் என் முதல் பத்திக் கதையை எப்படி சொல்வது? ஒரே கட்டிலில் புரண்டு கூட படுக்க முடியாமல் பக்கவாதத்தில் ஒரு பக்க உடல் அழுகி புழுப்பிடித்து இறந்து போன கதையைப் பீ, மூத்திரம் என்ற சொற்கள் இல்லாமல் எப்படி சொல்வது? ஓரங்கட்டப்படுபவை சொற்கள் மட்டுமல்ல; அவற்றின் பின்னே மனிதகுலம் வைத்திருக்கும் கதைகளும்தாம். அவற்றை வெளிக்கொணர முயலும் வெகுசில படைப்பாளிகளில் ஒருவர் பெருமாள்முருகன். 'கெட்ட வார்த்தை பேசுவோம்' என்ற அவரின் முந்தைய புத்தகம் கொடுத்த தெளிவான சிந்தனைதான், இப்புத்தகம் படிக்கவும் அதைப் பற்றி எழுதவும் செய்யும் நாகரீகத்தைத் தந்ததெனக் கூறுவேன்.

(www.nhm.in)

பீக்கதைகள். பீயும் பீ சார்ந்தனவும் உரிப்பொருள்களாக அமைந்த 14 சிறுகதைகளின் தொகுப்பு. பீ, மலம், ஆய், கக்கூஸ், கழிவறை, மல்லு, பேழ்றது, வெளிக்கி, எருவி, நரகல், கக்கா, பீக்காளான் போன்ற வார்த்தைகள் விரவிக் கிடக்கும் கதைகள். எல்லாக் கதைகளிலும் பீ தான் உரிப்பொருள் என்று முன்னரே தெரிந்து போனாலும், சலிப்பில்லாமல் வாசிக்கச் செய்யும் எழுத்து நடையும் அதன் மூலம் வாசகனின் பார்வையைத் தன் கரு நோக்கி இழுத்துச் செல்லும் வித்தியாசமான கதைக்களங்களும் இக்கதைகளின் மாபெரும் பலம். கிராமங்களில் வாய்வழியாக உலாவரும் பீயை மையமாக‌க் கொண்ட கதைகள் அல்லாமல், சமகாலச் சூழலில் பீயை மையமாக்கி இருப்பதும் அருமை.

ஒரு சின்னப் பையனின் இயற்கை உபாதையை இச்சமூகம் எவ்வாறு அலட்ச்சியப் படுத்துகிறது, என்கிறது ஒரு கதை. தேநீர் குடித்தால் தான் வெளிக்கிப் போகும் என்று நம்பும் பலரில், வீம்புக்காக‌ தேநீர் குடிக்காமல் அடக்கி அல்லல்படும் ஒருவனின் கதை. கிராமத்தில் முதலில் கழிவறை கட்டி அதைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்கும் ஒரு கிழவி, தன் கிணத்துத் தண்ணீரை யாரும் பயன்படுத்தி விடக் கூடாதென மலம் கலக்கும் ஒருவன், பீயள்ளுபவன், கட்டணக் கழிவறைகளில் சீக்கிரம் வெளிவரச் சொல்லி கதவு தட்டுபவனாக வேலை பார்ப்பவன், புனிதமாக மதிக்கப்படும் சாமிக் கிணற்றில் பேண்டவன் போன்றவர்கள் தான் கதைகளின் பாத்திரங்கள்.

மிகவும் பரிட்சயமான வழக்கமான சில விசயங்களில் பீயை உரிப்பொருளாகப் புகுத்தி வித்தியாசமான‌ பார்வையில் கதை சொல்லும் விதம் அருமை. உதாரணமாக, நகரத்து நெருக்கடியைக் கதவில்லாக் கழிவறைகள் மூலம் திறந்து காட்டும் கதை. கிராமத்துக் காடுகரைகளில் வெளிக்கிப் போய்க் கொண்டிருந்த ஒருத்தி நகரத்திற்குக் கல்யாணம் கட்டி வந்தபின், கழிவறை என்ற வினோதத்துடன் பகல் பொழுதைப் பயந்து பயந்து தனிமையில் கழிக்கும் ஒரு கதை. அக்கதையில் வரும் 'இரு உள்ளங்கைகளையும் விரித்துக் கொண்டு மண்டை ஓட்டு வடிவம் எடுத்திருந்தது பீவாங்கி' என்ற வரி அழகு. அக்கதைக்கு எதிர்மாறாக, கழிவறைகளில் வெளிக்கிப் போய்க் கொண்டிருந்த ஒருத்தி, கிராமத்திற்குக் கல்யாணம் கட்டி வந்தபின், காடுகரைகளில் ஒதுங்கப் பணிக்கப்படும் துயரம் சொல்கிறது இன்னொரு கதை. கம்யூனிஸம், மாய எதார்த்தம், சாமி, சாதி என்று பல தளங்களில் பீயைத் திணித்துப் பார்க்கின்றன கதைகள்.

'பொன்னாள எனக்குத்தான் மொதல்ல கட்டிக் குடுக்குறதா இருந்தாங்க. கிழவியைக் கட்டியிருந்தால் வயதான காலத்தில் அங்கே இங்கே அலையாமல் இருந்த இடத்திலேயே பேண்டு கொள்ளலாம்' என்று ஊரில் கழிவறை வைத்திருக்கும் ஒரே கிழவியைப் பார்த்து ஒரு கிழவன் ஏங்கும் கதை ஒன்று. வாக்கியங்களுடனேயே தொடர்ந்து வரும் எளிய நகைச்சுவையும், சமூகப் பார்வையும் எல்லாக் கதைகளும் கொண்டிருக்கின்றன. எந்தக் கதையிலும் பீ வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டதாக நான் உணரவில்லை. பீயை வைத்து இவ்வளவு சமூகப் பிரச்ச‌னைகளை அலச முடியும், மாய எதார்த்த முறையில் அருமையான‌ கதை சொல்லக்கூட பீயைப் பயன்படுத்தலாம் - நிரூபித்துக் காட்டுகிறது இப்புத்தகம். சந்தனச் சோப்பு என்ற சிறுகதையை ஆசிரியரின் அனுமதியுடன் யாராவது குறும்படமாக எடுக்கலாம் என்று வலைப்பதிவர் ஒருவர் பரிந்துரை சொன்னார். நான் வழிமொழிகிறேன்.

நான் ரசித்தவை:
பிடித்த கதைகள்: கடைசி இருக்கை, சந்தனச் சோப்பு, பீ, புகை உருவங்கள்
பிடித்த பாத்திரங்கள்: கடைசி இருக்கை, சந்தனச் சோப்பு என்ற கதைகளில் வரும் சிறுவர்கள்

திருமலை நாயக்கருக்கு எதிராகப் புரட்சி செய்த ஒருவனைக் கழுதை மேல் அமர வைத்து, மலக்கரைசல் கொண்ட பானை ஒன்றை அவன் தலை மேல் வைத்து, முகத்தில் சிந்தி வழியும் கழிவுடன் மதுரை நகரில் வலம் வரச் செய்ததாக‌ச் சரித்திரக் குறிப்பு உண்டு. தவறு அல்லது எதிர்ப்பு செய்யும் கூலி விவசாயிகளைப் பண்ணையார்கள் மலம் மூலம் தண்டிக்கும் வழக்கம் சுதந்திரத்திற்கு முன் காவிரி டெல்டா பகுதிகளில் இருந்திருக்கிறது. 2002ல் திண்‍‍‍ணியம், 2003ல் ஊரப்பனூர், 2010ல் மெய்க்கோவில்பட்டி, 2012ல் திருவக்கரை என்று மனிதன் கழிவை மனிதனையே உண்ண வைக்கும் கொடுமைகளை நான் வாழும் காலத்திலேயே கேள்விப்பட்டு இருக்கிறேன்.

பீ. அசிங்கத்தின் அடையாளம். அவமானச் சின்னம். அதனால் தான் ஆதிக்கவெறியின் அடக்குமுறையின் உச்சக்கட்ட ஆயுதமாகப் பீ பய‌ன்படுத்தப் படுகிறது. பீ என்பது அப்படிப்பட்ட ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் வரை, அதற்குச் சமூகம் தந்திருக்கும் பிம்பமும் நிலைத்திருக்கும். அவையெல்லாம் இல்லாமல் போகச் செய்யும் சாத்தியமில்லாத ஒரு சமூகத்தில் நாம் இப்போது இருக்கிறோம். அப்படியொரு சமூகம் சாத்தியப்படும் வரை பீக்கதைகள் போன்ற படைப்புகள் கண்டிப்பாக வரவேற்கப் படவேண்டும்.

இப்புத்தகம் தன்னைக் 'கீழிறக்கி' விடுமோ என நண்பர்கள் அஞ்சியதாக‌ ஆசிரியர் கூறுகிறார். இப்பதிவு என்னைக் 'கீழிறக்கி' விட்டதா என்ன? இரண்டு பேருக்கும் பதில் நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

96. சோளகர் தொட்டி

$
0
0
Power tends to corrupt and absolute power corrupts absolutely.
- Lord Acton

--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : சோளகர் தொட்டி
ஆசிரிய‌ர் : ச‌.பாலமுருகன்
வெளியீடு : எதிர் வெளியீடு (http://ethirveliyedu.in/)
முதற்பதிப்பு : டிசம்பர் 2010 (முதல் 5 பதிப்புகள் வனம் வெளியீடு (2004-2006); 6ம் பதிப்பு விடியல்)
விலை :  120 ரூபாய்
பக்கங்கள் : 240 (தோராயமாக 39 வரிகள் / பக்கம்)
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------

சோளகர் என்றும் சோளவர் என்றும் அழைக்கப்படும் மலையின மக்கள் தமிழகத்தின் வட எல்லைப் பகுதியில் உள்ள கர்நாடக எல்லை ஓரத்தில் அதிகம் வாழ்கின்றனர். வேட்டையாடுவதற்கு ஏற்ற அடர்ந்த காடுகள், பள்ளத்தாக்குகள் போன்ற இடங்களில் இவர்தம் கூரைக் குடிசைக் குடியிருப்புகள் உள்ளன. காட்டு இலாகாவினரின் கட்டுப்பாடுகள் இவர்களது பாரம்பரிய வேட்டைத் தொழிலுக்கு இப்போது வாய்ப்பளிக்கவில்லை. காட்டு மரங்களை வெட்டுவதற்கும் தேன் எடுப்பதற்கும் வனத்திற்குள் வழி காட்டுவதற்கும் காட்டு இலாகாவினர் சோளகர்களை அவ்வப்போது பயன்படுத்திக் கொள்கின்றனர். சோளகர்கள் வாழும் பகுதிகள் பெரும்பாலும் லிங்காயத்தார் எனச் சொல்லும் ஒருவகை மலையின மக்கள் வாழும் பகுதிகளை ஒட்டி அமைகின்றன. இவர்களின் தொழில்களுக்கு லிங்காயத்தார்களே வாய்ப்பளிக்கும் வசதி உள்ளவர்களாக இருப்பதால் பெரும்பாலும் சோளகர்களின் குடியிருப்புகள் இவ்வாறு அமைகின்றன. சொந்தமாக விளைநிலங்களோ உழவு மாடுகளோ இல்லாத சோளகர்கள் கூலி விவசாயிகளாக லிங்காயத்தாரிடம் வேலை செய்கின்றனர்.

பெங்களூர் பகுதிகளில் இருந்து ஒரு காலத்தில் போருக்குப் பயந்து ஓடி வந்தவர்களாகத் தங்களைக் கூறிக் கொள்ளும் லிங்காயத்தார்கள், வேறு இனத்தாரைத் தங்கள் வீடுகளில் அனுமதிப்பதில்லை; வெளியிடங்களுக்குப் போகும்போது வேறெங்கும் தண்ணீர்கூட வாங்கிக் குடிப்பதில்லை. சைவ உணவு உண்ணும் லிங்காயத்தார்கள், அசைவ உணவு உண்ணும் சோளகர்களைத் தீண்டத் தகாதவர்களாகவே நடத்துகின்றனர். லிங்காயத்தார்களின் கால்நடைகள் நோய்வாய்ப் ப‌ட்டாலோ, இறந்து பட்டாலோ அவற்றைச் சோளகர்கள் எடுத்துச் செல்கிறார்கள். 1994ல் நியூ சென்சுரி புக் ஹவுஸ் வெளியீடான டாக்டர் கே.ஏ.குணசேகரன் அவர்களால் எழுதப்பட்ட 'தமிழ‌க மலையின மக்கள்' என்ற புத்தகம் சோளகர்களைப் பற்றி சொல்லும் சில குறிப்புகள் இவை.
 

ச.பாலமுருகன் அவர்களின் சோளகர் தொட்டி. சோளகர்களின் வசிப்பிடத்திற்குத் தொட்டி என்று பொருள். தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் வன எல்லையில் இருக்கும் கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட குடிசைகளைக் கொண்ட ஒரு சோளகர் தொட்டிதான் பாலமுருகன் அவர்களின் களம். மொத்த புதினத்தைச் சரிபாதியாக பிரித்து இரண்டு பாக‌ங்களில் கதை சொல்கிறார். அறுவடைக்குப் பின் காய வைத்து எடுக்கப்பட்ட ராகி தானியக் கதிர்கள் வாசனையை நுகர்ந்து தொட்டிக்குள் நுழையும் பெரிய கொம்பன் யானையை விரட்டுவதற்காக அந்த இரவில் தூக்கம் தொலைக்கும் சோளகர்களை அறிமுகப்படுத்தி ஆரம்பமாகிறது புதினம். தலைவனை விட்டுக் கொடுக்காத கூட்டு வாழ்க்கை, திருமண முறை, வழிபாட்டு முறைகள் என விரிகின்றது புதினம். பூர்வீகத் தொழிலான வேட்டையைச் சுதந்திர நாட்டின் சட்டங்கள் தடுப்பதையும், தப்பித் தவறி மாட்டிக் கொள்பவர்கள் காவல் துறையிடமும் உயர் சாதியிடமும் அப்பாவித்தனமாக ஏமாற்றப் படுவதையும், ஒரு குடும்பம் பட்ட கடனை மொத்த தொட்டியும் ஏற்றுக் கொண்டு உழைப்பதையும் பதிவு செய்கிறார்.

பீனாச்சியின் நாதம், தப்பையின் தாளம், பாட்டுப் பாடிக் கொண்டே இரவு முழுதும் கண் விழித்து விலங்குகளை விரட்டுகிறார்கள். கொத்தல்லி கோல்காரன் பட்டக்காரன் என்ற தொட்டியின் முக்கியஸ்தர்களுக்குக் கட்டுப்படுகிறார்கள். மணிராசன் கோவிலில் மூதாதையர்களின் ஆவிகளுட‌ன் பேசுகிறார்கள். சோளகர் - லிங்காயத்தார் உறவை ஒரு புராணக் கதை மூலம் விளக்குகிறார். தேனெடுத்தல் வேட்டையாடல் என்ற தங்கள் பூர்வீகத் தொழிலைத் தடை செய்யும் அரசு, அதே வேலைகளுக்காக அரசால் சோளகர்கள் பயன்படுத்தப் படுவதையும் பதிவு செய்கிறார். சோளகர் தொட்டிக்குள் நம்மையும் ஒருவராக‌ உணர வைக்கும் புதினத்தின் ஆரம்பப் பகுதிகளை வைகை எக்ஸ்ப்ரஸில் படித்தேன். அட்டைப் படத்தைப் பார்த்து முகம் சுழித்த சகபயணிகளுடன் திருச்சியில் இருந்து எழும்பூர் வருவதற்குள் 70 பக்கங்களுக்கு மேல் படித்திருந்தேன். ஆனால் புதினம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பது கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தவுடன் அவ்வளவு எளிதாகப் பக்கங்களைக் கடக்க முடியவில்லை. கடைசி 40 பக்கங்களைத் தனிமையில் படித்து முடித்த இரவில் கனத்த மனத்துடனும் தலைவலியுடனும் நான் தூங்கத் தாமதமானது.

சந்தனக்கட்டை வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக கர்நாடக அதிரடிப் படைகளும் வனத்துறைகளும் காவல்துறைகளும் பழங்குடியின மக்கள் மேல் நடத்திய வன்கொடுமைகளே ச.பாலமுருகனின் புதினக்கரு. வனத்துக்கு வெளியே மக்களைத் தலை குனிந்து வணங்கச் செய்யும் வெள்ளைக்காரத் துரைகள், வனத்திற்குள் வந்தால் சோளகனின் தோளில் சமமாகக் கை போட்டு வேட்டைக்குப் போகும் காலமும் இருந்தது. அப்படிப்பட்ட சோளகர்கள் தங்களுக்குச் சம்மந்தமே இல்லாத வீரப்பன் என்ற மனிதனுக்காக‌ வனத்துடனான தங்கள் பாரம்பரிய தொடர்பிலிருந்து திடீரென துண்டிக்கப் படுகிறார்கள். சோளகர்கள் வீரப்பனுக்கு உதவி செய்பவர்கள் என அதிரடிப் படை கேம்ப்களில் அடைக்கப்பட்டு மாதக்கணக்கில் சித்ரவதைகளுக்குப் பிறகு, ஆண்கள் பெரும்பாலும் புதுத்துணி அணிவிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப் படுகிறார்கள். உடல் பசி எடுக்கும் போதெல்லாம் சோளகத்திகள் குதறப்படுகிறார்கள். பழங்குடியினருக்குப் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் வீரப்பனுக்குப் பிறந்தவை எனவும், பெண்கள் எல்லாரும் வேசிகள் எனவும் வசைக்கப் படுகிறார்கள். கணவனே தன் சொந்த மனைவியைத் தொடாமல் பயபக்தியுடன் இருக்கும் மாதேஸ்வரன் மலையில்,.....

ஒரு குடும்பம் எப்படிப்பட்டது என்பது அது தம் பெண்களை நடத்தும் விதத்தில் இருக்கிறது. ஒரு சமூகம் எப்படிப்பட்டது என்பது அது தம் சிறுபான்மையினரை நடத்தும் விதத்தில் இருக்கிறது. எல்லாக் காலங்களிலும் எல்லா அரசுகளும் எல்லா இடங்களிலும் சிலருக்குச் சில சமயங்களில் கட்டுப்பாடற்ற அதிகாரங்களைக் கொடுக்கின்றன. அவ்வதிகார வர்க்கம் சிறுபான்மை மக்கள் மேல், குறிப்பாக பெண்கள் மேல் வன்முறை செலுத்தி அவர்கள் வாழ்வைக் கேள்விக் குறியாக்கிவிட்டு பதக்கங்களுடனும் பரிசுகளுடனும் வாழப் போய்விடும் கொடுமையை ஆவணப்படுத்தியதில் ச.பாலமுருகன் தனித்து நிற்கிறார்.

19 ஆண்டுகளுக்குப் பிறகு வாச்சாத்தி வன்கொடுமைகளுக்குத் தீர்ப்பு வந்ததால் ஏதோ வாச்சாத்தி மட்டும்தான் என நினைக்க வேண்டாமென சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். கடல் தாண்டி நம் காலடியில் நடப்பதாக நாம் சொல்லும் கொடுமைகள் எல்லாம், நம் தலைக்கு மேலேயே நடப்பதைச் சான்று சொல்லும் இந்தச் சோளகர் தொட்டி கண்டிப்பாகப் படிக்கப்பட வேண்டிய புதினம். முழுக்க முழுக்க பழங்குடியினர் பற்றிய புதினம் வேறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பைபிள் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும், சுத்தத் தமிழில் இருக்கும் உரையாடல்களைத் தவிர வேறேதும் குறைகளில்லை.

அனுபந்தம்:
----------
இந்த ஜீலையில் சென்னையில் நடந்த 'ஐந்திணை சுற்றுச்சூழல் விழா' என்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்த சண்முகம் (தலைவர் என நினைக்கிறேன்) அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சில துளிகள்:

1. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தரும் அடிப்படை உரிமையான பேச்சுரிமை கூட மலைவாழ் மக்களுக்கு நிராகரிக்கப் படுகிறது. ஒரு ஃபாரெஸ்ட் ஆபிஸர் முன் அவர்கள் பேசினால், 'எங்க முன்னாடி பேசுற அளவுக்குத் தைரியம் வந்துடுச்சா?' என்ற பதில் கிடைக்கும்.

2. இன்று மலையில் பூர்வ குடிகள் எல்லாம் விரட்டி அடிக்கப்பட்டு, மலை மொட்டையடிக்கப் படிகிறது. அவர்கள் இருந்த இடத்தில் ரிசார்ட்டுகளும் சுற்றுலா மாளிகைளும் பணப்பயிர்த் தோட்டங்களும் இருக்கின்றன. உதகமண்டலம் குன்னூர் கொடைக்கானல் போன்ற இடங்களில் மலைவாழ் மக்களிடம் இப்போது துளி நிலம் கூட இல்லை. எல்லாம் பிடுங்கப்பட்டுவிட்டன. நீலகிரி ஏலகிரி ஏற்காடு போன்ற மலைகள் இப்போது திராவிடக் கட்சிக்காரர்களுக்குச் சொந்தம்.

3. உப்பு உடை இந்த இரண்டிற்காக மட்டுமே மலை இறங்கித் தரைக்கு வந்து கொண்டிருந்த‌ மலைவாழ் மக்கள், எல்லாவற்றிற்கும் தரையைச் சார்ந்திருக்கச் செய்யும் ஓர் அடிமை நிலையை உண்டாக்கியதுதான் சுதந்திரம் மற்றும் அறிவியலின் எச்சம்..

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

97. S M S எம்டன் 22-09-1914

$
0
0

'இதோ பார் கண்ணா... இதுதான் சமுத்திரமாம்... இங்குதான் எம்டன் வந்தானாம்... பிரிட்டிஷ்காரன் மேல குண்டு போட்டானாம். அவன் மறுபடி வரதுக்குள்ள சோறு சாப்பிட்டுடுவியாம்... செல்லம்...'
- சுத‌ந்திர‌ப் போராட்ட‌க் கால‌ க‌ருத்துச் சித்திர‌ம்

--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : S M S எம்டன் 22-09-1914 (வரலாற்றுப் புதினம்)
ஆசிரிய‌ர் : திவாகர்
வெளியீடு : பழனியப்பா பிரதர்ஸ், பீட்டர்ஸ் சாலை, சென்னை
முதற்பதிப்பு : 2008
விலை : 200 ரூபாய்
பக்கங்கள் : 374 (தோராயமாக 37 வரிகள் / பக்கம்)
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------

இரண்டாம் உலகப் போருக்கு முன்புவரை 'சூரியன் மறையாத நாடு' என்று பெருமை பிரிட்டனுக்கு உண்டு. அந்த அளவிற்கு அது தனது காலனிகளை உலகம் முழுவதும் பரப்பி வைத்திருந்தது. இன்றைக்கு இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் என்று அழைக்கப்படும் நிலப்பரப்பைத் தங்கள் காலனிகளின் ராணி என்று பெருமைப்பட்டுக் கொண்டார்கள். பிரிட்டிஷாரின் ஏரி என்று சொல்லப்படும் அளவிற்கு இந்தியப் பெருங்கடலில் அவர்களின் ஆதிக்கம் மட்டுமே இருந்தது. அந்த அளவிற்குக் கம்பீரமாக வலம் வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த மெட்ராஸ் மாநகரின் மீது இரண்டாம் உலக‌ப் போர் காலத்தில் ஜப்பான் குண்டு வீசப் போவதாக மக்களிடையே வதந்தி பரவியதை மதராசபட்டணம் அந்தநாள் போன்ற திரைப்படங்களில் பார்த்திருப்பீங்கள். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னரே அப்படி ஒன்று மெட்ராஸ் மாநகரில் நடந்திருந்தது. முதல் உலகப் போர் ஆரம்பித்து சில நாட்களில் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த மெட்ராஸ் மாநகரின் மீது ஜெர்மானியப் போர்க்கப்பல் ஒன்று குண்டுமழை பொழிந்தது. சூரியன் மறையாத நாட்டின் ஏரியில் கிட்டத்தட்ட 50 நாட்கள் கண்ணாமூச்சி காட்டிய அக்கப்பலின் பெயர் எம்டன்; SMS எம்டன்.

SMS என்றால் ஜெர்மானிய மொழியில் Seiner Majestat Schiff என்றும் ஆங்கிலத்தில் His Majestic Ship என்றும் பொருள். கிழக்கின் அன்னம் என்ற புனைப்பெயரும் உண்டு. கிழக்குக் கடலில் அறுபதிற்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் வேவுக் கப்பல்களுக்கு எல்லாம் தண்ணி காட்டிவிட்டு, 1914ம் வருடம் செப்டம்பர் 22ம் தேதி இரவு 9:20 மணி முதல் 9:30 வரை, பத்தே நிமிடங்கள், கடற்கரையில் இருந்து ஒண்ணரை மைல் தொலைவில் இருந்து மெட்ராஸ் நோக்கிக் குண்டுகளை வீசியது எம்டன். 130 குண்டுகள். 5 பேர் பலி. மெட்ராஸ் துறைமுகமும் இன்றைய தலைமைச் செயலகம் இருக்கும் புனித ஜார்ஜ் கோட்டையும் இலக்குகள். சென்னை உயர்நீதிமன்ற வ‌ளாகத்தினுள் ஒரு குண்டு விழுந்த இடத்தில் ஒரு நினைவுத்தூண் வைக்கப்பட்டிருந்த செய்தியைச் சில ஆண்டுகளுக்கு முன் படித்தபோதுதான் எம்டன் எனக்கு அறிமுகம் ஆனது. அந்த நினைவுத்தூணைக் காணவில்லை என்ற செய்தியை இந்த ஆண்டு படித்தேன்.

இரவில் பொதுமக்கள் வீதியில் நடமாட வேண்டாம். வீட்டுக்குள்ளே எரியும் விளக்கின் ஒளி வெளியே தெரியக் கூடாது. எம்டனுக்குப் பயப்பட வேண்டாம். இப்படி அரசாங்கம் ஒலிப்பெருக்கியில் மெட்ராஸ் தெருக்களில் கத்தியது. மக்கள் கூட்டம் கூட்டமாக மெட்ராஸை விட்டு பாதுகாப்பான இடம் தேடி ஓடினர். விதவிதமான வதந்திகள். புதுச்சேரி அருகே எம்டனைப் பார்த்து டாட்டா சொன்னதாக சிலர் கூறினர். கல்கத்தா கிளப் ஒன்று பிரிட்டிஷாரைத் திணற வைத்த எம்டனின் வீரதீர செயல்களைப் பாராட்டி அதன் கேப்டனுக்குக் கௌரவ உறுப்பினர் பட்டம் கொடுக்க முன்வந்தது. அன்று எம்டனால் மெட்ராஸைச் சுலபமாக அழித்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் பின்வாங்கிப் போய்விட்டது. அதற்குச் சரியான காரணம் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை. அக்கப்பலில் ச‌ண்பகராமன் என்ற ஒரு டாக்டர் பணிபுரிந்ததாகவும் பின்னாளில் ஒரு வதந்தி பரவியிருக்கிறது. அதை ஜெர்மன் மறுத்துவிட்டது. இந்த மர்மங்களைத் தனக்குச் சாதகமாகக் கொண்டு திவாகர் அவர்கள் எழுதி இருக்கும் வரலாற்றுப் புதினம்தான் S M S எம்டன் 22-09-1914.



சண்பகராமனுக்கு ஆசிரியர் தனது புதினத்தில் வைத்திருக்கும் பெயர் சிதம்பரம். மெட்ராஸ் மாநகர டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்திற்கு அருகில் மயிலாபுரியில் (மயிலாப்பூர்) சிதம்பரம் வீடு. எம்டனுக்குள் மிக்க மரியாதையுடன் அழைத்து வரப்பட்ட வெளியாள் என்ற பெருமையுடன் எம்டனில் மாட்டிக் கொள்ள, மெட்ராஸ் மீது குண்டு போடாமல் புதினத்தின் 51வது பக்கத்திலேயே தடுத்து விடுகிறார். எந்த ஒரு மர்மத்தைப் புதினத்தின் பின்னட்டை சொன்னதோ, அந்த மர்மம் அத்தோடு முடிகிறது. இனிமேல் படிக்க என்ன இருக்கிறது என மூடி வைக்க நினைக்கும் வாசக‌னுக்கு அடுத்தடுத்து பல மர்மங்களைக் கொடுத்து திறந்தே வைத்திருக்கப் பணிக்கும் புதினம் இது.

புதினத்தின் கதைகளை மூன்றாகப் பிரிக்கலாம். கடலோடும் எம்டனுக்குள் நடக்கும் கதை ஒன்று. அதில் மாட்டிக் கொண்ட சிதம்பரத்தைக் காப்பாற்ற போராடும் குடும்பம், மாட்டிவிட போராடும் சிலபேர் என கரையில் நடக்கும் கதை இரண்டு. கதை மாந்தர்கள் டைரியில் இருந்தும் ஓலைச் சுவடிகளில் இருந்து வாசிக்கும் இராஜராஜ சோழன் பற்றிய கதை மூன்று. மெட்ராஸ் குண்டு வீச்சு முதல் 50 நாட்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியக் கப்பலொன்றால் மூழ்கடிக்கப்படுவது வரை பயணிக்கிறது, எம்டன் சம்மந்தப்பட்ட முதல் கதை. பிரிட்டனின் பெருங்கடற்படையை உலக மக்களிடையே கேலி பேச வைத்த‌ எம்டன் சென்ற பாதையில் நம்மையும் கூட்டிப் போகிறது புதினம். எம்டனின் கேப்டன், துணைக் கேப்டன், சீன உதவியாள், அடிபட்டுக் கிடக்கும் டாக்டர் என்ற உண்மைப் பாத்திரங்களுக்கு இடையே நுழைந்து, எம்டனின் திசையைத் தன் புத்திசாலித்தனத்தால் தனக்குச் சாதகமாகத் தீர்மானிக்கும்படி சிதம்பரம் பாத்திரத்தை அமைத்திருக்கிறார் ஆசிரியர்.

இந்திய நிலக்கரியின் தரம் குறைவு. எம்டனில் 3 புகைப்போக்கிகள். செப்டம்பர் 20ம் தேதி புரட்டாசி (மகாளய) அமாவாசை; 22ம் தேதி மெட்ராஸ் டி ஐ சி லாங்டன் பிறந்தநாள். வைசிராயின் வளர்ப்பு மகள் உயரம் தாண்டுதல் வீராங்கனை. இவை போன்ற சின்னச் சின்ன தகவல்களைக் கதையை நகர்த்தப் பயன்படுத்தி இருப்பது அருமை. புத்தகத்தின் ஆரம்பம் முதல் எம்டன் மூழ்கடிக்கப்பட்ட பின் மெட்ராஸ் புனித ஜார்ஜ் கோட்டையில் சிறப்பு விருந்து முடியும் வரை புத்தகத்துடனேயே வாசகனைக் கட்டிப் போடும் அளவிற்கு எம்டனைச் சுற்றி பல முடிச்சுகளைப் பின்னியிருப்பதும் அருமை. அதற்காக பல சரித்திர விசயங்களைத் தேடிப் போய் திரட்டி இருக்கும் ஆசிரியரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

நான் கல்கியின் பொன்னியின் செல்வன் படித்ததில்லை. எம்டன் புதினத்தில் இராஜராஜ சோழன் பற்றிய மூன்றாம் கதை ஆரம்பிக்கும் போது அவர் எப்படி இறந்திருப்பார் என்ற மர்மத்தை நோக்கியே புதினம் நகரும். எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் விசாரித்தால், அவர் அரியணை ஏறியவுடன் கல்கி முடித்து விட்டதாக‌ சொன்னார்கள். பொன்னியின் செல்வன் புத்தகத்தை இராஜராஜ சோழனோடு முழுக்க சம்மந்தப் படுத்துவது போல் என் புத்தியில் எப்படி பதிந்தது என்று தெரியவில்லை. இராஜராஜ சோழன், அவரின் மகன் இராஜேந்திரச் சோழன், பேத்தி அங்கம்மா என்று ஒவ்வொரு தலைமுறையாக மர்மங்களுடன் பயணிக்கிறது புதினம்.

புத்தகம் முடித்தபின் எனக்குச் சில சந்தேகங்கள். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
1. எம்டனில் சிறை வைக்கப்பட்டிருக்கும் நோபிள் என்ற பெண், உண்மையிலேயே வைசிராய் ஹார்டிங்கின் வளர்ப்பு மகளா, இல்லை ஆசிரியரின் புனைவுப் பாத்திரமா?
2. ஒரு சண்டையில் எந்திரத் துப்பாக்கி உபயோகப் படுத்துவார்கள். AK47? அது முதல் உலகப் போர் சமயத்தில் உபயோகத்தில் இருந்ததா?
3. சண்பகராமன் என்றொருவர் எம்டனில் இருந்திருக்கவில்லை என்கிறது புத்தக முன்னுரை. சென்னை கிண்டியில் காந்தி மண்டப வாளகத்தில் உள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் சண்பகராமனுக்குச் சிலை இருப்பதாகப் படித்தேன். வேறெந்த தகவலும் இப்போது என்னிடம் இல்லை.

இந்தியா எதுவென்றே ஒரு தெளிவான புரிதல் இருந்திராத‌ காலத்தில் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடவுள் என்ற சக்தியால் தனியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது போல சித்தரிக்கும் பகுதிகளும், சிவபெருமான் யோகா அரசக்குடும்பம் போன்ற விசயங்களை அளவுக்கதிகமாகக் கொண்டாடும் பகுதிகளும் எனக்குப் பிடிக்கவில்லை. எம்டனை எடுத்துவிட்டால் ஓர் ஆன்மீகப் புத்தகம் போன்ற பிரம்மை இருந்தது. மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. ஆனால் படிக்கும் போது இப்படி தோன்றாமல் இருக்கும்படி, புத்தகம் சுவாரசியமாக இருந்ததில் மகிழ்ச்சி.

ஒரு நல்ல காரியத்தைச் செய்த ஒரு நல்ல நாளில் ஏதாவது ஒரு நல்ல புத்தகம் படிக்க வேண்டும் என முடிவு செய்து வாங்கிய புத்தகமிது. நான் சென்னை வந்து 4 மாதங்கள் தான் ஆகின்றன. அடிக்கடி மெரீனா போய் கடலைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இப்போது மிதந்து போகும் கப்பல்கள் எல்லாம் எம்டன் போலவே தெரிகின்றன. திடீரென வானத்தில் இருந்து மினிக்கிக் கொண்டு கலங்கரை விளக்கம் மேல் பறந்து போகும் விமானங்கள் எல்லாம் குண்டுகள் போல் தெரிகின்றன. இரகசியங்களை எனக்குச் சொல்லாமல் அலைகள் கேலியாகச் சிரிக்கின்றன.

சென்னை கடற்கரை மேல் எனக்கிருக்கும் பிடிப்பு இன்னும் அதிகமாகும்படி ஒரு நல்ல வரலாற்றுப் புதினத்தைத் தந்தமைக்கு ஆசிரியருக்கு டோய்ச் மொழியில் 'டங்கே'.

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

98. தூங்காமல் தூங்கி

$
0
0

ஐம்புலனைச் சுட்டறுத்து தூங்காமல் தூங்கி
சுகம் பெறுவது எக்காலம்

-------------------------------------------------------------------------
புத்தகம் : தூங்காமல் தூங்கி
ஆசிரிய‌ர் : Dr.S.மாணிக்கவாசகம் MBBS.DA.
வெளியீடு : சந்தியா பதிப்பகம்
முதற்பதிப்பு : 2008
விலை : 65 ரூபாய்
பக்கங்கள் : 128 (தோராயமாக 34 வரிகள் / பக்கம்)
வாங்கிய இடம் : நியூ சென்சுரி புக் ஹவுஸ், சிங்காரத்தோப்பு, திருச்சி
-------------------------------------------------------------------------
கேள்விப்பட்டே இருக்க மாட்டோம். ஆசிரியரைப் பற்றி ஒன்றுமே தெரியாது. கடையின் புத்தகக் குவியல்களில் எங்கோ ஓரிடத்தில் ஒதுங்கிக் கிடக்கும். ஆனாலும் முதலில் பார்க்கும்போது, அட இப்படியும் ஒரு புத்தகமா என்ற ஆச்சரியத்துடன் பக்கங்களைப் புரட்ட வைக்கும் வசீகரம் சில புத்தகங்களுக்கு அமைந்துவிடுகிறது. அப்படித்தான் சமீபத்தில் எனக்கு இப்புத்தகம். ஆசிரியர் 35 ஆண்டுகளாக மயக்கவியல் மருத்துவர். அயல் மனித முகங்கள் மேல் மனிதாபிமானம் காட்டும் தொழில். வாழ்வின் பெரும்பகுதியை அறுவைச் சிகிச்சை அரங்கிற்குள்ளேயே கழித்துவிட்டவர். தொழில் சார்ந்த அவரது அனுபவங்களே இப்புத்தகம்.

தூங்காமல் தூங்கி. Memories of an Anaesthesiologist. ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை.

நோயாளியை மயக்க நிலைக்குக் கொண்டு போய் மீண்டும் கண் விழிக்க‌ வைக்கும் வரை கூடவே இருந்து கண்பாவை, நாடித்துடிப்பு, சுவாசம், உடல்நிறம், இரத்த அழுத்தம், காயத்திலிருந்து வெளியேறும் இரத்தம், அதை ஈடுசெய்ய மருந்துகள் போன்ற விசயங்களைக் கவனித்துக் கொள்ளும் தனது தொழிலில் மறக்க முடியாத மனிதர்கள்-அனுபவங்கள் பற்றியது இப்புத்தகம். தொழில்நுட்பம் முன்னேறிவிட்ட இக்காலத்தில் இவை எல்லாவற்றையும் கணினியே பார்த்துக் கொள்ளும்போது, மருத்துவன் அறுவைச் சிகிச்சை அரங்கிற்கே செல்லத் தேவையில்லை. அறுவைச் சிகிச்சையில் என்ன செய்யப் போகிறோம் என முன்கூட்டியே மருத்துவர் நோயாளிக்கு வீடியோ படம் காண்பிக்கும் காலம் இது. வாசகனை அறுவைச் சிகிச்சை அரங்கு வரை அனும‌தித்து, தூக்கம் உணவு தண்ணீர் குடும்பம் எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்து விட்டு, அனுபவ அறிவுடனும் மருந்துகளுடனும் போராடிய மருத்துவ உலகை அறிமுகப் படுத்துகிறார் ஆசிரியர்.

குளோராபார்ம் டாக்டர் என்று தெரிந்தவர்களால் அழைக்கப்படும் ஆசிரியர், தான் தன் தொழிலில் சந்தித்த முதல் மரணம் முதல் சிசேரியன், குடலிறக்கம், குடலடைப்பு, விரைவீக்கம், குடல்வால், கத்திக்குத்து, ஆணுறுப்பு மேல்தோல் நீக்கம், தைராய்டு கட்டி, எலும்புமுறிவு போன்ற‌ அறுவைச் சிகிச்சைகள் கண்ட நோயாளிகள் வரை பலரைச் சிறுகதைகளாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். நான் ஏற்கனவே சொன்னதுபோல், சில நல்ல புத்தகங்களுக்கு விமர்சனம் தேவையில்லை; அறிமுகமே போதும்.

- ஞானசேகர்

99. செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்

$
0
0

-------------------------------------------------------------------------
புத்தகம் : செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்
ஆசிரிய‌ர் : சோம‌.இராமசாமி
வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ், இராயப்பேட்டை, சென்னை
முதற்பதிப்பு : நவம்பர் 2011
விலை : 100 ரூபாய்
பக்கங்கள் : 140 (படங்களுடன் தோராயமாக 30 வரிகள் / பக்கம்)
வாங்கிய இடம் : நியூ சென்சுரி புக் ஹவுஸ், சிங்காரத்தோப்பு, திருச்சி
-------------------------------------------------------------------------
நதிகளின் வாழ்வில் பல்வேறு நிலைகள் பற்றி நடுநிலை வகுப்புகளில் புவியியலில் படித்திருப்போம். பிறந்தவுடன் மலை பள்ளத்தாக்கு என்று சமவெளியை அடைவதற்காகப் பயமறியாது குதித்தோடும் இளமை நிலை. மணலும் கனிமங்களும் சேகரித்துக் கொண்டே சமவெளியில் ஒய்யார நடைபோடும் பக்குவநிலை. கடலடைந்த பின் கடலலை எதிர்ப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் தள்ளாடும் முதுமை நிலை. இம்மூன்று நிலைகளில் முதுமை நிலையில் அதிகப்படியான சுமைகளைக் சேர்க்க‌ கடல் எதிர்ப்பு தெரிவிப்பதால், ஒரு முகட்டை (காவிரிக்குத் திருச்சி போல‌) மையமாக வைத்து பல தடங்களில் கடலடைந்து டெல்டாவைப் பரப்புகிறது. இளமையில் தான் சேகரித்த வண்டலை எல்லாம் முதுமையில் டெல்டாவில் கொட்டி வளப்படுத்துகிறது.

பிறந்த இடமும் வருடமும், முடியும் இடம், கடந்து வந்த பாதைகள், உடன் வந்தவர்கள், விட்டோடியவர்கள், சந்ததிகள் என நதிகளுக்கும் வாழ்க்கை வரலாறு உண்டு. மனிதனுக்கு இறப்புச் சான்றிதழ் வாங்குவதற்கே படாதபாடு படும்போது, நதிகளின் கெதியை எப்படி தெரிந்து கொள்வது? செயற்கைக்கோள்கள். செய‌ற்கைக்கோள் படங்களின் நிறச்செறிவை வைத்து, அவ்விடத்தில் இருப்பது நீரா, காடா, மலையா, நீருக்குள் காடா என்று கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்கள் இன்றைக்கு உள்ளன. அதன்பிறகு வயதைக் கண்டுபிடிக்க இருக்கின்றன கார்பன், ப்ளூரின் என்று விதவிதமான முறைகள்.
(http://www.noolulagam.com)
செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல். ஆசிரியர் புவியியல் விஞ்ஞானி. துணை வேந்தர், காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம், திண்டுக்கல். தன் ஆராய்ச்சி மாணவர்களுடன் தான் கண்டுபிடித்த விசய‌ங்களில் ஒரு சாதாரண‌ வாசகனுக்குப் புரியும் விசயங்களே இக்கட்டுரைகள். காவிரி, வைகை, தாமிரபரணி, புதுக்கோட்டை வெள்ளாறு, தேவக்கோட்டை மணிமுத்தாறு என்ற ஐந்து நதிகளின் வாழ்க்கை வரலாற்றைப் படங்களுடன் விளக்குகிறார் ஆசிரியர். வாழ்க்கை வரலாறு என்பதைப் புரிந்து கொள்ள காவிரியை எடுத்துக் கொள்வோம்.
தலைக்காவிரி கொகேனெக்கல் மேட்டூர் என ஓடி திருச்சியை முகடாகக் கொண்டு டெல்டாவைப் பரப்பி கொள்ளிடம் என்ற பெயரில் ஓடி வங்கக்கடலில் கல‌ப்பதுதான் காவிரியின் தற்போதைய தடம். (பிரதான பாதையில் இருந்து விலகி கடல் கடக்க ஓடும் வழிகளைத் தடம் எனக் கொள்வோம்) புத்தகம் என்ன சொல்கிறது என்றால், இது காவிரியின் 19வது தடம். இதற்கு முன் 18 வித்தியாசமான தடங்களில் காவிரி கடல் அடைந்திருக்கிறது. காவிரி டெல்டாப் பகுதிகளில் ஓடும் குடமுருட்டியாறு பழவனாறு பழம்காவிரி போன்ற தடங்களில் ஒரு காலத்தில் காவிரி கடல் சேர்த்திருக்கிறது. அதே போல் காவிரி விட்டுப் போன ஒரு தடத்தில்தான் இன்று புதுக்கோட்டை வெள்ளாறு ஓடிக் கொண்டு இருக்கிறது.

ஒரு காலத்தில் காவிரியின் பாதையிலேயே திருச்சி இல்லை என்கிறது புத்தகம்! திருச்சி காவிரிக்கு 3வது பாதை. மேட்டூரில் இருந்து திருக்கோவிலூர் வழியே கடலூர்ப் பகுதிகளில் அமைகிறது 2வது பாதை. அப்போதுதான் அரிக்கமேடு துறைமுக நகரமாக இருந்திருக்கிறது. ஆச்சரியமே காவிரியின் 1வது பாதையில் தான் இருக்கிறது. கொகேனெக்கல் வாணியம்பாடி ஆம்பூர் வாலாஜாப்பேட்டை அரக்கோணம் வழியாக திருவள்ளூர்ப் பகுதிகளில் அமைகிறது 1வது பாதை. கடல் அடைய காவிரி உபயோகித்த தடங்கள் என்னென்ன தெரியுமா? காவிரி விட்டுப்போன அத்தடங்களில் தான் இன்றைக்கு அடையாறும் கூவம் ஆறும் ஓடிக் கொண்டிருக்கின்றன! கூவம் ஒரு காலத்தில் வளமிக்க நதி. வங்கக்கடலில் 2 கிலோமீட்டருக்குக் கொட்டிக் கிடக்கும் வண்டலும், திருவள்ளூர்ப் பகுதிகளில் காணப்படும் கற்படுகைகளும் சான்றுகள்!

கொகேனெக்கலை அச்சாகக் கொண்டு கடிகாரமுள் திசையில் காவிரி இரண்டு முறைகள் ஏன் பாதை மாறியது? ஒவ்வொரு பாதையிலும் தெற்கிலிருந்து வட‌க்காக‌ பதினெட்டு முறைகள் ஏன் தடம் மாறியது? அடுத்து பாதை அல்லது தடம் மாறுமா? மாறினால் எப்படியெல்லாம் ஓடும்? இதையெல்லாம் தெரிந்து வைத்து என்ன பயன்? கடல்தாக்கம் மற்றும் வெள்ளப் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள், தமிழகத்தின் பண்டைய கடலின் எல்லைகள், அதிலிருந்த துறைமுக நகரங்கள், புத்தகம் படித்துப் பாருங்கள். இதே போல்தான் மற்ற 4 ஆறுகளின் வாழ்க்கை வரலாற்றையும் விளக்குகிறார். நான் சுருக்கிச் சொல்வதால் ஏதோ புனைவு போல தோன்றும் இவ்விசயங்கள் எல்லாம் அறிவியல் பூர்வமாகவும், அரிக்கமேடு போன்ற பண்டைய நாகரீகங்களின் தொல்பொருள் சின்னங்கள் மூலமும், திருக்கோவிலூர் போன்ற கல்வெட்டுகள் மூலமும், பெரிய புராணம் போன்ற‌ தமிழ் இலக்கியங்கள் மூலமாகவும் விளக்குகிறார் ஆசிரியர். 
(http://www.mapsofindia.com)
சில விசயங்கள்: 
1) 1100 ஆண்டுகளுக்கு முன் கருணாகரத் தொண்டைமான் கலிங்கர்களுடன் போருக்குச் செல்லும் போது காஞ்சிபுரத்திற்கு வடக்கே ஒரு பெருநதியைக் கடந்ததாகக் கலிங்கத்துப் பரணி சொல்கிறது. அப்படி ஏதாவது நதி இப்போது இருக்கிறதா?
2) கடல் மதுரை வரை வந்து தாக்கியதாகவும் மன்னன் சுந்தரபாண்டியன் ஒரு செண்டை எறிந்ததால் கடல் பின்வாங்கியது எனவும் 800 ஆண்டுகளுக்கு முந்தைய திருவிளையாடல் புராணம் சொல்கிறது. ப்பூ என்று ஊதினால் நீரோடும் கதையெல்லாம் நாடோடி மன்னன் படத்தில் பாலையா சொன்னால் ரசிக்கலாம். ஆனால் நடைமுறையில் மதுரைக்குப் பக்கத்தில் கடல்?
3) கொள்ளிடத்தில் தண்ணீர் குறைவாக ஓடும் போது வட மருங்கில் ஓடுமாம். கவனித்து இருக்கிறீர்களா?
4) அறந்தாங்கி மற்றும் தேவக்கோட்டையில் இருந்து கடல் நோக்கிச் செல்லச் செல்ல மேற்கு நோக்கி கரை கொண்ட பிறைவடிவ‌ குளங்கள் அதிகமாக இருப்பதைக் கவனித்து இருக்கிறீர்களா?
5) பொன்னையாறு, திருச்சி தில்லை நகர், தஞ்சாவூர் வல்லம், திருநெல்வேலி வல்லநாடு - பெயர்க்காரணம்?
6) மேற்கிலிருந்து ஒழுங்காக கிழக்காக ஓடும் போது, திருநெல்வேலியில் சற்று நெளிந்து வடக்காக ஓடும் தாமிரபரணியைப் புவியியல் ரீதியில் ஒரு அபூர்வ நதி என்கிறார். டெல்டாவே இல்லாமல் பக்குவநிலை மட்டுமே கொண்ட நதியாம். அதன் வெள்ளப் பாதிப்பு திருநெல்வேலியில் மட்டும் அதிகம் இருப்பதேன் தெரியுமா?

காவிரியைக் குழாய்கள் மூலம் பல கிலோ மீட்டர்கள் இழுந்து வந்து தாகம் தீர்க்கும் எங்கள் ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சின்ன காட்டாறு, ஒரு காலத்தில் காவிரியின் 7வது தடம்! நீங்கள் பார்க்கும் ஒரு குளம் கூட ஒரு நதியின் புதையுண்ட பாதையாக இருக்கலாம். இப்புத்தகம் படியுங்கள். நீங்கள் பார்க்கும் தமிழகமும், 6500 கிலோ மீட்டர்கள் வடக்கே நகர்ந்து வந்து இன்னும் நகர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவும் இன்னும் வித்தியாசமாகவும் ஆச்சரியமாகவும் தெரியும். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், புவியியல் துறை சார்ந்தவர்களும் கண்டிப்பாகப் படிக்கலாம். இப்புத்தகம் சொல்லும் ஐந்து ஆறுகளுடன் தொடர்புள்ள ஊர்க்காரர்களுக்கும், சென்னை அறந்தாங்கி வேதாரண்யம் நெய்வேலி கடலூர் கம்பம் பட்டுக்கோட்டை மன்னார்குடி ஜெயங்கொண்டம் காரைக்குடி திருக்கோவிலூர் ஊர்க்காரர்களுக்கும் ஆச்சரியங்கள் இப்புத்தகத்தில் நிறைய இருக்கின்றன.

கொகேனெக்கலில் புதையுண்ட காவிரியை வெளிக்கொணர சோழ இளவரசன் ஒருவன், அங்கு போய் காவிரியில் குதித்து உயிர்த் துறக்கிறான். அவனின் தியாகத்தில் மனமுருகி கிழக்கே ஓடிக்கொண்டிருந்த காவிரி தெற்கே திரும்பி திருச்சி வழியாக சோழ நாட்டைச் செழிக்கச் செய்கிறது. காவிரி இரண்டாம் முறை பாதை மாற இப்படி ஒரு புராணக் கதையை ஆசிரியர் சொல்கிறார். நதிகளுக்கும் பல்லுயிர்களுக்கும் இழைக்கப்படும் துரோகங்கள் அதிகமான நம் தலைமுறைக்கு இக்கதை ஏதோ சொல்வது போல் தெரிகிறதா, இப்புத்தகத்தைப் போல‌?

- ஞானசேகர்

100. JERUSALEM - The Biography

$
0
0
(உலகமெங்கும் உள்ள நாடற்றவர்களுக்காகவும், நாடிருந்தும் வீடற்றவர்களுக்காகவும் இந்த நூறாவது புத்தகம்)

தொடர்ந்து படிப்பதற்கு முன் 'நிலமெல்லாம் ரத்தம்'புத்தகம் பற்றிய எனது பதிவை ஒருமுறை படித்துவிடுங்கள்.

FOREIGNER! DO NOT ENTER WITHIN THE GRILLE
AND PARTITION SURROUNDING THE TEMPLE
HE WHO IS CAUGHT
WILL HAVE ONLY HIMSELF TO BLAME
FOR HIS DEATH WHICH WILL FOLLOW
- சாலமன் தேவாலயச் சுவர் வாசகம் (c23BCE)

மதத்தின் பெயரால் என்ன செய்யப்பட்டிருக்கிறது என்று இங்கே பாருங்கள்.
- Harriet Martineau

Everybody has two cities, his own and Jerusalem.
-Teddy Kollek (மேற்கு ஜெருசலேம் மேயராக இருந்தவர்)

எருசலேம் நகர மகளிரே எனக்காக அழ வேண்டாம்; உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
- இயேசு கிறித்து (விவிலியம்)

Jerusalem is an old nymphomaniac who squeezes lover after lover to death, before shrugging him off her with a yawn, a black widow who devours her mates while they are still penetrating her.
- Amos Oz (இஸ்ரேலிய எழுத்தாளர், A Tale of Love and Darkness)

Well, if either one side stops complaining, you will be dismissed.

இங்கிலாந்து பிரதமர் ஜெருசலேம் ஆளுநரிடம் சொன்னது

I am sitting where a god has stood.

- Mark Twain
------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : Jerusalem - The Biography
ஆசிரியர் : Simon Sebag Montefiore
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Orion Books, London
முதற்பதிப்பு : 2011
விலை : 595 ரூபாய்
பக்கங்கள் : 640
------------------------------------------------------------------------------------------------------------
வாழ்வு தரும் நம்பிக்கையில் மக்களைத் தன்நோக்கி ஈர்க்கும் நகரங்களைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். உலகின் வெவ்வேறு மூலைகளில் இருந்து ஆண்டாண்டு காலமாய் மரணம் தேடி மக்கள் போகும் நகரம் அறிவீர்களா? கையளவு மண்ணில் கடலளவு கதை சொல்லும் ஜெருசலேம் நகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!

ஜெருசலேமிற்குள் நுழைவது அவ்வளவு சுலபம் அல்ல. 1950ல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஓர் உயிரியல் பூங்காவில் உள்ள 1 சிங்கம், 1 புலி, 2 கரடிகளுக்கு உணவிடுவதில் வந்த பிரச்சனையில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு இரு சமரசங்களைப் பரிந்துரை செய்தது. இஸ்ரேலிய பணத்தில் அரபு நாடுகளின் குரங்குகளை வாங்கலாம். அல்லது இஸ்ரேலிய நாட்டின் குரங்குகளை ஜோர்டான் நாட்டுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் வழியாகக் கொண்டு போகலாம்.

(http://wikimedia.org)

ஜெருசலேம். அதில் கிழக்கு ஜெருசலேம். அதில் பழைய ஜெருசலேம் நகரம். ஒரு சதுர கிலோ மீட்டருக்கும் சற்றுக் குறைவான பரப்பு. உலகப் பாரம்பரிய சின்னம். இஸ்ரேல் சொந்தம் கொண்டாடினாலும் நாடற்ற நிலம். இங்குதான் கிறித்தவ இஸ்லாமிய யூத ஆர்மேனியர்களுக்கு என தனித் தனியே புராதனக் குடியிருப்புகளும், முப்பெரும் மதங்களும் சொந்தமெனும் கோயில் மலையும் (Temple Mount) உள்ளன. கோயில் மலை என்பது ஈசாக்கைக் கடவுள் ஆணைப்படி ஆபிரகாம் பலி கொடுக்கப் போன இடம் மற்றும் சாலமோன் தேவாலயம் இருந்த இடம் என்பது யூத நம்பிக்கை. இன்று மேற்குச் சுவர் (Western Wall) மட்டும் எஞ்சி நிற்கிறது. முகம்மது நபி சொர்க்கம் சென்று மீண்டும் திரும்பிய இடமாக இஸ்லாமியர்களால் நம்பப்படும் Dome of Rock மற்றும் அதன் அருகில் உள்ள அல் அக்சா மசூதியும் கோவில் மலையில் உள்ளன. இயேசு கிறித்து கொல்லப்பட்ட இடம் (Holy Sepulchre) கிறித்தவக் குடியிருப்புப் பகுதியில் உள்ளது.

பழைய ஜெருசலேமைச் சுற்றி மதில். அதற்கு 8 வாயில்கள். அதில் கிழக்கே இருக்கும் தங்க வாயில் (Golden Gate) 400 வருடங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டு இருக்கிறது. கிழக்கே இருக்கும் இன்னொன்று வாயிலில் இரு சிங்கச் சிற்பங்கள் இருப்பதால் அதற்குச் சிங்க வாயில் (Lion's Gate) என்று பெயர். அச்சிங்கச் சிற்பங்கள் எப்படி வந்தன என்பதற்குப் பல கதைகள் உள்ளன.

1) 1516ல் ஜெருசலேமைக் கைப்பற்றிய ஒட்டாமன் பேரரசன் முதலாம் செலிமின் கனவில் சிங்கங்கள் அவனைத் தின்ன வருகின்றன. மேடாய் இருக்கும் ஜெருசலேமை மட்டப்படுத்த நினைத்ததற்குத் தண்டனை என சொல்கின்றன. அப்படி செய்ய மாட்டேன், சுற்றி சுவர் கட்டுகிறேன் என்று சொன்னபின் விட்டுவிடுகின்றன.
2) முதலாம் செலிமுக்குப் பின் ஆண்ட சுலைமான் தான் ஒட்டாமன் வெற்றியைக் கொண்டாட சிங்கச் சிற்பங்களை வைத்தான்.
3) சுலைமானின் கனவில் சிங்கங்கள் அவனைத் தின்ன வருகின்றன. கனவு விளக்கம் சொல்பவர்களிடம் கேட்கிறான். 'தூங்கப் போகும் முன் என்ன சிந்தனையில் இருந்தீர்கள்?'. 'வரி கட்டாதவர்களை எப்படி தண்டிப்பது என்ற யோசனை'. 'புனித பூமியின் குடிமக்களைத் தண்டிக்க நினைத்ததற்காக ஆண்டவனின் தண்டனை இத்துர்க்கனவு'.
இரண்டு சிங்கச் சிற்பங்களுக்கு இத்தனை கதைகளா? அதுமட்டுமல்ல, இன்றுதான் அதன் பெயர் சிங்கவாயில். ஒரு காலத்தில் அதன் பெயர் புனித ஸ்டீவன் வாயில். இதே போல் ஜெருசலேமின் ஒவ்வொரு வீதிக்கும் குறைந்தது 3 பெயர்கள். ஜெருசலேமிற்கே வரலாற்றில் 70 பெயர்கள்! ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கதை. சரி, சிங்கவாயில் கதைகளில் எதுதான் உண்மை? ஜெருசலேமை வென்றவர்கள் தங்கள் தேசங்களில் இருந்து கொண்டு வந்த பொருட்களில் ஜெருசலேமைக் கட்டியதை விட, ஏற்கனவே இருந்தவற்றை இடம் மாற்றி வைத்ததைத் தான் பலமுறை செய்திருக்கிறார்கள். அப்படித்தான் இவ்விரு சிற்பங்களை நகரின் வடமேற்கில் இருந்து எடுத்து வந்து செலிம் கட்டிய மதிலில் ஒரு வாயிலில் வைத்து சிங்கவாயில் எனப் பெயர்வரச் செய்தான் சுலைமான். அவ்விரு சிற்பங்களும் ஒட்டாமனுக்கு முன் ஆட்சி செய்த எகிப்திய மம்லூக் சுல்தான்களில் ஒருவனான‌ பைபார்ஸ் தன் குருவிடம் இருந்து 300 ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்டவை. எப்படி இருக்கிறது உண்மை? உண்மையின் கடைசித் துளியையும் சேர்த்து சீரணித்துக் கொள்ளுங்கள். அவ்விரு சிற்பங்களும் சிங்கங்க‌ள் அல்ல, சிறுத்தைகள்!
ஜெருசலேம் பற்றி இணையத்திலும் புத்தகங்களிலும் மதமும் அரசியலும் சாராத கற்பனைகளற்ற‌ உண்மையைத் தேடுவது அவ்வளவு சுலபம் அல்ல என்பதற்குச் சிங்க வாயில் ஓர் உதாரணம். 1800 முதல் 1875 வரை ஆங்கிலத்தில் மட்டும் ஜெருசலேம் பற்றி 5000 புத்தகங்கள் வெளிவந்து இருக்கின்றன. பெரும்பாலும் இன அல்லது மதச்சார்பு உடையவை. அல்லது உலக அழிவைப் பற்றி பயம் காட்டுபவை. என் நேரத்தை வீணாக்காமல் நடுநிலையுடன் உள்ளதை உள்ளபடி புரியும்படி, பெரும் ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் இன்றைய பிரச்சனைகளை விதையில் இருந்து விளக்கும் ஒரு புத்தகம் தேடினேன். இப்போது ஜெருசலேமுடன் புத்தகத்திற்குள் போகலாம்.
(https://images.bookworld.com.au)
Simon Sebag Montefiore அவர்களின் Jerusalem - The Biography. பல இனங்கள் மொழிகள் மதங்கள் பேரரசுகள் என பின்னிப் பிணைந்து கிடக்கும் ஒரு நகரத்தின் கதையை அற்புதமாக புத்தகப்படுத்தி இருக்கிறார். ஜெருசலேம் சம்மந்தப்பட்டவர்களின் வம்சாவழியினரைப் பேட்டி கண்டு அவர்களின் இன்றைய நிலையை ஆங்காங்கே சொல்கிறார். இயேசு கிறித்துவின் சிலுவையைப் பாதுகாத்து வந்த குடும்பம் இன்று சுற்றுலா வழிகாட்டிகளாக இருக்கிறார்கள் என்று படிக்கும்போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. 

53 தலைப்புகளில் கதை சொல்கிறது புத்தகம். ஜெருசலேம் நகரை உண்டாக்கிய இஸ்ரேலின் இரண்டாம் மன்னன் தாவீது முதல் எகிப்தின் இரண்டாம் அதிபர் கமால் அப்துல் நாசர் வரை. 1050BCE முதல் இன்றைய நிலைக்குக் காரணமான 1967 யுத்தம் வரை. முன்கதைச் சுருக்கமாக‌ ஆபிராம் முதல் சவுல் வரை. பின்கதைச் சுருக்கமாக 2010ல் பராக் ஒபாமா, பெஞ்சமின் நெடான்யாஹூ வரை. 32 பக்கங்களுக்குப் புகைப்படங்கள். சில குடும்ப மற்றும் ஆட்சியாளர்களின் 5 வம்சாவழிப் பட்டியல்கள். வெவ்வேறு காலக் கட்டங்களில் இஸ்ரேல் - பாலஸ்தீன் எல்லைகளைக் காட்டும் 11 வரைபடங்கள். எந்தவொரு தகவலையும் பின்னாளில் எளிமையாகக் கண்டுபிடிக்கும் அளவிற்கு அருமையாகப் பகுத்து இருக்கிறார்.

ஜெருசலேம் பற்றி ஆசிரியரின் முன்னுரை இது: ஜெருசலேமின் வரலாறு என்பது உலகத்தின் வரலாறு. உலகத்தின் மையம் என்று நம்பப்படும் ஜெருசலேம் கண்டிப்பாக இன்றைக்கு ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் மையமேதான். நாகரீகங்களின் போர்க்களம். தெய்வ நம்பிக்கைகளும் மறுப்புகளும் வெட்டிக் கொள்ளும் புள்ளி. தலைசுற்ற வைக்கும் சதிகளின் பிறப்பிடம். நம்பிக்கைகளால் கட்டப்பட்ட புனித நகரம். ஒரே கடவுளின் வீடு. இரு மக்களின் தலைநகரம். மூன்று கடவுளர்களின் கோவில். பூமி சொர்க்கம் என ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்கும் ஒரே நகரம்.

335 கப்பல்கள் 35,000 வீரர்கள் மற்றும் 167 விஞ்ஞானிகளுடன் எகிப்திற்குப் படையெடுத்துச் சென்ற நெப்போலியன், பாரீசுக்கு இப்படி கடிதம் அனுப்புகிறார்: I would found a religion. I saw myself marching on the way to Asia, mounted on an elephant, a turban on my head, in one hand a new Koran I would have composed myself.... By the time you read this, it's possible I will be standing in the ruin's of Solomon's Temple.

கிறிஸ்டோபர் கொலம்பஸ் தன்னைக் கடற்பயணம் அனுப்பிய அரசிக்கு இப்படி கடிதம் அனுப்புகிறார்: Before the end of the world, all prophecies have to be fulfilled, and the Holy City has to be given back to the Christian Church.

(http://d.gr-assets.com)
தெரியாமல் அல்லது உண்மையென அல்லது உண்மைபோல் நான் நம்பிக் கொண்டிருந்த சில அடிப்படை விசயங்களை இப்புத்தகம் புரட்டிப் போட்டது.
1) யூதர்களின் கடவுள் ஜெஹோவா என்பது தவறு. ஹீப்ருவில் சுருங்கிய வடிவமான YHWH ஐ, ஆங்கிலத்தில் தவறாக உச்சரிக்கப் போய் வந்ததுதான் ஜெஹோவா என்ற சொல்லாடல். யூதர்கள் தங்கள் ஒரே கடவுளின் பெயரை உச்சரிப்பதில்லை. ஜெருசலேமில் சாலமோன் தேவாலயம் இருந்த காலத்தில் தலைமைக் குருவிற்கு மட்டும் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் உச்சரிக்க அனுமதி இருந்தது.
2) விவிலியம் தவிர வேறெங்கும் சான்று இல்லாத தாவீது மன்னனின் இருப்பை, 1993ல் இஸ்ரேலின் வட எல்லையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு (Tel Dan Stele) தான் நிரூபித்தது.
3) ஆப்ராம் குடியேறுவதற்கு முன், தாவீது ஜெருசலேமை உருவாக்குவதற்கு முன் அங்கிருந்த பூர்வகுடிகள் யார்? அவர்களின் தெய்வம்?

ஜெருசலேம் எக்காலத்தில் எதற்காக எவரிடம் இருந்தது என்று அறிய முயன்றாலே, ஆசிரியர் சொல்வது போல், உலக சரித்திரம் அடங்கிவிடும். கடவுளையே எதிர்த்து கோபுரமும் தொங்கும் தோட்டமும் அமைத்த பாபிலோனியர்கள். பேரரசன் சைரஸ், அவனுக்குப் பின் வந்து 3 கண்டங்களை முதன்முதலில் ஆட்சி செய்த டேரியஸ் என பெர்சியர்கள். பெர்சியர்களைத் தொடர்ந்தால் தாஜ்மகால் வரை வரலாம். அலெக்சாண்டர் தலாமி என்று மாசிடோனியர்கள். அலெக்சாண்டரைத் தொடர்ந்தால் இந்திய எல்லை தொடலாம். பிறகு இயேசு கிறித்து. ரோமானிய மன்னன் காலிகுலாவைத் தொடர்ந்தால் ஒரு XXX திரைப்படத்தை எதிர் கொள்ளலாம், நீரோவைத் தொடர்ந்தால் 666 என்ற எண்ணின் மேல் பயத்துடன் ஒலிம்பிக்கில் நிர்வாணமாக டுவதைப் பார்க்கலாம். 

ரோமானியர்கள் கிழக்கே கால் பதிக்கப் போய் கான்ஸ்டான்டிநோபிள் நகரை உருவாக்கிய மன்னன் கான்ஸ்டன்டைன் என பைசாந்தியர்கள். கிறித்தவ‌த் தலைமைப் பீடத்தில் குளறுபடிகள். பிறகு அரபு மக்களுக்குச் சரித்திரம் தந்த முகமது நபி. கலீபாக்களின் முப்பெரும் தலைமைப் பீடங்கள். அரபு கலீபாக்களின் சுன்னி மற்றும் ஷியா இஸ்லாமியர்களின் 4 வம்சங்கள். சிந்துபாத், அலிபாபாவும் 40 திருடர்களும், அலாவுதினும் அற்புத விளக்கும் போன்ற கதைகள். ஷியா இஸ்லாமியர்களின் 12வது இமாம். உலகின் மிக நீண்ட போரான சிலுவைப் போர்கள். தைமூர், செங்கிஸ்கான் என மங்கோலியர்கள். உலகின் கடைசிப் பேரரசான ஒட்டாமன் பேரரசு. நெப்போலியன். முதலில் புகைப்படம் எடுக்கப்பட்ட கிரீமியன் யுத்தம். புரட்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்த ரஷ்யா. உலகப் போர்கள்.

ஒட்டாமனுக்கு முன் மம்லுக் (Mamluk) என்ற அடிமை வம்சம். அவர்களின் வம்சாவழியைத் தொடர்ந்தால் குத்புதீன் ஐபக். அவரைத் தொடர்ந்தால் திருவரங்கம் ரங்கநாதர் கோவில் வழியாக மதுரை ஆயிரம் கால் மண்டபம் வரை வரலாம். முதல் உலகப் போருக்குப் பின் ஒட்டாமன் சிதறிய துண்டுகளைப் பார்த்தால் அரபு நாடுகள். முகமது நபியின் வம்சாவழிகளைத் தொடர்ந்தால் சவூதி ஜோர்டான் ஈராக் மொராக்கோ ஈரான் என்று நம் காலத்தவர்களையும் அறியலாம். லெபனான் மற்றும் எகிப்தின் வரலாற்றைப் படிக்கச் சொல்லி ஜெருசலேம் கட்டாயப்படுத்தும். சவூதியின் அமெரிக்கச் சார்பு, ஈரானின் அமெரிக்க எதிர்ப்பு, ஐரோப்பாவின் துயரம் (Sickman of Europe) என்று துருக்கி ஒதுக்கப்படும் வரலாற்றுப் பின்னணி அறியலாம். உண்மையிலேயே ஜெருசலேமின் வரலாறு என்பது உலகத்தின் வரலாறுதான்.

தன் ஆண் காதலன் நைல் நதியில் மூழ்கி இறந்து போக அவன் நினைவாக ஒரு நகரத்தை உண்டாக்கி அவனின் நிர்வாணச் சிலைகளைத் தேசமெங்கும் நிறுவிய பேரரசன். எதிரிகளுக்குப் பானத்தில் விசம் கலந்து வைத்துவிட்டு, மறுந்துபோய் அதைக் குடித்து இறந்து போன மன்னன். சாகின்ற மனிதனைப் பெட்டிக்குள் அடைத்து வைத்து உயிர் எப்படி வெளியேறுகிறது என்று ஆராய்ச்சி செய்த மன்னன். செரிமானம் ஆராய்ச்சிக்கு உயிருள்ள மனிதனின் குடலை வெட்டிய மன்னன். குழந்தைகள் எப்படி மொழிகளைக் கற்கிறார்கள் என்று கண்டறிய அவர்களைத் தனியறைகளில் அடைத்து வைத்த மன்னன். தன் செல்லப் பிராணி குரங்குடன் எப்போதும் வலம் வரும் இளவரசன். இது போன்ற விசித்திரக் கதாப்பாத்திரங்களை ஜெருசலேமின் வாழ்க்கையில் சந்திக்கலாம்.

மனித வரலாற்றில் நீண்ட காலம் பேசப்பட்ட நகரங்கள் எதென்ஸ் மற்றும் ஜெருசலேம் மட்டும்தான். பிறந்தது முதல் இன்றுவரை ஜெருசலேமின் கவர்ச்சி மங்கவே இல்லை. ஜெருசலேமில் இல்லாதவர்கள் ஜெருசலேமையும் தத்தம் மதநூல்களில் சொல்லப்படும் காட்சிகளையும் தாம் வாழும் இடத்திலேயே கற்பனை செய்து கொண்டார்கள். அக்கற்பனைகளின் விளைவாக அமெரிக்காவில் மட்டும் 18 ஜோர்டான், 12 கானான், 66 சேலம், 18 ஹெப்ரான், 1 இஸ்ரேல், 4 ஜெருசலேம், 9 பாலஸ்தீன் என்ற நகரங்கள் உள்ளன. நசரேத் என்ற பெயரில் 2 நகரங்களைத் தமிழ்நாட்டில் கேள்விப்பட்டிருக்கிறேன். சரி, தமிழ்நாட்டுச் சேலம் பெயர்க்காரணம் உங்களுக்குத் தெரியுமா?

அக்கற்பனைகள் தூரத்துத் தேசங்களின் அரசியலைக் கூட ஆக்கிரமித்து இருந்தன என்பதை அறிய, அமெரிக்கா சுதந்திரம் அடைந்த பிறகு அதன் சின்னமாக (American Great Seal) தாமஸ் ஜெபர்ஸன் பரிந்துரை செய்த படத்தை இணையத்தில் பாருங்கள். யூதர்களின் சாலமோன் தேவாலய‌த்திற்குப் போட்டியாக கான்ஸ்டான்டிநோபிளில் ரோமானியர்களால் கிறித்தவர்களின் ஹேகியா சோபியா கட்டப்பட்டது. கான்ஸ்டான்டிநோபிள் இஸ்தான்புல் ஆனபின் மசூதியாகி இன்று அருங்காட்சியகமாக இருக்கிறது. அதற்குப் போட்டியாக ஜெருசலேமில் இஸ்லாமியர்களின் அல் அக்சா மசூதி கட்டப்பட்டது.

யூதர்களுடன் சமரசம் பேசியதற்காக‌ எகிப்தின் அதிபர் ஒருவர் கொல்லப்பட்டு இருக்கிறார். அரபுகளுடன் சமரசம் பேசியதற்காக‌ இஸ்ரேலியப் பிரதமர் ஒருவர் கொல்லப்பட்டு இருக்கிறார். ஜெருசலேமைப் பகிர்ந்து கொள்ள உருவான 40 திட்டங்கள் இதுவரை தோல்வி அடைந்துள்ளன. கோயில் மலையைப் பகிர்ந்து கொள்ள மட்டும் 13 மாதிரிகள் கிடப்பில் உள்ளன. 400 வருடங்கள் கிறித்தவ, 1300 இஸ்லாமிய, 1000 வருடங்கள் யூத சாயலுடன் இருந்த ஜெருசலேம், மதங்களின் அதிகாரம் அரசியல் சண்டைகள் இல்லாமல் மதநல்லிணக்கத்துடன் சில காலங்கள் இருந்திருக்கிறது. அவை பொற்காலங்கள்! புத்தகத்தின் கடைசியில் அதிகாலை 4 மணியில் இருந்து 5 மணிக்குள் பழைய ஜெருசலேம் எப்படி படிப்படியாக எழுந்து தனது மத ஆராதனைகளுடன் தினமும் தன் பணிகளைத் தொடங்குகிறது என அழகாக விளக்குகிறார் ஆசிரியர். யூதம் கிறித்தவம் இஸ்லாம் மதங்கள் தங்களுக்குள் பல உட்பிரிவுகள் இருந்தாலும் அந்த மதிலுக்குள் தங்கள் மத அடையாளங்களைப் பகிர்ந்து கொள்ளும் காட்சி அற்புதம்.
(http://www.dancutlermedicalart.com)
20‍/07/1951. அல் அக்சா மசூதிக்குள் ஜோர்டன் மன்னர்
முதலாம் அப்துல்லாவைக் கொன்றவனின் உடல்
ஜெருச‌லேம் வரலாறு பற்றிய எனது சொந்தக் கருத்துகள்: 
பிடித்த நபர்கள்:
1. முகம்மது நபி
2. சுல்தான் சலாவுதீன்
3. யாஸர் அராபத் (ஜெருச‌லேம் மீது யூத‌ர்க‌ளின் உரிமையை ஒட்டுமொத்த‌மாக‌ ம‌றுத்த‌து த‌விர‌)
4. தியோட‌ர் ஹெர்ஸ‌ல்
5. முத‌லாம் உம‌ர் 
6. முத‌லாம் முஆவியா (Muawiyah I)
7. ஒட்டாம‌ன் பேர‌ர‌ச‌ன் சுலைமான் (Suleiman the Magnificent)
8. பெஞ்ச‌மின் டிஸ்ரேலி (Benjamin Disraeli)
9. ரோமானியப் பேரரசன் இர‌ண்டாம் ஃப்ர‌டெரிக் (Frederick II)
10. ரோமானியப் பேரரசன் ஜீலிய‌ன் (Julian)

பிடிக்காத நபர்கள்:
1. போப் அர்பன் 2
2. அடால்ப் ஹிட்லர்
3. ப‌ல‌ ரோமானிய‌ ம‌ன்ன‌ர்க‌ள். குறிப்பாக காலிகுலா நீரோ ஹாட்ரியன்
4. மார்டின் லூதர்

திரிந்துபோன வரலாற்றிற்காக‌ பரிதாபப்பட்டேன்:
1. அப்சலோம் - தாவீதின் மகன்
2. மம்லுக் சுல்தான் பைபார்ஸ்
3. தொழுநோய் மன்னன் நான்காம் பால்ட்வின் (Baldwin IV)
4. ஒட்டாமன் பேரரசு
5. பரபாஸ் - இயேசு கிறித்துவிற்குப் பதிலாக விடுதலை செய்யபட்டதற்காக கெட்டவனாகி விட்டார்

(http://briannibbe.files.wordpress.com)
Dome of the Rockக்கும் 1,50,000 கல்லறைகளுக்கும் இடையில் தங்க வாயில்
கனவு கற்பனை நம்பிக்கை என்ற சக்திகளால் தான் இதுவரை ஜெருசலேம் வாழ்ந்து கொண்டிருக்கிறது; இனிமேலும் வாழும். நம்பிக்கை ஜெருசலேமின் அடையாளம். தனது மீட்பர்களைத் தவிர வேறு யாரையும் அது நம்புவதில்லை. உலக அழிவு பற்றிய புரளிகளை நம்புவதில்லை. பல போலிகளை நிராகரித்து விரட்டி இருக்கிறது ஜெருசலேம். உண்மையை நிரூபிக்க தீக்குளித்தவனைக் கூட நம்புவதில்லை ஜெருசலேம். எந்தவொரு கொடிய சம்பவத்திலும் அந்த நம்பிக்கைதான் ஜெருசலேமை முன்னோக்கி நகர்த்தி இருக்கிறது. இன்றைய ஜெருசலேமின் நிலைமையைப் பார்க்கும் நமக்கெல்லாம் பரிதாபமாக இருக்கலாம். ஆனால் பிரிட்டன் மறைமுகமாகத் துண்டாட நினைத்தபோது, பேரரசர்கள் தங்கள் மத அடையாளங்களை மீட்டெடுக்க ஜெருசலேமைச் சுற்றிச் சுற்றி வந்த‌போது, தங்கள் புனிதத்தலங்கள் சிதில‌மாகியபோது என்று பல கொடூர சம்பவங்களைச் சந்தித்த ஜெருசலேமிற்கு இன்றைய நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்று வரலாற்றின் பக்கங்கள் நினைக்க‌ வைக்கும். எந்த நிலையும் மாறும் என்பதில்தான் ஜெருசலேமின் நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையில்தான் தங்கவாயிலின் வாசலில் 1,50,000 மேற்பட்ட கல்லறைகள் இருக்கின்றன. எந்த நிலை மாறினாலும் தங்கவாயில் மட்டும் உலக அழிவு வரை திறக்கப்படாது!

- ஞானசேகர்

101. CONFESSIONS of an ECONOMIC HIT MAN

$
0
0

மிகவும் வேண்டப்பட்ட விரோதியும், வேண்டப்படாத நண்பனுமாகிய பிரேம்குமார் இந்தப் பதிவு மூலம் எங்களுடன் இணைகிறார்.
- சேகரும் சேரலும்

You Control the Debt, you control everything.
- The International (movie)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: Confession of an Economic Hit Man
ஆசிரியர் : ஜான் பெர்கின்ஸ்
வெளியீடு : Plume (December 27, 2005)
பக்கங்கள் : 300
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
30 வருடங்களாகச் செதுக்கப்பட்ட போராட்டங்கள் நம் கண்முன்னே துடைத்து எறியப்பட்ட அதே வேளையில் லிபியாவில் திடீரென்று தோன்றிய போராளிகள் ஆட்சியைப் பிடித்தனர். ஒரு திரைப்படத்தைப் போல் நாம் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்க சத்தமே இல்லாமல் எண்ணெய் வயல்களைத் தனதாக்கிக் கொண்டது British Petroleum நிறுவனம். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை எதிர்த்து போராடுவதாகச் சொல்லி எண்ணெய்க் குழாய்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்களைத் தனதாக்கிக் கொண்டன‌ அமெரிக்க நிறுவனங்கள். ஐநாவின் பொருளாதார தடையினால் இராக்கில் மருத்துவ உதவியின்றி பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் இறந்தனர். இராக்கினால் இனி எந்த பேரழிவு ஆயுதங்களைப் பற்றியும் யோசித்து கூட பார்க்க முடியாது என்று ஆய்வு செய்து ஐநாவில் அறிக்கை சமர்பித்த ஆறு மாதத்தில் பேரழிவு ஆயுதம் இருப்பதாக கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு இராக்கின் எண்ணெய் வயல்களைக் கைப்பற்றிக் கொண்டன‌ அமெரிக்க நிறுவன‌ங்கள். இவற்றை எல்லாம் செய்திகளில் நீங்கள் எளிதாக பார்க்கமுடியாது. ஏனெனில் மிகப்பெரிய ஊடகங்கள் அனைத்தும் பெரும் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. NBC  - General Electric, ABC - Disney, CBS -Viacom, CNN - AOL & Time Warner.

உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள்  உலக நாடுகள் மீது மூன்று வகையான தாக்குதல்களைத் தொடுக்கின்றன.
1. பொருளாதாரத்தை ஆயுதமாகக் கொண்டு நாடுகளைக் கடனாளி ஆக்குவது - இந்தோனேசியா, சௌதி
2. புரட்சி வெடிப்பதாக அறிவித்து அல்லது விபத்தை ஏற்படுத்தி  ஆட்சியாளர்களைத் தீர்த்துக் கட்டுவது அல்லது ஆட்சியைக் கவிழ்ப்பது
ஜெய்மி ரோல்டோஸ்  (இகுவேடார் ஜனாதிபதி)
ஓமர் டொரிஜோஸ் (பனாமா ஜனாதிபதி)
அலெண்டே (சிலி ஜனாதிபதி)
முகமது மொசதே (ஈரான்)
3. போர் அறிவித்து நாட்டை ஆக்கிரமிப்பது - பனாமா, ஈராக்

இதில் முதல்வகை தாக்குதலைத் தொடுப்பதற்கு இப்புத்தகத்தின் ஆசிரியர் ஜான் பெர்கின்ஸ்  போன்றவர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள். ஆலோசனை நிறுவனம் ஒன்றில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்தினால் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஜான் பெர்கின்ஸ் முதன்மை பொருளாதார வல்லுநர், பொருளாதாரம் மற்றும் பிராந்திய திட்டமிடல் மேலாளர் என பல பதவிகள் வகித்தாலும் இவருடைய பணி அமெரிக்க பெரும்  நிறுவனங்களின் இலாபத்திற்காக நாடுகளை மீள முடியாத கடனில் சிக்கவைப்பது. மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றம் ஏற்பட போவதாக நம்பவைத்தோ அல்லது லஞ்சமாக பெண்ணோ பணமோ பொருளோ கொடுத்து உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மிகப்பெரிய அளவில் கடன் பெறவைப்பது. கடனைத் திருப்பி செலுத்த முடியாத போது இந்நாடுகளின் இயற்கை வளங்களும் மக்களும் பெரும் நிறுவனங்களுக்கு இரையாகின்றன.
(http://www.ingoodbooks.com)
ஜான் பெர்கின்ஸ் இப்புத்தகத்தில்  அவர் பங்குபெற்ற திட்டங்களைப் பற்றியும் அதன் விளைவுகளையும் விவரிக்கிறார். இவரைப் போன்றோரின் வெற்றி, நாடுகளை வளர்ச்சியின் மாயையில்  சிக்கவைத்து அடிமைகளாக்கி விடுகிறது. இவர்களின் தோல்வி, பல நேரங்களில் மக்களை நேசிக்கும் தலைவர்களின் மரணத்தில் முடிகிறது. இகுவேடாரின் ஜனாதிபதி  ஜெய்மி ரோல்டோஸ், பனாமா ஜனாதிபதி ஓமர் டொரிஜோஸ் தனது மக்கள் நலன் சார்ந்து முடிவுகள் எடுத்ததற்காக விபத்தில் கொல்லப்பட்டனர். சிலியின் ஜனாதிபதி தனது இடதுசாரி கொள்கையின் மூலம் பெருநிறுவன‌ங்களை எதிர்த்துக் கொண்டதால் புரட்சியில் தன் உயிரை இழக்க நேர்ந்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த  Summer Institute of Linguistics என்ற கிறிஸ்துவ அமைப்பு அமேசான் காடுகளில்  எண்ணெய் வளங்கள் நிறைந்த பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் உணவுகளை வழங்கி பிற்பாடு அவர்களுக்கு மருத்துவ உதவிகள் உடைகள் மற்றும் உணவு வழங்கி அவர்களை எண்ணெய் நிறுவனங்களின் நலனுக்காக இடம்பெயர வைத்தனர். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தமக்கு ஆதரவளிக்க யாருமில்லாததால் இம்மக்கள் போதைப்பொருள் மற்றும் ஆள் கடத்தலின் மூலம் வரும் பணத்தில் ஆயுதம் வாங்கி தம் காடுகளையும் தாம் நேசிக்கும் உயிரினங்களையும்  காப்பதற்காக போராடுகின்றனர். இவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு இவர்கள்   வெறும் போதை பொருள் வியாபாரிகள் என்ற பிம்பத்தை உருவாக்க முனைகின்றன ஊடகங்கள்.

வெனிசுவேலாவிலும் ஈரானிலும் ஏற்பட்ட தோல்விகளை உங்களின் வாசிப்பிற்கே விட்டு விடுகின்றேன். ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில் இந்நூலின் தமிழாக்கத்தை விடியல் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

குடும்ப அட்டைகளைப் பிடுங்கிக்கொண்டு ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கான திட்டங்களையும் பெரும் முதலாளிகளின் நலனிற்காக தேசிய முதலீட்டு வாரியத்தை எல்லா சட்டத் திட்டங்களுக்கும் விதிகளுக்கும் அப்பாற்பட்டதாகவும் உருவாக்கத் துடிக்கும் அரசு; உலகில் பட்டினியாய் இருப்பவர்களில் 25 சதவிகிதம் இந்தியாவில் இருக்கையில் பெரும் நிறுவன‌ங்கள் பண்ணையார்களாவதற்கு விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேர அறிவுறுத்தும் அரசின் பிரதம மந்திரி. ஓர் இனத்தின் அழிவு அணு உலை வடிவத்தில் நம் வாயிலை நெருங்கிவிட்ட நிலையில் வால்மார்ட் நம் வாழ்வாதாரத்தைப் பறிக்கத் துடிக்கின்ற இந்நேரத்தில் செய்திகளுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் உண்மையைக் கண்டுணர்வது நம் கடமையாகிறது.

- பிரேம்குமார்
 (http://premkumarkrishnakumar.wordpress.com/)

102. கருப்பாயி என்கிற நூர்ஜஹான்

$
0
0
இங்கிலாந்தில் நான் படித்தபோது என்னை ஒருவன் கேட்டான்: "Who are you?". நான் சொன்னேன்: "Khushwant". அவன் மீண்டும் கேட்டான்: "What are you?". நான் சொன்னேன்: "Khushwant, an Indian". இந்தியா வந்தபோது என்னை ஒருவன் கேட்டான்: "Tum kaun ho?". நான் சொன்னேன்: "குஷ்வந்த்". அவன் மீண்டும் கேட்டான்: "Thu kya ha?". நான் சொன்னேன்: "குஷ்வந்த் சிங்".
- குஷ்வந்த் சிங்
------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : கருப்பாயி என்கிற நூர்ஜஹான் (புதினம்)
ஆசிரிய‌ர் : அன்வர் பாலசிங்கம்
வெளியீடு : கொற்றவை பதிப்பகம், காரைக்குடி
முதற்பதிப்பு : 2011
விலை : 100 ரூபாய்
பக்கங்கள் : 98 (தோராயமாக 32 வரிகள் / பக்கம்)
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
------------------------------------------------------------------------------------------------------------
வெள்ளை பனியன் அணிந்த சிம்ரன் இடையில் ஃப்ளோரசன்ட் ஆரஞ்சு வண்ணத்தில் தீண்டாமைக் கிராமங்கள் என்றொரு அட்டைப் படத்தை ஒரு தமிழ் வார இதழ் வெளியிட்டதாக வினவு தளத்தில்படித்தேன். அதன் பிறகு இலியானா இடை வெளியிடப்பட்டு இருந்தாலும் ஆச்சரியமில்லை. இப்படி இடையில் சொருகி இல்லாத இடை போல தீண்டாமையைக் காட்டும் ஊடகங்களுக்கு இடையே, இல்லாமல் இல்லை என்கிறது எதார்த்தம்.

சாதிப் பிரிவினைகளில் இருந்து, தீண்டாமையில் இருந்து தப்பிக்க இந்து மதத்தில் இருந்து மதம் மாறுவது இந்தியாவில் ஒன்றும் அரிதான நிகழ்ச்சியல்ல. ஒருமுறை தமிழ்நாட்டில் ஆட்சியையே மாற்றி அமைக்கும் சக்தியாக‌ மதமாற்றம் இருந்திருக்கிறது. ஆங்காங்கே சின்ன சின்ன அளவில் பணம் காதல் அரசியல் காரணங்களுக்காகக் கூட நிகழ்ந்து கொண்டிருந்தாலும், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய மதமாற்றம் ஒன்றும் நிகழ்ந்தது. 1956ல் நாக்பூர் நகரில் தனது ஆதரவாளர்கள் கிட்டத்தட்ட 5,00,000 பேருடன் புத்த மதத்திற்கு மாறினார் அம்பேத்கர். நான் மராட்டிய மாநிலத்தில் பார்த்தவரை, ஊடகங்களில் கேள்விப்பட்ட வரை அவர்களின் சமூக நிலையை அந்த மதமாற்றம் கண்டிப்பாக உயர்த்தி இருக்கிறது.

இந்நிகழ்ச்சி நடந்து பல வருடங்களுக்குப் பின் பிறந்த என்னைப் போன்றவர்களுக்கு எந்தப் பாடப் புத்தகமும் சொல்லவில்லை. ஊடக‌ங்கள் அறிமுகப்படுத்தவும் இல்லை; ஞாபகப்படுத்தவும் இல்லை. இதே போல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த இன்னொரு மதமாற்றம் நான் பிறந்ததற்குச் சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்திருக்கிறது. அதுவும் தமிழ்நாட்டில். போன வருடம்தான் படித்துத் தெரிந்து கொண்டேன். கிழக்குப் பதிப்பக வெளியீடான, பா.ராகவன் அவர்களின் ஆர்.எஸ்.எஸ். புத்தகத்தின் ஒன்பதாவது கட்டுரையில் சொல்லப்பட்ட சில‌ விசயங்கள்:

பிப்ரவரி 19, 1981. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிகச் சிறிய கிராமம் மீனாட்சிபுரம். 300 தலித் குடும்பங்கள். அதில் 210 குடும்பங்கள், சுமார் 1000 பேருக்கு மேல் சட்டென்று இஸ்லாத்துக்கு மாறினார்கள். இனி நாங்கள் ஹிந்துக்கள் இல்லை. எனவே தலித்துமில்லை. முஸ்லீம்கள். மீனாட்சிபுரம் ரஹ்மத் நகர் ஆகியது. கிட்டத்தட்ட இந்தியா முழுவதையும் அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் அது. இந்த மதமாற்றச் சம்பவத்தில் வளைகுடா பணத்தின் பெரும்பங்கு இருக்கிறதென விஷ்வ ஹிந்து பரிஷத்தும், இந்து முன்னணியும் குற்றம் சாட்டின. மதம் மாறியவர்களைத் திரும்ப மீட்டெடுக்க ஆர்.எஸ்.எஸ். மீனாட்சிபுரம் புறப்பட்டது. மதம் மாறியவர்களை நேரில் சந்திக்க திராவிடர் கழகமும் போனது. பல மடங்களின் ஆதீனங்களும், அப்போதைய பாரதீய ஜனதா தலைவர் வாஜ்பாயும் கூட போனார்கள். அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். இந்த மதமாற்றத்தைக் கண்டித்தார். இதனால் அதிருப்தி கொண்ட சில அதிமுக உறுப்பினர்கள் கட்சியைவிட்டு விலகினர். மீனாட்சிபுரம் போல முதுகுளத்தூரும் மதம் மாறத் திட்டமிட்டிருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 

இச்சம்பவம் தெரிந்தவுடன் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த எனது நண்பர்களிடம் விசாரித்தேன். யாருக்குமே மீனாட்சிபுரம் தெரியவில்லை. ஒருமுறை புனேயில் இருந்து ரயிலில் வந்து கொண்டிருந்த போது திருநெல்வேலி பக்கம் போகும் வயதானவர்களிடம் மீனாட்சிபுரம் பற்றி விசாரித்தேன். உடனே என் சாதி மதம் விசாரித்தார்கள். மேற்கொண்டு பேசவில்லை. 

மீனாட்சிபுரத்தில் 1960களிலேயே ஒரு முறை மதமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சுமார் 50 குடும்பங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறியிருக்கிறார்கள். ஆனால் அதனால் அவர்களின் சமூக நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 'தாழ்த்தப்பட்டவன் கிறித்தவன் ஆனால், இன்னொரு தாழ்த்தப்பட்ட கிறித்தவர் தான் பெண் கொடுத்து, பெண் எடுக்கிறார். ஒரு நாடார் கிறித்தவர், தாழ்த்தப்பட்ட கிறித்தவர் வீட்டில் சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை. அதனால் தான் இம்முறை நாங்கள் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்தோம். தீண்டத்தகாதவன் என்ற வித்தியாசம் இல்லை பாருங்கள்' என்றார்கள்.

உண்மைதான். சாதியிடம் கிறித்தவ மதம் தோற்றுத்தான் போனது. நாட்டின் பிரதமரைக் கூட கைம்பெண் என்பதற்காக இடையில் திரை கட்டி முகத்தைப் பார்க்காமல் பேசியது இந்து மதம். பாதிரியார் தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக கடவுளைக் கூட பார்க்காமல் கோவிலில் முதுகு திரும்பி உட்கார்ந்தது கிறித்தவ மதம்.

மினாட்சிபுரம் ரஹ்மத் நகராகி 32 ஆண்டுகள் கடந்துவிட்டன‌. அம்மக்களின் சமூக நிலையைக் காலம் என்ன செய்திருக்கிறது? புத்தகத்திற்குள் போகலாம்.
(http://www.kalachuvadu.com)
'பாபர் மசூதியும்
முதிர்கன்னியும் ஒன்றுதான்
இடிப்பதற்குப்
பலர் இருக்கிறார்கள்
கட்டுவதற்கு யாருமேயில்லை'
என்றொரு புதுக்கவிதை உண்டு. மசூதிக்குப் போகும் ஒரு கிராமத்து முதிர்கன்னிகளின் கதையிது.

கருப்பாயி என்கிற நூர்ஜஹான். மதம் மாறியவர்களுக்கும் மாற இருப்பவர்களுக்கும் சமர்ப்பணம் என ஆரம்பிக்கிறது புதினம். திருநெல்வேலி மாவட்டத்தில் காமாட்சிபுரமாய் இருந்த பிலால் நகர் தான் புதினத்தின் கதைக்களம். 30 ஆண்டுகளுக்கு முன் காமாட்சிபுரம் என்ற கிராமம் தீண்டாமைக்கு எதிராக பிலால் நகராக மாறுகிறது. வைத்து அழகு பார்க்க முடியாத மீசைக்குப் பதிலாக தாடி. தலையில் கட்ட முடியாத துண்டுக்குப் பதிலாக குல்லா. மாராப்பே போட முடியாத தாழ்த்தப்பட்ட நிலைக்குப் பதிலாக‌ தலைமூடி முக்காடு. கருப்பசாமி காதர் பாயானார். கருப்பாயி நூர்ஜஹானானாள்.

பிலால் நகர் பிறந்தபோது சிறுமியாய் இருந்த நூர்ஜஹானின் தற்கொலையில் ஆரம்பித்து அவளின் தகனத்துடன் முடிகிறது புதினம். அந்த ஒரு நாளில் அம்மக்கள் இன்னும் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளைப் பதிவு செய்கிறார் ஆசிரியர். காமாட்சிபுரம் பிலால் நகர் மூலம் மீனாட்சிபுரம் ரஹ்மத் நகரைச் சொல்கிறாரா ஆசிரியர்? அல்லது அவை உண்மை ஊர்களின் பெயர்களா? ஆசிரியருக்கும் இவ்வூர்களுக்கும் சம்மந்தம் உண்டா? இது போன்ற பல கேள்விகளுக்கு என்னால் புத்தகத்தில் விடை காண முடியவில்லை.

எல்லா விசயங்களையும் சொல்லிவிட வேண்டிய அவசரத்தில் ஒரு புதினமாக உருப்பெறுவதில் கொஞ்சம் தடுமாறி இருந்தாலும், புதினத்தின் சில விசயங்கள் எனக்குப் பரிட்சயம் இல்லாமல் போனாலும், காந்தி பற்றிய சில கருத்துகளில் சுத்தமாக எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், எந்த ஒரு மதத்திற்கும் எதிராகவும் ஆதரவாகவும் இல்லாமல், உடனடியாகக் கவனிக்கப் படவேண்டிய ஒரு சமூகப் பிரச்சனையை ஆவணப்படுத்தும் குறிக்கோளோடு புதினத்தை அமைத்திருக்கிறார் ஆசிரியர். இப்பதிவின் குறிக்கோளும் அதுவே.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)


103. EHT DOG FO LLAMS SGNIHT

$
0
0
(குழந்தைப் பருவத்தில் அதைத் தொலைத்தவர்களுக்காக‌))))))))))
நாளைக்கும் இது வேண்டுமென்ற
வேட்கை
வாழ்க்கையை
அப்படியே வாழச் சொல்கிறது
‍- மகுடேசுவரன் (காமக்கடும்புனல் நூலிலிருந்து)

You're not the Sinners. You're the Sinned against. You were only children. You had no control. You are the victims, not the perpetrators.

-------------------------------------------------------
புத்தகம்: The God of Small Things (புதினம்)
ஆசிரியர்: அருந்ததி ராய்
மொழி: ஆங்கிலம்
வெளியீடு: Penguin Books
முதற்பதிப்பு: 1997
விலை: தோராயமாக 300 ரூபாய்
பக்கங்கள்: 340 (தோராயமாக 34 வரிகள் / பக்கம்)
சிறப்பு: 1997ல் புக்கர் பரிசு
-------------------------------------------------------
இரட்டையர்களும் கட்டிடக்கலை ஆர்க்கிடெக்ட்களும் பாராட்டும் இப்புத்தகத்தைப் பற்றி பேசுவதற்கு முன், ஆசிரியரைப் பற்றி பேசுவதற்கு நிறைய இருக்கின்றன. அருந்ததி ராய். 1961ல் வங்காள‌ இந்துத் தந்தைக்கும், கேரளக் கிறித்தவத் தாய்க்கும் மேகாலயாவில் பிறந்து, குழந்தைப் பருவத்தைக் கேரளாவில் அய்மனம் கிராமத்தில் கழித்தவர். டெல்லியில் ஆர்க்கிடெக்ச்சர் படித்தவர். காஷ்மீர் பிரிவினையாளர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் ஆதரவாக இவர் சொன்ன கருத்துகள் மூலம் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு, வெறுக்கப்பட வேண்டிய நபர் என்று சமூகத்தின் பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டவர். சாகித்ய அகாதமி விருது மறுப்பு, பொக்ரான் இரண்டாம் அணுகுண்டுச் சோதனை (The End Of Imagination), நர்மதா சர்தார் சரோவர் அணை என்று அரசின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சித்து வருபவர். பல பொறுப்புள்ளவர்கள் சொல்வதற்குப் பயப்படும் சில உண்மைகளை வெளிப்படையாகப் பேசுவதிலும், ஒவ்வொரு பிரச்சனையையும் பார்க்கும் கோணத்திலும் என்னை மிகவும் கவர்ந்தவர்.

அருந்ததி ராய். நான் சென்னை வந்தபின் முதன்முதலாகக் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி இவரைப் பார்க்கத்தான். சென்ற வருடம் ஜீலையில் காலச்சுவடு பதிப்பகத்தின் நான்கு புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்ச்சி அது. 'சின்ன விஷயங்களின் கடவுள்' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்ட இவரின் புத்தகமும் அவற்றில் ஒன்று. அந்நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் சுகுமாரன் அவர்கள், புதினம் மூலம் புக்கர் பரிசு வாங்கி பிரபலமாகும் முன்னரே இரண்டு விசயங்களில் அருந்ததி ராயின் பெயரைக் கவனத்தில் வைத்திருந்ததாகக் குறிப்பிட்டார். அதில் ஒன்று, பூலான் தேவியின் வாழ்க்கைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட‌ பாண்டிட் க்குயின் என்ற‌ திரைப்படத்துக்கு அருந்ததி ராய் எழுதிய விமர்சனம் (The Great Indian Rape Trick). வயதுக்கு வராத சிறுமிகளுக்குக் கதாநாயகி என்ற பெயரில் உதட்டு முத்தமும் படுக்கையறைக் காட்சிகளும் கலை என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் தொலைக்காட்சிப் பெட்டியில் கொண்டு சேர்க்கும் அரும்பணி செய்யும் கலை வித்தக‌ர்களை ஊக்குவிக்கும் இச்சமூகத்தில், அவ்விமர்சனத்திற்குப் பின் இருக்கும் தைரியம் என்னை ஆச்சரியப் படுத்தியது; சிந்திக்கவும் வைத்தது. சுகுமாரன் அவர்களின் முழு உரை கொண்ட காலச்சுவடின் சுட்டி இது: http://www.kalachuvadu.com/issue-153/page18.asp 
(http://en.wikipedia.org)
The God of Small Things. எஸ்தாவும் ராஹேலும் இரட்டையர்கள். எஸ்தா ஆண். ராஹேல் பெண். ஒரே நேரத்தில் தனித்தனியாகக் கருவுற்ற இரு கரு முட்டைகளில் இருந்து பிறந்தவர்கள். Dizygotic. ஆசிரியரைப் போலவே வங்காள இந்துத் தந்தைக்கும், கேரளக் கிறித்தவத் தாய்க்கும் மேகலயாவில் பிறந்தவர்கள். 18 நிமிட இடைவெளியில் பிறந்த இவ்விரட்டையர்களின் ஏழாம் வயதில், 23 வருடங்களுக்குப் பிரித்து வைப்பதற்காகக் காலம் செய்யும் சின்னச் சின்ன விசயங்களே கதைச்சுருக்கம்.

பெற்றோர்களை எதிர்த்து மதம்விட்டு மாநிலம்விட்டு திருமணம் செய்துபோய், கணவனைச் சகிக்க முடியாமல் தன் சொந்த ஊரான கேரளத்து அய்மனம் கிராமத்திற்கு இரட்டையர்களுடன் வந்து விடுகிறாள், அவர்களின் தாய் அம்மு. கணவன் அல்லது தகப்பன் என்று சமூகம் பெண்ணிற்குத் தந்திருக்கும் இரண்டே வாய்ப்புகளில் தனக்கான முதலெழுத்தைத் தேர்ந்தெடுக்கும் குழப்பத்திலேயே பிறந்த வீட்டில் வேண்டப்படாத ஆளாக தன் குழந்தைகளுடன் இருக்கிறாள் அம்மு. தன்னை அடக்கி ஆண்ட கணவன் இறந்த பின் தொலைக்காட்சிப் பெட்டியுடன் காலம் கழிக்கும் அம்முவின் தாய். ஒரு பாதிரியார் மேல் காதல் கொண்டு கன்னியாஸ்திரி மடத்தில் சேர்ந்து, அவர்கள் கொடுமை தாங்க முடியாமல் வெளியேறி, கன்னியாகவே வாழ்ந்து வரும் அம்முவின் அத்தை. இந்த மூன்று பெண்களுக்கிடையே வாழ்ந்து வருகிறார்கள் இரட்டையர்கள்.

அம்முவின் ஓரே அண்ணனின் விவாகரத்தான வெளிநாட்டு மனைவிக்குச் சோஃபி மோல் என்ற மகள். இரட்டையர்களின் மாமன் மகளான‌ சோஃபி மோலின் மரணத்துடன் ஆரம்பமாகிறது புதினம். வெளிநாட்டில் இருந்து வரப்போகும் சோஃபி மோலை வரவேற்கத் தயாராவது முதல் அவள் இறப்பிற்குப் பின் இரட்டையர்கள் பிரிந்து போவது வரையிலான கிட்டதட்ட ஒருமாதச் சம்பவங்கள்தான் புதினம். ஒரே இரவில் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றிக் காட்டும் கதை.

ஒரு போலீஸ்காரர் அம்முவின் முலைகளை லத்தியால் வருடிக் கொண்டே இரட்டையர்களை வேசியின் பிள்ளைகள் என திட்டும்போது, அழுது கொண்டிருக்கும் அம்முவிடம் வேசி என்றால் என்ன எனக் கேட்கத் தடுமாறுவது - பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கையில் விந்துப் பிசுபிசுப்புடன் அதைச் சொல்வதா வேண்டாமா என எஸ்தா தடுமாறுவது - கடற்பயணத்தில் இறப்பவர்களைக் கழுத்தில் கல்லைக் கட்டி கடலில் தள்ளுவார்கள் என்றால் கடற்பயணம் தொடங்கும் போது எத்தனை கற்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்று எப்படி தீர்மானிக்கிறார்கள் என கேட்பது - ராஹேல் மூக்குச் சிந்தி சளி எடுக்கும் போது, சிப்பியில் இருந்து முத்தெடுத்தது போல் சுற்றி இருக்கும் குழந்தைகள் எல்லாம் ஆச்சரியமாகப் பார்ப்பது - பெண்கள் இடையே வளர்ந்து வரும் எஸ்தா முதன்முதலில் ஒரு பொது இடத்தில் ஆண்களுக்கான கழிவறையை எதிர்கொள்வது என்று புத்தகம் பெரும்பாலும் குழந்தைகளில் பார்வையில், குறிப்பாக ராஹேலில் பார்வையில் பேசுகிறது.

இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் மூலம், உலகிலேயே முதன்முறையாக ஜனநாயக முறையில் கேரளாவில் ஆட்சியைப் பிடித்த கம்யூனிச‌மும் புதினத்தினூடே பயணிக்கிறது. கேரளாவில் கம்யூனிசம் எளிதாக மக்களை ஈர்த்ததற்கான காரணங்களையும், காலப்போக்கில் போலி கம்யூனிஸ்டுகள் உருவாகி, மக்களையும் தொழிற்சங்கங்களையும் தங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பதையும் பதிவு செய்கிறது புதினம்.

'கடவுளின் சொந்த நாடு' என்று இன்று அழைக்கப்படும் கேரளாவைத் துறவி விவேகானந்தர் 'பைத்தியக்கார விடுதி' என்று அழைத்தார். அங்கு நிலவிய சாதீய கொடுமைகள் அப்படி. குறிப்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய கொடுமைகளின் தாக்கத்தை இன்றும் கூட தென்தமிழகத்தில் காணலாம். நான் முந்தைய புத்தகத்தில் சொன்னது போல, மதம் மாறி வந்தவர்களைக் கிறித்தவ மதத்தால் சாதியிடம் இருந்து காப்பாற்ற முடியவில்லை. அரிசிக் கிறித்தவர்கள் என்று மற்றவர்களால் கிண்டல் செய்யப்பட்ட அவர்களின் நிலையைச் சுதந்திர இந்தியா இன்னும் கொடுமையாக்க, 'கொதிக்கும் கொப்பறையில் இருந்து தப்பிக்கப் போய் எரியும் கொள்ளிக்குள் விழுந்தது' போல் என்கிறார் ஆசிரியர். கம்யூனிசம் கிறித்தவம் சாதீயம், இவை தங்களுக்குள் செய்துகொண்ட சமரசங்களைத் தன் கதைமாந்தர்கள் மூலம் பேசுகிறது புதினம்.



(http://en.wikipedia.org)

கதை சொன்ன விதத்தில் நான் ரசித்த இரண்டு விசயங்கள் உண்டு. ஒரே சீராக செல்லாமல், முன்னும் பின்னும் மாறி மாறி செல்லும் கதையோட்டத்தில் (non-sequential), சில விசயங்களும் சில வாக்கியங்களும் திரும்பத் திரும்ப வருகின்றன. ஒரு கட்டடத்தை வடிவமைக்கும் ஆர்க்கிடெக்ட், சில வடிவமைப்புகளைத் (patterns) திரும்பத் திரும்ப அமைத்து ஓர் அழகான வீட்டை வாழப் போகிறவனுக்கு ஏதுவாக வடிவமைத்துக் கொடுப்பது போல், தனது புதினத்தையும் அமைத்து இருப்பதாகச் சொல்கிறார் ஆசிரியர். திரும்பத் திரும்ப இடம் பெறும் இவ்விசயங்கள், வெவ்வேறு அர்த்தங்களைத் தருவதுடன், கதையின் அதிர்ச்சிகளின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும் என்கிறார். இதே நோக்கத்துடன் எடுக்கப்பட்ட 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படம் பார்த்து விட்டீர்களா?

நான் ரசித்த இன்னொரு விசயம், ஆங்கிலம் என்ற மொழியை அதன் அழகியலுடன் கையாண்ட விதம். சில எழுத்துகளை மட்டும் பெரிய எழுத்துக்களில் (capital letters) சொல்வது, சில வார்த்தைகளைச் சேர்த்து சொல்வது, சில வார்த்தைகளைப் பிரித்து சொல்வது (Later = Lay Ter), திரும்பத் திரும்ப சொல்வது, சில வார்த்தைகளை அப்படியே திருப்பிப் படிப்பது (ECILOP), வார்த்தைகளின் அசைகளை அந்தாதியாகப் படிப்பது என்று பெரும்பாலும் இரட்டையர்களின் மனநிலையை விளக்கப் பயன்படுத்தி இருக்கிறார். உதாரணமாக‌ Cuff-link என்ற வார்த்தை. Cuff + link = Cuff - link. சேர்ப்பதற்குக் கணிதத்தில் +; ஆங்கிலத்தில் -. இந்த முரண்பாட்டைப் பார்த்து இரட்டையர்கள் ஆச்சரியப்படுவதும், ஆங்கில வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கச் சொல்லி நச்சரிக்கும் கன்னி(யாஸ்திரி) பாட்டியைப் பற்றி பேசும் பகுதி ஒன்றில் Pronunciation என்பதை Prer NUN sea ayshun என்று சொல்வதும் சில உதாரணங்கள். மேலும் சில அழகான சொற்றொடர்கள்: Prepare to prepare to be prepared, In an unconscious gesture of television-enforced democracy, As permanent as a Government job, Room for the future breasts.

இப்புதினம் இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானது என கேரளத்து நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடரப்பட்டது. 21 அத்தியாயங்களில் கதை சொல்லும் இப்புதினத்தின் கடைசி அத்தியாயத்தின் ஒன்பதேகால் பக்கங்களை மட்டும் நகலெடுத்து சாட்சியாக சமர்ப்பிக்கப்ப‌ட்டது. சமூகத்தின் குடைச்சல்களுக்கு ஆளாகாத பெண் எழுத்தாளர் இல்லை என்பதற்கு அருந்ததி ராயும் விதிவிலக்கல்ல. அவ்வழக்கையும் புக்கர் பரிசையும் இந்தியச் சுதந்திரப் பொன்விழா ஆண்டில் தான் ஆசிரியர் எதிர்கொண்டார். எந்த ஒரு கலாச்சாரத்திற்கு ஆதரவாக வழக்கு தொடரப்பட்டதோ, அதே கலாச்சாரம் தான் நேற்று தர்மபுரியில் கலவரம் கொண்டுவந்தது. எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது, அப்சல் குரு தூக்கை எதிர்த்து ஆசிரியர் எழுதிய கட்டுரையின் தலைப்பு நினைவில் வந்து போனது - A perfect day for democracy.

தமிழில்: சின்ன விஷயங்களின் கடவுள்
ஆசிரியர்: ஜி. குப்புசாமி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

நான் ரசித்தவை:
பாத்திரம் ‍-> எஸ்தா
ப‌குதி ‍-> 12வது அத்தியாயத்தில் இரட்டையர்களின் 23 வருடப் பிரிவைப் பிரதிபலிக்கும் கதகளியாட்டம். மற்றும் 11வது அத்தியாயத்தில் அம்முவின் கனவு. காலச்சுவடு நிகழ்ச்சியில் இப்பகுதியைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆசிரியர்கள் இருவரும் வாசித்துக் காட்டினார்கள். காலச்சுவடின் சுட்டி இது: http://www.kalachuvadu.com/issue-151/page52.asp

தாய் என்ற பாசம் தேவைப்பட்ட வயதில் தூக்கி எறிந்துவிட்டு, மற்ற மகன்களின் உயிரைக் காப்பாற்ற, வஞ்சகமாக கர்ணனிடம் வரம் வாங்க, பாசம் என்ற புராதன விதிகளைச் சுமந்து கொண்டு வருகிறாள் குந்தி தேவி. கர்ணவதம் நடத்தும் கதகளியாட்டம் இப்புதினத்தில் வருகிறது. எல்லோருக்கும் தெரிந்த கதைதான். இருந்தாலும் ஏதோ புதிதாகப் பார்ப்பது போல் மக்கள் கூட்டம் ஆர்வமாகப் பார்க்கிறது. முடிந்தவுடன் அவரவர் வேலைகளைப் பார்க்க கிளம்பி விடுகிறார்கள். பெண் வேடமிட்ட ஆண்கள் எல்லாம் முலைகளைக் கழட்டி வைத்துவிட்டு, தங்கள் வீடு திரும்பி வழக்கம்போல் தங்கள் மனைவிகளை அடித்துப் புரட்டி எடுத்து, உண்மை முலைகளைப் பிசைகிறார்கள். நாளைக்கும் கதகளியாட்டம் வரும்; அப்போதும் புதிதாகப் பார்க்கப் போவதுபோல் மக்கள் வருவார்கள். ஏதோவொரு வசீகரம் அக்கதைகளில் இருக்கிறது. இப்புதினத்தின் கதைக்கும் பொருந்தும் ஆசிரியர் சொல்லும் அவ்வசீகரம்:
The secret of the Great Stories is that they have no secrets. The Great Stories are the ones that you have heard and want to hear again. The ones you can enter anywhere and inhabit confortably. They don't deceive you with thrills and trick endings. They don't surprise you with the unforeseen. They are as familiar as the house you live in. Or the smell of your lover's skin. You know how they end, yet you listen as though you don't. In the way that although you know that one day you will die, you live as though you won't. In the Great Stories you know who lives, who dies, who finds love, who doesn't. And yet you want to know again. That is their mystery and magic. 

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)
 

104. ஆழி சூழ் உலகு

$
0
0

பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்களுக்காக‌)
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : ஆழி சூழ் உலகு (புதினம்)
ஆசிரிய‌ர் : ஜோ டி குருஸ்
வெளியீடு : தமிழினி
முதற்பதிப்பு : டிசம்பர் 2004
விலை : 430 ரூபாய்
பக்கங்கள் : 551 (தோராயமாக 40 வரிகள் / பக்கம்)
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
சென்ற பதிவில் சொன்னது போல், சென்னை வந்தபின் சென்ற வருடம் ஜூலையில் நான் முதன்முதலில் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி காலச்சுவடு பதிப்பகத்தின் நான்கு புத்தகங்களின் வெளியீட்டு விழா. மறுநாள், ஞாயிற்றுக்கிழமை, லயோலா கல்லூரியில் இரண்டாவது பொது நிகழ்ச்சி. பூவுலகின் நண்பர்கள்நடத்திய ஐந்திணைச் சுற்றுச்சூழல் விழா. நம்மாழ்வார் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பசுமைப் புரட்சியின் வன்முறை, மணல் கோட்டைகள் போன்ற சுற்றுச்சூழல் பற்றிய சில நல்ல புத்தகங்கள் கிடைத்தன. இரண்டு நாட்கள் நடந்த விழாவில், நான் சென்ற நாளில் பாலையும் நெய்தலும் விவாதத் திணைகள். அதுவரை புத்தகங்களில் மட்டுமே நான் படித்திருந்த தியோடர் பாஸ்கரன் அவர்கள் பாலைத்திணை பற்றி பேசினார். நெய்தற்திணை பற்றி பேசிய பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின் மற்றும் ஜோ டி குருஸ் இருவரும் எனக்கு அன்றுதான் அறிமுகம். அவர்களிடம் இருந்து இரு புத்தகங்கள் குறித்துக் கொண்டேன். வறீதையா அவர்களின் 'என்னைத் தீண்டிய கடல்' தம்பி சேரல் தந்தார். ஜோ டி குருஸ் அவர்களின் 'ஆழி சூழ் உலகு' கேட்கப்பட்ட கடைகளில் எல்லாம் அச்சில் தற்போது வருவதில்லை என்றார்கள். 4 மாதங்களுக்குப் பின் கிடைத்தது.
(https://www.nhm.in)
ஆழி சூழ் உலகு. ஆழி என்றால் கடல் என்று என்னைப் போல் பலர் தவறாகப் புரிந்திருக்க வாய்ப்புண்டு; முழுக் கடல் அல்ல; கடலின் ஒரு பகுதி. கடலில் நுரை பொங்கும் பகுதிக்கு ஆழி என்று பெயர். மன்னார் வ‌ளைகுடாவில் மண‌ப்பாடு மற்றும் கூடங்குளத்திற்கு இடையே இருக்கும் ஆமந்துறை என்ற பரதவர்களின் துறைதான் கதைக்களம். ஆமைகள் கடலில் இருந்து கரைக்கு வந்து கூட்டங்கூட்டமாக முட்டையிடும் பகுதி என்பதால் ஆம‌ந்துறை என்ற பெயர். இருட்டில் கடலில் இருந்து கரை தெரிவதற்காக மின்சாரம் இல்லாத காலத்தில் ஆமை ஓட்டில் ஆமை நெய்யை உருக்கி திரி போட்டு எரிப்பதாலும் ஆமந்துறை என்ற பெயர். கடற்கரையில் இருந்து பார்த்தால் கிழக்கே மணப்பாடு துறையும் தென்மேற்கே கூத்தன்துறையும் கடலுக்குள் தெரியும். இவ்விரு ஊர்களுக்கும் இடையே கடற்கரை உள்நோக்கி வளைந்து இருப்பதால் புயல் காலங்களில் அதிக சேதம் ஏற்படாத பகுதி. இப்பகுதியில் ஒரு மைல் தூரம் வரை பாறைகளால் அலைகள் ஆர்ப்பரிக்கும் ஆழியாக இருப்பதால் இயந்திரப் படகுகள் இயக்க முடியாது; கட்டுமரம் மட்டும்தான். ஆமந்துறை பரதவர்களின் வாழ்க்கையைக் கடலிலும் கரையிலும் பேசுகிறது புதினம்; 1933 முதல் 1985 வரை 6 அத்தியாயங்களில் வருடாவாரியாக‌ கிட்டத்தட்ட 4 தலைமுறைகளின் கதை.

கவுரு துளவை மாசா தாமான் மறுக்கு கோடா பருமல் அணியம் மையாவடி போன்ற நெய்தல் வார்த்தைகளால் ஆரம்பப் பக்கங்களை மெதுவாகப் படிக்க நேர்ந்தாலும், அவை பரிட்சய‌மான பின், ஆமந்துறையின் மக்கள் அறிமுகமான பின், வாசிப்பின் வேகத்திற்கு எவ்வித தடையும் கொடுக்காத கதைக்களம். இதுதான் ஆரம்பம், இதுதான் இலக்கு, இதுதான் கதை என்று சுருக்கிச் சொல்ல எதுவுமில்லை. புதினத்தின் ஓட்டத்தில் சிறுகதைகளை வெட்டி எடுத்து கோர்த்துக் கொள்ளும் பொறுப்பை வாசகனுக்கே விட்டுவிட்டார் ஆசிரியர். புதினத்தின் சுவாரசிய‌த்திற்கு அதுவும் ஒரு காரணம். முழுக்க முழுக்க பரதவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் புதினம் என்பதால், கடல், அரசு, சாதி, மதம், மூட நம்பிக்கைகள், பக்கத்துத் துறைகள் என்று பல தளங்களில் அவர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளைப் பேசுகிறது. சர்வதேசக் கடல் எல்லை என்று மாயக் கோடு போட்டுக் கொண்டு, ஆழ்கடலில் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களை அனுமதித்து கடல்வளம் சுரண்டப் படுவதையும் சொல்கிறது.

மண‌ப்பாடு தூத்துக்குடி திருவைகுண்டம் சோதிக்காவிளை தச்சன்விளை காவல்கிணறு இடிந்தகரை கூடங்குளம் இடையன்குடி குலசேகரப்பட்டணம் மற்றும் நாரோயில் (நாகர்கோயில்) போன்ற ஊர்களுக்கும், கச்சத்தீவுக்கும், கன்னியாக்குமரியில் இருந்து 15கிமீ தொலைவில் ஆழ்கடலில் தனியே உயர்ந்து நிற்கும் சுறாப்பாறைக்கும் கதை கூட்டிச் செல்கிறது. நம்ம வள்ளியூர் கோழிச்சண்டை முதல் இலங்கை இனக்கலவரம் வரை பேசுகிறது புதினம். நாடார் பரதவர் சாதிச்சன்டைகள், பரதவத் துறைகளுக்கு இடையேயான சண்டைகள் பற்றியும் பேசுகிறது. சணல்வலை, பருத்தி நூல் வலை, டிஸ்கோ வலை என்று காலத்தால் மாறிப்போன பொருட்களையும், காலத்திற்கு ஏற்றாற் போல் கிடைக்கும் மீன்களையும் சொல்கிறது.

கடலிலும் காற்றிலும் போராட்டமே வாழ்க்கை என்று கொண்டு இயல்பிலேயே அசாத்திய துணிச்சலுடன் இருக்கும் பரதவர்களுடன், நம்மையும் கடலுக்குள் கூட்டிச் செல்கிறது புதினம். சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட பெரிய மீன்கள், தலைப் பகுதியில் ஒரு பகுதியில் ஒளி வீசும் மின்சார மீன்கள், இலட்சக்கணக்கில் சாளை மீன்கள், ஆயிரக்கணக்கில் கடற்குதிரைகள், ஒரு பூந்தோட்டமே மலர்ந்தது போல பல வண்ணங்களில் பல வடிவங்களில் கற்பனை செய்து பார்க்க முடியாத அழகில் பற்பல மீன்கள், கிரீச்சிட்டுப் பறக்கும் இனம் புரியாத பறவைகளின் விநோத ஒலிகள் என அடுத்தடுத்து காட்டுகிறது புதினம், பக்கத்திலேயே மரணத்தையும் வைத்துக் கொண்டு!
(http://www.uyirmmai.com)
'முத்துக் குளித்துறைப் பரதவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிநடத்திய புனித பிரான்சிஸ் சவேரியாருக்கும் அவர் வழிவந்த சேசு சபைக் குருக்களுக்கும் இந்நூல் காணிக்கை' என்கிறது ஆரம்பப் பக்கம். மொத்த புதினத்திலும் ஒரே ஒரு நல்ல பாதிரியார் தான் இருக்கிறார். எதார்த்தம் அதுதான். மீதி பாதிரியார்களுக்கு இடையே இருக்கும் கள்ளக்காதல்களையும் பொருள்வெறியையும் அற்புதமாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர். சேற்றுக்குள் முளைக்கும் இதுபோல செந்தாமரைப் பாதிரியார்களை மட்டுமே நம்பி தங்கள் ஆன்மீகத்தைத் தொடரும் மக்களின் எண்ணத்தை அற்புதமாகச் சித்தரித்து இருக்கிறார். ஐந்திணைச் சுற்றுச்சூழல் விழாவில் நெய்தலில் பேசிய மூன்றாமவர் கூட, கத்தோலிக்க லயோலா கல்லூரியில் தைரியமாக பரதவக் கிறித்தவர்கள் பாதிரியார்களால் ஏமாற்றப் படுவதைப் பற்றி பேசினார்.

பல வித்தியாசமான உயிரினங்களும், அவற்றின் வித்தியாசமான பண்புகளும் புதினத்தில் நிறைய உள்ளன. உதாரணமாக, நமக்கெல்லாம் தெரிந்த டால்ஃபின் என்ற ஓங்கல். ஓங்கல்கள் (Dolphin) காந்தி போல மிகவும் சாதுவானவை. கடலில் யாராவது தவறி விழுந்தால் அவர்களைக் காப்பாற்ற ஓங்கல்கள் பாய்ந்து வருமாம். இந்த ஓங்கல்கள் எல்லாம் முற்பிறவியில் மனிதர்களாய் இருந்தவை என்று கதைகதையாகச் சொல்வார்கள். இதனால்தானே என்னவோ பரதவர்கள் ஓங்கல்களைச் சாப்பிடுவதில்லை. அவற்றைப் பிடிப்பதும் இல்லை. சில நேரங்களில் இவை வலைகளைக் கிழிப்பதுண்டு. இருந்தாலும் பரதவர்களுக்கு இந்த மீன்கள் மேல் பாசம்தான். கடலில் ஆள் விழுங்கி சுறாக்களை எதிர்க்கும் வலுவுள்ளவை இந்த ஓங்கல்கள் மட்டும்தான்.எனது உப தகவல் ஒன்று; ஓங்கலுக்கும் மனிதனுக்கும் ஒரு மிகப் பெரிய ஒற்றுமை உண்டு. உடலுறவு என்ற விசயத்தை ரசித்து இன்பத்திற்காக செய்யும் இரண்டே உயிரினங்கள்! ஓங்கல்களை அழகான துள்ளலுடன் மழலைத் தனத்துடன் பார்த்திருப்பீர்கள். இறந்த  ஓங்கல் ஒன்றின் அழுகிய உடலை, நான் சென்னை மீனவக் கிராமம் ஒன்றில் இருந்து ஒரு பின்னிரவில் நான் எடுத்த புகைப்படம் இது:

பஞ்சாமையின் இறைச்சி பஞ்சுபோல் மென்மையாய் இருக்கும். கடலில் மாட்டிக் கொண்டவர்கள் பசி போக்க‌ அதன் கழுத்தைக் கடித்து இரத்தத்தைக் குடிப்பதாக‌வும், இறைச்சியைத் தின்பதாகவும் புதினத்தில் வருகிறது. கல்லூரி மாணவர்களுடனும் சில வெளிநாட்டவர்களுடனும் கலந்துரையாட கிடைத்த ஒரு வாய்ப்பில், ஆமை பற்றிய பேச்சு வந்த போது, நான் இரண்டு தகவல்கள் சொன்னேன். அதில் ஒரு தகவல், புதினத்தில் படித்த‌ பஞ்சாமை பற்றியது. இன்றுவரை நடைமுறையில் இருக்கும் அந்த வாழ்வியல் எதார்த்தத்தை யாருமே நம்பவில்லை. கொலம்பஸ் தன் கடற்பயணத்தில் ஆமைகளை எடுத்துப் போய் சமைத்துச் சாப்பிட்டதாக இன்னொருவர் சொன்ன தகவலுக்கு அனைவரும் கைத்தட்டினார்கள். பெனிசிலின் கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளெமிங் தீவிர சைவ உணவுக்காரராக இருந்து அசைவ உணவிற்கு மாறிய சம்பவத்தை உதாரணமாகச் சொல்லி வாதத்திற்கு வலு சேர்க்கலாம் என நினைத்தேன்; செய்யவில்லை. குஜராத், ஈழப் படுகொலைப் படங்களைப் பார்த்து விட்டு, இக்காலத்தில் இதுமாதிரி யாராவது செய்வார்களா என்று விலகிப் போகும் சாராரும் உள்ள சமூகம் இது!

1964ம் ஆண்டு வரும்போது யார் சாகப் போகிறார்களோ என பயந்து கொண்டே படித்தேன். தனுஷ்கோடியில் 1964 புயலில் தப்பிப் பிழைத்தவர்கள் சிலருடன் நேரடியாகப் பேசி இருக்கிறோம். நீச்சல் காளி என்ற முதியவர் தான் அதிக தகவல்கள் தந்தார். அவ்விபத்து நடந்த பகுதிகளை நானும் நண்பர் பிரேம்குமாரும் நடந்தே பார்த்திருக்கிறோம். அந்நிகழ்வுகளை அற்புதமாக விளக்குகிறது இப்புதினம்.

பின்னிணைப்பாக இருக்கும் வட்டார வழக்குச் சொல் அகராதியும், பெயர் மரூஉக்களும் அருமை. ஒஸ்தி என்ற வார்த்தைக்குக் கிறித்தவ மதத்தில் பொருள் இருக்கிறது! ஆனால் அகராதி போதாது. உதாரணமாக, கெபி மேற்றாசனம் போன்ற கிறித்தவ வார்த்தைகளின் பொருள் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. புதினத்தில் உள்ள தேரி ஆராளி போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியவில்லை.

எனக்கு 3 விசயங்கள் புதினத்தில் புரியவில்லை. படித்தவர்கள் யாராவது சொல்லவும். 1) பேச்சிக்கு மணிமேகலை எனப் பெயர் மாற்றம் செய்வதில் ஏதாவது உள்ளர்த்தம் இருக்கிறதா? 2) வசந்தா எதற்காக சிறைக்குப் போகிறாள்? அவனின் பிளந்திருந்த நெஞ்சில் மண்ணள்ளிப் போட்டு வெறியோடு அதே நெஞ்சில் அவள் மிதித்ததாகத் தான் புதினம் சொல்கிறது. அவள் கொன்றதுபோல் படித்ததாக ஞாபகம் இல்லை. 3) சிவகாசி கொள்ளை என்று சொல்லப்படும் வரலாற்றுச் சம்பவம் என்ன?

நான் ரசித்தவை:
பாத்திரங்கள் ‍-> 1) தொம்மந்திரை 2) காகு சாமியார் 3) முதல் பக்கத்தில் அறிமுகமாகி இரண்டாம் பக்கத்தில் செத்துப் போய் மூன்றாம் பக்கத்தில் தாயையும் எடுத்துக் கொண்டு ஒரு சிறுகவிதை போல் வந்து போகும் பரதேசி என்ற குழந்தை 4) சோடி வரிப்புலியன் சுறாக்களில் ஒன்று மட்டும் தூண்டிலில் மாட்டி கட்டுமரத்தோடு இழுத்துச் செல்லப்பட கூடவே இரவு முழுக்க நீந்திப் போகும் இன்னொரு மீன் 5) சூசையார், சிலுவை, கோத்ராப் பிள்ளை, செலஸ்டின்
உரையாடல்கள் -> நிறைய இருக்கின்றன. நான் ரசித்து சிரித்த ஒன்று இது: கண்டாரஓளி கலிஸ்டா ஒரு பொண்ணப் பெத்திருக்கா. அடடடடா... அவளுக்கு குஞ்சி மட்டுந்தாம் இல்ல‌
ப‌குதிகள் ‍-> 1) சூசையாருக்கும் சிலுவைக்கும் உள்ள உறவு 2) 1975ல் நாகப்பட்டினத்துக்குத் தென்கிழக்கே 300கிமீ தூரத்தில் கடலில் மையம் கொண்டிருந்த புயல் தென்மேற்காக நகர ஆரம்பிக்கும்போது, ஊரைக் காலி செய்துவிட்டு மேடான பகுதிகளுக்குப் போகச் சொல்லி மீன்துறை அதிகாரிகள் பரதவத் துறைகளில் ஜீப்பில் ஒலிபெருக்கியில் அறிவித்து செல்லும் போது, அரசு மீனவர்கள் உயிரை எந்த அளவிற்கு மதிக்கிறது எனப் புரிய வைக்கும் அதிகாரிகளுக்கு இடையேயான‌ பேச்சு. 3) பேருந்திற்குப் பணம் இல்லாமல் மணப்பாடு கடற்கரையில் சேகர் சுற்றித் திரியும் பகுதி. 4) காகு சாமியார் தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொள்ளும் சம்பவம் 5) புதினத்தின் கதையோடு சேராத கடைசி இரண்டு பக்கங்கள். கெழுகடல் செல்வி கரை நின்றாங்கு....

அனுபந்தம்:
‍‍‍‍----------------
1) சென்ற வருடம் நாங்கள் பார்த்த சிறந்த திரைப்படமாக நானும் என் நண்பன் ஒருவனும் தேர்ந்தெடுத்தது, நீர்ப்பறவை. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இயக்குனர் சீனு ராமசாமியின் உரையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்புதினத்தில் நபர்களையும் இடங்களையும் என்னால் எளிதாகக் கற்பனை செய்து கொள்ள நீர்ப்பறவைதான் காரணம்.
2) இப்புதினத்தில் சுந்தரி டீச்சர், மலையாள ஆபாசத் திரைப்பட நாயகி போல சித்தரிக்கப்பட்டு இருந்ததாக திட்டிய விமர்சனம் ஒன்று படித்தேன். எனக்கு எதிர்க் கருத்து ஏதுமில்லை. ஏனென்றால், அம்மாதிரி படங்களை நான் சத்தம் வைக்காமல் பார்ப்பதால் கதை தெரியாது. ஆனால் சுந்தரி டீச்சர் என்ற பாத்திரம் நிறைவு பெறும் விதம் புதினத்தில் உள்ள பல நல்ல கதையாடல்களில் ஒன்று.

மனிதன், மனிதவுருவம் எடுக்கும் முன் குரங்காக இருந்தான் என்கிறது அறிவியல். அதற்கும் முன் கடலில் நீந்தும் பாலூட்டி விலங்காகவும் இருந்தான் என்கிறது. மயிர்கள் அற்ற உடலை ஆதரமாகவும் சொல்கிறது. கடலில் இருந்து வெளிவந்த அப்பாலூட்டி குரங்காகி மனிதனான‌து என்றால், நெய்தல் தான் நமக்கெல்லாம் ஆதித்திணை. தேசங்களின் வரைபடங்களில் விளிம்புகளில் இருக்கும் ஆதித்திணைவாசிகளான மீனவ இனமும் விளிம்பு நிலையிலேயே இருக்கிறது. அப்படியொரு நிலையிலேயே அவர்கள் நீடிப்பது பலருக்குச் சவுகரியம் என்பது நான் சொல்லித் தமிழ் பேசும் நல்லுலகிற்குச் சொல்லத் தேவையில்லை. இப்புதினம் சொல்லும் சில கருத்துக்களுடன் நான் முடிக்கிறேன்; நாம் ஆரம்பிக்க வேண்டியவைகள் நிறைய இருக்கின்றன‌ !

கடற்கரையில் நடைமுறையில் உள்ள எழுதப்படாத சட்டப்படி பணயக் கைதிகளாகப் பிடித்து வரப்படுபவர்களைக் கடலில் வைத்துத்தான் அடிக்க முடியும். அவர்களைக் கரை கொண்டுவந்து நிலத்தில் அவர்கள் கால் வைத்துவிட்டால் அடிப்பதற்கு அந்தச் சட்டம் இடம் கொடுப்பதில்லை. கரையில் இறங்கி நடந்தவுடன் அந்தப் பணயக் கைதிகள் விருந்தினராகக் கருதப்படுவர். ஊர்ச் செலவில் அவர்களுக்குப் புதுத்துணிகள் கொடுப்பார்கள். வழக்கு முடியும் வரை அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் அவர்கள் தங்கள் ஊரில் இருப்பதாகத் தகவல் அனுப்புவார்கள்.

பரதவர்களுக்கிடையே மட்டுமல்ல; பிற சமூகத்தினருடன் மோதல்கள் வரும்போது காலங்காலமாக சில நியதிகளை உறுதியாகக் கடைப்பிடிக்கிறார்கள். எந்த அளவு உக்கிரமான சண்டையானாலும் இவர்கள் முதியவர்களையும் பெண்களையும் குழந்தைகளையும் ஒருபோதும் தொட்டதில்லை. மன்னிப்பு கேட்டுவிட்டாலும் அடைக்கலம் என்று வந்துவிட்டாலும் தொடுவதில்லை.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)
 

108. சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்

$
0
0
உண்மையானவற்றை உண்மையானவை எனவும், உண்மையல்லாதனவற்றை உண்மையல்லாதன எனவும் அறிந்து கொள்.
- புத்தர் (என நினைக்கிறேன்)

It was pretty much any another morning in America. The farmer did his chores. The milkman made his deliveries. The President bombed another country whose name we couldn't pronounce.
- Michael Moore

When there was a country, I searched for freedom. Now I am free, but I have to search for a country.
- Papiya Ghosh
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்
ஆங்கிலத்தில்: Terrorism Sources and Solutions
ஆசிரிய‌ர் : டி.ஞானையா
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம், சென்னை
முதற்பதிப்பு : 2011
விலை : 260 ரூபாய்
பக்கங்கள் : 413
வாங்கிய இடம் : இந்த வருட சென்னைப் புத்தகக் கண்காட்சி
--------------------------------------------------------------------------------------------------------------------------
பயங்கரவாதம். இந்நூற்றாண்டின் அன்றாடச் செய்திகளில் வழக்கமாகிவிட்ட இச்சொல்லின் விளக்கம்,கடவுள் கற்பு போல காலந்தோறும் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. 'அரசியல் அல்லது மதம் அல்லது சித்தாந்தம் சார்ந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஓர் அரசாங்கத்தையோ அல்லது ஓர் சமூகத்தையோ பயமுண்டாக்கும் அல்லது பணியச் செய்யும் நோக்கத்தில் சூழ்ச்சி செய்து, சட்ட விரோதமான வன்முறையை நிகழ்த்துவது அல்லது சட்ட விரோதமான வன்முறை நிகழ்த்தப் போவதாகப் பயங்காட்டுவது'என்று பயங்கரவாதம் என்ற பதத்திற்கு, உலக அகராதி நிர்ணயிக்கும் அமெரிக்கா விளக்கம் தருகிறது. ஏதோ கொஞ்சம் புரிவது போல் இருந்தாலும், எதுவெல்லாம் 'சட்ட விரோதமான'?

தூக்குமேடையில் சாகப் போவதற்கு முதல்நாள் இரவு ஏதோ ஒரு புத்தகத்தைப் பாதி படித்துவிட்டு, ஒரு தாளின் நுனியை மடக்கிவிட்டு, 'நான் விட்ட இடத்தில் இருந்து நாளை இன்னொருவன் தொடருவான்'என்று சாதாரணமாகத் தூங்கப் போன பகத் சிங், இன்றும் இந்திய இளைஞர்களின் புரட்சிச் சின்னம். ஆங்கிலேயர்களுக்குச் சட்ட விரோதமான பயங்கரவாதி. பயங்கரவாதி, அமைதிக்கான நோபல் பரிசு என்ற இரு முரண்பட்ட பெயர்களையும் வாழ்ந்தபோதே வாங்கிய யாசர் அராபத் இன்னொரு சிறந்த உதாரணம். சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது, எதிர்த்த முஜாஹிதீன் அமைப்பினரை அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், அமெரிக்காவின் நிறுவனத் தந்தையர்களுக்கு இணையாக ஒப்பிட்டது இன்னொரு உதாரணம். சுருக்கமாக, அப்பாவி குடிமக்களைக் கொல்லும் எந்தவொரு வன்முறை செயலையும் பயங்கரவாதம் எனக் கொள்வோம். நமக்கான செய்திகளில் பயங்கரவாதம் என்று சித்தரிக்கப்படும் சித்தாந்தங்களின், ஏறத்தாழ அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய புத்தகம் இதோ!
(www.nhm.in)
சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும். 91 வயதைக் கடந்த ஆசிரியர் டி.ஞானையா, அகில இந்திய தொழிற்சங்க தலைவர்; கம்யூனிஸ்ட் பிரமுகர். இன்றைய சிக்கல் நிறைந்த சர்ச்சைக்குரிய பயங்கரவாதம் என்ற பொருள் மீதான ஆசிரியரின் மாறுபட்ட கருத்துகளே இப்புத்தகம். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணன் நான்கு பக்கங்களுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார். சர்வதேச பயங்கரவாதம் பற்றி 11 கட்டுரைகளும், இந்தியப் பயங்கரவாதம் பற்றி 5 கட்டுரைகளும், கடைசியாக 2 பின்னுரைகளும் என அமைகிறது இப்புத்தகம்.

சர்வதேச பயங்கரவாதம். 2001 செப்டம்பர் 11 அன்று இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின் சர்வதேச பய‌ங்கரவாதத்திற்கு எதிராக நிரந்தரப் போர்ப் பிரகடனம் செய்தது அமெரிக்கா. ஆனால் அதன் பிறகு இன்றுவரை அமெரிக்கா செய்து வரும் நடவடிக்கைகள் எல்லாம், ஏற்கனவே செய்து கொண்டிருந்த காரியங்களின் வீரிய வடிவமே என்பது தெளிவாகத் தெரியும். சர்வதேச பயங்கரவாதத்தின் தோற்றுவாய் என்று அது சுட்டிக் காட்டும் இடங்கள் எல்லாம், இஸ்ரேலைச் சுற்றிய மத்திய கிழக்கு அரபு நாடுகள். பொது மக்களும் தங்களின் அன்றாட உரையாடல்களில் சர்வதேச பயங்கரவாதம் என்பதை இஸ்லாமிய பயங்கரவாதம் என அடையாளப்படுத்த நிர்பந்திக்கப்பட்டு உள்ளனர். இப்படி ஆயுதம் இருப்பதாகச் சொல்லி ஆயில் எடுக்கும் அமெரிக்க கதைகள்தான் இந்த 11 கட்டுரைகளும்.

சுமார் 2 கோடி பூர்வகுடி செவ்விந்தியர்களையும் அவர்களின் வாழ்விடங்களையும் திட்டமிட்டு அழித்து அமெரிக்கா பிறந்த கதை ஒரு கட்டுரை. இந்திய ஆண் 40 பவுண்டு, பெண் 12, சிறுவர் 20 எனக் கொன்று தலை கொண்டுவந்தால் பரிசு. கறுப்பின மக்களின் அடிமை முறையை ஒழித்த‌ ஆபிரகாம் லிங்கன் செவ்விந்தியர்களைக் கொல்லும் படைத் தளபதியாக இருந்திருக்கிறார். முதல் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன், மனைவியை விவாகரத்து செய்த போது 150 அடிமைகளை வாழ்க்கைப்படியாகக் கொடுத்திருக்கிறார். கறுப்பின மக்களின் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய நாட் டர்னர் (Nat Turner), தோலை உரித்து பணப்பை செய்து ஒரு பெருமைமிகு நினைவுப் பரிசாக வைத்திருந்திருக்கிறார் அரசு தலைமை மருத்துவ அதிகாரி ஒருவர். மால்கம் எக்ஸ் (Malcolm X), மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther King, Jr.) முடிவுகள் உங்களுக்கே தெரியும். இப்படி கொடுஞ்செயல் சித்திரவதை வன்கொடுமை என்ற பாவங்களுடனேயே பிறந்து, போர்வெறி உளவியலுடன் தொடர்ந்து வலம் வருவதை விளக்குகின்றன ஆரம்பக் கட்டுரைகள். எந்தவொரு அமெரிக்க அதிபர் இரண்டாம் முறை தேர்தலில் நிற்கும் போதும், ஒரு முடிக்கப்படாத போர் இருக்கும், அதை முடித்து வைக்க இரண்டாம் முறை அவரே தேர்ந்தெடுக்கப்படுவதைக் கவனித்து இருக்கிறீர்களா?

அர்ஜென்டினா, நிகரகுவா, ஜப்பான், ரியூக்யூ மற்றும் பானின் தீவுகள், உருகுவே, சீனா, அங்கோலா, ஹவாய் என மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்த கதைகளையும், பியூடோ ரிகோ, ஹவாய், வேக் தீவுகள், குவாம் பகுதிகள், பிலிப்பைன்ஸ் என நாடு பிடிக்க போர் தொடுத்த‌ கதைகளையும் பேசுகிறது ஒரு கட்டுரை. Confession of an Economic Hit Man புத்தகத்தில் சொன்னது போல, கியூபா, காங்கோ, சிலி, தெற்கு வியட்நாம், டொமினிக் குடியரசு, பனாமா, நேற்றைய லிபியா என வெளிநாட்டு அரசுகளைக் கவிழ்ப்பது, அரசுக்கு நெருக்கடி கொடுப்பது, பொதுத் தேர்தல்களில் தலையிடுவது என அமெரிக்க உளவு நிறுவனம் CIA செய்து வரும் அடாவடிகளைப் பட்டியலிடுகிறது ஒரு கட்டுரை. Plan A, B, C, D, ... என்று அமெரிக்க உதவியுடன் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் காட்டும் வன்முறைகள் பற்றி ஒரு கட்டுரை.

ஐக்கிய நாடுகள் சபையின் 192 உறுப்பு நாடுகளில் 152ல் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ளன. அடுத்த 10 நாடுகளின் ஒட்டுமொத்த இராணுவச் செலவை விட அமெரிக்காவினது அதிகம். சதாம் உசேனுக்கு எதிரான போரில் ஈராக்கிய மக்கள் தொகையில் 5% பேர் இழப்பு. ஹிட்லரின் நாசிகளுக்கு இணையாக, வியட்நாம் மீது ஏஜென்ட் ஆரஞ்ச் இரசாயன குண்டுகளை வானில் இருந்து கொட்டிவிட்ட கொடுர இனவழிப்புக் கதைகள்.,,,,,

இந்தியப் பயங்கரவாதம். இந்தியாவிற்கு இருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்களைப் பேசுகின்றன 6 கட்டுரைகளும். விவசாயிகளின் பேரெழுச்சியாக ஆரம்பித்த நக்சல்பாரியின் கதையை, இன்றைய சல்வா ஜுடும் (Salwa Judum) வரை பேசுகிறது ஒரு கட்டுரை. வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடி மற்றும் தேசிய இனப் பிரச்சனைகளைப் பேசுகிறது ஒரு கட்டுரை. இஸ்லாமிய மற்றும் இந்துத்துவ பயங்கரவாதம் பற்றி இரண்டு தனித்தனி கட்டுரைகள். அசோகர் காலம் முதல் 2008 நவம்பர் 26 மும்பை தாக்குதல் வரை பல விசயங்களைப் பேசுகின்றன இவ்விரண்டு கட்டுரைகளும். இப்புத்தகம் சொல்லும் தகவல்களில் வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்களில் ஒன்றிரண்டாவது உதாரணமாகச் சொல்ல நான் விரும்பவில்லை. வாசிப்பவர்கள் ஒருசமயம் ஒருசார்புடைய கருத்துடையவராக இருப்பின், அத்தகவல்களை எந்தவொரு வரலாற்றுப் பின்னணியும் இல்லாமல் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும் என்பதால், இப்படியே விட்டுவிடுகிறேன். அவை உங்களின் வாசிப்பிற்கும், தேடலுக்கும், சிந்தனைக்கும், .....

இப்புத்தகம் படித்து பல நாட்கள் ஆகிவிட்டன. இப்புத்தகம் மேற்கொள் காட்டிய இன்னோர் அற்புதமான புத்தகத்தை இப்போதுதான் படித்து முடித்தேன். இரண்டு புத்தகங்களும் அடுத்தடுத்து அமைந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அந்தப் புத்தகத்தில் இந்தப் புத்தகம் பற்றி நிறைய பேசுவோம். இப்புத்தகம் படியுங்கள். பயங்கரவாதச் செயல்களுக்குப் பின்னுள்ள உளவியல் அறியுங்கள். அவை தோன்றுவதற்கான காரணங்கள் உணருங்கள். பின்னர் நீங்களும் சொல்வீர்கள்; பயங்கரவாதம் மதமற்றது - பயங்கரவாதம் மொழியற்றது. இதுவரை மொழியின் அடிப்படையில் நசுக்கப்பட்ட ஈழத்தில், அங்கு இன்று தமிழர்களிடையே மதம் என்ற பிரிவினையை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இங்கு ஒருபடி மேலே போய் சாதிகளால் பிரித்துக் கொ(ல்)ள்கிறோம். காலனிய காலத்தில் ஆங்கிலேயர்கள் கையாண்ட அதே பிரித்தாளும் சூழ்ச்சியின் நவீன வடிவங்கள்! அன்றைக்கே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கேட்டார்:
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?

அனுபந்தம்:
----------------
1. Mausam, Delhi Belly. இந்த இரண்டு படங்களில் எதைப் பார்ப்பது என்று திரையரங்கின் முன் பயங்கர வாக்குவாதம். கடைசியாக ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். காசு சுண்டிவிடவில்லை. விமர்சனங்களை வைத்து முடிவு செய்யவில்லை. சுவரொட்டி பார்த்து ஈர்க்கப்படவில்லை. கதாநாயகனின் மதம்தான் தீர்மானித்தது!

2. ஓர் இந்தித் திரைப்படத்தில், அமெரிக்கா முழுவதும் சுற்றித் திரிந்துவிட்டு இறுதிக் காட்சியில் அமெரிக்க அதிபரைச் சந்தித்து, 'My name is Khan; but I am not terrorist'என்பார் ஷாருக் கான். இதே மாதிரி ஓரிஸா அல்லது கர்நாடகா அல்லது குஜராத் என்று ஏதாவது ஒரு மாநிலத்தைச் சுற்றி வந்து, ஓர் உள்ளூர் கவுன்சிலரிடமாவது சொல்ல முடியுமா? என் மதத்தைச் சொல்ல மறுத்ததற்காக பாதியிலேயே ஆட்டோவில் இருந்து இறக்கிவிட்ட ஆட்டோக்காரனை நான் இத்தேசத்தில் சந்தித்திருக்கிறேன். இத்தனைக்கும் நான் போய்க் கொண்டிருந்த இடம் DRDO!

- ஞானசேகர்

109. A WORLD WITHOUT ISLAM

$
0
0
(மகாகவிக்குச் சமர்ப்பணம்)

இன்று செப்டம்பர் 11. பயங்கரவாதத்திற்கு எதிரான நிரந்தரப் போர் என்று பிரகடனப்படுத்தி, தனது அடாவடிகளை நியாயப்படுத்தவும் ஆழப்படுத்தவும் அகலப்படுத்தவும் அமெரிக்கா சுட்டிக் காட்டும் நாள். ஆப்கான் ஈராக், இன்று சிரியா என்று யுத்தக்குடையின் நிழல் நீண்டு கொண்டே போகிறது. ஆப்கான் யுத்தம் தொடங்கப்பட்ட சில வாரங்களுக்குப் பின் அப்போதைய‌ அமெரிக்க ஜனாதிபதி கையாண்ட வார்த்தைகளும், இஸ்ரேல் உருவாக்கப்பட்ட 60வது ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரையும் தெளிவாகச் சொல்லின; இப்போர்கள் எண்ணெய் வளத்திற்காக மட்டுமல்ல; நாடுபிடிக்க மட்டுமல்ல; இவை பூர்வகுடி இஸ்லாமியர்களுக்கு எதிரான போர்க‌ள்.

ஈழப் போருக்குப் பின், இனப்போர்களின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கும் நோக்கில் புத்தகங்கள் தேடினேன். உலகின் மிக நீண்ட இனப்பிரச்சனை நடக்கும் இடமான இஸ்ரேலைச் சுற்றிய மத்திய கிழக்கு நாடுகளில் தான் என் கவனம் இருந்தது. இத்தளத்தில் 100வது புத்தகமாக நான் எழுதிய ஜெருசலேம் புத்தகம் தான், என் பல கேள்விகளுக்குப் பதில் சொன்னது. ஒரு தனிப்பட்ட யூதன் மேல் இருந்த வெறுப்பால் ஒட்டு மொத்த யூத இனத்தையும் அழிக்கத் துணிந்த ஹிட்லரைவிட அதிக வெறுப்பை இன்றைய மத மற்றும் சாதித் தலைவர்கள் விதைத்துக் கொண்டு இருக்கிறார்கள். வெறும் இறைச்சித் துண்டுகளை வழிபாட்டுத் தளங்களில் வீசிவிட்டு வகுப்புக் கலவரங்கள் மிக எளிதாக‌ உண்டாக்கி விடுகிறார்கள். போன வாரம் நம்மூரில் ஒருவன், பிரபலமாக வேண்டும் என்பதற்காக தன் சொந்த வீட்டிலேயே வெடிகுண்டை வீசிவிட்டு இன்னொரு மதத்தவர்கள் மேல் சந்தேக வதந்தி பரப்பிய கதையும் கண்டோம். நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? எங்குமே போகவில்லை. ஜெருசலேம் சுற்றும் அதே வட்டத்திற்குள் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.

அறியாமை வட்டத்தை விட்டு வெளியேறச் சொல்லித் தரும் பகுத்தறிவுப் புத்தகங்களில் இதோ இன்னுமொன்று. தொடர்ந்து படிப்பதற்கு முன்
1. நிலமெல்லாம் ரத்தம்
2. Jerusalem
புத்தகங்கள் பற்றிய எனது பதிவுகளை ஒருமுறை படித்துவிடுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : A WORLD WITHOUT ISLAM
ஆசிரிய‌ர் : Graham E. Fuller
வெளியீடு : Hachette Book Group, New York
முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2010
விலை : 350 ரூபாய்
பக்கங்கள் : 350
வாங்கிய இடம் : Landmark
--------------------------------------------------------------------------------------------------------------------------
கிரகாம் இ. ஃபுல்லர். அமெரிக்க சி.ஐ.ஏ.வின் மேற்பார்வை பொறுப்பில் அமெரிக்க உளவுத்துறை கவுன்சிலின் முன்னாள் துணைத் தலைவர் (former Vice Chairman of the National Intelligence Council at the CIA). பணி நிமித்தம் இஸ்லாமிய நாடுகளில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். அமெரிக்க அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், திடீரென ஞானம் பெற்று அமெரிக்காவிற்கு எதிராக‌ எழுதும், தற்காலிகப் புரட்சிகரமான புத்தகங்களை நான் படிப்பதில்லை. இத்தளத்தில் எனது முந்தைய புத்தகமான‌, சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்தான், இப்புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது. அப்புத்தகம் இப்புத்தகத்தில் இருந்து சில பக்கங்களுக்கு மேற்கோள் காட்டிய சில விசயங்கள் தான் என்னைப் படிக்கத் தூண்டின. இது தற்காலிகப் புரட்சிகரப் புத்தகம் இல்லை. மதப் புத்தகமும் அல்ல. இஸ்லாமிய மண்ணில் வாழ்ந்த அனுபவசாலி ஒருவரின், இன்றைய பிரச்சனைகளுக்கான‌ மாற்றுச் சிந்தனைகள் தான் இப்புத்தகம். இப்புத்தகத்தின் ஆசிரியரும், இப்பதிவை எழுதும் நானும் இஸ்லாம் மதத்திற்குத் தொடர்பு இல்லாதவர்கள் என்பதால், எங்களின் நடுநிலைமையைச் சந்தேகிக்காமல் தொடர்ந்து படிக்கலாம்.

இஸ்லாம். இன்றைய உலகின் மிகப் பெரிய மதங்களில் சமீபத்தில் தோன்றிய இளமையான மதம். வரலாறு என்ற புதிய துறை நன்கு வளர்ந்திருந்த காலத்தில் தோன்றியதால், இதற்கு முந்தைய மதங்களைப் போல் அல்லாமல், இதன் மதநூலில் சொல்லப்படும் சம்பவங்கள், இஸ்லாமிற்குச் சம்மந்தமே இல்லாத பல சமகால அறிஞர்களால் சரிபார்க்கப்பட்டமையால், நம்பகத்தன்மையும் அதிகம். வரலாற்றில் மிக மகத்தான மிக சக்திவாய்ந்த தொடர்ச்சியான நாகரிகங்களில் ஒன்றான இஸ்லாம் உலகின் மீது ஏற்படுத்திய தாக்கம் அதிகம். வேறு எந்த நாகரிகமும் இஸ்லாமைப் போல உலகின் பரந்த நிலப்பரப்பில் இவ்வளவு நீண்ட காலம் இருந்ததில்லை. இஸ்லாமிய கலாச்சாரம் கலை விஞ்ஞானம் தத்துவம் மற்றும் நாகரிகம் என இன்றைய உலகிற்குக் கிடைத்த செல்வங்கள் ஏராளம். இப்படி சொல்வதற்கு எத்தனையோ நல்ல விசயங்கள் இருக்க, இஸ்லாம் மற்றும் வரலாற்று அரசியல் அறியாமைகள் காரணமாக பெரும்பான்மை மக்களின் பொதுப் புத்தியில் இஸ்லாம் பற்றிய எதிர்மறைச் சிந்தனைகள் பரவியிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு வட்டத்திற்குள் இருக்கும் வரை, அது வட்டம் என்பதே பல நேரங்களில் தெரிவதில்லை; அது எவ்வளவு பெரிய வட்டம் என்பதும் புரிவதில்லை. வட்டத்தை விட்டு எவ்வளவு வெளியே போய் பார்க்கிறோமோ, அவ்வளவு தெளிவாய்ப் புரியும் வட்டம். பூமியுடன் இருந்தாலும், பூமிக்கு வெளியே போய் ஒரு புகைப்படம் எடுத்து வ‌ந்த பின் தானே எல்லோரும் பூமிக்கோளம் என நம்பினோம்? நமக்குப் பூதாகரமாய்க் காட்டப்படும் சித்தாந்தங்களைக் கொஞ்சம் சிறிதாக்கி விட்டு, அதன் பக்கத்தில் இருக்கும் மற்ற விசயங்களைக் கொஞ்சம் பெரிதுபடுத்தி பகுத்தறியும் போது புரியாத பல விசயங்கள் புரியும். வரலாற்றின் பழைய பக்கங்களில், முதன்மைக் காரணமாக இஸ்லாம் சொல்லப்படும் சம்பவங்களை எல்லாம் மீள்பார்வை செய்து, இஸ்லாம் தவிர வேறேதும் காரணிகள் அதே சம்பவங்களை நிகழ்த்தி இருக்கக் கூடிய சாத்தியங்களை ஆராய்வதே இப்புத்தகம். குழப்புகிறேனா?

நிகழ்கால உதாரணம் ஒன்று. இலங்கை ஆட்சியாளர்கள் கடைசியாக புத்த‌மதத் துறவிகளையும் ஈழத்திற்கு எதிராகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்களின் இந்த நிலைப்பாட்டிற்கும் புத்தமதத்திற்கும் / புத்தருக்கும் சுத்தமாகச் சம்மந்தம் இல்லை என்று நமக்குத் தெரியும். ஈழத்தில் இருந்து சிங்களவர்களை இனம் மொழி தவிர இன்னும் நன்கு பிரிக்க அந்த ஆட்சியாளர்கள் எடுத்த ஆயுதம் தான் மதம். புத்தத்தின் இடத்தில் வேறு எந்த மதம் இருந்தாலும் அதுவும் ஆயுதமாகி இருக்கும். அங்கு இப்போது புத்தம் என்பது வெறும் பதாகை என்பது நமக்குத் தெரியும். இந்நிலை தொடருமாயின் ஈழப் பிரச்சனையை ஒரு மதப் பிரச்சனையாக மட்டுமே எதிர்காலம் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். குழப்பம் தீர்ந்ததா? பின்னோக்கிச் சிந்திக்கத் தயாராகுங்கள். புத்தகத்திற்குள் போகலாம்.
(http://img6a.flixcart.com/)
அரேபியப் பாலைவனத்தில் இருந்து முகமது நபி தோன்றாமல் போயிருந்தால் - இஸ்லாம் என்ற ஒரு மதமே மத்திய கிழக்கில் தோன்றாமல் இருந்திருந்தால் - மத்திய கிழக்கில் மிக விரைவாகப் பரவிய இஸ்லாமிய சகாப்தம் இல்லாமல் போயிருந்தால் - இஸ்லாமியர்களின் படையெடுப்பு இந்தியத் துணைக்கண்டத்தில் நடக்காமல் இருந்திருந்தால் - ஜிகாத் முஜாஹிதீன் அல்-கெய்தா போன்ற வார்த்தைகள் கேள்விப்படாமலேயே இருந்திருந்தால் - இன்றைய உலகம் எப்படி இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்? கண்டிப்பாக இவ்வளவு குழப்பங்கள் இருந்திருக்காது - மத்திய கிழக்கு நாடுகள் கொஞ்சம் அமைதியாக இருக்கும் - இந்தியத் துணைக்கண்டம் 3 துண்டுகளாகி இருக்காது - காஷ்மீர் பிரச்சனை இருக்காது - 3 யுத்தங்களை இந்தியா சந்தித்திருக்காது - விஸ்வரூபம் திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகி படுதோல்வி அடைந்திருக்கும் - என பெரும்பான்மை பதில்கள் கிடைக்கும்.

இஸ்லாம் இல்லாமல் இருந்திருந்தாலும், இன்று நாம் காணும் உலகம் கிட்டத்தட்ட அதே பிரச்சனைகளுடன் தான் இருந்திருக்கும் என வாதிடுகிறது இப்புத்தகம். அதாவது, ஒசாமா பின் லேடன், ஜிகாத் போன்ற வார்த்தைகளுக்குப் பதில் வேறு வார்த்தைகள் இடம்பெற்று விஸ்வரூபம் திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாக முடியாமல் தாமதமாகி பின் வெற்றிப்படம் ஆகியிருக்கும் சாத்தியங்கள் உண்டு. ஆசிரியர் இன்னும் ஒருபடி மேலே போய், இஸ்லாம் இல்லாமல் போயிருந்தால் மத்திய கிழக்கின் நிலைமை இன்றைவிட இன்னும் கொடுமையாக இருந்திருக்கும் என்கிறார். இதே கருத்தைத் தான், ஜெருசலேம் புத்தக அறிமுகத்தில் நானும் சொன்னேன். மேலும், இஸ்லாமிய நாகரிகம் இல்லாதிருந்தால் இவ்வுலகம் இன்று நாகரிக ஏழ்மை நிறைந்ததாக இருந்திருக்கும் என்கிறார். The world would be a much more impoverished place in the absence of Islamic civilization. வரலாறு தெரியாதவர்களுக்கு, நம்புவதற்குக் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், ஆதாரங்கள் சொல்ல வரலாற்றின் பழைய பக்கங்களை 3 பாகங்களாக‌ப் புரட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

Religion may in most of its forms be defined as the belief that the gods are on the side of the Government.
- Bertrand Russell

இஸ்லாம் மத்திய கிழக்கில் தோன்றி, மத்திய கிழக்கை விட்டு வெளியே பரவுவதற்கு முன்பு வரை மத்திய கிழக்கின் மதம் மற்றும் அரசியல் நிலைகளை விளக்குவதே முதல் பாகம். யூதம் கிறித்தவம் இஸ்லாம் என்ற முப்பெரும் மதங்களும் தோன்றிய மண் மத்திய கிழக்கு. 4000 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரே கடவுள் கொள்கை பேசிய மண்! மேசேயில் (Moses) இருந்து கணக்குப் பார்த்தால் யூதமத வயது 4500க்கு மேல். புனித பவுலில் (St.Paul) இருந்து கணக்குப் பார்த்தால் கிறித்தவமத வயது 1900. முதல் முஸ்லீமும் கடைசி இறைத்தூதருமான முகமது நபியில் இருந்து கணக்குப் பார்த்தால் இஸ்லாமியமத வயது 1400. ஆபிரகாமின் மதங்கள் (Abrahamic religions) என்று இம்மும்மதங்களும் அழைக்கப்படுகின்றன. 610CEல் அரேபியாவில் இஸ்லாம் தோன்றிய காலத்தில் கிறித்தவமும், நகரங்களில் மட்டும் யூதமும், பார்சிகளின் மதமான சரத்துஸ்திரமும் (Zoroastrianism) என மத்திய கிழக்கில் இருந்திருக்கின்றன. அதே காலத்தில் பௌத்தமும் இந்துவும் இந்தியாவிலும், கிறித்தவமும், பல கடவுள்களும் ஐரோப்பாவிலும் இருந்திருக்கின்றன; அரேபியாவில் மெக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 360 உருவ வழிபாடுகள் இருந்திருக்கின்ற‌ன.

ஆபிரகாமின் மதங்கள் மூன்றையும் தனித்தனியாக ஒன்றோடொன்று நம்பிக்கைகளில் ஒப்பிடுகிறார் ஆசிரியர். இம்மதக் குடும்பத்தில், மூத்த மதங்கள் இளையவர்களை முற்றிலுமாக நிராகரிக்கின்றன. இயேசுவையும் முகமது நபியையும் யூதம் ஏற்பதில்லை. முகமது நபியைக் கிறித்தவம் ஏற்பதில்லை. யூதர்களின் இறைத்தூதர்களைக் கிறித்தவமும் இஸ்லாமும் ஏற்கின்றன. இயேசுவிற்கும் மரியாளிற்கும் இஸ்லாமில் தனியிடம் உண்டு. மூன்று மதங்களும் ஒரே கடவுளைப் பற்றி பேசுவது போல் தெரிந்தாலும், மனிதப் பரிணாம வளர்ச்சியில் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்ளப்பட்ட மதங்களாக தெரிந்தாலும், ஆபிரகாமின் மதங்கள் என்று ஒரே சித்தாந்தத்தின் கீழ் கொண்டுவர முயன்றாலும், உண்மையிலேயே மூன்று மதங்களும் ஒரே கடவுளைப் பற்றித்தான் பேசுகின்றனவா என்று சந்தேகப்படும் அளவிற்கு வேறுபாடுகள் அதிகம். கிறித்தவம் இஸ்லாமுடன் கொண்ட வேறுபாடுகளை விட யூதத்துடன் கொண்ட வேறுபாடுகள் அதிகம்; மிகவும் அதிகம். இயேசுவைக் கொன்றவர்கள் என்ற பழிச்சொல்லுடன் யூதர்கள் வெறுக்கப்பட்டது போன்ற, கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட சில‌ வேறுபாடுகளும் உண்டு. மத்திய கிழக்கு பற்றி எந்தப் புத்தகம் படித்தாலும், இதுவரை சொன்ன விசயங்கள் ஆரம்பக் கட்டுரைகளாக வந்துவிடும். அதாவது, இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே மற்ற இரு மதங்களுக்குள் அடிப்படையான பிரச்சனைகள் இருந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஐரோப்பாவிலும், சார் மன்னர்களின் ஆட்சியில் இரஷ்யாவிலும், ஹிட்லரால் ஜெர்மனியிலும் யூதர்கள் வதைக்கப்பட்டதை வரலாற்றின் கொடூரப் பக்கங்கள் சொல்லும்.

570CEல் முகம்மது நபி தோன்றாது போய் இருந்தால் அரபு மக்களுக்கு என்று ஒரு தனி வரலாறு இருந்திருக்குமா என்று தெரியவில்லை,என்பது வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்ளும் உண்மை. நாகரிகம் தெரியாதவர்களாக அருகில் இருப்பவர்களால் கருதப்பட்ட அரபுகளுக்கு, இஸ்லாம் புதிய அடையாளத்தையும் சிந்தனையும் உத்வேகத்தையும் தர, அசுர பலத்துடன் தங்கள் எல்லையை விரிவுபடுத்துகிறார்கள். முகமது நபி இறந்து 30 வருடங்களுக்குள் மேற்கே துனிசியா, வடக்கே கௌகாஸஸ், கிழக்கே பாகிஸ்தான் எல்லை வரை பரவுகிறார்கள். 800CEல் மத்திய கிழக்கும் கிழக்கு ஐரோப்பாவும் ஏறத்தாழ சமமான மக்களைக் கொண்டிருந்தன; ஒவ்வொன்றும் 3 கோடி பேர். ஆனால் மத்திய கிழக்கில் ஏறத்தாழ 50000 பேர் கொண்ட 13 நகரங்கள் இருந்தன; கிழக்கு ஐரோப்பாவில் ரோம் மட்டுமே நகரமாக இருந்தது. இஸ்லாமின் உடனடித் தாக்கத்தைப் புரிந்து கொள்ள இப்புள்ளி விவரங்கள் போதுமென நினைக்கிறேன்.

பெரும்பான்மை மக்கள் நினைப்பது போல, ஆரம்ப கால இஸ்லாம் வாள் முனையில் பரவவில்லை. எல்லையை விரிவுபடுத்துவது மட்டுமே அரபுகளின் நோக்கமாக இருந்திருக்கிறது. ஆரம்பகால ஆட்சியாளர்கள் மதநல்லிணக்கம் பேணுபவர்களாக இருந்ததாலும், ரோமானியப் பேரரசின் கிழக்குச் சாம்ராச்சியத்தை அவர்கள் கைப்பற்றும் போது அதன் குடிமக்கள் வரவேற்றார்கள்; இஸ்லாம் என்ற இறை நம்பிக்கைக்காக அல்ல; அவர்கள் தரப்போகும் அரசியல் உரிமைகளுக்கும், அவர்கள் தரப்போகும் ஆட்சிக்கும். காலப்போக்கில் ஒரு பரந்து விரிந்த ஒரு சிறந்த நாகரிகத்தின் அங்கமாக மதம் மாறுகிறார்கள். அரபுகளை மற்ற இனங்களுடன் இஸ்லாம் இணைக்கிறது. அரபுகள் இஸ்லாம் மேல் இருந்த தங்களின் ஏகபோக உரிமையை இழக்கிறார்கள். அங்கே உடைகிறது இஸ்லாமின் முதல் கலீபாக்கள் ஆட்சி. முதன் முறையாக இஸ்லாமிய ஆட்சி உமையாது (Umayyad) அரபுகளிடம் இருந்து, அப்பாசிய  (Abbasid) பாரசீக‌ர்களுக்குப் போகிறது. இப்படி இஸ்லாமியர்களின் ஆட்சி இன்னொரு இஸ்லாமியரிடம் இழக்க‌, பிராந்திய அரசியல் காரணங்கள் இருந்திருக்கின்றன; இஸ்லாம் இல்லை. மத்திய கிழக்கில் இஸ்லாம் சந்தித்த இஸ்லாம் அல்லாத இன்னொரு அச்சுறுத்தல் மேற்கில் இருந்துதான் வந்தது; இன்றும் வந்து கொண்டிருக்கிறது.

The curse of the human race is not that we are so different from one another, but that we are so alike.
- Salman Rushdie

மத்திய கிழக்கு, மேற்கத்திய, கிழக்கத்திய நாடுகள் என்று அடிக்கடி பேசுகிறோமே, எந்தப் புள்ளியில் இருந்து இத்திசைகளைக் குறிக்கிறோம்? இவையெல்லாம் ரோமானிய மக்கள் பயன்படுத்திய வார்த்தைகள்; இன்றும் தொடர்கின்றன. ரோமைத் தலைநகரமாகக் கொண்ட ரோமானியப் பேரரசின் மன்னன் முதலாம் கான்ஸ்டன்டைன் (325CE), கிறித்தவ மதத்தைத் தழுவுகிறான். அதுவரை ரகசியமாகத் தூரத்துத் தேசங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த கிறித்தவ மதம், மன்னன் எவ்வழியோ குடிமக்கள் அவ்வழி என ரோமானிய தேசமெங்கும் பரவுகிறது. பைசாந்திய நாடுகளைக் கைப்பற்றி கிழக்கே கான்ஸ்டான்டிநோபிள் (இன்றைய இஸ்தான்புல்) என்ற புதிய நகரையும் உருவாக்குகிறான். ரோமின் மொழி இலத்தின். இரண்டாம் ரோம் என அழைக்கப்பட்ட கான்ஸ்டான்டிநோபிளின் மொழி கிரேக்கம்.

ரோம் மேற்கு; கான்ஸ்டான்டிநோபிள் கிழக்கு. அதாவது ரோமானியப் பேரரசின் மேற்கு மற்றும் கிழக்குச் சாம்ராச்சியங்கள் மொழியாலும் கலாச்சாரத்தாலும் இருவேறு இனங்கள். ரோமானியப் பேரரசிற்குக் கிழக்கே இருந்த நம்மைப் போன்றவர்களுக்கு, மொத்த ரோமானியப் பேரரசும் மேற்கு. அடுத்து வந்த பேரரசர்கள் எல்லாம் கிழக்கே கவனம் செலுத்த, ஆரம்பகால விவிலியங்கள் கிரேக்கத்தில் எழுதப்பட, ரோம் கான்ஸ்டான்டிநோபிள் என இரு கிறித்தவ மதத் தலைமைப் பீடங்கள் உருவாக, 476CEல் ரோம் வீழ்ச்சியுற, அதிகாரம் முழுவதும் கிழக்கே குவிய, அதிகாரச் சண்டை அரசியலிலும் மதத்திலும் தலைதூக்க, ஐரோப்பாவின் நோயாளி என துருக்கி ஒதுக்கப்பட‌, இன்றும் தொடர்கிறது கிழக்கு மேற்கு பிரிவினை! ரோமைத் தலைமையகமாகக் கொண்டு கத்தோலிக்க கிறித்தவம் (Roman Catholic) இன்றும் தொடர்கிறது. எங்கே போனது கான்ஸ்டான்டிநோபிள் கிறித்தவத் தலைமைப் பீடம்?

நிலமெல்லாம் ரத்தம் புத்தகம் நீங்கள் படித்திருந்தால், உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றை ஞாபகப் படுத்துகிறேன். மொத்த புத்தகத்திலும், கொஞ்சம் கிச்சுக்கிச்சு மூட்டுவது போல் வரும் அந்த ஒரே சம்பவத்தை நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு சிலுவைப் போரில், ரோம் போப்பால் அனுப்பப்பட்ட வீரர்கள் விரக்தியில் ஜெருசலேமைத் தாக்காமல் கான்ஸ்டான்டிநோபிளைத் தாக்கும் சம்பவம் நினைவிருக்கிறதா? மேற்கு கிழக்கின் புராதன பகையின் வெளிப்பாடே அது! இதுதான் இப்புத்தகத்தின் கரு. அதாவது இஸ்லாம் மத்திய கிழக்கில் காட்சிக்கு வருவதற்கு முன்பே மிச்சமிருக்கும் ரோமானியப் பேரரசின் அதிகார வேட்கை, திருச்சபையில் இருந்த நீயா நானா குளறுபடிகள் என எரிந்து கொண்டிருந்த பிரச்சனைகள் நிறைய இருந்தன.

மேற்குலகிடம் தோற்பதை விட இஸ்லாமிடம் தோற்பதே மேல் என பின்னாளில் கான்ஸ்டான்டிநோபிள், இஸ்தான்புல் ஆன பின்னும் அங்கேயே தங்கள் தலைமைப் பீடத்தைத் தொடர்கிறார்கள். இதனால் தான் ஆசிரியர், இஸ்லாம் இல்லாமல் போயிருந்தால் மத்திய கிழக்கின் நிலைமை இன்றைவிட இன்னும் கொடுமையாக இருந்திருக்கும் என்கிறார். ஏற்கனவே சண்டை போட்டுக் கொண்டிருந்த கிழக்கும் மேற்கும் கொஞ்சம் நின்று, புதிதாகப் பரவும் இஸ்லாமைப் புரியாத புதிராக நோக்க ஆரம்பித்தார்கள். போப் இரண்டாம் அருள் சின்னப்பர் (Pope John Paul II) 800 ஆண்டுகள் கழித்து, கிழக்குத் தலைமைப் பீடத்திடம் மன்னிப்பு கேட்கிறார்; 3 வருடங்கள் கழித்து ஏற்றுக் கொள்கிறார்கள்; அந்த அளவிற்குப் புரையோடிய பகை. இஸ்லாம் போன்ற திசை திருப்பிய சக்தி (distracting factor) ஒன்று, அக்காலத்தில் தோன்றாமல் போயிருந்தால் சண்டை படு உத்வேகத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கும். இஸ்லாம் இல்லாமல் இருந்திருந்தால், சரத்துஸ்திர ஈரானைத் தவிர‌ கிழக்குத் திருச்சபை அவ்விடங்களை நிரப்பி இருக்கும் என்று சிந்திக்கச் சொல்கிறார் ஆசிரியர். அப்புரியாத சக்தியின் மேல் பரப்பப்பட்ட‌ பயமும், வன்முறை மாயமும் இன்றைய நவீன காலத்திலும் தொடர்வது துரதிஷ்டமே!

தொழுகை திசையை ஜெருசலேமில் இருந்து மெக்காவை நோக்கி முகமது நபி மாற்றியதே மிகப் பெரிய நல்லெண்ண முயற்சியே! அவர் மட்டும் திசையை மாற்றி இருக்காவிட்டால், ஜெருசலேம் இன்று என்னவாகி இருக்கும் என்று நினைத்து கூடப் பார்க்க முடியாது. சொட்டு இரத்தம் சிந்தாமல் ஜெருசலேமைக் கைப்பற்றி தனது மதச் சின்னங்களைப் புதிதாகக் கட்டாமல் மத ஒற்றுமை காக்கிறார் முதலாம் உமர். சுல்தான் சலாவுதீன் தோற்றுப்போன எதிரிகளுக்கும் கப்பம் கட்டுகிறார்; மருத்துவ உதவி செய்கிறார். இஸ்லாமியர்களின் காலம் ஜெருசலேமின் பொற்காலம், என எல்லா வரலாற்று ஆசிரியர்களும் ஒத்துக் கொள்வதை எனது முந்தைய பதிவுகளில் பதிவு செய்திருக்கிறேன். சுருக்கமாகச் சொன்னால், இஸ்லாமியர்கள் காலத்தில் பெரும்பாலும் ஜெருசலேம் மதமற்று இருந்திருக்கிறது; மத்திய கிழக்கும்.

I want to see an India where everyone is literate. Only then can we erase the difference between India and Bharat.
- U.R.Ananthamurthy (ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர்)

ஒரே கடவுள் கொள்கை கொண்ட மத்திய கிழக்கின் ஒரு பாரம்பரியத் தொடர்ச்சிதான் இஸ்லாம். மத்திய கிழக்கில் இருந்த ஒரே நாகரிகத்தின் பல்வேறு தளங்களை இஸ்லாமால் மிக எளிதாக இணைக்க முடிந்திருக்கிறது. இஸ்லாமின் அரசியல் எல்லைகள் காலப்போக்கில் பல சமயங்களில் மாற்றி எழுதப்பட்டு இருந்தாலும், இஸ்லாம் உண்டாக்கிய அவ்விணைப்பு இன்று வரை நீடிப்பது மறுக்க முடியாத உண்மை. மதம் என்ற அடையாளத்தைத் தவிர ஏற்கனவே அங்கிருந்த பிரச்சனைகளுக்கு அதிகாரம் தேசியம் அரசியல் இனம் என்ற பல காரணங்கள் இருந்ததையும், மதம் ஓர் பதாகை போல் தான் செயல்பட்டிருக்கிறது எனப் பேசுகிறது முதல் பாகம். மத்திய கிழக்கை விட்டு வெளியே பரவ ஆரம்பித்த இஸ்லாம் எதிர்கொண்ட பல்வேறு நாகரிகங்கள் பற்றிப் பேசுகிறது இரண்டாம் பாகம். மூன்றாம் ரோம் என‌ உருவெடுத்த இரஷ்யாவின் மாஸ்கோ, சீனா, மேற்கத்திய நாடுகள் போன்றவற்றை விடுத்து, இஸ்லாம் எதிர்கொண்ட கிறித்தவம் அல்லாத முதல் நாகரிகம் பற்றி விரிவாகப் பேசுவோம். ஆம், இந்தியாவைத் தான் சொல்கிறேன்.

மதம் பற்றி எந்தப் புரிதலும் இல்லாத எனது 20வது வயதில் படித்த குஷ்வந்த் சிங் கட்டுரை ஒன்று இன்னும் நினைவில் இருக்கிறது. இந்து இஸ்லாம் மதங்களுக்கு இடையே இருக்கும் வேற்றுமைகளைப் பட்டியலிடுவார். மெய்சிலிர்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்! முரண்தொடை என்ற இலக்கண அழகியல் இயற்கையாக அமைந்த இயற்கையின் இரு படைப்புகள்! அப்துல் ரகுமானின் ஆலாபனை பித்தன் என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளை அடுத்தடுத்து படிப்பது போன்ற அருமையான அனுபவம். 12ம் நூற்றாண்டில் இஸ்லாம் வட இந்தியாவில் நுழைந்தவுடன் இம்முரண்தொடையை ரசிக்கத் தெரிந்தவர்களிடம் இருந்து புதுப்புது பக்தி மார்க்கங்கள் பிறப்பெடுத்தன. சுஃபியிஸம் தோன்றியது. கபிர் துக்காராம் துளசிதாஸ் குருநானக் என அடித்தள மக்களிடம் இருந்து மதத் சிந்தனைவாதிகள் தோன்றினர். கார்ல் மார்க்ஸ் சொன்னது போல தனிப்பட்ட வரலாறு இருந்திராத இந்தியத் துணைக்கண்டம் பற்றிய புத்தகங்கள், 'மதங்கள்'என்ற அலமாரியில் பிரிட்டிஷ் நூலகங்களில் உறங்கிக் கொண்டிருந்த காலத்தில், மொகலாயர்கள் என்ற வேற்று எதிரியால் அதிர்ந்த மக்கள், அதே பெயரால் ஒன்றுபட்டனர். இன்று இந்தியத் துணைக்கண்டம் என்று சொல்லப்படும் அடிப்படை எல்லைகள் மொகலாயர்கள் நிர்ணயித்தவை, என்பதை யாராலும் மறுக்க முடியாது.

மத நல்லிணக்கத்தின் உச்சக்கட்டமாக, எல்லா மத நம்பிக்கைகளின் நல்ல கருத்துகளைக் கொண்டு கடவுளற்ற இறைத்தூதரற்ற தீன்‍இ‍லாஹி என்ற புது மதத்தையே உருவாக்கினார் அக்பர். ஜவஹர்லால் நேரு அக்பரை இந்தியாவின் தந்தை என வர்ணிப்பதில் ஆச்சரியமில்லை. இம்முரண்தொடையை வரலாறு எதிர்மறையாக எழுதியதும், புரிந்து கொள்ளப்பட்டதும் நமக்கான சாபமே அன்றி வேறேன்ன சொல்ல? அரபு மற்றும் மொகலாயப் படையெடுப்பை இஸ்லாமியப் படையெடுப்பு எனப் பதிவு செய்தனர் வரலாற்று ஆசிரியர்கள். ஐரோப்பியர்கள் காலனி பிடித்த போது, கிறித்தவ ஆக்கிரமிப்பு என்று அவர்கள் எழுதவில்லை. காந்தி கொல்லப்பட்ட நாளில் கொலைகாரனின் மதத்தைத் தான் கேட்டது ஒட்டுமொத்த நாடும்! முரண்தொடையை ரசிக்க வைக்க அப்படியொரு தலைவன் மீண்டும் கிடைக்காது போனதும் சாபமே!

இந்தியாவின் இன்றைய நிலைக்கும், எதையுமே சாதித்திராத இந்தியப் பிரிவினைக்கும் பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியே அன்றி இஸ்லாம் காரணமே அல்ல என்கிறார் ஆசிரியர். இஸ்லாம் இல்லாமல் இருந்திருந்தால், பாபர் வராமல் போயிருந்தால், பெர்ஷியாவில் இருந்து யாரோவொரு குட்டி அரசன் ஏதோவொரு மத அடையாளத்துடன் கொஞ்சங் கொஞ்சமாக நாடுகள் பிடித்து, கடைசியில் இந்தியாவைப் பேரரசாக மாற்றினாலும், பிரிட்டிஷ்காரன் இஸ்லாம் இல்லாமலே பிரித்திருக்க மாட்டானா என்ன? வாய்ப்புகள் நிறைய உண்டு.

உன் ஆயுதத்தை உன் எதிரியே தீர்மானிக்கிறான்.
- மா சே துங்

Terrorism is the weapon of the weak.
- ஷேக் அகமது யாசின் (ஹமாஸ் தலைவர்)

நவீன காலத்தில் இஸ்லாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் பேசுகிறது கடைசி பாகம். எல்ஜா முகமது, மால்கம் எக்ஸ் போன்ற தலைவர்கள் ஏற்கனவே இன ரீதியில் திரண்டிருக்கும் தங்கள் போராட்டங்களை இஸ்லாமுக்கு மதம் மாறி, இன்னும் தீவிரப்படுத்தியதை பேசுகிறது ஒரு கட்டுரை. நாசர், பாலஸ்தீனம், தற்கொலைப் படைத் தாக்குதல், தீவிரவாதம் என பேசுகின்றன அடுத்தடுத்த கட்டுரைகள். எகிப்தில் நாசரை அடக்க இஸ்லாமிய மதவாதிகளுக்கு மறைமுகமாக உதவியது அமெரிக்கா. யாசர் அராபத்திற்கு எதிராகச் செயல்பட ஹமாஸ் தலைவர் ஷேக் அகமது யாசினை விடுதலை செய்து உதவியது இஸ்ரேல். இவற்றில் எங்கு மதம் வந்தது? குஜராத் இனக்கலவரம் முன்பு இந்திய முஜாஹிதீன் கிடையாது என்கிறது அரசு. பாபர் மசூதி இடிப்புக்கு முன்பு இஸ்லாமிய தீவிரவாதம் இந்தியாவில் கிடையாது. காலிஸ்தான் பிரச்சனையில் பக்கத்து பஞ்சாப் பற்றி எரிந்த போதும் காஷ்மீர் அமைதியாகப் போராடி இருக்கிறது. ஆப்கானிஸ்தானைச் சோவியத் ஆக்கிரமிக்கும் வரை உலகில் இஸ்லாமிய மதவாதம் கிடையாது. 1967ல் பாலஸ்தீனம் முழுவதும் அரபுகளிடம் இருந்து பிடுங்கப்பட்ட போதும் தீவிரவாதம் இல்லை. பின் எந்தச் சூழ்நிலையில் மதம் ஆயுதமாக எடுக்கப்படுகிறது? உங்களின் வாசிப்பிற்கே விட்டுவிடுகிறேன்.

மதம் என்றாலே பிரச்சனை என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட முடியாது. மதச்சார்பற்ற பிரெஞ்சு நாடு மத அடையாளங்களைத் தடை செய்கிறது. நாத்திக சோவியத் யூதர்களை விரட்டிய கதையும் உண்டு; அதே சோவியத் மதத்தைக் கையில் எடுத்த கதையும் உண்டு. Pogrom என்ற வார்த்தையை அகராதியில் சேர்த்ததே சோவியத்தான். மதச்சார்பற்ற வன்முறை என்று தனிப்பெயர் தரலாம். மதம் இருக்கட்டும். மதம் நல்லது. மதம் இல்லாத உலகம் இன்னும் அதிகமாக மதம் பிடித்திருக்கும். மதம் இல்லாதவனுக்கு இல்லாள் கிடைப்பதில்லை, என்பது என் பட்டறிவு.

ஆசிரியர் சொல்லும் தீர்வுகளில் உங்களுக்குப் புரியும் சில கருத்துகள் இதோ:
1. அரபு மண்ணில் இருந்து அந்நியப் படைகள் வெளியேறினால் போதும்; பல தீவிரவாத இயக்கங்கள் முடிவுக்கு வரும்.
2. பாலஸ்தீன அகதிகளுக்கு நீதி.
3. இஸ்லாமிய மதவாதம் மற்றும் பயங்கரவாதங்களுக்குத் தீர்வு காண உள்ளூர் இஸ்லாமியர்களால் மட்டுமே முடியும். அவர்களிடம் விட்டுவிடுங்கள்.

சுருக்கமாகச் சொன்னால், புத்தகத்தின் தலைப்பைப் போல், எந்தவொரு பிரச்சனைக்கும் இஸ்லாமியச் சாயம் பூசாமல், வெறும் உலகலாவிய மனிதயினத்தின் சமூக மற்றும் அரசியல் பிரச்சனையாக மட்டும் பாருங்கள். நடக்கும்? ஆயுதத் தயாரிப்பாளர்களும் வல்லரசுகளும் நடக்கவிடுவார்களா?

உங்கள் சிந்தனைக்கு:
1. திலக் என்ற இந்துத் தளபதியின் கீழ் ஓர் இந்துப் படையை வைத்திருந்தார் கஜினி முகமது. வெற்றி மட்டுமே நோக்கமாகக் கொண்ட கஜினியுடன் இஸ்லாம் எப்படிக் காரணமாகும்?
2. வாள் முனையில் இஸ்லாம் பர‌வியது என்ற கூற்று, தென்னிந்தியாவிற்கும் சீனாவிற்கும் முற்றிலும் தவறு. இவ்விரண்டு இடங்களுக்கும் இஸ்லாம் வணிகம் மூலம் வந்தது. உலகின் இரண்டாம் பள்ளிவாசலான சேரமான் ஜீம்மா பள்ளிவாசல், சேரப் பேரரசின் தலைநகரான கொடுங்களூரில், இன்றைய கேரளாவில் உள்ளது! முகமது நபியின் வாழ்நாளிலேயே கட்டப்பட்டது அது!  'அறியப்படாத தமிழகம்'புத்தகத்தில் தொ.பரமசிவன் அவர்கள், பிரியாணியும் தென்னாட்டிற்கு வெகு நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டதாகக் கூறுகிறார்.
3. அடிமைமுறையை இஸ்லாம் ஊக்குவிப்பதாகக் கூறினார் அம்பேத்கார். அடிமைகள் அரசாண்டிருக்கிறார்கள். குதுப்மினார் கட்டி இருக்கிறார்கள்.
4. தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருடன் இந்து என்ற வார்த்தையையும் பல வெளிநாட்டு ஊடகங்கள் சேர்த்துக் கொள்ளும். அவர்கள் தற்கொலைப் படைத் தாக்குதல் பயிற்சி பெற்றது லெபனானில், பல இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து என்று பலருக்குத் தெரியும். விடுதலைப் போராட்டக் குழுக்களில் மதம் உண்டா என்ன?
5. பிரிவினைக்குப் பின் இலாகூரைத் தவிர மொகலாயர்கள் நிர்மாணித்த அனைத்து பெரிய நகரங்களும் இந்தியாவில் தான் இருக்கின்றன, தாஜ்மகால் உட்பட.
6. ஷியா ஈரானைத் தவிர, இஸ்லாமிய மதத் தலைவர்கள் ஆட்சித் தலைவர்களை நியமித்ததாக‌ அல்லது கட்டுப்படுத்தியதாக எங்குமே வரலாறு கிடையாது! அதே போல் எந்தவொரு சுல்தானோ ஷாவோ பாதுஷாவோ முஃப்திக்கு முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டதாக இஸ்லாமிய வரலாறு கிடையாது! அதாவது இஸ்லாமிய வரலாற்றில் மத மற்றும் அரசியல் தலைமைகள் ஒன்றோடொன்று குறுக்கிட்டதில்லை. இது நல்லதா கெட்டதா என்று உங்களுக்குச் சட்டெனப் புரியாது. மதம் ஆதிக்கம் செய்தால் / அரசியல் ஆதிக்கம் செய்தால் / இரண்டுமே சேர்ந்து ஆதிக்கம் செய்தால் / இரண்டுமே தனித்தனியாக இருந்தால் / என ஒவ்வொரு நிலையிலும் வரலாற்றில் மற்ற மதங்களில் எப்படி நடந்திருக்கிறது எனப் புரட்டிப் பாருங்கள். இரண்டின் வல்லமையும் புரியும்.

காந்தி கொலைவழக்கில் அவர் மேல் சுமத்தப்பட்ட பல குற்றங்களில் ஒன்று: 'ஓர் இந்துவைத் திருக்குரானைப் படிக்கச் சொன்னார்'. பெரியார் கட்சிக்காரர் ஒருவரிடம் கேட்டார்கள்: 'நீங்கள் ஏன் எப்போதும் இந்து மதத்திலேயே குறை கண்டு பிடிக்கிறீர்கள்?'. அவர் சொன்னார்: 'அது என்னுடைய மதம் என்று சொல்லப் படுவதால்'. இதே பதில்தான் காந்தியும் சொல்லியிருப்பார். காந்தி அம்பேத்கர் பெரியார் என்று எல்லா சீர்திருத்தவாதிகளும் தங்கள் மதங்களைச் சீர்திருத்தியவர்களே. கடவுள் என்னைக் கைவிட்டு, நான் கடவுள்களைக் கைவிட்டு பல்லாண்டுகள் ஆகிவிட்டதால், நான் உங்களுக்குக் கொடுக்க முடிந்தது இது போன்ற மத நல்லிணக்கம் சொல்லும் புத்தகங்களே! 'ஏன் இஸ்லாம்?'எனக் கேட்டால், சுற்றி அமர்ந்திருக்கும் குழந்தைகளில் பசித்திருக்கும் சிறு குழந்தைக்கு முதல் தோசையைக் கொடுக்கும் ஒரு சாதாரண தாயின் மனநிலையே என்னுடையதும்!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

110. மாதொருபாகன்

$
0
0
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : மாதொருபாகன் (புதினம்)
ஆசிரிய‌ர் : பெருமாள்முருகன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2010
விலை : 140 ரூபாய்
பக்கங்கள் : 190
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
இச்சமூகம் ஒரு காட்டமான கணக்கு வாத்தியார். நம்மை மறைமுகமாகக் கணித்துக் கொண்டே இருக்கும். நம் இருப்பை உறுதிசெய்ய எதையாவது நாம் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். உதாரணமாக, நிர்ணயித்த வயதில் திருமணம் செய்யாத‌ ஆண்களைப் பாதாளத்தில் இருந்து மீட்க வந்த மகான் எனவும், அடுத்த‌ மகாத்மா எனவும், வருங்காலப் பிரதமர் எனவும் புகழ்ந்து தள்ளும்; பெண் என்றால் அம்மா தாயே என்று காலில் விழுந்து கும்பிடாது; மிருகம் போடும் ஓலங்களை நல்ல சகுனம் என்று சொல்லி, துணை இல்லாத அல்லது துணை இழந்த பெண்ணை வெகுதூரம் நிற்க வைக்கும். அப்படியொரு நிலைக்கு வாய்ப்புத் தராமல் காளியைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் பொன்னா. சமூகம் அவர்களைப் போல் கொஞ்சம் மேலேறி அடுத்த விசயத்தை நிரூபிக்கச் சொல்கிறது. கல்யாணம் ஆன முதல்மாதம் விலக்கானதும் மாமியார் 'ம்க்கும்'என்று முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள். அன்றிலிருந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்தும் ஒவ்வொரு மாதமும் அந்த 'ம்க்கும்'தொடர்கிறது.

கல்யாணம் ஆன புதிதில் மாமனார் வீட்டில் காளி நட்டு வைத்து போன பூவரச மரத்தின்  பூக்கள் கூட, வாய் விரிந்த மஞ்சள் பூக்களாலும், சிவந்து குவிந்த வாடல் பூக்களாலும் சிரித்துச் சிரித்து, வாட வாட அழகேறிக் கொண்டே இருக்கின்றன. பொன்னா நட்ட செடி பூத்து குலுங்குகிறது; நட்ட மரம் காய்த்துக் கிடக்கிறது; கொண்டு வந்த கன்றுக்குட்டி பெருகிக் கிடக்கிறது; அடை வைத்த மொட்டு பொறித்துச் சிரிக்கிறது. அவர்களுக்கென்று ஒரு புழு பூச்சி கூட தரிக்கவில்லை. 50 வயதிலும் மாமியார்களையும் கர்ப்பமாக்கிக் காட்டுவதாகச் சவால்விடும் மருத்துவ வசதிகள் உள்ள காலம் இது. இந்த வசதிகள் எல்லாம் இல்லாத காலத்தில், மாடு நாற்பது ரூபாய்க்கு விற்ற காலத்தில், சுதந்திரம் கிடைப்பத‌ற்கு முன் திருச்செங்கோட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் பொன்னாவும் காளியும். தக்க நேரத்தில் நிரூபிக்காத அவர்களைச் சமூகம் சாடை பேசுகிறது. காளியை மறுமணம் செய்யச் சொல்கிறது; பொன்னாவை அவனோடு ஒட்டி வாழவோ, ஒட்டுமொத்தமாக வெட்டிக் கொண்டு பிறந்தவீடு புகவோ பயமுறுத்துகிறது.

ஒருவன் வேலையைக் காளி குறை சொன்னால், 'வேலன்னா வேல உடறது'என்று சொல்லி இடக்கையின் இரண்டு விரல்களை நிமிர்த்தி வலக்கையின் ஆட்காட்டி விரலை அதற்குள் நுழைத்துக் காட்டுகிறான் ஒருவன். 'குடிக்கிற தண்ணி அருமையா இருந்து என்னடா? உடற தண்ணியும் அருமையா இருக்கோணும்டா'என்கிறான் இன்னொருவன். 'வறடி பருப்பள்ளிக்கிட்டு ஓடிஓடிக் குடுக்கறா. அவ கையால தொட்ட பருப்பு எங்கிருந்து மொளைக்கும்?'என்று பொன்னாவை விரட்டுகிறாள் ஒருத்தி. 'பிள்ளயில்லாதவ பீச்சீலய மோந்து பாத்தாளாம்'என்று சாடுகிறாள் இன்னொருத்தி. 'முட்டுச் சந்துல நிக்கிற கல்லுன்னு நெனச்சு எந்த நாய் வேண்ணாலும் வந்து மண்டுட்டுப் போலாம்னு நெனைக்குதுவ'என்று காளியிடம் அழுகிறாள் பொன்னா.

குழந்தையின்மைக்குக் காளியின் பரம்பரையில் முன்னோர்கள் செய்த சில குற்றங்களே காரணம் என குடும்பத்திற்குள் சில கதைகள் சொல்கிறார்கள். சில சமீபத்திய தலைமுறைகளில் நடந்த சம்பவங்களைச் சான்றாகக் காட்டி, சாபம் தொடர்வதை நிரூபிக்கிறார்கள். எத்தனை வைத்தியங்கள்! எத்தனை பத்தியங்கள்! எத்தனை பாவப் பரிகாரங்கள்! எத்தனை சாமிகளுக்கு வேண்டுதல்கள்! வேண்டாம் வேண்டாம் என்பவனுக்கு இந்தா இந்தா என்று கொடுக்கும் சாமி, வேண்டும் வேண்டும் என்பவனுக்குப் போடா மயிரே என்கிறது.

திருச்செங்கோட்டில் மலை உச்சியில், வறடிக்கல் என்று சொல்லப்படும் ஆளுயர ஒற்றைக்கல்லைச் சுற்றி இருக்கும் ஒற்றையடி அரைவட்டத் தடம். வறடிக்கல்லைப் பெண்கள் சுற்றினால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில், அவ்வளவு உயரத்தில் உயிரைப் பணயம் வைத்தும் சுற்றிவிடுகிறாள் பொன்னா. ம்க்கும். இவர்களின் கடைசி நம்பிக்கையான‌ இன்னுமொரு சாமிதான் மாதொருபாகன்! மாது ஒரு பாகன். புதினத்தின் கருவான‌ மாதொருபாகனைப் பற்றி எழுதி, நீங்கள் புதினம் வாசிக்கும் போது வளரப்போகும் சுவாரசியக் கரு கலைக்க நான் விரும்பவில்லை.
(http://www.panuval.com)
பெருமாள்முருகன். சமீபத்தில் நான் அதிகம் படித்தவை இவருடைய புத்தகங்கள்தான். இத்தளத்தில் நான் அதிகம் எழுதிய தமிழ்ப் புத்தகங்களும் இவருடையவையே. நிகழ்காலத்தின் ஒப்பனைகள் இல்லாமல், ஏதோவொரு காலத்தில் எனக்குத் தொடர்பே இல்லாத மனிதர்களைப் பற்றி பேசுபவை இவரது கதைகள். 'இறக்கையைப் பாதி விரித்த பறவையைப் போல் ஓலைக்கொட்டகை'என்றும், 'கோட்டானைப் போலத் தன் இருப்பிடமே கதி'என்றும் மிக எளிய விசயங்களை அற்புதமான உவமைகளாகக் கையாளும் இவரது எழுத்துக்கள், எனக்கு மிகவும் பிடிக்கும். எத்தனை நாடகங்களில் வந்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாகச் சிரிக்க வைக்கும் எஸ்.வி.சேகரின் ஆள்மாறாட்டக் கதைகள் போல, சந்துபொந்து எல்லாம் நுழைய வைத்து ஆழத்தின் கடைசிவரை அதே குளிர்ச்சியோடு வாசகனையும் கூட்டிப் போகும் 'கிணறு'பற்றிய விவரணைகள் இவர் கதைகளில் சலிப்பதே இல்லை. இப்புதினத்தில் வரும் 'கரிக்குருவிகள்'போல இயற்கையோடு இணைந்தும் புரிந்தும் வாழ்ந்த எளிய மனிதர்கள்தான் பெரும்பாலும் இவரின் கதைமாந்தர்கள்.

சரி, அதென்ன மாதொருபாகன்? திருச்செங்கோட்டு மலைமேல் இருக்கும் கோவில் அய்யரிடம் இருபது ரூபாய் கொடுத்து காளி கேட்டபோது, கிடைத்த பதில் இது: 'நூத்துக்கணக்கான வருசமா அர்த்தநாரீஸ்வரன்னு நாங்க பரம்பரையாப் பூச பண்ணிண்டு வர்றோம்.அம்மையப்பன், மாதொருபாகன்னு பலபேரு சொல்லி இந்த ஈஸ்வரனப் பாடி வெச்சிருக்கறா. ஆணும் பெண்ணும் சேந்தாத்தான் லோகம். அத நமக்கெல்லாம் காட்ட ஈஸ்வரன் அம்பாளோட சேந்து அர்த்தநாரீஸ்வரனா நிக்கறார். எல்லாக் கோயில்லயும் பாத்தேள்னா ஈஸ்வரனுக்குத் தனிச் சந்நதியும் அம்பாளுக்குத் தனிச் சந்ததியும் இருக்கும். இங்க அம்மையும் அப்பனும் சேந்து ஒண்ணா இருக்கறா. அதான் அம்மையப்பன்னு பேர் வெச்சிருக்கறா. தன்னோட ஒடம்புல எடது பக்கத்த அம்பாளுக்குக் கொடுத்த கோலம் இது. பெண்ணுக்கு நாம நம்ம ஒடம்புலயும் மனசுலயும் பாதியக் கொடுத்தாத்தான் நல்ல கிருஹஸ்தனா இருக்கலாம். நாம் ஆணாப் பொறந்திருந்தாலும் நமக்குள்ள பெண் தன்மையும் நெறஞ்சிருக்கு. இதை எல்லாம் சேத்து மாதொருபாகன்னு பெரியவா சொல்லியிருக்கறா. ஆணில்லாம பெண்ணில்ல. பெண்ணில்லாம ஆணில்ல. ரெண்டு பேரும் சேந்துதான் லோகம் நடக்குது. அதான் மாதொருபாகன். உள்ள பாத்தேளா? வலப்பக்கம் ஈஸ்வரன். எடப்பக்கம் அம்பாள். ஈஸ்வரன் இப்படிக் காட்சி கொடுக்கறது இங்க மட்டுந்தான். ஒரு சிலபேரு இது கண்ணகிங்கிறா,அறியாமைல சொல்றவாளுக்கு என்ன பதில் சொல்றது? எல்லாமே ஈஸ்வரந்தான்னு சிவனேன்னு இருக்க வேண்டியதுதான்'.

குழந்தையற்ற தம்பதிகளுக்குள் நடக்கும் பல்வேறு விதமான அக மற்றும் புற விசயங்களும், ஆதிசிவன் பாதிசிவன் ஆன‌ மாதொருபாகன் கோவில் சார்ந்து நிலவும் நம்பிக்கைகளும் தான் இப்புதினம். ஓவ்வொரு சாமிக்கும் இருக்கும் கோவிலைச் சுற்றி ஒரு புதினம் எழுதும் அளவிற்குக் கதைகள் இருக்கின்றன. கிழக்கே போகும் ரயில் கொடுத்த பாரதிராஜாவிற்கு இக்கதை தெரிந்திருந்தால் கண்டிப்பாக திரையில் எடுத்திருப்பார்!

நான் ரசித்தவை:
பிடித்துப் போன கதைமாந்தர்: நல்லுப்பையன் சித்தப்பா.
பிடித்துப் போன நிகழ்ச்சிகள்: 1. வெள்ளைக்காரத் துரை நடத்தும் குளத்தில் கல்லெறியும் போட்டி 2. பதினான்காம் நாள் திருவிழாவில் திருச்செங்கோட்டின் ஒவ்வொரு வீதியையும் பொன்னா சுற்றி வரும்போது சுற்றி நடக்கும் சம்பவங்கள்.

அனுபந்தம்:
----------------
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍உலகில் பல்வேறு சமூகங்கள் எப்படி பெண் தெய்வங்களைக் கையாண்டிருக்கின்றன என ஆராயும் Merlin Stone அவர்களின் When God Was a Woman புத்தகம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். படித்தால் சொல்லுங்கள்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

111. வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள்

$
0
0
(கர்மவீரருக்கும் மகாத்மாவிற்கும் சமர்ப்பணம்)

பெரும்பாலான கல்லூரிகள் தனியார் அமைப்பால் நடத்தப்படுவதும், அமைப்பு ரீதியாகவும், அலுவலர் ரீதியாகவும் இவ்வமைப்புகள் வகுப்புவாதத் தன்மை கொண்டுள்ளன. இது மாணவர் சேர்க்கையிலும் பிரதிபலிக்கிறது. இதனால் உயர் வகுப்பினர் சேர்க்கையில் முன்னுரிமை பெறுகின்றனர். தீண்டத்தகாத வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சேர்க்கை முடிந்து விட்டதாகக் கூறி இடம் மறுக்கப்படுகிறது.
- டாக்டர் அம்பேத்கர் (காலத்தில் இருந்து இன்றும்...)
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள்
ஆசிரிய‌ர் : அய்.இளங்கோவன் (ஆங்கிலத் துறைத் தலைவர், எலிசபத் ராட்மன் ஊரிஸ் கல்லூரி, வேலூர்)
வெளியீடு : கருப்புப் பிரதிகள், லாய்ட்ஸ் சாலை, சென்னை
முதற்பதிப்பு : சூன் 2009
விலை :  40 ரூபாய்
பக்கங்கள் : 72
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் காலந்தோறும் சில குறிப்பிட்ட சமூகங்கள் தீண்டத்தகாதவர்களாக கல்வி மறுக்கப்பட்ட கொடுமைகளைக் காணலாம். போனால் போகட்டும் என்று தர்ம சிந்தனையிலும் புண்ணிய நோக்கிலும் ஆரம்ப காலத்தில் கொஞ்சம் கல்வி கொடுத்திருக்கிறார்கள். 'தீண்டத்தகாதவர்களுக்குக் கல்வி அளிக்கலாம். ஆனால் அதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுமானால் அதற்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை'என்றார்கள் ஆங்கிலேயர்கள். 1930ல் கல்லூரியில் படித்த மெட்ராஸ் மாகாண தாழ்த்தப்பட்டவர்கள் 47 பேர் மட்டுமே. அவையும் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் படிப்புகளாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

கேரளாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் இடதுசாரி அரசு, 'கேரளக் கல்விச் சட்டம் 1957'என்ற பெயரில் ஒரு சட்ட முன்வரைவைக் கொண‌ர்ந்தது. அது சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்தது. கேரள சிறுபான்மை மக்கள் எதிர்த்தனர். இதனால் சட்டப் பேரவையில் நிறைவேறிய சட்ட முன்வரைவு ஆளுநரின் ஓப்புதலின்றி குடியரசுத் தலைவரின் கருத்துக்கு அனுப்பப்பட்டது. 'இச்சட்டம் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிரானதல்ல. சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு இப்பிரிவின் கீழ் செல்லத்தக்கதே'என்றது உச்ச நீதி மன்றம். இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டோம். மைய மாநில அரசுகள் ஏதாவது செய்தனவா? அத்தீர்ப்பின் நடைமுறை எதார்த்தம் என்ன? இப்புத்தகம் பதில் சொல்கிறது.
(http://udumalai.com)
அரசுக் கல்லூரிகளில் உள்ள மொத்த பணியிடங்களை விட அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் இரண்டு மடங்கு அதிகம். பொதுநலம் எனக் காரணம் காட்டி, மக்கள் வரிப்பணத்தில் இருந்துதான் மானியம் என்ற பெயரில் அரசிடம் இருந்து இக்கல்லூரிகள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோருக்கான ஊதியத்தை 100% பெறுகின்றன. பெரும்பான்மையான வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளைத் தம்வசம் வைத்திருக்கும் இக்கல்லூரிகள் சமூக நீதிப்படி நடந்துகொள்கின்றனவா? அரசமைப்புச் சட்டம் இட ஒதுக்கீட்டில் இருந்து சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கிறது. சிறுபான்மை மதங்கள் தத்தம் மதங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட நெடு நாளைய கோரிக்கைகளை அலட்சியப்படுத்தி வரும் அரசை அடிக்கடி கண்டிக்கின்றன. ஆனால் அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீட்டை அளிக்கின்றனவா? சிறுபான்மையினரின் கல்லூரிகளில் சிறுபான்மையினருக்கு மட்டுமே வேலை என்பது மதச் சார்பின்மைக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதில்லையா? 2000 முதல் 2008 வரையிலான புள்ளி விவரங்களை இப்புத்தகம் ஆதரமாகச் சொன்னாலும், அதன்பிறகு பெரிய மறும‌லர்ச்சி ஏதும் நம் நாட்டில் நடக்காத‌தாலும், அவ்வாதாரங்கள் இன்றும் கிட்டத்தட்ட பொருந்தும் எனக் கொள்ளலாம். பின்வரும் முப்பெரும் ஓரவஞ்சனைகளைச் சுட்டிக் காட்டுகிறது இப்புத்தகம்.
1. சிறுபான்மைக் கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் மறுக்கப்படும் தாழ்த்தப்பட்டோருக்கான வேலை வாய்ப்பு.
2. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்படும் இட ஒதுக்கீடு.
3. இக்கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கு மறுக்கப்படும் கல்வி.

தமிழகத்தில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் 160. இதில் மத மற்றும் மொழி சிறுபான்மையினரால் 62 கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. சிறுபான்மைக் கல்லூரிகள் இட ஒதுக்கீட்டின் படி 751 தாழ்த்தப்பட்ட, 49 பழங்குடியின விரிவுரையாளர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் 160ல் 14ல் மட்டுமே 61 தாழ்த்தப்பட்ட விரிவுரையாளர்கள் பணியில் உள்ளனர். மொத்தமுள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 15192 பணியிடங்களில் 82 பேர் இயலாதோர், 67 பேர் ஆதரவற்ற கைம்பெண்கள், பழங்குடியினர் ஒரே ஒருவர் மட்டுமே. அதுவும் கூட, வள்ளி என்ற பழங்குடியினப் பெண்ணைக் கட்டிய முருகனின் பழனியில், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கல்லூரியில் பெருக்கும் பணியில் இருப்பவர்.

அரசு உதவி பெறும் சிறுபான்மைக் கல்லூரிகள் இப்படி என்றால், அரசு உதவி பெறும் சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 1124 தாழ்த்தப்பட்ட, 62 பழங்குடியின விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட விரிவுரையாளர்கள் 49.5% இருக்கின்றனர்; மீதமுள்ள இடங்கள் மற்றவர்களால் நிரப்பப்பட்டுள்ளன. பழங்குடியினர் யாரும் இக்கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக இல்லை. இட ஒதுக்கீட்டை முழுமையாகப் பயன்படுத்தும் பாராட்டத் தகுந்த மூன்று கல்லூரிகளை ஆசிரியர் அடையாளம் காட்டுகிறார்.
1. திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி
2. பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி
3. சென்னை எஸ்.அய்.வி.இ.டி. கல்லூரி

160 கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 5326. இட ஒதுக்கீட்டின் படி தாழ்த்தப்பட்டவர்கள் பழங்குடியினர் முறையே சிறுபான்மைக் கல்லூரிகளில் 187 - 14 எனவும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 236 - 32 எனவும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிற சாதியினரைக் கொண்டே இப்பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. அதாவது எழுத்தர் மேலாளர் காசாளர் என்ற நிதி மற்றும் நிர்வாகம் சம்மந்தப்பட்ட பணியிடங்களில் தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடியினரும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு, துப்புரவுப் பணியாளர்களாகவும் அலுவலக உதவியாளர்களாகவும் அமர்த்தப்படும் வர்ணாசிரம தர்மத்தின் நவீனவடிவம். அரசு உதவி பெறும் 160 தனியார் கல்லூரிகளில் இன்றைக்கும் கூட ஒரு கல்லூரியிலும் ஒரு தாழ்த்தப்பட்டவர் முதல்வராக இல்லை.
(http://www.keetru.com)
சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் சிறுபான்மையினரின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை என்றால், அங்கும் சிறுபான்மையல்லாத சாதி இந்து மாணவர்களே அதிகம். பின், அரசு மற்றும் தனியார்க் கல்லூரிகள் செய்யும் அதே வேலையைச் செய்ய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் என்ற தனி அமைப்பு எதற்கு? பணம் சம்பாதிக்கவும், அதிகாரம் செய்யவும் தானோ? அரசு உதவி பெறும் கல்லூரிகளின் பெயர்கள், பெறும் மானியம், அங்கு நிரப்பப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பணியிடங்களின் எண்ணிக்கை, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை என ஆங்காங்கே அட்டவணைகளுடன் ஆதாரங்கள் தரும் இப்புத்தகம், காசு கொடுத்தால் கதவு திறக்கும் வணிகமாகிப் போன நம் கல்வி நிறுவனங்களின் முகத்திரை காட்டும் கண்ணாடி! இது போல் பள்ளிக் கூடங்களுக்கு ஒரு புத்தகம் வந்தால் இன்னும் நலமாய் இருக்கும்!

நன்கு படித்த ஓர் அம்பேத்காரால் 6 கோடி தாழ்த்தப்பட்டவர்கள் பயன்பெற்றனர். இன்னும் 25 கோடி பேர் அதன் பயனை அறுவடை செய்து கொண்டிருக்கின்றனர். இன்று படித்த தாழ்த்தப்பட்டவர்கள் பலகோடி பேர் இருந்தும் அதனால் எந்தப் பலனும் வந்துவிடவில்லை, பாமரனுக்கு! திருவிவிலியத்தில் இயேசு கிறித்து ஒரு கதை சொல்கிறார். ஓர் ஏழை பணக்காரனின் வீட்டு வாசலில் காத்திருந்து செத்துப் போகிறான். பணக்காரனும் சாகிறான். ஏழை சொர்க்கத்திற்கும் பணக்காரன் நரகத்திற்கும் போகிறார்கள். சொர்க்கத்தில் இருக்கும் ஏழையிடம் உதவி கேட்டு கதறுகிறான் பணக்காரன். உலகத்தில் இருக்கும்வரை எங்களிடம் கெஞ்சிக் கொண்டே இருங்கள்; எல்லாவற்றையும் மேலே போய் கணக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள் பணக்காரர்கள். அவர்களுக்குத் தெரியும் அக்கதை வெறுங்கதைதான் என்று. தாழ்த்தப்பட்டவர்களாகவும் பழங்குடியினராகவும் ஒதுக்கப்படும் ஏழைகளுக்குத் தான் அது இன்னும் புரியவில்லை. அக்கதைப்படி அவர்கள் இறுதித்தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். இறுதித்தீர்ப்பு என்று ஒன்று உண்டெனில், காலங்கடந்து வரும் அதுவும் ஒரு மறுக்கப்பட்ட நீதியே!

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

112. சாமிகளின் பிறப்பும் இறப்பும்

$
0
0
God is dead. God remains dead. And we have killed him.
- Friedrich Nietzsche
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : சாமிகளின் பிறப்பும் இறப்பும்
ஆசிரிய‌ர் : ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை
முதற்பதிப்பு : திசம்பர் 2011
விலை :  30 ரூபாய்
பக்கங்கள் : 64
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
பெயரிலேயே ஞானம் உடைய நான் ஞானம் அடைய‌ எனக்கும் மதம் சொல்லிக் கொடுத்தார்கள். ஆதாம் ஏவாள் தான் உலகின் முதல் ஆண் பெண். காயீன் ஆபேல் என்று இரண்டு மகன்கள். Both are boys. நில அபகரிப்புப் பிரச்சனையில் ஆபேலைக் காயீன் கொன்றுவிட‌, அதன் பிறகு... எனக்கொரு சந்தேகம். அதன் பிறகு அடுத்த தலைமுறை எப்படி உண்டாயிற்று? போர்த்துக்கீசிய மாலுமிகளுக்குக் காட்சி தந்த மேலைநாட்டு மாதாவிற்கு வேளாங்கண்ணி சேலை எப்படி கிடைத்தது? பூமியைக் கவர்ந்து போய் ஓர் அரக்கன் கடலுக்கு அடியில் ஒளித்து வைக்க, மீன் அவதாரம் எடுத்து சாமி பூமியைக் காக்கிறார். பூமிமேல் இருக்கும் கடலுக்குள்ளே பூமியை எப்படி ஒளித்து வைப்பது? 'கடவுளர் கதைகள்'என்றொரு சின்னப் புத்தகம். சாமி என்ற பெயரில் பெரியார் எழுதிய புத்தகம் என நினைக்கிறேன். கடவுளர்களின் புராணக் கதைகள் குறித்து எழும்பும் கேள்விகள்தான் அப்புத்தகம். குப்புறப் படுத்துத்தான் படிக்க வேண்டும். அவ்வளவும் கிளுகிளுப்பான கதைகள். மதமுடைய சாமிகள் எல்லாம் பணமுடைய சாமிகள் என்பதால், மதமற்ற ஏழைச்சாமிகள் பற்றி கொஞ்சம் படித்தறியலாம்.
(http://discoverybookpalace.com)
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். பேசாத பேச்செல்லாம், தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் போன்ற ஆசிரியரின் பிற புத்தகங்களை ஏற்கனவே படித்திருக்கிறேன்.  'சாமிகளின் பிறப்பும் இறப்பும்'. நாட்டுப்புற ஏழைத் தெய்வங்கள் மூலம் கடவுள் என்ற சித்தாந்தத்தைக் கேள்வி கேட்கும் 16 கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம். தமிழ்நாட்டில் முன்னர் கொற்றவை என்றொரு பெண்சாமி இருந்திருக்கிறது. ஊரெல்லாம் கோயில்கள் இருந்திருக்கின்றன. இப்போது அவளை யாரும் கும்பிடுவதில்லை. கோயில்களில் சரஸ்வதி இல்லை. சிவகாசியில் அச்சாகி வரும் படங்களில் மட்டுமே சரஸ்வதி வாழ்கிறாள். மூதேவி என்ற சாமியை வண்ணார் சமூகத்தைத் தவிர வேறு யாரும் வணங்குவதில்லை. இப்படி சாமிகளுக்கும் கூட‌ பிறப்பும் இறப்பும் இருப்பதையும், சாமிகளில் கூட சாதி இருப்பதையும் அறிமுகமாகச் சொல்லிவிட்டு, ஐகோர்ட் ராஜா - கவர்னர் பாடிகாட் போன்ற சில வித்தியாசமான சாமி பெயர்களைச் சொல்லிவிட்டு, ஏழைச்சாமிகளைப் பற்றி பேசுகின்றன அடுத்தடுத்த கட்டுரைகள். ஏழைச்சாமிகள் எல்லாம் கற்பனைக‌ள் அல்ல; மனித அவதாரம் எடுத்த கடவுளர்கள் அல்ல; கொஞ்சம் காலத்திற்கு முன் நம்மோடு வாழ்ந்த சக மனிதர்கள்.

அருந்ததிய சாதியில் பிறந்து அரசன் மகள் பொம்மியைக் காதலித்ததால், அன்று இரயில் தண்டவாளம் போன்ற‌ வசதிகள் இல்லாததால், கொலையா தற்கொலையா என்ற சந்தேகத்திற்கு இடமில்லாமல் வெளிப்படையாகவே கொல்லப்பட்ட‌ மதுரை வீரன் சாமியைப் பற்றிப் பேசுகிறது ஒரு கட்டுரை. ஒரு தாழ்த்தப்பட்டவனைச் சாமியாக்கி ஆதிக்க வர்க்கத்திற்கு எதிர்ப்பு காட்டிய எளிய மக்களின் கதை அது. அதே போல் தாழ்த்தப்பட்ட காதலனை ஆதிக்க வெறியர்களுக்குப் பலி கொடுத்து, முத்தாலம்மன் என்ற பெயரில் கம்பம் பகுதியில் வணங்கப்படும் சாமியைப் பற்றி சொல்கிறது ஒரு கட்டுரை. தனக்காக உயிர்விட்ட கணவனின் சிதையில் வீழ்ந்து மாய்த்துக் கொண்ட மாலையம்மன் மற்றும் மலட்டம்மன், ஒரு பழிச்சொல்லால் செங்கல் சூளைக்குள் மாய்த்துக் கொண்ட சீலைக்காரி என பரிதவித்துச் செத்த சக மனிதர்களைச் சாமியாக்கி, பரிகாரம் என்று மந்திரம் ஓதி யாகங்கள் செய்ய வசதி இல்லாத எளிய மக்களின் கதைகள்.

திருமணம் ஆகாத இளம்பெண் ஒரு குடும்பத்தில் இறந்து போனால் சாமியாக்கி வழிபடும் வழக்கம் பொதுவாக உண்டு. எங்கள் வீட்டில் கூட, நான் பார்த்திராத அத்தை ஒருத்தியின் நினைவு நாளில் வருடாவருடம் சாமி கும்பிடும் வழக்கம் உண்டு. இப்படி குடும்பசாமி குலசாமிகள் பற்றி ஒரு கட்டுரை. ஒரு நாட்டுப்புறச் சாமியைக் கும்பிடும் மக்கள் வேறு ஊருக்கு நிரந்தரமாகக் குடி போகையில் கைப்பிடி மண்ணெடுத்துப் போய் புது ஊரில் அதே சாமியைப் புதிதாகக் கட்டும் பிடிமண் சாமிகள், மின்னல்வெட்டி செத்துப் போன இடத்தில் கல்நட்டு சாமியாக்கி விட்டு கும்பிடாமலேயே விடப்படும் 'கும்பிடாத சாமி'கள் பற்றியும் ஆசிரியர் குறிப்பிடத் தவறவில்லை. ஒருநாள் முதல்வர் போல் ஒருநாள் சாமி, மனிதரிடம் அடிவாங்கும் சாமி, ஐஸ் வாங்க ஊர்விட்டு ஊர் போன ஐஸ் காளியம்மன், திருவில்லிப்புத்தூர் பகுதியில் கையில் பிடித்த குடையுடனேயே இறந்து போனதால் கொடைகாத்தான் சாமி என சில வித்தியாசமான சாமிகளையும் சொல்கிறார் ஆசிரியர். பெரியார் சொன்னது போல், மதத்தையும் தூக்கிச் சாப்பிட்டு விடும் சாதியின் சாட்சியாக இருக்கும் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் 'டவுசர் சர்ச்'பற்றிய கட்டுரையை மிகவும் ரசித்தேன்.

தஞ்சை பெரிய ஆஸ்பத்திரிக்குள் இருக்கும் இஸ்மாயில் ஷா பள்ளிவாசல் போன்ற மத நல்லிணக்கம் சொல்லும் இடம் ஒன்று, எனக்கு மிக அருகில் இருந்தும் நான் கேள்விப்படாதது ஆச்சரியமே. அந்த தர்காவில் இஸ்லாமிய பக்கீர் ஒருவருக்கு அசைவமும், அவரால் காப்பாற்றப்பட்ட பிராமணப் பெண்ணுக்குச் சைவமும் படைத்து வழிபடுவார்களாம்! கண்டிப்பாக பார்க்க வேண்டும். இது என் மதம், அது உன் மதம், உன் சாமி பேரை நான் வைக்க மாட்டேன் என்று வம்பு பண்ணாமல் சில‌ ஏழைச் சாமிகள் பெயரை மத வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் வைத்துக் கொள்வதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். உமறுத்தேவர், உமறுக்கோனார், நாகூர்கனி நாடார், நாகூர்கனித் தேவர், பெரிய ரொண்டோ, சிறிய ரொண்டோ போன்ற பெயர்களைச் சில உதாரணங்களாகவும் மேற்கோள் காட்டுகிறார். எளிய மனிதர்களுக்கு மதவாதம் இல்லை!

சாமிகளை எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மனிதன் படைத்துக் கொண்டான் என்று கற்பனைக் கதை சொல்கின்றன இரு கட்டுரைகள். ஆரம்பகால மதங்களில் இரத்தப் பலி கொடுப்பதும், அதையும் மலையுச்சியில் கொடுப்பதற்குமான காரணங்களாக ஆசிரியர் சொல்பவை அருமை. பணக்கார மற்றும் ஏழைச் சாமிகளுக்கு இடையே உள்ள 7 வேறுபாடுகளைப் பட்டியலிடுகிறது ஒரு கட்டுரை. மதம் + மடம் + நூல் உண்டு - கிடையாது. பணக்காரச் சாமிகள் மக்களின் சாதாரணச் சாப்பாட்டைச் சாப்பிடுவதில்லை. சர்ச் / மசூதியில் ஆடு வெட்ட முடியாது - தர்காவில் வெட்டலாம். மதச்சாமிகளைக் கும்பிட இடையில் புரோகிதர் / பாதிரியார் / முல்லா தேவை. ஏழைச் சாமிகளுக்குப் பூசை நாளில் அந்த நேரத்திற்கு மட்டும் அய்யர் அல்லாத பூசாரி இருப்பார். ஏழைச்சாமிகள் அடிக்கடி மனித உடலில் இறங்கி வந்து சாமியாட்டம் ஆடுவதுண்டு. ஏழைச்சாமிகளுக்குக் கற்சிலைகள் கிடையாது. ஏழைச்சாமிகளை வணங்கும் ஏழை மக்கள், பணக்காரச் சாமிகளையும் வணங்குவதுண்டு. ஆனால் பணக்காரச் சாமியை வழிபடுபவர்கள் எவரும் சுடலைமாட அய்யங்கார், காளியப்ப அய்யர், முனியப்ப ஆச்சாரியார் என்று பெயர் வைப்பதில்லை. ஒரு காலத்தில் ஏழையாய் இருந்து திடீர் பணக்காரர் ஆகிவிடும் ஆதிபராசக்தி போன்ற சாமிகளும் சரித்திரத்தில் உண்டு.

இப்படி மனிதனே கடவுளையும் படைத்துவிட்டு அதற்குப் பயப்படுபவனாகவும் மாறிப் போய், கருணை வடிவமாகவும், இதயமில்லா இவ்வுலகில் இதயமாகவும் கற்பனை செய்து கொண்டு வாழும் மனித சமூகத்தைப் பற்றி பேசும் கட்டுரைகளை 'கடவுள் இல்லை; இல்லவே இல்லை; கடவுளை நம்புபவன் முட்டாள்; கடவுளை நம்பச்சொல்பவன் அயோக்கியன்'என  பெரியாரின் வார்த்தைகளுடன் முடிக்கிறார் ஆசிரியர். கண்டிப்பாக படித்து சிந்திக்க வேண்டிய புத்தகம்.

தொடர்புடைய எங்களின் பிற பதிவுகள்:
1. தம்பியின் குறுஞ்சாமிகளின் கதைகள்
2. அண்ணனின் ஆதிசேசன் படுக்கை
3. அண்ணனின் துருத்தி

'கடவுள் அல்லது கடவுள்கள் படைப்புகளில் சிறந்தது எது?
மனிதன்
யார் சொன்னது?
மனிதன்'
என்றார் ஓர் அறிஞர்.
'மனிதன் அல்லது மனிதர்கள் படைப்புகளில் சிறந்தது எது?
கடவுள்
யார் சொன்னது?
கடவுள்'
என முடிக்கிறேன் நான்.

அனுபந்தம்:
----------------
புத்தகத்திற்கு அப்பால்,

1. எனக்குப் பிடித்த ஏழைச்சாமி, வனத்துச் சின்னப்பர். விவசாய கத்தோலிக்கக் கிறித்தவர்களின் சாமி. பூச்சிப் பட்டைகளில் இருந்து காப்பவர் என்ற நம்பிக்கை. ஆடிமாத புதன் கிழமைகளில் விவசாய நிலங்களில் கோழி வெட்டிச் சமைத்துச் சாப்பிடுவார்கள். வருமானம் வராத சாமி என்பதால், எனக்குத் தெரிந்த வரையில் இன்னும் எந்தப் பாதிரியாரும் இவரை மதத்தில் சேர்க்கவில்லை. இப்போது அவருக்கு வெள்ளைத்தோல் உருவம் கொடுத்து கண்ணாடி போட்டு கடைகளில் விற்கிறார்கள். வீட்டிலேயே சமைக்கிறார்கள். இச்சாமியைத் திரும்பவும் விவசாய நிலங்களுக்குக் கொண்டு போய் காப்பாற்ற வேண்டும்.

2. ஒரிசாவில் பூரி ஜெகன்நாதர் என்ற பணக்கார சாமி இருக்கிறது. இருமுறை அங்கு சென்றிருக்கிறேன். கோயிலுக்குள் சென்றதில்லை. தேர் மிகப் பிரபலம். மூன்று உருவங்களாகக் காட்சியளிக்கும் அச்சாமிகளுக்கு, 'நான் கடவுள்'திரைப்படத்து மாங்காட்டுச் சாமி மாதிரி கைகால்கள் கிடையாது. ஏன் அப்படி என்று தேடிக் கதை படியுங்கள். தலையும் முண்டமும் சேர்த்து ஒரே உடலாய் இருக்கும் சாமிகளைக் கும்பிடும் மரபு பற்றியும் தேடிப் படியுங்கள்.

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)


113. அத்தாணிக் கதைகள்

$
0
0
-------------------------------------------------------------------------
புத்தகம் : அத்தாணிக் கதைகள்
ஆசிரிய‌ர் : பொன்னீலன்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை
முதற்பதிப்பு : திசம்பர் 2004
விலை : 50 ரூபாய்
பக்கங்கள் : 144
வாங்கிய இடம் : நியூ சென்சுரி புக் ஹவுஸ், சிங்காரத்தோப்பு, திருச்சி
-------------------------------------------------------------------------

புதுக்கோட்டை மாவட்டத்தின் வடகிழக்கு எல்லையில் தஞ்சை மாவட்டத்தைத் தொட்டுக் கொண்டு கிடக்கும் சின்னஞ்சிறு கிராமம். பஸ், குழாய்த் தண்ணீர், மின்சாரம், சினிமாக் கொட்டகை, தொலைக்காட்சிப் பெட்டி என்னும் பஞ்ச பூதங்களைத் தவிர, மற்றபடி கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்க் கிராமம். விவசாயத்தையே எல்லாமுமாகக் கொண்ட மக்கள். இப்படித்தான் அத்தாணி என்ற கிராமத்தை முன்னுரையில் அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். பொன்னீலன். சாகித்ய அகாடமி விருது பெற்றவர். 1983 முதல் 1988 வரை அத்தாணியில் பணியாற்றியபோது விவசாய மக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்து, நாட்டுப்புற கதைகளைச் சேகரிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அதன்பிறகு அவர் கன்னியாகுமரி பகுதியில் குடியேறிவிட்டாலும், அங்கும் அவ்வழக்கத்தைத் தொடர்ந்திருக்கிறார். அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட தோன்றிய சிந்தனையின் முதல் செயல்வடிவமே இப்புத்தகம். அத்தாணிக் கதைகள். 
(http://www.noolulagam.com)
மொத்தம் 51 கதைகள். 18 கதைசொல்லிகளின் விவரங்களைப் புகைப்படங்களுடன் இணைத்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது. பிழைக்கத் தெரிந்தவன் என்ற கதையைச் சிறுவயதில் பாக்யா இதழில் படித்திருக்கிறேன். இரண்டு மடங்கு, எதிரும் புதிரும், எங்கே போகிறார் போன்ற கதைகள் இன்று நிறைய பேருக்குப் பரவலாகத் தெரிய வாய்ப்பிருக்கிறது. வீரப் பெண் என்ற கதையை எனது அம்மாச்சி மிகப் பெரிய சரித்திர நிகழ்வு போல, சென்ற வாரம் கூட எனக்கு இருநூறாவது முறையாகச் சொன்னாள். அந்த வீரப் பெண் கதையை எனது சிறுகதை ஒன்றில் ஒரே வரியில் நான் மேற்கோளாக‌ எழுதி இருக்கிறேன். நானும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்றாலும், மற்ற கதைகள் யாவும் எனக்கு புதியவை போலவே இருந்தன. எல்லாக் கதைகளும் நகைச்சுவை உணர்வுடனேயே எழுதப்பட்டு இருப்பதால், கண்டிப்பாக படிக்கலாம்.

நான் மிகவும் ரசித்த கதைகள்:
1. பெண்ணுடம்பில் இயற்கையாக நடக்கும் ஒரு காரியத்தைத் தீட்டு என்று சொல்லும் பெண் சாமியான அம்மனையே ஒரு மானுடப் பெண் எதிர்க்கும் - தீட்டு
2. கணவன் கண்ணெதிரேயே கள்ளக் காதலனுடன் சரசம் செய்யும் - சாமர்த்தியசாலி
3. மற்ற நான்கு கால் விலங்குகளுக்கு எல்லாம் பின்னங்கால்களுக்கு இடையே பாதுகாப்பாகத் தொங்க, பன்றிக்கு மட்டும் பின்பாகத்தில் புடைத்துக் கொண்டிருக்கும் பிரம்மனின் படைப்பைச் சொல்லும் - அவசரம்
4. ஊரார் பார்க்க சல்லாபம் செய்ய விதிக்கப்பட்டிருக்கும் நாயினத்தின் கதை - தர்மர் சாபம்
5. முட்டாள் கணவனைச் சமாளிக்கும் புத்திசாலி பெண்ணின் கதை - பணியார மழை
6. இரண்டு பேர் சேர்ந்து செய்த தவறுக்கு ஒரு
த்தி மட்டும் ஏன் பிரசவ வலி தாங்க வேண்டும்? - பரமசிவன் வரம்
7. மலை நகர்ந்தது
8. சர்க்கார் முத்தம்

நான் மிகவும் ரசித்த கதைமாந்தர்: மொட்டைப் பெட்டிசன் முனியசாமி

தொடர்புடைய எங்களின் பிற பதிவு:
மறைவாய் சொன்ன கதைகள்

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

114. மழைப் பேச்சு

$
0
0
ஆணாதிக்கம் என்பது
காரியம் முடிந்ததும்
திரும்பிப் படுத்துக்கொள்வது.
- மகுடேசுவரன் (காமக்கடும்புனல் நூலிலிருந்து)
------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : மழைப் பேச்சு
ஆசிரிய‌ர் : அறிவுமதி
வெளியீடு : சாரல், அபிபுல்லா சாலை, தியாகராயர் நகர், சென்னை
முதற்பதிப்பு : 2011
விலை : 200 ரூபாய்
பக்கங்கள் : 112
வாங்கிய இடம் : ஞாபகமில்லை
------------------------------------------------------------------------------------------------------------
இத்தளத்தில் எனது 75வது பதிவு இது. பல கவிதைகள் படித்திருந்தாலும் இதுவரை இத்தளத்தில் எந்தவொரு நேரடித் தமிழ்க் கவிதைப் புத்தகம் பற்றியும் நான் எழுதியதில்லை என்பதைச் சமீபத்தில் தான் உணர்ந்தேன். இந்த வாரம் வீட்டிற்குச் சென்றிருந்த போது எனது புத்தகக் கிடங்கில் இருந்த கவிதைத் தொகுப்புகளைப் புரட்டிப் பார்த்து கடைசியாக கவிஞர் அறிவுமதியின் மழைப் பேச்சு தேர்ந்தெடுத்தேன். கவிஞர் அறிவுமதிக்கு அறிமுகம் தேவையில்லை. எனது தளத்தில் முகப்புப் பக்கத்திலேயே இருமுறை அவர் பெயரைக் காணலாம். நான் அதிக‌முறை வாங்கிப் படித்த / பரிசளித்த‌ பட்டியலில் அறிவுமதி அவர்களின் இரண்டு புத்தகங்களும் உண்டு; ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பு சொல்லும் 'நட்புக்காலம்'; ஈழத்தமிழனின் வலி சொல்லும் 'வலி'.
(http://eraeravi.blogspot.in)
'ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்'
என்ற‌ வள்ளுவரின் மூன்றாம் பால் சொல்லும், உடல்களின் உரையாடல்களே இந்த மழைப் பேச்சு. 'காடுகள் உடுத்தி, கடல்கள் உடுத்தி, ஆறுகள் உடுத்தி, அருவிகள் உடுத்தி, இயற்கையின் முழுக் குழந்தைகளாகிக் கேட்டுப் பாருங்கள். நிலாவிலிருந்து உதிர்கிற இலைகளாய் மழைப் பேச்சு உங்களை நனைத்துக் கொண்டே இருக்கும். இது உங்கள் மழைப் பேச்சு'என்று ஆசிரியர் த‌ன்னுரையில் சொல்லும் மழைப்பேச்சுக்குக் கருங்குடையாய் இடையூறு செய்யாமல், 10% கவிதைகளை உங்கள் வாசிப்பிற்குத் தருகிறேன்.

நிகழ்கையில் சாரல்
நினைக்க நினைக்கத்தான் மழை

உள்ளே கனக்கிற நீ
மேலே மிதக்கிறாய்

நாகரிகம் என்பது
காமமற்ற தழுவல்

தண்ணீர் விற்பவர்கள்தாம்
காமத்தையும் நகைகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்

இரண்டாவது சுற்றுக்கான இடைவெளியை
அழகு செய்வதில் இருக்கிறது
ஆண் பெண் உறவு

ஊறித் தளும்பும் கேணி
தும்பியின் தொடுதலில் வழிகிறது

பயன்படத்தான் செய்கிறது
தும்பி பிடித்த அனுபவம்

எல்லாக் கிளைகளிலும் ஊர்ந்து திரும்பிய‌
எறும்புக்குக் கிடைத்தது கடைசியாய்
இலை நுனியில் மழைத்துளி

மூடித் திற‌
திறந்து மூடு
இசைதரும் புல்லாங்குழல்

எல்லா மழைகளுக்கும் பிறகான‌
மூச்சுகள் ஓய்ந்த பிறகு வாய்த்தது
நீ விரும்பிச் செய்த மழை

நுனி நாக்கில் முளைக்கின்றன
பறப்பதற்கான சிறகுகள்

இது இன்பத் தமிழ். மணமக்களுக்கான மகிழ்ச்சி நூல். முறையே இப்படி முன்னட்டையும் பின்னட்டையும் சொல்கின்றன. உண்மைதான். அதற்காக‌ எனது திருமணத்திற்குப் பரிசளிக்கக் குறித்துக் கொள்ளாதீர்கள் நண்பர்களே! மூன்று வார்த்தைகளில் உள்ள‌ சில கவிதைகள் கூட‌ புரியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறேன்.

கவிதைகளுக்குப் பின்னிருக்கும், மனித உடல்களற்ற புகைப்படங்களும் கவி சொல்வதில் கொஞ்சம் நீங்களும் நனைந்து பாருங்கள்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

115. THE DIARY OF A YOUNG GIRL

$
0
0
What an earth do I have to wear?
I've got no more knickers, my clothes are too tight,
My vest is a loincloth, I'm really a sight!
To put on my shoes I must cut off my toes,
Oh dear, I'm plagued with so many woes!
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் The Diary Of a Young Girl
டைரி எழுதியவர்: Anne Frank (http://www.annefrank.org/)
புத்தகமாக்கியவர்:Otto H.Frank and Mirjam Pressler
ஆங்கிலப்படுத்தியவர்:Susan Massotty
வெளியீடு : Penguin Books
பக்கங்கள் : 336
வாங்கிய இடம் : பரிசாகக் கிடைத்தது
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அவர் சுத்தமான‌ சைவ உணவுப்பிரியர். மிருகவதை எதிர்ப்பாளர். மதுவைத் தொடாதவர். புகைக்க மாட்டார். தனக்கென ஒரு குடும்பம் இல்லாமல் பிரம்மச்சாரியாகவே தன்னைத் தன்னாட்டுக்கு அர்ப்பணிக்கும் தேசப்பக்தர். இப்படிப்பட்ட அடையாளங்களுடன் தான் அவர் ஆட்சிக்கு வந்தார். பாதாளத்தில் துவண்டு கிடந்த தனது தேசத்தைச் சில்லாண்டுகளில் அசுர வேகத்தில் வளர வைத்துக் காட்டினார். நவீன தொழில்நுட்பங்களை எல்லாத் துறைகளிலும் புகுத்தினார். எங்கு காணிணும் Development. வரலாறு காணாத வளர்ச்சி. அவரின் ஆட்சித் திறமையை உலகமே மெச்சியது. அவர் திக்கிப் பேசுவதுகூட செய்தியானது. அவர் நடை உடை சிகை ஒப்பனை பாவனைகள் அன்றாட விவாதப் பொருள்களாய் இருந்தன. காலப்போக்கில் நாடு என்ற பொதுச் சொத்தை இனம் என்ற தனிச் சொத்தாக ஆக்கினார். குடிமக்களில் ஒரு சாரார் அமிர்தம் அருந்த, மறு சாராருக்கு ஆலகாலம் கொடுத்தார். ஒரு சாரார் இரட்சகராகப் பார்த்தார்களோ இல்லையோ, மறு சாராருக்குச் சாத்தானாகிப் போனார். வழக்கம் போல் நீங்கள் தவறாக யூகிக்கிறீர்கள். நான் சொல்லும் அவர், அடால்ப் ஹிட்லர்.

இனப் படுகொலைக்குப் பல பரிமாணங்கள் உண்டு. கொன்று செய்யலாம். நம்மூரில் நடப்பது போல், மறைத்து மறந்து செய்யலாம். அரவான் திரைப்படத்தில் வருவது போல, படுத்துச் செய்யலாம். வியட்நாம் போல, விதைத்துச் செய்யலாம். வட மாநிலத்தவர்கள் இங்கு வந்து 90 நாட்களில் தமிழ் பேசும்போது, நாம் இங்கிருந்து கொண்டே ஹிந்தி படிப்பது போல, கற்று செய்யலாம். Structural genocide செய்யலாம். மனிதகுல வரலாற்றின் கொடூர இனப் படுகொலைகளைத் தனது 'நிலமெல்லாம் ரத்தம்'புத்தகத்தில் பட்டியலிடும் பா.ராகவன் அவர்கள், இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான கொடுமைகளை மூன்றாம் இடத்திலும், கருப்பினத்தவர்களுக்கு எதிரான கொடுமைகளை இரண்டாம் இடத்திலும், யூத இனத்திற்கு எதிரான ஹிட்லரின் கொடுமைகளை முதல் இடத்திலும் வைக்கிறார். அவரால் கொல்லப்பட்ட யூதர்கள் 55 இலட்சம் என்கிறது இணையம். எந்த வல்லரசு அதிபரும் நெருங்க முடியாத எண்ணிக்கை! அவரால் புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை, கண்டிப்பாக இந்தியப் பிரிவினைக்கு அடுத்த இடத்தில் இருக்கும்.

இரஷ்ய மன்னர்கள் தங்கள் யூதக் குடிமக்களை ஒட்டுண்ணிகள் என்றார்கள்; கொல்லக் கொல்ல இருக்கும் அவர்களைப் புற்றீசல் என்றார் ஹிட்லர். யூதர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை பெற வேண்டும். தனித்து வாழ வேண்டும். மதப் பள்ளிகள் கூடாது. வரி அதிகம். பட்டப்படிப்பு படிக்க உரிமையில்லை. அரசு வேலை இல்லை. தனித்து அடையாளம் காட்ட மஞ்சள் நிற இடைவார் அணிய வேண்டும். அரசுப் போக்குவர‌த்து வாகனங்கள் அவர்களுக்கானது அல்ல. புதைக்காமல் பிணங்கள் எரிக்கப்பட வேண்டும். இப்படி அரசு சட்டங்கள் மூலம் வெளிப்படையாகவே யூத இனவெறுப்பைக் காட்டியவர் ஹிட்லர். பத்து காசு ஊதிய உயர்வு பெறுவதற்காக பத்து யூதர்களைக் கொன்று கணக்கு காட்டிய அரசாங்க அதிகாரிகள் இருந்ததாக பா.ராகவன் சொல்கிறார். சட்டமாக இல்லாமல் இதுபோன்ற கொடுமைகள் நம்மூரிலும் உண்டென்றாலும், ஹிட்லர் என்ற தனிமனிதனுக்கு மொத்த யூதர்களின் மீதும் ஏன் இப்படி வெறுப்பு? ஒரு தனிப்பட்ட மூளையா இவ்வளவும் செய்தது? ஏன் யூதர்களுக்கு இப்படி ஒரு கொடூர வரலாறு? இப்படி பல கேள்விகளுக்கு விடை தேடும் பயணத்தில், தற்போது இப்புத்தகத்தைக் கடந்திருக்கிறேன்.



(http://imshopping.rediff.com)

Anne Frank. ஆன்னி ஃப்ராங்க். 16 வயதைக் கூட தொடாத இச்சிறுமியைப் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கிரிக்கெட் அல்லது திரைப்பட நட்சத்திரங்களின் நேற்று பிறந்த பிள்ளைகளைப் போல ஊடகங்கள் அடிக்கடி படமெடுத்து நினைவுபடுத்த, இவள் ஏதோ பிரபலத்தின் பிள்ளையும் இல்லை. சென்ற நூற்றாண்டின் கொடூர பக்கங்களை நினைவுபடுத்தும் இரண்டு சிறுமிகளில் ஒருத்தியாக இன்னும் இருக்கிறாள். (இன்னொருத்தி வியட்நாம் நாடு) ஆன்னியின் யூதக் குடும்பம் நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டாம் நகரில் வாழ்ந்து வந்தது. 12 ஜீன் 1942 வெள்ளி அன்று அவளுக்கு 13ம் பிறந்தநாள். அவளுக்குக் கிடைத்த பரிசுப் பொருள்களில் ஒன்றான டைரிக்கு கிட்டி (Kitty) என்று பெயரிட்டு, தினமும் கிட்டியுடன் பேசுவது போல் எழுதும் பழக்கத்தை ஆரம்பிக்கிறாள். இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜெர்மனி ஆக்கிரமிக்கும் நாடுகளில் இருந்த யூதர்கள் புலம் பெயர்கின்றனர். ஆன்னியின் தந்தை வேலை செய்துவந்த அலுவலகத்தின் இரகசிய அறை ஒன்றில், ஆன்னியின் குடும்பத்தின் நான்கு பேரும், இன்னொரு குடும்பமும் என மொத்தம் எட்டு பேர் பதுங்குகிறார்கள். இரண்டாம் உலகப் போர் முடியும் வரை, ஜெர்மனியின் பிடியில் நெதர்லாந்து இருக்கும்வரை, வெளியே வரமுடியாத நிலை. 1 ஆகஸ்டு 1944 செவ்வாய் வரை, இந்த எட்டு பேரும் அந்த இரகசிய அறையில் தான் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களையும், போர் நிலவரச் செய்திகளையும் கொடுத்து வெளியாட்கள் இருவர் உதவுகின்றனர். இக்காலத்தில் கிட்டிக்கு எழுதிய ஆன்னியின் டைரிக் குறிப்புகளே இப்புத்தகம்.

'அன்புள்ள டைரிக்கு'என்று ஆளவந்தான் நந்து எழுதுவது போல், 'Dearest Kitty'என்று ஒவ்வொரு முறையும் எழுதுகிறாள் ஆன்னி. 5 admirers on every street corner, 20 or so friends, the favourite of most of the teachers, bags full of sweets and load of pocket money என்று சுற்றித் திரிந்த ஆன்னியின், முதல் டைரிக் குறிப்பு இது: 12 ஜீன் 1942 - I hope I will be able to confide everything to you, as I have never been able to confide in anyone, and I hope you will be a great source of comfort and support. தனது உணர்வுகளைப் பதிவு செய்யவும், இரகசியங்களைப் பகிரவும் ஒரு டைரியைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமாக இப்படி சொல்கிறாள்: Paper is more patient than people. வெளியில் இருக்கும் யூதக் குழந்தைகளை விட பாதுகாப்பாகவும், அவர்களை விட பெருந்துயரத்திலும் இருப்பதை on the top of the world and in the depth of despair என்கிறாள். திருடர்களால் அல்லது நாசிகளால் ஒருவேளை கண்டுபிடிக்கப்பட்டால், எந்தெந்தப் பொருட்களை என்னவெல்லாம் செய்வார்கள் என மூத்தவர்கள் பேசிக் கொள்ளும் போது, Oh, not my diary; if my diary goes; I go too! என்று பதறுகிறாள்.

புதன் 5 ஏப்ரல் 1944 அன்று சொல்கிறாள்: if I don't have the talent to write books or newspaper articles, I can always write for myself. But I want to achieve more than that. I can't imagine living like Mother, .... and all the women who go about their work and are then forgotten. I need to have something besides a husband and children to devote myself to! I don't want to have lived in vain like most people, even those I've never met. I want to be useful or bring enjoyment to all people, even those I've never met. I want to go on living even after my death! And that's why I'm so grateful to God for having given me this gift, which I can use to develop myself and to express all that's inside me!

இப்படியாக‌ ஆன்னி என்ற அந்தச் சிறுமிக்குக் கிட்டிதான் எல்லாமுமாக இருந்திருக்கிறது என்பதைப் புத்தகம் முழுவதும் உணர முடியும் என்றாலும், அவளுக்கு மறுக்கப்பட்ட வாழ்க்கையையும், அவளின் மழலையையும் ஒருசேர உணர்த்தும் இவ்வரிகள் என்னை மிகவும் பாதித்தன‌: புதன் 3 மே 1944 - I hadn't had my period for more than two months, but it finally started last Sunday. Despite the mess and bother, I'm glad it hasn't deserted me.



(http://www.annefrank.org/ மேல் இரண்டு தளங்களும் உப்பரிகையும் தான் அந்த எட்டு பேர் பதுங்கியிருந்த இடங்கள். பின்புறத் தோற்றமிது)

விடுபட்டுப் போன பள்ளிப்படிப்பைப் பற்றி எழுதுகிறாள். பொழுதுபோக்குகள் சொல்கிறாள். அந்த மறைவிடத்திலும் தனது படிப்பையும் பொழுதுபோக்குகளையும் தொடர்கிறாள். இரகசிய அறையில் இருக்கும் மற்றவர்களைப் பற்றியும் சொல்கிறாள். தனது பெற்றோருடன் இருக்கும் மனவருத்தங்களை எழுதுகிறாள். ஒரு A ஜோக் கூட சொல்கிறாள். இரண்டு வருடத்திற்குள் போர் முடிந்து மீண்டும் பள்ளியில் சேராவிடில், அதன்பிறகு பள்ளிக்குச் செல்வது வீண் என வருந்துகிறாள். உடன் இருக்கும் இன்னொரு குடும்பத்தின் பீட்டர் உடனான காதல் போன்ற ஒரு மயக்கத்தையும் சொல்கிறாள். நூலகத்தில் இருந்து கிடைக்கும் புத்தகங்கள் பற்றி எழுதுகிறாள். செத்தாலும் கெடுக்கக் கூடாதென, தங்களின் அன்றாடத் தேவைகளுக்கு உதவும் வெளியாட்கள் இருவரின் பெயர்களைத் தவிர எல்லாவற்றையும் எழுதுகிறாள்.

தலை சீவும் சீப்பின் பற்கள் 10 தான் மிஞ்சுகின்றன. போர் முடியவில்லை. Nothing worse than being caught என்று மறைந்தே வாழ்கிறார்கள். செவ்வாய் 1 ஆகஸ்டு 1944 அன்று டைரி முடிகிறது. மூன்று நாட்கள் கழித்து, அந்த இரகசிய அறையில் இருந்து அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அதன் பிறகு ஆன்னி என்னவானாள்? விக்கிபீடியா சொல்கிறது: With the other females not selected for immediate death, Frank was forced to strip naked to be disinfected, had her head shaved and was tattooed with an identifying number on her arm.

அதன் பிறகு, 1945ம் வருட ஆரம்பத்தில் நாசிகளின் முகாமில் (concentration camp) கொள்ளை நோயில் தனது அக்காளுடன் ஆன்னி இறந்து போனாள். அந்த எட்டு பேரில், ஆன்னியின் தந்தை (
Otto H.Frank) மட்டுமே தப்பித்து பிழைக்கிறார். பிற்காலத்தில் தனது மகள் டச்சு மொழியில் எழுதிய டைரியைப் புத்தகமாக தொகுக்கிறார். பல பதிப்பகங்கள் நிராகரிக்கின்றன. போர்க் காலத்தில் எழுதப்பட்ட கடிதங்கள் புத்தகங்கள் டைரிகள் என எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்தாலும் ஒரு சிறுமியால் சொல்லப்பட்டதால், 70 வருடங்களுக்கு மேலாகத் தனித்துத் தெரிகிறது இப்புத்தகம். அவள் நாசிகளின் யூதப் படுகொலைகளின் நினைவுச் சின்னமாக இன்றும் நினைவில் வைக்கப்படுகிறாள். சில தலைப்புகளில் சிறந்த 100 பேரின் பெயரை வெளியிடும் டைம் இதழ், சென்ற நூற்றாண்டு முழுவதற்குமான‌ பட்டியல் ஒன்றில் இவள் பெயரையும் எழுதியது. இன்னொரு பட்டியலில் ஹிட்லர்!
ஹிட்லரின் தனிப்பட்ட மூளையா இப்படி செய்தது என்ற எனது கேள்விக்கு, என்னைப் போலவே ஆன்னியிடம் ஒரு பதில் இருக்கிறது: I don't believe the war is simply the work of politicians and capitalists. Oh no, the common man is very bit as guilty; otherwise, people and nations would have rebelled long ago! There's a destructive urge in people, the urge to rage, murder and kill. And until all of humanity, without exception, undergoes a metamorphosis, wars will continue to be waged, and everything that has been carefully built up, cultivated and grown will be cut down and destroyed, only to start all over again!

திங்கள் 22 மே 1944 - What one Christian does is his own responsibility, what one Jew does reflects on all Jews என்றும், oppressed unfortunate pitiful என்றும் யூதர்களின் நிலையைச் சொல்கிறாள். மூன்று நாட்கள் கழித்து The most decent people are being sent to concentration camps, prisons and lonely cells, while the lowest of the low rule over young and old, rich and poor என எழுதுகிறாள். இது போன்ற சில கருத்துகள், உண்மையிலேயே இந்த டைரிக் குறிப்புகள் ஒரு சிறுமியால் எழுதப்பட்டவையா என்ற சந்தேகத்தை உண்டாக்கின. இதுபோல ஏராளமான உதாரணங்கள் உண்டு. தவிர தாயுடன் சரியான இணக்கம் இல்லாததால், தனது உடல் மாற்றங்களையும், இன்னொரு பெண் மற்றும் ஆண் உடல் மேல் ஏற்படும் ஆர்வத்தையும் கிளர்ச்சியையும் ஆன்னி அப்படியே எழுதிய சில குறிப்புகள் உள்ளன. இதுபோன்ற சில காரணங்களுக்காக பல காலக்கட்டங்க‌ளில் பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்திருக்கிறது இப்புத்தகம். பெண்ணுறுப்பு பற்றி விவரணைகளையும், ஒருபால் கவர்ச்சி பற்றிய கருத்துகளையும் பாடப் புத்தகங்களில் இருந்து ஜெர்மன் அரசு நீக்கியதாகவும் படித்தேன்.

ஒரு வீட்டிற்குள் நடக்கும் டைரிக் குறிப்புகள் என்பதால் பரபரப்பு திருப்பங்கள், அப்போதைய அரசியல் மற்றும் போர் தகவல்களை எதிர்பார்க்க முடியாது எனினும், இனவெறுப்பின் சாட்சியமாய் இருக்கும் இப்புத்தகம் கண்டிப்பாகப் படிக்கப்பட வேண்டும்.

அனுபந்தம்:
-------------------
1. எனக்கென்று ஒரேயொரு உயிர்நண்பன் இருந்தான், இருக்கிறான். அவனைப் பிரிந்த ஒரு தருணத்தில் 7 ஆண்டுகளுக்கு முன் இப்புத்தகத்தை அவனுக்குப் பரிசளித்தேன். அப்போது நான் படித்திருக்கவில்லை. இப்போது அவன் படித்திருப்பானா என்றும் தெரியவில்லை. இன்னொரு நண்பன் பரிசளித்து நான் படிக்க வேண்டும் என இருந்திருக்கிறது. பாரீஸ் நகர‌ நவநாகரீக சாதனங்கள், வாசனை திரவியங்கள், கடிகாரங்கள், தைக்கப்பட்ட ஆடைகள் என ஏதோ ஒன்றைப் பரிசளித்து என்னைச் சங்கடப்படுத்தாமல், இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து இதனை என்கண் விட்ட என் நண்பன் சதீஷ் குமாருக்கு நன்றிகள்.

- ஞானசேகர்
(
http://jssekar.blogspot.in/)

116. THE PREGNANT KING

$
0
0
பார்த்தாச்சு பல மேடைதான்
போட்டாச்சு பல வேஷம் தான்
ஆனாலும் இது வித்தியாசம்
தந்தைக்கு இங்கு தாய்வேஷம்
-‍ அவ்வை சண்முகி திரைப்படப் பாடல்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: The Pregnant King (புதினம்)
ஆசிரியர்: Devdutt Pattanaik (http://devdutt.com)
வெளியீடு : Penguin Books
முதற்பதிப்பு: 2008
பக்கங்கள் : 349
விலை: ரூபாய் 350 
வாங்கிய இடம் : Landmark
----------------------------------------------------------------------------------------------------------------------------------
தீபாவளி அன்று டிவியில் உலவிக்கொண்டு இருந்தபோது விஸ்வரூபம் திரைப்படத்தின் ஒரு காட்சியைச் சற்று நின்று பார்த்தேன். பெண் நளினத்துடன் வலம்வரும் கமலஹாசனை முழங்காலிட வைத்து சித்தரவதை செய்கிறார்கள். ஒருசமயத்தில் தன் ஆண்பலத்துடன் விஸ்வரூபமெடுத்து சண்டையிடுகிறார். காட்சி முடிந்தவுடன் விளம்பர இடைவேளையில் கமலஹாசன் தோன்றினார். இக்காட்சியின் வித்து நமது இதிகாசங்களில் இருந்து தனக்குக் கிடைத்தாகச் சொன்னார். பெண்ணாக வாழ சபிக்கப்பட்ட அர்ச்சுனன், தனது சாபம் முடிந்தவிட்ட காலம் தெரிந்தவுடன், தன்னைத் துரத்துபவர்களைத் தன் ஆண்பலத்துடன் திருப்பி அடித்த கதையைச் சொன்னார். பள்ளியில் படித்த பாஞ்சாலி சபதம், திரைப்படத்தில் பார்த்த கர்ணன், புத்தகங்களில் படித்த அரவான் என்று எனக்கு தெரிந்த இந்துமத இதிகாசக் கதைகள் மிகவும் குறைவுதான். இந்துமதத்தின் இதிகாசங்கள் பழமையானவை; கடினமான ஆழமான பொருளுடையவை. அதில் மகாபாரதம் மட்டும் எடுத்துக் கொள்வோம். அதிலும் பால்மாற்றக் கதைகளைக் கவனிப்போம். கமலஹாசன் சொன்னது போன்ற ஆண்-பெண் பாலின மாற்றங்களைப் பேசும் சில முக்கியமான கதைகளை, என்னைப் போல பரிட்சயமில்லாதவர்களின் புரிதலுக்காக கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்.

1. சிகண்டி. திரௌபதியின் அக்காள். துரோணரைக் கொல்ல ஓர் மகனையும், குருவம்சத்தைப் பிரிக்க ஓர் மகளையும் எதிர்பார்த்திருந்த துருபதா மன்னனின் மகள். அவளை மகனாகவே அறிவித்து, பாவித்து, அரியணையில் அமர்த்துகிறார். யுத்தத்தர்மப்படி பெண்கள் போர்க்களம் புகக்கூடாதெனினும், கிருஷ்ணரின் ஆலோசனைப்படி துரோணரைக் கொல்ல மகாபாரதப் போரில் பங்கேற்கும் சிகண்டி, ஆணுடை தரித்த பெண்.

2. அர்ச்சுனன். ஊர்வசியால் சபிக்கப்பட்டு தன் ஆண் அடையாளங்களை இழந்து பெண்ணாக வலம்வருகிறான். விராடனின் மகள்மீது அர்ச்சுனன் காதல்வயப்பட, அர்ச்சுனன்மீது விராடனின் மகன் காதல்வயப்பட, ஒரே நேரத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் வலம்வரும் அர்ச்சுனன், அந்நேரத்தில் இரண்டுமே இல்லை. பாண்டவர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து மாறுவேடத்தில் வலம்வந்த அந்தப் பதின்மூன்றாம் வருடத்தில் அர்ச்சுனன், திருநங்கை.
3. கிருஷ்ணர். பாண்டவர்கள் போரில் வெல்ல 36 புனித அம்சங்கள் கொண்ட ஓர் ஆணைக் காளிக்கு உயிர்ப்பலி கொடுக்க வேண்டும். வாழும் காலத்தில் தனக்காக வருத்தப்பட யாருமில்லை; இறந்தபின் தனக்காக அழும் ஓரு மனைவி வேண்டும் என பலியாகத் தயாராகிறான் அரவான்; அர்ச்சுனனின் மகன். எப்பெண்ணும் முன்வராத நிலையில், கிருஷ்ணரே மோகினி அவதாரம் எடுத்து மனைவியாகிறார். அரவான் பலியானபின், பெருங்குரலெடுத்து அழுகிறாள் மோகினி. அரவான் திரைப்படத்தின் பலிகொடுக்கும் கதைக்கும், அரவானிகள் என்ற பெயருக்கும், கூத்தாண்டவர் கோவிலின் சடங்குகளுக்கும் மூலமான இக்கதையில் கிருஷ்ணர் ஆண்; மோகினி பெண்.
(http://avirandom.files.wordpress.com/ கிருஷ்ணர் சிகண்டி அர்ச்சுனன்)
ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று சில புரிதல்களைத் தனித்தனியாகவே இயற்கை வைத்திருக்கிறது. பிரசவவலியை ஓர் ஆணால் உணர முடியாது போல. பெண்ணாக இருந்து கொண்டு ஆணாக வலம் வருவதின் துயரம் கிகண்டிக்குத் தெரியும். பெண் உணர்வுகள் எப்படி இருக்கும் என்று அர்ச்சுனன் என்ற ஆணுக்குத் தெரியும். மனைவி உணர்வுகள் எப்படி இருக்கும் என்று கிருஷ்ணர் என்ற ஆணுக்குத் தெரியும். தாயாக உணர்வுகள் எப்படி இருக்கும் என்று அறிந்த ஆண் யாரையாவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? ஒரே நேரத்தில் தாயாகவும் தந்தையாகவும் உணர்ந்த ஆண் யாரையாவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? புத்தகத்திற்குள் போகலாம்.

The Pregnant King. கருவுற்ற அரசன். தனது மனைவிகள் கர்ப்பமடைய யாகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பானத்தைத் தவறுதலாகப் பருகி, ஓர் ஆண் மகவைப் பிரசவிக்கும் ஓர் அரசனின் கதை என்கிறது புத்தகத்தின் பின்னட்டை. 'நான் ஓர் ஆணா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆண்களைப் போல எனது உடலுக்கு வெளியே ஓர் உயிரை உண்டாக்கி இருக்கிறேன். ஆனால் பெண்களைப் போல எனது உடலுக்கு உள்ளேயும் ஓர் உயிரை உண்டாக்கி இருக்கிறேன். இதனால் எனக்கு ஆவதென்ன?'என்ற வரிகளுடன், கருவுற்ற வயிற்றுடனும் மீசையுடனும் அமர்ந்திருக்கும் ஓர் அரசனின் படமும் பின்னட்டையில் இருக்கிறது. மகாபாரதக் கதைகளையும், குஜராத் மற்றும் நமது தமிழ்நாட்டில் வழக்கில் இருக்கும் சில நாட்டுப்புறக் கதைகளையும் களமாகக் கொண்டு ஆசிரியர் செய்திருக்கும் புனைவுதான் இப்புதினம். உயிர்க்கருவைச் சுமக்கும் ஓர் அரசன் சுமக்கும் கதைதான் இப்புதினத்தின் கரு என்றாலும், இக்கருவை உண்டாக்கிய ஆசிரியரைப் பற்றி முதலில் கருத்து சொல்லிவிட்டு, இப்புதினத்தின் கருக்கலைப்பு இல்லாத எனது கருத்தைப் பிறகு பேசலாம்.


Dr. Devdutt Pattanaik. தேவ்தத் பட்டநாயக். மருத்துவம் படித்தவர். இந்துமதப் புராணங்களை ஆய்வு செய்வதில் ஆர்வமுடையவர். இந்துமதப் புராணங்களின் கதைகளையும், அவற்றில் சொல்லப்படும் சடங்குகளையும், அடையாளச் சின்னங்களையும் இன்றைய நவீன வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தும் நிறைய புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இன்னும் அதிகம் அறிய, அவர் எழுதியிருக்கும் புத்தகங்களின் பட்டியலைப் பாருங்கள். தமிழில் விகடன் பிரசுரம் வெளியிட்ட எளியவடிவ‌ மகாபாரதப் புத்தகம் ஒன்றில் இடம் பெற்றிருக்கும் அனைத்துப் படங்களும் இவர் வரைந்தவையே. அது சரி, கடவுளுக்குச் சம்மந்தமே இல்லாத நான் ஏன் இப்புத்தகத்தைப் பற்றி எழு
துகிறேன் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இப்புதினத்திற்கு வெளியே எதையும் படித்து அதிக தகவல்கள் சேகரிக்கவில்லை; உண்மையும் புனைவும் பிரித்தறிய முயலவில்லை. எனக்கு இதுவும் இன்னொரு புதினம்; மாய எதார்த்தம். ஆற்றுப்படை எனது பணி.

அவிழ்த்துவிட்ட கேசம், சிவப்பு சேலை, வளையல், மூக்குத்தி, சிறுபானை, கிளி, கரும்புத்தோகை, மஞ்சள் என்று பெண்ணுக்கான 14 அடையாளச் சின்னங்களுடன் அமாவாசையில் கோவிலுக்குள் வீற்றிருக்கிறாள் இளேஸ்வரி. அதன்பிறகு ஒவ்வொரு நாளாக, நிலவின் பிறை வளர வளர, பெண்ணுக்கான அடையாளச் சின்னங்க‌ள் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டு, ஆணுக்கான 14 அடையாளச் சின்னங்கள் அணிவிக்கப்படுகின்றன. முதல்நாளில், அவிழ்த்துவிடப்பட்ட கேசத்திற்குப் பதில் மீசை. மறுநாள் சிவப்பு சேலைக்குப் பதில் வெள்ளை வேட்டி. மறுநாள் பானைக்குப் பதில் வில். மறுநாள் கிளிக்குப் பதில் மயில். மறுநாள் கரும்புத் தோகைக்குப் பதில் ஈட்டி. மறுநாள் மஞ்சளுக்குப் பதில் சாம்பல். இப்படியாக 14 நாட்கள் கழித்து பௌர்ணமியில் இளேஸ்வரன் ஆகிறாள் இளேஸ்வரி. அடுத்த 14 நாட்களில் படிப்படியாக இளேஸ்வரி ஆகிறார் இளேஸ்வரன். இளேஸ்வரியாக இருக்கும் போது ஆண்களும், இளேஸ்வரனாக இருக்கும் போது பெண்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆண்களைத் தந்தையாக்குபவர் இளேஸ்வரன். பெண்களைத் தாயாக்குபவள் இளேஸ்வரி.


அஸ்தினாபுரியைக் குரு வம்சமும், யாக்னசேனர்கள் பாஞ்சாலத்தையும், யாதவர்கள் மதுராவையும் ஆண்டுவந்த‌ மகாபாரதக் காலத்தில் வல்லபியைத் துருவாச வம்சம் ஆண்டுவந்தது. தனது தேசத்தின் பாதியைக் குரு வம்சம் அபகரித்துப் போனபின், ஆறு மகன்களையும் கொன்றுவிட்டு, எல்லா மனைவிகளையும் விரட்டிவிட்டு, குரு வம்சத்தைப் பிரிக்க ஓர் மகளையும், துரோணரைக் கொல்ல ஓர் மகனையும் வேண்டி, கன்னிகழியாத புது மனைவியுடன் இளேஸ்வரி+ரனைத் வேண்ட‌, குருசேத்திரப் போருக்கு 40 ஆண்டுகளுக்கு முன் வல்லபிக்கு வரும் பாஞ்சால மன்னன் துருபதாவுடன் ஆரம்பிக்கிறது புதினம். மனுதர்மத்திற்கு எதிராக ஒரு பிராமணனைக் கொல்ல வரம் கேட்கும் துருபதாவிற்கு, வார்த்தைகளில் விளையாடி வரமளிக்கிறார் சிவனின் சாந்தரூபமான‌ சங்கரனார். அன்றிரவே சூல் கொண்ட புது மனைவியின் குழந்தைதான் சிகண்டி (=ஆண்மயில்). இஃதில்லை யான் கேட்டதென்று, பிறகு சித்தர்கள் இருவரை வைத்து துருபதா யாகம் நடத்தி, அக்கினியில் இருந்து பிறக்கும் ஆண் பெண் இரட்டையர்களில் ஒருத்திதான் திரௌபதி. புதினத்தை ஆரம்பித்து வைக்கும் இக்கிளைக் கதையிலேயே மிரண்டு போனேன். 

(http://devdutt.com)
வல்லபியின் மன்னனுக்கு ஆட்சியைத் துறந்துவிட்டு, சன்னியாசம் போக விருப்பம். வாரிசான மகனுக்கோ வேட்டையில் விருப்பம். அவனோ பதினெட்டாம் வயதில், கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களுக்குப் பின், தந்தையாவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் மடிந்து போவான் என்று காலம் கணிப்பவர்கள் எச்சரிக்கிறார்கள். எல்லாம் தெரிந்தும் ஒருத்தி மணக்கிறாள். அவன் இறந்தபின், ஒரு பெண் ரிஷியாவதையும் அரசாள்வதையும் தர்மசாத்திரம் தடுக்கும் மரபுகளை மீறி, ஆணுக்கான அரசச் சிம்மாசனத்தில் அமர்கிறாள். மகுடம் சூட்டும் விழாவில், நெற்றித் திலகத்தை அவள் தொப்புளுக்கு நேர் மேலே இடும்போது, கருவாக அறிமுகமாகிறார் இப்புதினத்தின் கரு. கருவிலிருக்கும் அந்த ஆண்மகவுதான் யுவனாஷ்வா. மொத்தம் 8 அத்தியாயங்களில் சிறு சிறு கதைகளாக அமையும் இப்புதினத்தில், முதல் 37 பக்கக் கதைச் சுருக்கம்தான் இதுவரை சொன்னேன். இதற்கு மேல் கதை சொன்னால் கரு கலைந்துவிடும்.

தகுதியான ஆண் வாரிசு இல்லாமல், தகுதி இருந்தும் பதவி துறந்து சன்னியாசம் போகும் தாத்தா. மரபுப்படி தகுதியற்று ஆட்சியில் இருக்கும் அம்மா. யுவனாஷ்வா அடுத்து ஆட்சியில் அமரவும், போர்க்களம் புகவும் அவனிடம் வல்லபி என்ன எதிர்பார்க்கும் என நீங்களே யூகித்து இருப்பீர்கள். ஆம், ஓர் ஆண்மகவிற்குத் தகப்பனாக வேண்டும். இந்த யுவனாஷ்வாதான் அத்தகுதி பெற அடுத்தடுத்து பல மனைவிகள் மணக்கப் போகிறார். தனது மனைவிகள் கர்ப்பம் தரிக்க, சோசியமும் மருத்துவமும் பலனளிக்காமல் போக‌, திரௌபதி பிறக்க உதவிய அதே இரண்டு சித்தர்களை வைத்து யாகம் நடத்தப் போகிறார். கல்லையும் கர்ப்பமாக்கும் அந்த யாகத்தின் பானத்தைத் தவறுதலாகக் குடிக்கப் போகிறார். புதினத்தின் பக்கங்களை இரண்டாகப் பிரித்தால், பானத்தைக் குடிப்பதுவரை முதல் பாதி. மசக்கை பிரசவம் வளர்ப்பு வாரிசுரிமை என இரண்டாம் பாகம்.


இப்புதினத்தின் காலத்தைச் சொல்லவும், சில சம்பவங்களுக்குச் சாட்சியாகவும் மகாபாரத்தை அற்புதமாகக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர். பெண்ணாளும் வல்லபியைத் தர்மனின் பட்டாபிஷேகத்திற்கு அழைக்க மறுக்கிறார்கள். பீஷ்மரைப் போ
 பெண்களைக் கடத்தி வந்து மணமுடிக்கக் கூடாதென தாயிடம் அறிவுரை பெறுகிறார் யுவனாஷ்வா. வனவாசம் போன பாண்டவர்கள், அம்மைத்துனர்களைத் தேடிப் போன பாஞ்சாலர்கள், துவாரகாவில் துறைமுகத்தைப் பாதுகாக்கப் போன கிருஷ்ணர் என சுயம்வரத்திற்கு எல்லோரும் வராமல் போக, மிக எளிதாக முதல் மனைவியை அடைகிறார் யுவனாஷ்வா. வாரிசு இல்லாததால் குருசேத்திரப் போரைப் புறக்கணிக்கிறார் யுவனாஷ்வா. தர்மனைக் கொல்ல துரியோதனனும், பீமனைக் கொல்ல பீஷ்மரும், துரோணரைக் கொல்ல துருபதாவும், கர்ணனைக் கொல்ல அர்ச்சுனனும் படைகளுடன் நெடுஞ்சாலையை ஆக்கிரமிக்கும் முன், வல்லபியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக‌ குழந்தை இல்லாத ஏழைப் பிராமணத் தம்பதிகள் படையெடுக்கிறார்கள்.

யுவனாஷ்வாவின் மன‌நிலையுடன் வாசகனைக் கட்டிப் போடும் அளவிற்கு அற்புதமான எளியநடையில் கதை சொல்லியிருக்கிறார் ஆசிரியர். எந்தவொரு இடத்திலும் மத நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கவில்லை; புண்படுத்தவில்லை. நடந்த நிகழ்ச்சிகளைத் தனது கருவிற்கு உடலாக்கி இருக்கிறார். காம சாத்திர அறிவுரைப்படி அருந்ததி பார்த்தபடி நடக்கும் முதல் முதலிரவு சம்பவத்தில் விரசமும் இல்லை; கடைசியாக இயற்கைக்கு மாறாகப் புணருவதில் அருவருப்பும் இல்லை. யுவனாஷ்வாவை மட்டுமே வாசகனைத் தொடர வைத்திருப்பதில் ஆசிரியர் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கிறார்.


இப்புதினம் இக்கதை மூலம் என்ன சொல்ல வருகிறது? சிவனுக்கும் சக்திக்கும் பணிப்பெண்கள் 64 பேர். 
வ்வொருவரிடம் ஒரு புதிர் இருக்கும். பெரும்பாலான புதிர்களை விடுவிப்பவர்கள் அரசர் ஆகிறார்கள். எல்லாவற்றிற்கும் விடை தெரிந்தவர்கள் சக்கரவர்த்தி ஆகிறார்கள். மகாபாரதக் காலம் வரை, பரதன் மட்டும் தான் ஒரேயொரு சக்கரவர்த்தி. யுவனாஷ்வா தகப்பனா, தாயா என்பதுதான் 65வது புதிர். எமனின் வரவு செலவுக் கணக்கில் குளறுபடிகள் தவிர்க்க, பூமியில் ஒரு பாலில் பிறந்தவர்கள் அதே பாலில் மட்டுமே இறந்தபின் அனுமதிக்கப்படுவார்கள்; பாகுகாமி கோவில் பூசாரிகள் மட்டும் அதற்கு விலக்கு. ஆண் பெண் என்பது வெறும் அடையாளச் சின்னமா? வெறும் சதைப்பிண்டமா? மனித குலத்தில் ஆணின் விதி அவனது வம்சாவழியில்; பெண்ணின் விதி அவள் உடலில். ஆண்-பெண் கணவன்-மனைவி மகன்-மகள் தந்தை-தாய். எந்தப் பாத்திரத்தில் மனித இனம் அதிக மகிழ்ச்சி காண்கிறது என்பதைத் தனது கதைமாந்தர்கள் மூலம் பல பரிமாணங்களில் உணர்த்துகிறார் ஆசிரியர். மாதவிலக்கு நின்று வெகுநாள் ஆனபின்னும் கருவுறும் ஒரு பெண். பாலுறுப்புகள் வளரும் முன் பிறந்து, ஆணா பெண்ணா என்று தாய்க்கே தெரியாத ஒரு குழந்தை. ஆணுடம்பில் பெண்ணாக உணரும் திருநங்கை.  தன் ஆண்தன்மையை ஒரு பெண்ணுக்குக் கடனாகக் கொடுத்துவிட்டு, கடனைத் திரும்பிப் பெற முடியாமல் 30 வருடங்களாகப் பெண்ணாகத் தவிக்கும் ஓர் ஆண். இன்னொரு ஆண் மூலம் குழந்தை பெறும் ஓர் ஆண். தன் பிள்ளை தன்னை அம்மா என்றழைக்க ஏங்கும் ஓர் ஆண். ஓர் ஆணைத் தாயாகக் கொண்ட ஓர் ஆண். ஒரு பெண்ணைத் தந்தையாகக் கொண்ட ஒரு பெண். ஆண் பெண் என்ற இருநிலைகளைத் தவிர, இடைப்பட்ட நிலைகளை அங்கீகரிக்கும் விழிப்புணர்வு இக்காலத்தில் அதிகரித்து வரும் நற்சூழல் நிலவுகிறது. இப்புதினத்தின் முடிவும் அதுவே!

சில நேரங்களில் வார்த்தைகள் உதவுவதில்லை. இலக்கணப்படுத்தி வாக்கியங்கள் ஆக்குகிறோம். சில நேரங்களில் உரைநடை வாக்கியங்களும் உதவுவதில்லை. கவிதைப் பாடல்கள் ஆக்குகிறோம். எந்த வார்த்தைகளுக்குள்ளும் அடங்காத உணர்வுகளை என்ன செய்வது? தலைமுறைகளின் அறிவைப் பாடல்கள் மூலம் பாதுகாக்கும் பாணர்கள், புதினத்தின் சில மர்மங்களை யுவனாஷ்வாவிற்குப் புதினத்தின் கடைசியில் விளக்கும் போது, யுவனாஷ்வா கேட்கிறார்: 'இ
தை ஏன் எனக்கு முன்னரே சொல்லவில்லை'. பாணர்கள் சொல்கிறார்கள்: 'நாங்கள் சொல்வதைக் கேட்டு சிரிக்காத ஒரு மனிதன் இப்போதுதான் கிடைத்ததால்'. 

Culture cannot twist the truth of nature. Every civilization needs its delusion. நீண்ட நாட்களுக்குப் பின் என்னை ஆச்சரியப்படுத்திய இந்த ஆங்கிலப் புதினத்திற்கு, எனது விருப்பப் பட்டியலில் நான்காவது இடம் தந்திருக்கிறேன்.

நான் ரசித்த கதாபாத்திரங்கள்:

1. யுவனாஷ்வா
2. பாகுகாமி 
3. சோமவதி
4. ஷீலாவதி
5. சிமாந்தினி
6. அரவான் (Iravan)
7. நீலகண்ட பைரவி

நான் ரசித்த உரையாடல்கள்:

1. பெண்ணாக இருப்பது பற்றி விவாதிக்கும் யுவனாஷ்வா, அர்ச்சுனன்
2. பால் மாற்றம் செய்து கொள்ள, பெண்ணுடம்பின் நன்மைகளையும் தீமைகளையும் மாறி மாறி விவாதிக்கும் ஸ்துனகர்ணன், சோமவத்.

பால் பிறழ்வுகளில் இப்புதினம் திருநங்கைகள் பற்றியும் பேசுவதால், அவர்களோடு தொடர்புடைய எனது பிற பதிவுகள்:

1. திருநங்கைகள் உலகம் 
2. வாடாம‌ல்லி 
3. அக்காவின் அண்ணன் 

அனுபந்தம்:

‍‍‍----------------
1. இளேஸ்வரி/ரன் கதையில் ஒவ்வொரு சுழற்சியும் நிலவின் சுழற்சிக்கு ஆகும் 28 நாட்களுடன் ஒத்துப் போவதைக் கவனித்தீர்களா? நிலவின் சுழற்சியும் பெண்ணின் மாதவிடாய் சுழற்சியும் ஒத்துப் போவதைக் கவனித்தீர்களா? இதையெல்லாம் ஏற்கனவே ஒரு புத்தகத்தில் சொன்னேனே, அதையாவது கவனித்தீர்களா?

- ஞானசேகர்

(http://jssekar.blogspot.in/)

117. THE STORY OF A SHIPWRECKED SAILOR

$
0
0
வெற்றிக்கு ஆயிரம் தகப்பன்கள்; தோல்வி ஓர் அநாதை.
‍- மேலை நாட்டுப் பழமொழி
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: The Story of a Shipwrecked Sailor (புதினம்)
ஆசிரியர்: Gabriel Garcia Marquez
ஸ்பானிஷில் இருந்து ஆங்கிலப்படுத்தியவர்: Randolph Hogan
வெளியீடு: Penguin Books
முதல் ஈடு: 1970
பக்கங்கள்: 106
விலை: 199 ரூபாய்
வாங்கிய இடம்: Landmark
----------------------------------------------------------------------------------------------------------------------------------
1955 பிப்ரவரியில் கொலம்பிய நாட்டுக் கப்பல் ஒன்றில் பயணம் செய்த 8 மாலுமிகள், கரீபியக் கடலில் புயலில் சிக்கிக் காணாமல் போகிறார்கள். சில நாட்களுக்குப் பின், அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாகச் சொல்லி தேடுதலை நிறுத்துகிறார்கள். 10 நாட்களுக்குக் பிறகு, கொலம்பியக் கடற்கரைப் பகுதி ஒன்றில், கிட்டத்தட்ட இறந்துவிட்ட நிலையில் அவர்களில் ஒரு மாலுமி கரை ஒதுங்குகிறார். அந்தப் 10 நாட்கள் கடலில் உணவும் குடிநீரும் இல்லாமல் பிழைத்து வந்த அம்மாலுமியின் உயிர்ப் போராட்டக் கதைதான் இப்புதினம். 'நீ எத்தனை புயல்களைக் கடந்தாய்? அது பற்றி இவ்வுலகிற்குக் கவலை இல்லை. கப்பலைப் பத்திரமாகக் கரை சேர்த்தாயா?'என்றொரு சொல்லாடல் மேலை நாடுகளில் உண்டு. புயலைக் கடந்து கப்பலை இழந்து தன்னைக் கரை சேர்த்த ஒரு ஹீரோவின் கதையிது. தேசிய ஹீரோவாகப் புகழப்பட்டு, அழகு நங்கையர்களால் முத்தமிடப்பட்டு, பிரபலம் என்ற முத்திரையுடன் பொருள் திரட்டி, அதன்பிறகு அரசால் கைவிடப்பட்டு, எப்போதைக்கும் மறக்கப்பட்ட ஒரு முன்னாள் மாலுமியின் கதையிது.
(http://www.penguin.com.au)
சக மாலுமிகள் 7 பேரும் தன் கண்முன்னேயே காணாமல் போனபின், ஒரு தெப்பத்துடனும் இரு துடுப்புகளுடனும் நடுக்கடலில் அம்மாலுமி. நீர்வழிப் படூவும் தெப்பம் கரை நோக்கி நகர்கிறதா, நடுக்கடலை நோக்கி நகர்கிறதா, செங்குத்துப்பாறை நோக்கி நகரும் நீரோட்டத்தில் பயணிக்கிறதா, இவ்வழி கப்பல்கள் போகும் வழியா என்று திக்குத் தெரியாமல் தன் உயிரைப் பயணப்பட வைக்கிறார். அவர் சட்டையைக் காற்றில் அசைத்துக் காட்டுவது தெரியாமல், தூரத்தில் விமானம் ஒன்று கடந்து போய்விடுகிறது. வெகு தூரத்தில் கப்பல் ஒன்றும் கடந்து போய்விடுகிறது. வாழ வேண்டும் என்ற ஆசை மட்டும் அவரைத் தொடர்ந்து பயணப்பட வைக்கிறது. அவர் கனவிலும் நனவிலும் சந்திக்கும் ஒவ்வொரு பொருளும் கரைசேரும் நம்பிக்கைகளையும் அவநம்பிக்கைகளையும் ஒரே நேரத்தில் தருகின்றன. நரமாமிசம் சாப்பிடும் மனிதர்கள் வாழும் விசித்திர தீவுகள் பற்றி கேள்விப்பட்டிருந்த‌ கதைகள் ஞாபகத்தில் வந்து அச்சமூட்டுகின்றன. சக மாலுமிகளுடன் பிரமையில் பேசுகிறார். மஞ்சளாக 4 மீட்டர் நீளத்தில் தான் பார்த்த இராட்சத ஆமை, உண்மையா பிரமையா என்று அவருக்கே தெரியவில்லை. உப்புத் தன்மையால் காயங்கள் உறுத்தவில்லை.

கைக்கடிகாரம் மட்டும் எந்தப் பிரச்சனை இல்லாமல் சரியான நேரத்திற்கு வேலை செய்கிறது. சட்டைப் பையில் இருந்த ஒன்றிரண்டு காகிதங்களை உண்கிறார். காலணிகளை உண்ண முற்பட்டால் கிழிக்க முடியவில்லை. பத்தையும் பறந்து போகச் செய்யும் பசி, அவ்வழியே பறந்து போகும் நீர்ப்பறவைகளைக் கவரச் செய்கிறது. கரையில் இருந்து கப்பல்களைத் துரத்திக் கொண்டே வரும் பழக்கமுடைய நீர்ப்பறவைகள், கரைகள் பக்கம் என்று அர்த்தம் சொல்வதால் எந்த மாலுமியும் அவற்றைத் துன்புறுத்துவதில்லை. பக்கத்தில் கரை என்ற மகிழ்ச்சியிலும், பசியாலும் மாலுமிகளின் தர்மம் மீறுகிறார். கரை வரவில்லை. நீர்ப்பறவைகள் மட்டும் வந்து போகின்றன. கரை காட்ட கப்பல்களைத் தேடும் வழிதவறிய பறவைகளோ, நீண்ட தூரம் வந்துவிட்ட இளஞ்சிட்டுகளோ என்ற சந்தேகம். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடித்த கதையாய், நீர்ப்பறவைகளின் இரத்த வாடைக்குச் சுறாக்கள் சுற்றிவிடுகின்றன!

பெரும் பிரளயக் காலத்தில், கப்பலில் இருந்து பக்கத்தில் நிலம் இருக்கிறாதவென அறிய நோவா தனது புறாவை அனுப்பினார். ஆலிவ் இலையுடன் திரும்பி வந்து அருகில் நிலம் இருப்பதைச் சொன்னது அப்புறா. அதே போல் காலில் மாட்டிய ஏதோவொரு செடியின் வேரைப் பார்த்து, பக்கத்தில் கரை என்ற சந்தோசப் படுகிறார், உடைந்து போன கப்பலின் மாலுமி. நீல நிறத்தில் இருக்கும் கடலில் இருந்து பச்சை நிறத்தில் இருக்கும் கடலுக்குள் நுழைகிறார். கரை பக்கம் என ஆறுதல் படுத்திக் கொள்கிறார். 10 நாட்கள் கடல் வாழ்வுக்குப் பிறகு ஏதோவொரு கரையொதுங்கும் அவருக்கு மருத்துவரின் மேற்பார்வை இல்லாமல் உணவு தர மறுக்கிறார்கள். 600 மனிதர்கள் புடைசூழ‌ அவரை மருத்துவரிடம் தூக்கிச் செல்கிறார்கள்.

10 நாட்கள் உணவும் குடிநீரும் இல்லாமல் உயிருடன் இருந்த அவரைத் தன் தேசத்தின் நாயகனாக கொலம்பியா கொண்டாடுகிறது. சர்வாதிகார ஆட்சியில் இருந்த கொலம்பிய அரசு, அவர் என்ன பேச வேண்டுமென நிர்ணயிக்கிறது. அவரைப் பேட்டி கண்ட ஆசிரியர், 15 ஆண்டுகளுக்குப் பின் புத்தகமாக்கியதே இப்புதினம். புயலிலும் சரியான நேரத்தைக் காட்டிய கைக்காடிகாரக் கம்பெனிக்காரர்கள், அவரை மாடலாக வைத்து விளம்பரப் படுத்தினார்கள். 10 நாட்கள் கடலில் ஊறிக்கிடந்தும் கிழிபடாத காலணியின் கம்பெனிக்காரர்களும் கூட. அலங்கரிக்கப்பட்டு வானொலியில் வீர உரையாற்றுகிறார். வருங்கால தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக தொலைக்காட்சிகளில் காட்டப்படுகிறார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். ஆட்டோகிராப்கள். முத்தங்கள். எல்லாம் கரை சேர்ந்த 14 நாட்கள் வரைதான். அதன்பிறகு தான் உண்மைகள் வெளிவருகின்றன. 

பக்கத்து ஊரில் ஒருவன் முதலமைச்சரிடம் வீரதீர செயல்களுக்காக பணப்பரிசு பெற்றதைப் பார்த்து, குடிநீர்க் கிணற்றில் தானே விசம் கலந்துவிட்டு, விசம் இருப்பதாக ஊருக்குச் சொல்லி, பலபேர் உயிரைக் காப்பாற்றியமைக்குச் சமீபத்தில் முதலமைச்சரிடம் பணப்பரிசு வாங்கிய ஒருவன் கதையைச் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். 1955 பிப்ரவரியில் அவர்கள் பயணித்த நாளில் கரீபியன் கடலில் புயல் வரவேயில்லை என்று வானிலை ஆராய்ச்சி மையம் அடித்துச் சொல்கிறது. அதுமட்டுமில்லாமல் அக்கப்பலில் விதிமுறைகளை மீறி அதிக எடையுள்ள அனுமதியில்லாத பொருட்கள் ஏற்றப்பட்டு இருக்கின்றன. கொலம்பிய கதாநாயகனாகப் போற்றப்பட்ட அவரின் கருத்துகளை அரசு மறுக்கிறது. அதன்பிறகு அவர் என்னவானார் என்றே தெரியவில்லை.

ஆசிரியர் எழுதிய One Hundred Years of Solitude, Love in the time of cholera, Of love and other demonsபோன்ற புத்தகங்கள் பற்றி ஏற்கனெவே இதே தளத்தில் எழுதி இருக்கிறேன். மற்ற புதினங்கள் போலவே இதற்கும், இக்கதை தோன்றிய கதையைத் தன் முன்னுரையிலேயே ஆசிரியர் சொல்லிவிடுகிறார். அதனால் தான் நானும் முழுதாகச் சொன்னேன். அம்மாலுமி சொன்னவை உண்மையா பொய்யா என்பதையும் தாண்டி, அந்தப் 10 நாட்கள் அவர் கடலில் தனியாக என்னதான் செய்தார் என்பதற்காகவேனும் இப்புதினம் படிக்கலாம்.

அனுபந்தம்:
------------------
1. சுறாவின் வாயை உடலுக்குக் கீழ் ஏன் இயற்கை செய்திருக்கிறது?
2. நுரையீரலைப் பாதுகாக்க வேண்டுமென முதுகுப்புறத்தைச் சூரியனுக்குக் காட்டாமலே அலைகிறார். நுரையீரல்-முதுகு தொடர்பு எனக்குப் புரியவில்லை? தெரிந்தால் சொல்லுங்கள்.

- ஞானசேகர்
Viewing all 60 articles
Browse latest View live